கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டியது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் விசாரணை நடத்த கடலூர் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தில் சுமார் ஆயிரம்பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளை பராமரிக்க “பட்டி“ என்ற பொது இடம் அமைக்கப்பட்டது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் தென்னை, மாமரங்கள் வளர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த இடம் பராமரிப்பின்றி இருந்துள்ளது. இங்குள்ள மரங்களில் இருந்து பெறப்படும் தென்னை, மாங்காய் ஆண்டு குத்தகைக்கு விட ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அது சம்மந்தப்பட்ட துறையினரால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராமத்தை சேர்ந்த சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப் பட்டது.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட கிராம நிர்வாக அதிகாரி மற்றும் துறை அலுவலர்கள் வெட்டப்பட்ட மரங்களை வெட்டியவர்களிடம் இருந்து மீட்டனர்.
இது குறித்து கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி கூறுகையில், “நடுத்திட்டு கிராமத்தில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட வரு வாய் அலுவலர் மகேஷ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உயி ருள்ள மரங்கள் எத்தனை வெட்டப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பீடு எவ்வளவு என கணக்கீடு செய்யப்படுகிறது. இது தொடர்பாக அரசு இடத்தில் உள்ள மரங்களை வெட்டிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது போன்று இக்கிராமத்தின் சுற்றுப்புற பகுதியில் பல ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக