கோரிக்கை பதிவு

கடலூர் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்! : குறுகிய தூரத்தை கடக்க 4 சிக்னல்கள்


கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்கு பார்வையோடு புறவழிச் சாலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதாலும், ஒரே இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டம் லாரன்ஸ் ரோடில் குவிகின்றன. பஸ் நிலையம் பின்பகுதியில் ரயில்வே மேம்பாலம் திறந்துவிடப்பட்டாலும் மக்கள் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தற் போது எதிர்வரும் பொங் கல் பண்டிகையின்போது ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அதோ என இழுத் துக் கொண்டு வரும் சுரங்கப்பாதைப் பணியும் துவங்குவதற்கான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு ரயில் போக்குவரத்து துவங்கப்படுமாயின் ரயில்வே கேட் மூடி திறக்கும்போது "டிராபிக் ஜாம்'  தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஒரு சில வியாபாரிகள் சுயநல நோக்கத்திற்காக எல்லா திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு லாரன்ஸ் ரோடில் மக்கள் கூட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் 2 ஆக பிரிக்கும் எண்ணம் கூட கைவிடப்பட்டது.
ஏற்கனவே லாரன்ஸ் ரோடில் வாகனங்கள் நிறுத்தவும், பிளாட்பாரத்தில் நடந்து செல்லவும்  மக்கள் படாதபாடு படும் நிலையில் ரயில் வருகையால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனம் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தை கடக்க பிள்ளையார்கோவில், போஸ்ட் ஆபீஸ், உட்லண்ட்ஸ், அண்ணாபாலம் ஆகிய சிக் னலை கடக்க வேண்டியுள்ளது. "பீக் அவரில்' வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது.
கடலூர் சிப்காட்டில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கெம்ப்ளாஸ்ட், துவங்கப்படவுள்ள நாகர் ஜூனா, பவர்பிளான்ட் போன்ற கம்பெனிகள் விரைவில் கால்பதிக்கப்படவுள்ளன.  ஐயாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய இக்கம்பெனிகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை சாலை வழியாகத்தான் கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல வேண்டும். அதற்கு தக்க சாலை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
சாதாரணமாக சிறிய நகரங்களில் கூட புறவழிச்சாலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்காலகட்டத் தில் கடலூர் நகருக்கு புறவழிச் சாலை இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சிதம்பரம், சீர்காழி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் போன்ற நகரங்களில் புறவழிச்சாலைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் நகருக்கு இதுவரை புறவழிச்சாலை திட்டத்தை துவங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
செம்மண்டலம் பகுதியில் பிரியும் சாலை கம்மியம்பேட்டை பாலம் கட்டப்பட்டும் சாலை பணிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. எனவே திருப்பாபுலியூர் ரயில்வே மேம்பாலம் எதிரெ உள்ள சாலையில் துவங்கி நத்தவெளி சாலை அருகே ஒரு புதிய புறவழிச்சாலை அமைக்க அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி முயற்சி மேற்கொண் டார். அந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் கடலூர் நகருக்குள் வராமலேயே வாகனங்கள் கடலூரை கடக்க முடியும்.
 அண்மையில் மேல்மருவத்தூர் பங்காருஅடிகளார் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதில் பல மணிநேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.  எனவே கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து நிறைவேற்றிட அதிகாரிகள் இப்போதே முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக