நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை!
-கசந்துபோன கடலூர் மீனவர்கள்
கடலுக்குள் 25 கிலோ மீட்டரை கடந்து மீன் பிடிக்கக் கூடாது என்ற புதிய சட்டம் வரப்போகிறதாம். இந்த மீன்பிடி மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆந்திர, கேரள மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது மீன்பிடி மசோதா.
இந்த நிலையில், கடந்தவாரம் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல, ‘25 கிலோ மீட்டர் தாண்டி ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை அடித்து அவர்களின் படகையும் சேதப்படுத்தினர். இச்சம்பவத்துக்குப் பிறகு வெடவெடத்துக் கிடக்கிறார்கள்.
25 கிலோ மீட்டர் கடந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லக் கூடாது என்பது மீன்பிடி மசோதாவின் ஓர் அங்கம். இதைக் கண்டித்தும், தாக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவர்களை சுதந்திரமாகச் செயல்பட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட மீனவ அமைப்புகளான ‘விடுதலை மீனவ வேங்கைகள்,’ ‘வீரவிடுதலை வேங்கைகள்’, ‘மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்துள்ளன.
கடலோரக் காவல் படையினரால் தாக்கப்பட்ட மீனவர் முருகனை சந்தித்தோம்.
“போனவாரம் சாயங்காலம் மூணு மணிக்கு அஞ்சு படகுல தொழிலுக்குப் போனோம். முப்பது கிலோ மீட்டர் போய் வலையை விரிச்சோம். அப்போ, எங்ககிட்ட வந்து நின்ன ஒரு கப்பலிலிருந்து வெள்ள டிரெஸ் போட்ட ஆபீசருங்க அஞ்சு பேர் வந்தாங்க.
நாங்க இருந்த படகுலயே இறங்கிட்டாங்க. எங்ககிட்ட வந்து துப்பாக்கிய காட்டி மிரட்டினாங்க. எவ்ளோ சொல்லியும் கேட்காம எங்களை அடிச்சாங்க. ‘அடையாள அட்டை கொடு’ என்று கேட்டார்கள். எங்கக்கிட்ட இல்லை. அதுக்குள்ள படகுல இருந்த வலையை எல்லாம் சேதப்படுத்திட்டாங்க.
அவங்களுக்குப் பயந்து நாங்க கரைக்குத் திரும்பிட்டோம். மீன்வளத்துறை தனி அதிகாரி அப்பர்கிட்ட இதுபற்றிச் சொன்னோம். அவர் எங்கக்கிட்ட புகார் எழுதி வாங்கிக்கிட்டாரு. 15 வருஷமா தொழில் செய்யறோம். இதுபோல நடந்ததேயில்லை. இது எங்களுக்குப் புதுசா இருக்கு. அதனால தொழிலுக்குப் போகவே பயமா இருக்கு.
இதுசம்பந்தமா கலெக்டரை போய்ப் பார்த்து சொன்னோம். அவரும் எங்க ஊருக்கு வந்து சமாதானம் சொல்லிட்டு, விசாரிக்கறதா சொல்லியிருக்காரு. இதுக்கு ஒரு தீர்வு வராம கடலுக்குப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒருவாரமா தொழிலுக்குப் போகலை” என்றார் சோகத்தோடு.
இவரைத் தொடந்து ஊர்ப் பிரமுகரான சாமிநாதனிடம் பேசினோம்.
“கடலம்மாவை நம்பி எங்க ஊருல 700 குடும்பங்கள் இருக்கு. ஆனா இந்தக் கடலோரக் காவல்படை போலீஸ்காரங்க திடீர்னு முரட்டுத்தனமாத் தாக்கியிருக்காங்க. கேட்டா, ‘25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல வராதீங்க’ன்னு சொல்றாங்க.
ஆழமான பகுதியிலதான் வெலை உசந்த மீன்கள் கிடைக்கும். இதையே நம்பி வாழும் எங்களை இதைச் செய்யாதீங்க.. அதைச் செய்யாதீங்கன்னு சொன்னா எப்படி? இதுவரைக்கும் மீன்பிடிக்க எந்தச் சட்டதிட்டமும் எங்களுக்கு இருந்ததில்லை. இப்பதான் ஏதோ புதுசா சொல்றாங்க.
படகுல இத்தனை பேருதான் போகணும்னு வரைமுறைப் படுத்துறாங்க. இதுசம்பந்தமா எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லலை. இவங்களா ஒரு சட்டத்தை வச்சிக்கிட்டு எங்களை வஞ்சிக்கிறாங்க. செல்வநாதன், கோபி, அமிர்தலிங்கம், கார்த்திகேயன், ஆறுமுகம், மனோகரன், முருகன்னு மீன்பிடிக்கப் போன பலரையும் அடிச்சி அவங்க படகையும் சேதப்படுத்தி வலையையும் அபகரிச்சிக்கிட்டாங்க. இதற்கான நிவாரணத்தை உடனடியா வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வரணும். ‘நீங்க எல்லாம் உடனே அடையாள அட்டை வாங்கிக்கணும்னு சொல்லுறாரு கலெக்டரு. தொழிலுக்குப் போற நாங்க உயிரையே கையில பிடிச்சிட்டு போய்வர்றோம். இதுல அடையாள அட்டையை எங்க பாதுகாக்கிறது” என்றார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். “இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதன்முறை. இது சம்பந்தமாகக் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் பேசினேன். ‘இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது’ என்று உறுதியளித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளோம். இனிமேல் இவங்க தொழிலுக்குப் போகும்போது அடையாள அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் படகு சம்பந்தமான சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று மீனவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என்றார்.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனிடம் பேசினோம்.
“இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட உடனே விசாரிக்கத் தொடங்கினேன். எப்போதும்போல கடலோரக் காவல் படையினர் மீனவர்களை விசாரணை செய்வது வழக்கம். அப்போது இந்த மீனவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் இவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். உடனே அதுசம்பந்தமான அதிகாரிகளிடம் பேசினேன். அதில் சிங் என்ற உயர் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோரை அழைத்துச் சென்று அந்த ஊரில் சமாதானக் கூட்டம் போட்டு அவர்களை மீண்டும் தொழிலுக்குப் போகும்படி வலியுறுத்தி உள்ளேன். விரைவில் தொழிலுக்குச் செல்வார்கள் என நம்புகிறேன்” என்றார் ஐயப்பன்.
இப்போதே மீனவர்களுக்கு உள்ளூர் போலீஸ், கடலோரக் காவல்படை, கடற்படை என மூன்றடுக்குத் தொல்லை இருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு கொண்டுவரப் போகும் இந்தப் புதிய மசோதா, மீனவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக