கோரிக்கை பதிவு

கடலூர் ஜெயகாந்தன் 25

காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனின் பெர்சனல் பக்கங்கள் இதோ...

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!
சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!
சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!
'இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்' என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!
காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!
ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!
ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன். இப்போது ஜே.கே-யை அடிக்கடி பார்ப்பவர்களில் இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!
ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!
1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 'சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்' என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!
கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!
'என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார். இன்னும் கேட்டால், 'உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?' என்பார் கோபமாக!
பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!
கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!
பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!
மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!
ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி. இப்பவும் இருவரும் பழைய வாஞ்சையோடு பேசிக்கொள்கிற காட்சியைப் பார்க்கலாம்!
ஜெயகாந்தனின் படைப்புக்களான 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'காவல் தெய்வம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்' ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!
காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் இப்பவும் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!
ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 - 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில்தான்!
ஆசையுடன் நாய் வளர்த்தார். 'திப்பு' எனச் செல்லமாக அழைப் பார். 'திப்பு' இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!
'எங்களுக்குள் இருப்பது முரண்பாடு இல்லை; வேறுபாடு. முரண்பாடு என்பது தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும் போல... சேர்ந்துவிடும்' என்று கலைஞர் தன்னைப்பற்றி சொன்னதை, ரசித்து ரசித்துக் குறிப்பிடுவார் ஜெயகாந்தன்!
'நாளை சந்திப்போம்...' என்பது மாதிரியான வாக்குறுதிகள் கொடுத்தால், கூடவே 'இன்ஷா அல்லா' என்று சொல்லிதான் முடிப்பார்!
ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது "இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே, ஏன்?" என்றார் ஒரு வாசகர். உடனே "விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல; காண்பது" என்றார் ஜெயகாந்தன்.
'குப் குப்' என்று புகைவிட்டு... 'கூ கூ' என்று கூச்சலிட்டு... 'வருகுது வருகுது ரயில் வண்டி... வேகமாக வருகுது... புகை வண்டி.'-அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுக் களில் இதுவும் ஒன்று!
எந்தப் பிரச்னை என்றாலும் அது சரியாகும் என்று நம்புபவர். எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு என்பதில் உறுதிகொண்டவர். ஒருபோதும் 'இது முடியாது' என்றோ, 'அவ்வளவுதான்' என்றோ அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக