கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ரூ. 24.27 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வழங்கினார். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார். பின்னர் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பார்வையிட்டார். வருவாய்த்துறை சார்பில் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, விதவை மகள் திருமண உதவித் திட்டத்தில் 10 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 24.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சிறப்பாகப் பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் 43 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மாவட்ட அளவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கம்மாபுரம் சிறுமலர், பரங்கிப்பேட்டை அன்னை, கடலூர் மூகாம்பிகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம், ஜன. 26: விருத்தாசலத்தில அரசு அலுவலகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சாந்தி தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியர் குமுதம் தலைமை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றினார். சாந்தி ஜெயின் சிறப்புப் பள்ளியில் நடந்த விழாவில் அரிமா சஙகத் தலைவர் அருணாச்சலம் தேசியக் கொடியை ஏற்றினார். எடச்சித்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ஊராட்சித் தலைவர் தமிழரசி கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் உத்திராபதி தலைமை ஏற்றார். இதில் கலைஞர் கண்ணொளித் திட்டத்தின் கீழ், கண் குறைபாடுடைய மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் புரட்சிமணி கொடியேற்றினார். விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் முருகன் தலைமையேற்று கொடியேற்றினார். கார்மாங்குடி ஊராட்சி அலுவலகம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி கொடியேற்றினார்.
பண்ருட்டி
பண்ருட்டி,ஜன.26: பண்ருட்டியில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் 61-வது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாகக் கொண்டாப்பட்டது. ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சக்தி ஐடிஐயில் தாளாளர் ஆர்.சந்திரசேகர் தேசியக் கொடியை ஏற்றினார். மேற்கண்ட விழாவில் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.நடராஜன், சக்தி ஐடிஐ தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான அ.ப.சிவராமன், எஸ்.வி.ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, முன்னாள் கவுன்சிலர் டி.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றினார். திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் பாலாஜி துணிக்கடை உரிமையாளர் கே.வி.ஆர்.ஜெயபால் தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளி அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விபத்தில் ஊனமுற்ற 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஆர்.சரவணனின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ரூ.12,500 ரொக்கமாக வழங்கப்பட்டது. ஸ்ரீ முத்தையர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆன்டனிராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.தண்டபாணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி பண்ருட்டி கிளை மேலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பண்ருட்டி நகராட்சியில் ஆணையர் கே.உமாமகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக