கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
எமனாக மாறி வரும் மணல் சாலைகள்
கடலூர் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்மையால், பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு மக்களுக்கு எமனாக மாறிவருகிறது.தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகராட்சி பகுதி வழியாக, 15 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது. பல கோடி செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, முறையாகப் பராமரிப்பு இல்லாததால், பெரும்பகுதி மணல் படிந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்கள் பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், திடீர் கோயில்கள், குளிர்பானக் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இச்சாலை நிர்மாணிக்கப்பட்ட பிறகு, வாகனப் போக்குவரத்து பன்மடங்கு பெருகிவிட்டது.அதற்கேற்ப விரிவுப்படுத்தும் பணியையோ, பராமரிப்புப் பணிகளையோ செய்யாததால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறி வருகிறது.பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கான அகலம் போக மீதம் உள்ள பகுதி முழுவதும், ஒரு அடி உயரத்துக்கு மணல் படிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் எமனாக மாறி இருக்கிறது.இந்த மணல் மேடுகளில் சிக்கி விழுந்து, அவர்கள் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூவர் இறந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை நடைபாதை முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலர்களைக் கண்டு, ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் கவலைப்படவே இல்லை. இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.அதற்கும் பலன் ஏதும் இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கடந்த 19-ம் தேதி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பு நாடகமாக நடந்தது. எந்த ஆக்கிரமிப்பையும்அகற்றவில்லை.எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்ற அளவுகூட அவர்களிடம் இல்லை. வெறுமனே விளம்பர போர்டுகளை மட்டுமே வைத்து அகற்றுமாறு கூறிச் சென்றனர். அதைக்கூட யாரும் அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு இன்றி மண் மேடிட்டுக் கிடப்பது மக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
ஆக்கிரமிப்புகள்,
கடலூர்,
கடலூர் நகராட்சி,
கடலூர் மாவட்டம்,
நெடுஞ்சாலை துறை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக