கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
கடலூரில் தொடரும் காய்ச்சல்
கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் நோய் தொடர்ந்து பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மருந்துக் கடைகளில் மருந்து வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடலூரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் பெருமளவுக்குப் பரவி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். கொசுக்களின் இனப்பெருக்கம், பன்றிகள் எண்ணிக்கை அதிகரிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாகப் பரவி வருவதை அரசு நிர்வாகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மூளைக்காய்ச்சல் காரணமாக கடலூரில் பள்ளி மணவர் ஒருவரும், டெங்குக் காயச்சல் காரணமாக அஸ்வத்தாமன் என்பவரும் புதுவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு கடந்த வாரம் இறந்துள்ளனர். இந்த இருவரும் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறக்காததால் மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத் துறையும் அலட்சியமாக இருக்க முடியாது. கடலூர் மற்றும் கோண்டூர் உள்ளிட்ட 7 ஊராட்சிப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு, மூளைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் கூறியது: கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நாளொன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு காய்ச்சல் உள்ளது. தற்போது பெய்து வரும் அதிகப்படியான பனியாலும், கொசுக்களாலும், பாக்டீரியாக்களாலும் பரவும் காய்ச்சலாக அதிகம் காணப்படுகிறது. சிக்குன் குனியா போன்ற காய்ச்சல், டைஃபாய்டு காய்ச்சலும் உள்ளது. காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. கடலூரில் கொசுத் தொல்லையால்தான் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆங்காங்கே தண்ணீரும் சாக்கடையும் தேங்கி விடுவதால் பல நோய்கள் பரவக் காரணம் ஆகிவிடுகிறது என்றார்.
ஆக்கம்
கடலூர் எழில்
கட்டுகள்
அரசு மருத்துவமனை,
கடலூர்,
சுகாதாரத்துறை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக