கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?
கடலூர் உப்பனாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.கடலூர் உப்பனாற்றில் சிப்காட் தொழிற்சாலைகளின் மோசமான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதாக, பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் தொழிற்சாலைகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலப்பதாகத் தெரிவித்து வருகின்றன. மாசுக்கட்டுப்பாடு வாரியமும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் உப்பனாற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்துவதும், அதன்பிறகு ஓசையின்றிப் போவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.குற்றச்சாட்டுகள் மக்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும், ஆய்வின் முடிவுகளையோ, அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாகத் தெரிவித்தது இல்லை.உப்பனாற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதற்கு ஆதாரமான நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது. கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வி.சண்முகம் (40). கடந்த பிப்ரவரி 26-ம் தேதி காலை 10 மணிக்கு, சிப்காட் தொழிற்சாலைகளுக்குப் பின்புறம் உள்ள உப்பனாற்றில் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்.வலை உப்பனாறின் உள்ளே சிக்கிக் கொண்டது. அதை எடுப்பதற்காக உப்பனாற்று நீரில் கழுத்தளவுக்கு மூழ்கியபோது, தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது. வீடு திரும்பியதும் எரிச்சல் அதிகரித்தது.சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. எனவே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.எனினும் அவருக்கு தொடர்ந்து அரிப்பும், உடல் நலம் பாதிப்பும் இருப்பதால், தோல்நோய் நிபுணரிடம் காண்பிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.இது குறித்து புகார் மனு ஒன்றை சண்முகம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் அளித்தார். உடலில் பல இடங்களில் வடுக்கள் இருப்பதையும் காண்பித்தார்.கடலூர் உப்பனாற்றில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி, இத்தகைய நிலை ஏற்படுவதாகவும் சண்முகம் தெரிவித்தார். மீனவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழநிவேல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருள்செல்வம், புகழேந்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடலூர்,
சிப்காட்,
மாசுக்கட்டுப்பாடு வாரிம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக