கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பழைமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் உள்ளது. இது 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கடலூர் நகரில் பழைமையும் பெருமையும் வாய்ந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று.
கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இக்கட்டடத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. தற்போது இந்த அலுவலகத்தில் 60 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
வியாழக்கிழமை மாலை 6-30 மணி வரை ஊழியர்கள் இங்கு பணிபுரிந்தனர். அதற்குமேல் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இரவு 7 மணிக்கு அலுவலகத்தின் இரவுக் காவலர் அமாவாசை (55) மட்டும் முதல் மாடியில் பணியில் இருந்தார். இரவு 7-30 மணி அளவில் கட்டடத்தின் முன் பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் உயிர்ச்சேதம் இன்றித் தப்பியது. கட்டடத்தின் ஏனைய பகுதிகளும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தாற்காலிகமாக அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.
அலுவலகக் கட்டடம் இடிந்து சேதம் அடைந்தது குறித்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி பஞ்சமூர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விவரம் தெரிவித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக