கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூரில் 2 லட்சம் வீடுகளைக் கட்ட கொட்டிக் கிடக்கிறது எரிசாம்பல்; பயன்படுமா செங்கல் தயாரிப்புக்கு?
மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகளின் தேவை அதிகரிக்கிறது. இதனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான செங்கல்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.கடலூர் மாவட்டத்தில், விளை நிலங்களை அழித்துத்தான் பெரும்பாலான செங்கல் சூளைகள் அமைக்கப்படுகின்றன. சுரங்கத் துறையின் அனுமதி பெற்றுத்தான் செங்கல் சூளைகளை அமைக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால், கடலூர் மாவட்டத்தில் 40 செங்கல் சூளைகள்தான் சுரங்கத் துறையின் அனுமதி பெற்றவை. 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன. தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்துக்குத்தான் மணல் அல்லது சரளைக்கல் போன்றவற்றை எடுக்கலாம் என்பது சுரங்கத்துறையின் விதி. ஆனால் கடலூரில் விதிகளுக்கு மாறாக 15 அடி ஆழம் வரை களிமண், செம்மண், சரளைக்கல் போன்றவற்றை தாராளமாக எடுத்துச் செல்கிறார்கள்.இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று விட்டதாகவும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.செங்கல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் 4 ஆயிரம் செங்கல், லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெற்றபோது கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதன் விளைவாக, 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. தற்போது விலை ரூ.11 ஆயிரம் வரை உள்ளது. கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், தமிழகத்திலேயே அதிக பட்சமாக 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இவை 4 ஆண்டுகளில் கட்டப்படும் என்கிறார்கள். 2.10 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 20 கோடி செங்கற்கள் தேவை என்று கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இத்தனை செங்கற்களையும் நான்கே ஆண்டுகளில் தயாரித்து அளிக்க வேண்டுமானால் எத்தனை செங்கல் சூளைகள் அமைக்க வேண்டியது இருக்கும்; அதற்காக எத்தனை விளை நிலங்களை சூளைகளாக மாற்ற வேண்டியது இருக்கும். பயன்பாட்டில் உள்ள சூளை நிலங்களில், இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படாதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.அனல் மின் நிலையங்களில் ஏராளமான டன் எரிசாம்பல், கழிவுகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டன் எரிசாம்பல் சேமிப்பில் உள்ளது. எரிசாம்பல் காற்றில் கலந்து மனிதனின் உடலுக்குள் புகுந்து சுவாசக் கோளாறுகளுக்கும், காசநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகி விடுவதாக மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே எரிசாம்பலை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த, செங்கல் தயாரிப்பில் குறிப்பிட்ட சதவீதம் எரிசாம்பலைக் கலக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.எரிசாம்பல் கலந்த செங்கல்கள் உறுதியானவைதான் என்று தமிழகப் பொதுப்பணித் துறை சான்று அளித்து இருக்கிறது. அதனால் செங்கல் தயாரிப்பில் சிலர் 50 சதவீதம் கூட எரி சாம்பலை கலக்குகிறார்களாம். சிமென்ட் தயாரிப்பிலும் எரிசாம்பல் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் சூளை அதிகரிப்பால் நீராதாரங்கள் பாதிக்கப்படும். சூளையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் அனல் அருகில் உள்ள பயிர்களைப் பாதிக்கும். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை பயன்படுத்துவது இல்லை. செங்கல் தேவை திடீரென அதிகரிக்கும் சூழ்நிலையில், செங்கல்களுக்கான மண் தேவையை கணிசமாகக் குறைக்கும் வகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை கலக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும். என்.எல்.சி. நிறுவனம் எரிசாம்பலை இலவசமாக வழங்க வேண்டும். எளிதாக எடுத்துச் செல்ல பாதைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். இது குறித்து கடலூர் மாவட்டக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ராஜா கூறுகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பல் கலக்கலாம். ஆனால் சூளை போடுவோர் அதை சரியான விகிதத்தில், முறையாகக் கலக்காததால் நம்பகத் தன்மை இல்லை. எனவே வீடு கட்டுவோரும் ஏற்பது இல்லை. சாம்பலை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும், எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அரசு, சட்டமாக வெளியிட வேண்டும் என்றார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் மாவட்ட வளர்ச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக