கோரிக்கை பதிவு

குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, நகராட்சி கடலூர் நகர மக்களை சிரமப்படுத்துவதில் போட்டா போட்டி!

கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துச் செல்லும் நிலையில் பணி முடிந்த சாலைகளை கூட சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி 40 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப் பட்டது. இதில் 148.7 கி.மீட்டர் தூரத்தில் 5,412 "மேன்ஹோல்', 15 ஆயிரத்து 50 வீட்டு இணைப்புகள், கம்மியம் பேட்டை, வரதராஜன் நகர், சீனுவாசன் நகர், ராஜாம்பாள் நகர், மணவெளி, மோகினி பாலம் ஆகிய இடங்களில் துணை சுத்திகரிப்பு நிலையங்களும், தேவனாம்பட்டினத்தில் பிரதான சுத்திகரிப்பு  நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டது. 20 எம்.எம்., பைப்புகள் முதல் 700 எம்.எம்., பைப்புகள் வரை பயன்படுத்தப்படும் இத்திட்டத் தில் 3 அடி முதல் 18 முதல் 20 அடி ஆழம் வரை நகரின் பல்வேறு சாலைகளை தோண்டி பைப்புகள் புதைக்கப் பட்டு வருகிறது.
மூன்றாண்டு முழுமையாக முடிந்த நிலையில் இதுவரை 5,111 மேன் ஹோல்கள், 13 ஆயிரத்து 324  வீட்டு இணைப்புகளுடன் 126.78 கி.மீட்டர் தூரம் பைப்புகள் புதைத் துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது.
இதில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 12.07 கி.மீட்டர் தூரத்தில் 8.6 கி.மீட்டர் முடித்து விட்டதாகவும், அதில் 6.23 கி.மீட்டர் தூரத்தை முழுவதும் முடித்து நெடுஞ்சாலைத்துறை வசமும், 110 கி.மீட்டர் தூர நகராட்சி சாலையை முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் கூறுகிறது.
ஆனால் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் இதுவரை 70 கி.மீட்டர் தூர சாலையைத்தான் ஒப்படைத்துள்ளனர்.  நாங்கள் 40 கி.மீட்டர் தூர சாலைகளை போட்டு விட்டோம் என்கின்றனர்.  இதில் யார் சொல்வது உண்மை? யார் பொய் சொல்கின்றனர் என தெரியவில்லை.
இதற்கிடையே பொதுநல இயக்கங்கள் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்ததையடுத்து 24ம் தேதி ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நெடுஞ்சாலைத் துறையினர் அரசு மருத்துவமனை தேவி கருமாரியம்மன் கோவிலிலிருந்து செம்மண்டலம் வரையிலான  சாலையை சீரமைக்கும் பணி 25ம் தேதி துவக்குவது எனவும், கலெக்டர் அலுவலக சாலை, சப்ஜெயில் ரோடு மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலைகளில் "பேட்ச் ஒர்க்கை' குடிநீர் வடிகால் வாரியம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், மறுநாள் ஒப்புக்காக குடிநீர் வடிகால் வாரியம், கலெக்டர் அலுவலக சாலை மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலையில் "பேட்ச் ஒர்க்' பணிகள் துவங்கியது.
ஆனால் மறுநாள் முதல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேப்போன்று நெல்லிக்குப்பம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை பணியை துவங்கவே இல்லை.  எது எப்படியிருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என கிளம்பும் பொதுநல அமைப்புகளுக்கு நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் "பெப்பே' காட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக