கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
எப்போது தெரியும்?
பள்ளிக் கல்விக் கட்டண வசூல் ஒழுங்குமுறைச் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், பள்ளிகளுக்கு எத்தகைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு என்பது தெரியாமல் அவதிப்படுவது வழக்கம்போல பெற்றோர்கள் மட்டுமே!பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன என்று மக்கள் தாங்கமாட்டாமல் புலம்பியதால்தான் அரசு இந்தப் பிரச்னையில் ஆர்வம் காட்டியது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், இந்தச் சட்டம் செல்லும் என்று தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசுக்கு இதைவிட சாதகமான தீர்ப்பு வேறு ஏதும் கிடையாது. ஆனாலும், இதுவரை அரசு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பதற்காக, தனியார் பள்ளிகள் சும்மா இருந்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர் சேர்க்கை சின்ன நோட்டுப் புத்தகத்திலும், வெறும் துண்டுச் சீட்டிலுமாக நடந்து கொண்டிருக்கிறது. சில பள்ளிகள் கட்டணங்களையும் வசூலித்துவிட்டன. சில பள்ளிகள் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்துகின்றன. கட்டணங்களைப் பிறகு சொல்கிறோம் என்று கூறுகின்றன. இத்தனை நடைமுறை ஊழல்களுக்கும் காரணம்- இன்னமும் அரசு தான் நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதுதான்.இந்தச் சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் தங்கள் விண்ணப்பங்களை விற்பனை செய்யவில்லையே தவிர, மாணவர் சேர்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றன. பெற்றோர்களும், முந்திக்கொண்டு குழந்தைகளைச் சேர்க்காமல் அரசு அறிவிப்புக்காகக் காத்திருந்தால், நம் குழந்தைக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக இந்தப் பள்ளிகள் சொல்லும் அனைத்துக்கும் கட்டுப்பட்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் பணத்தைக் கொடுத்து அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.சென்ற ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. 2008-09-ம் ஆண்டுகளில் வசூலித்த கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் வரவு செலவுக் கணக்குகள் ஆகியவற்றை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் வழக்குத் தொடுத்ததுடன், வழக்கு முடியும்வரை நமது வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவையும் எடுத்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு ஓராண்டு காலம் ஆன நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் என்ன செய்து கொண்டிருந்தது? அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் தாங்கள் செலுத்திய கட்டண விவரங்களின் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தாலே போதுமே, கொட்டித் தீர்த்திருப்பார்களே! கல் வித் துறை ஏற்கெனவே இத்தகவல்கள் அனைத்தையும் பெற்று, ஒவ்வொரு பள்ளியையும் அதன் வசதிகளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்திருந்திருந்தால், இப்போது வெளிப்படையாக கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக அறிவிக்க வேண்டியதுதானே. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன, இவை எந்த அடிப்படையில் ஏ, பி, சி, என தரம் பிரிக்கப்பட்டன, இவற்றுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? சிறப்புக் கட்டணம் எவ்வளவு? என்பதை ஒட்டுமொத்தமாக இணையதளத்தில் வெளியிட்டால், பெற்றோர்கள் அனைவருமே பார்த்து அறிந்துகொள்ள முடியுமே! அரசு ஏன் இதில் இன்னமும் மெüனம் காக்க வேண்டும்.மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகம் ரூ. 445, யு.கே.ஜி. ரூ. 500, முதல் வகுப்பு ரூ. 655 என ஐந்தாம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறினாலும் இதை ஏன் மக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.1973-ல் இயற்றப்பட்ட தனியார் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 32-ன் படி, எந்த ஒரு தனியார் பள்ளியும் தகுதிவாய்ந்த அதிகாரி குறிப்பிட்டுள்ள கட்டணம் தவிர, வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக கல்வித் துறை அதிகாரிகள் ஏன் மெüனமாக இந்த கல்விக் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்?கல்லூரிகள் விவகாரத்திலும் இதே மெüனம்தான் நீடிக்கிறது. அதிகக் கட்டணம், நன்கொடை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து ஓராண்டு ஆகப் போகிறது. ஆனால் அந்தக் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது.சென்ற ஆண்டு பல பொறியியல் கல்லூரிகளில் அரசு அறிவித்த குழு நேரில் சென்று பல்வேறு புகார்களை விசாரித்தது. சில கல்லூரிகள் அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தின. ஆனால் எந்தப் பொறியியல் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள் தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு தகுதியானவையா இல்லையா? இன்னும் அறிவிப்பு இல்லை.ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு? முறைகேடு செய்த பொறியியல் கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை? கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இப்போது சொல்லாவிட்டால், வேறு எப்போது சொல்வார்கள்!
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கல்வி,
தினமணி தலையங்கம்,
பள்ளி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக