கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூரில் கடல் நீர் உள்புகுவதைத் தடுக்க பெண்ணை ஆற்றில் ரூ.12 கோடியில் தடுப்பணை
கடல் நீர் உள்புகுவதைத் தடுக்க, கடலூர் பெண்ணை ஆற்றில் ரூ.12 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. கடலூரை யும் புதுவை மாநிலம் கும்தாமேடு (பரிக்கல் பட்டு ஊராட்சி) பகுதியையும் இணைக்கும் வகையில் இந்தத் தடுப்பணை கட்டப்படுகிறது. இப்பகுதியில் பெண்ணை ஆற்றின் வடக்குக் கரை புதுவை மாநிலத்திலும், தெற்குக் கரை கடலூர் மாவட்டத்திலும் உள்ளது. கடலூர் அருகே தாழங்குடா கடற்கரையில் பெண்ணையாறு கடலில் சங்கமிக்கிறது. தாழங்குடாவில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை கடல் நீர் உள்புகுந்து விட்டது. இதனால் பெண்ணையாற்றின் கரையில் உள்ள கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில், நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. இதனால் கடலூர் நகரில் குடியிருப்புப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் உவர் நீராக மாறிவிட்டது. எனவே பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் தொடர்ந்து சட்டப் பேரவையிலும் மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை எழுப்பி வருகிறார். புதுவை மாநில விவசாயிகளும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இதே கோரிக்கையை முன் வைத்தனர்.புதுவை மாநிலம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசமாக இருப்பதாலும், திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தாராளமாகக் கிடைப்பதாலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட முன்வந்து இருக்கிறது. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் இந்தத் தடுப்பணை, புதுவை அரசால் ரூ.12 கோடியில் கட்டப்படுகிறது. கடலூர்- கும்தாமேடு இடையே 254 மீட்டர் நீளத்தில் 5 அடி உயரத்தில், இந்தத் தடுப்பணை கட்டப்படுகிறது. கடலூர்- கும்தாமேடு இடையே பெண்ணை ஆற்றின் குறுக்கே இருமாநில மக்கள் பயன்படுத்தும் பாலமாகவும் இது அமையும். தடுப்பணை கட்டி முடிக்கப்பட்ட பின், கடல் நீர் உள்புகுவது பெருமளவுக்குத் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் பெரும்பகுதி நாள்கள், தடுப்பணையில் இருந்து ஆற்றில் குறைந்த பட்சம் ஒரு கி.மீ. தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாநிலங்களையும் சேர்ந்த 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர் நீரில் இருந்து காப்பாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை அரசு இந்தத் தடுப்பணையைக் கட்டுவது போல், தமிழக அரசும் பெண்ணை ஆற்றில் மேலும் சில இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். அதனால் கடல் நீர் உள்புகுவது தடுக்கப்படுவதுடன், பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆண்டுதோறும் வீணாகக் கடலில் கலந்துகொண்டு இருக்கும் நீர், தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர ஏதுவாக இருக்கும் என்றும் எம்எல்ஏ அய்யப்பன் தெரிவித்தார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
கடல்,
கடலூர் நகராட்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக