சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப் பஞ்சாயத்துகளில் முறையான அனுமதி இல்லாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை, இரட்டிப்பு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு முறைப்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நியாயமாகப் பார்த்தால், இந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து, இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடுத்து அபராதம் விதிப்பதுடன், இதற்குக் காரணமான உள்ளாட்சி அமைப்பின் அதிகாரி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.தற்போது குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகூட உள்ளாட்சித் தணிக்கையிலும் பொதுத் தணிக்கை அறிக்கையிலும் தொடர்ந்து இத்தவறுகளைச் சுட்டிக்காட்டி வருவதால் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளிலும் குடிநீர்க் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கு ஏற்படும் மின்கட்டணம் ஆகியவற்றை ஒப்பீடு அடிப்படையில் தணிக்கை செய்யும்போது, உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல் அம்பலப்பட்டுப் போகிறது.உதாரணமாக, ஒரு நகராட்சியின் பதிவேட்டின்படி உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை, அவற்றின் குழாய் அளவு, குடிநீர் விநியோகிக்கப்படும் கால அளவு ஆகியவற்றைக் கொண்டு அந்த நகரின் ஒட்டுமொத்தக் குடிநீர் அளவு எட்டப்படுகிறது. இதில் நீர் கசிவுகளையும் கழித்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு அந்த நிலையத்தின் குதிரைத்திறனுக்கு ஏற்ப எத்தனை மணிநேரம் இயங்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், மின்மோட்டர் இயங்கிய கால அளவுக்கும், வெளியேற்றப்பட்ட குடிநீர் அளவுக்கும், இணைப்புப் பெற்ற வீடுகளுக்குத் தேவையான குடிநீர் அளவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் தணிக்கைத் துறையினர் தொடர்ந்து சுட்டிக்காட்டும் குறைபாடு. தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறைபாட்டை மட்டுமே பேச முடியும். ஊழல் நடைபெறும் விதத்தை விளக்க வழியில்லை. குடிநீர் ஊழல் எப்படி நடக்கிறது என்றால், அனுமதியில்லாத இணைப்புகள் இந்தக் குடிநீரை முறைகேடாகப் பயன்படுத்துவது ஒருபுறம். அடுத்ததாக மாநகராட்சி ஊழியர்களும் உள்ளாட்சிப் பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் முறைகேடாக லாரிகளுக்கு இத்தண்ணீரை வழங்கி, அதை வெளியே விற்று பணம் சம்பாதிப்பதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தமிழக உள்ளாட்சிகளுக்கு மின்கட்டணம் மூலம் சில நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இழப்பை மக்கள் வரிப் பணத்திலிருந்து ஈடுகட்டிக் கொண்டிருக்கிறோம்.மின்கட்டணம் மட்டுமே இழப்பு அல்ல. இந்த முறையற்ற இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் நியாயத்துக்குப் பயந்த மனிதர்கள் அல்லர். அவர்கள் இந்தக் குடிநீரை தங்கள் உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியெடுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சொந்த வசதிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருதும்போது, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புரியும்.முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவதால் ஊழல் அதிகாரிகள் மற்றும் அடாவடி அரசியல்வாதிகளின் செயல்களை நியாயப்படுத்துகிற ஆபத்து உள்ளது. மேலும் பணம் படைத்திருந்தால் எவர் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டலாம், பிறகு முறைப்படுத்திக்கொள்ளலாம் என்பது நியாயமான வழியில் நேர்மையாக அனுமதியைப் பெறும் பொதுஜனத்தை கேலிக்குள்ளாக்குவதாக ஆகிவிடும்.இதே விதமாகத்தான் முறையான அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும், ஏன் கல்லூரிகளும்கூட இதில் விதிவிலக்கல்ல, முறையான அனுமதி பெறாமல் மாணவர்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டு, பிறகு மாணவர்களின் கண்ணீர் பேட்டியை நிர்வாகமே அரங்கேற்றி, பொதுவான பரிதாப உணர்வைத் தூண்டிவிட்டு, அந்தப் படிப்பை முறைப்படுத்துவது அல்லது அந்தப் பயிற்சிக் கல்லூரியை முறைப்படுத்துவது என்பதுதான் இதுநாள் வரை நடந்து வந்துகொண்டிருக்கிறது.வெறும் வேளாண் விளைநிலங்களை மனைகளாக்கி விற்றுவிட்டு, குடியிருப்புகள் உருவான பிறகு அதன் மனைகளை முறைப்படுத்துவது ஒரு தொழிலாகவே நடந்துகொண்டிருக்கிறது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முறையான அனுமதி பெறாமல் மாடிக் கட்டடங்கள் விருப்பம்போல கட்டப்படுகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளுக்கும், அந்த வார்டில் தொடர்புடைய அரசியல்வாதிக்கும் தெரிந்துதான் இது நடத்தப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் முறைகேடான கட்டடங்கள் நிறைந்தவுடன் முறையற்ற கட்டடங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. அல்லது நடவடிக்கை எடுத்து இடிப்பதுபோல பாவனை காட்டினால் அவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, காலத்தை நீட்டிக்கிறார்கள்.இப்படி முறையற்ற செய்கை அனைத்தையும் பணத்தால் முறைப்படுத்த முடியும் என்று அரசே ஊக்கப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. "தாட்சண்யம் தனநாசம்' என்பார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முறைப்படுத்துவதால் அரசுப் பணம்தான் வீணாகும். மீண்டும் எந்த பயமும் இல்லாமல், எப்படியும் முறைப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முறைகேடுகளை இவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளவே செய்வார்கள்.
நன்றி தினமணி
தலையங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக