கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூரில் மாரத்தான் ஓட்டம்
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து இதனை ஏற்பாடு செய்து இருந்தன. மாரத்தான் ஓட்டப்பந்தயம் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கியது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரங்கராஜன், மாவட்ட இளைஞர் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஜெயந்தி ரவிச்சந்திரன், அருமைச்செல்வம், டாக்டர் வி.கே.கணபதி, கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் வரவேற்றார். போட்டியில் வீரர் வீராங்கனைகள் 405 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான 15 கி.மீ. மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு, திருவந்திபுரம் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. பெண்களுக்கான 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, கே.என்.பேட்டை வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. பள்ளி மாணவ மாணவியருக்கான 5 கி.மீ. ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, சில்வர் பீச் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்: ஆண்கள்: வெங்கடேசன் (விருத்தாசலம்), செந்தமிழ்செல்வன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), சாமிநாதன் (காராமணிக்குப்பம்). பெண்கள்: அன்புச்செல்வி (கடலூர் பெரியார் கல்லூரி), மாதவி (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்), பாரதி திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி). பள்ளி மாணவர்கள்: தமிழரசு (விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி), கார்த்திக் (என்.எல்.சி. பள்ளி) துரை (நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி). மாணவிகள்: குணா (திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ஸ்ரீதேவி (நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி), மோனிஷா (கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி). ஆண்கள், பெண்களுக்கான முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ. 5 ஆயிரம், 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம். மாணவ மாணவியருக்கான முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ.1000. 4 முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் உண்டு. குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
அண்ணா விளையாட்டு அரங்கம்,
கடலூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக