அகல ரயில்பாதையில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தியாக உள்ளது என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கூறினார்.
மயிலாடுதுறை-விழுப்புரம் இடையிலான 122 கி.மீ., அகல ரயில்பாதைப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இதனை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு இரண்டு நாள் ஆய்வு பணி மேற் கொண்டார். இறுதி நாளான நேற்று காலை கிள்ளை ரயில் நிலையத்தில் ஆய்வை துவக்கினார். அவருடன் தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் டிராலியில் ஆலப்பாக்கம், கேப்பர் குவாரி வழியாக பிற்பகல் கடலூர் முதுநகர் வந்தடைந்தனர்.
அப்போது தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று காலை கிள்ளையில் துவங்கி வரும் வழியில் ஆர்.வி.என்.எல்., செய்து வரும் பணிகளான ரயில் பாதை, பிளாட்பாரங்கள், கட்டட பணிகள், கிராசிங் பாயின்ட்கள், சிக்னல்கள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டோம். முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டுமானால் நாளொன்றுக்கு 25 கி.மீ., தான் போக முடியும். அப்படிப் பார்த்தால் 5 நாட்கள் பிடிக்கும். தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் மாற்றி அமைக்க வேண்டிய பணிகளை இந்த ஆய்விலேயே கூறினால் எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு இந்த முதற்கட்ட ஆய்வு பயனுள்ளதாக இருக்கும். மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முழுவதும் முடிக்க வேண்டும். இந்த மார்க்கத்தில் 32 பெரிய பாலங்களும், 290 சிறிய பாலங்களும் உள்ளன. முக்கியமாக பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பாலங்கள் நிறைய இருந்ததால் கட்டிமுடிக்க காலதாமதாதம் ஏற்பட்டது. இந்த மார்க்கத் தில் 30 ஆயிரம் இரும்பு பிட்டிங் குகள் திருடுபோயுள்ளன. வேறெங்கும் இதுபோல நடந்ததில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் பணிகள் தாமதமாகியுள்ளன. எப்படியும் வரும் மார்ச் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு தான் ரயில் ஓட்டப்படும். தற்போது சரக்கு ரயில் ஓட்டுவதற்கு போதுமான வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது சரக்கு ரயிலை இயக்குவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு ராமநாதன் கூறினார். பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு கூறும் போது, இது ஒரு முதற்கட்ட ஆய்வுதான். இது வரை ஆய்வு செய்ததில் முடிக்கப்பட்ட பணிகளில் 90 சதவீதம் திருப்தியாக உள்ளது. பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக