கோரிக்கை பதிவு

படுகுழிக்குள் வீழ்த்தும் பாதாள சாக்கடைத் திட்டம்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் நகரில் பலரை படுகுழிக்குள் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது.  இத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில், குழிகளில், நூற்றுக் கணக்கானோர் விழுந்து காயம் அடைந்துள்ளனர்; பலர் இறந்துள்ளனர்.  பாதாள சாக்கடைத் திட்டத்தில் விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ அரசோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ பொறுப்பல்ல என்பது, காண்ட்ராக்ட் விதிமுறைகளில் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவோர், மக்கள்படும் அவதியைக் கண்டு சற்றும் கவலை கொள்வதில்லை. கடலூரில் மூன்றில் இரு பங்கு வார்டுகளில், ரூ.44 கோடியில் தொடங்கி ரூ.70 கோடியை தொட்டுக் கொண்டு இருக்கும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது.ஒரு திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, அத்திட்டத்தின் பலனை எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். அது திட்டத்தின் வெற்றியை மனதில் கொண்டதாக அமையும். ஆனால் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, இத்திட்டத்தை நிறைவேற்றும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து, துயரங்களில் இருந்து, சங்கடங்களில் இருந்து, கடலூர் மக்கள் எப்போது விடுபடுவார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.வரும் 20 ஆண்டுகளில் கடலூர் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்ற கணக்கின் அடிப்படையில், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே பிரச்னைகளும் தோன்றிவிடும் என்றும், அனுபவமிக்க பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கியது முதல் பள்ளத்தில் விழுந்து திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மூவர், பொதுமக்களில் ஒருவர், விபத்தில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விழுந்து, பலத்த காயங்களுடன், பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து உயிர் பிழைத்து உள்ளனர்.இந்தப் பட்டியல் மேலும் தொடரும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் 3-வது கட்டமாக தோண்டப்பட்ட குழியில், செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சைக்கிளுடன் விழுந்தார். அவர் நீதிமன்றக் காவலாளியான சந்திரன் (58) என்று பின்னர் தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து, அவரைக் காப்பாற்றி உள்ளனர். திட்டம் முடிவடையும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரவும், நல்ல சாலைகளை கடலூர் மக்கள் அனுபவிக்க முடியாத துயரம் தொடரவும் இத்திட்டம் வழிவகுத்து உள்ளது.  ஆனால் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.44 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக தற்போது உயர்ந்து இருக்கிறது. இது மேலும் உயராது என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டு இருப்பதுதான் வேதனை தரும் விஷயமாகக் கருதுகிறார்கள் கடலூர் மக்கள். மண்ணில் புதைக்கப்படும் பணத்தை யாரால் ஆய்வு செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக