கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை.
தற்போது வாகனங்களின் போக்குவரத்தால் கடலூர் புழுதி நகரமாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரிதமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. நெடுஞ்சாலையில் பெரிய குழாய்கள் பதிக் கும் பணி இதுவரை தொடங்கவில்லை. கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்திய பிறகுதான் சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் நகராட்சி உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் 6 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டால்தான் கழிவுநீர் இயற்கையாக சென்று சேரும். ஆனால் கடலோரப்பகுதி என்பதால் 6 மீட்டர் ஆழம் தோண்டும் போது நீர் ஊற்று ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே தற்போது ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தை மாற்றி 3.15 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய் யப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டர் மூலம் பம்ப் செய்துதான் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வடிகால் வாரியம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடித்த சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு சாலை போடுவதற்காக நகராட்சி, அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளது.
கோடை காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது.பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் இதுவரை தொடங்கப் படாமல் உள்ளன. இந்த ஆண்டாவது பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் முடிக்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக