பேருந்து வசதி கோரி கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கடலூர் அருகே உள்ள தியாகவல்லி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தியாகவல்லி ஊராட்சியில் 12 கிராமங்கள் உள்ளன.
லெனின் நகர், பெரியார் நகர், ஸ்டாலின் நகர், அம்பேத்கர் நகர், நந்தன் நகர், வள்ளலார் நகர் கிராமங்களில் தலித்துகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். பெரும்பாலானோர் கட்டடத் தொழில், மற்றும் கூலித் தொழில் செய்கிறார்கள். ஏராளமான மாணவர்கள் அருகில் உள்ள ஊர்களிலும் கடலூரிலும் படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளியிடங்களுக்குச் செல்ல பஸ் வசதி போதுமானதாக இல்லை. நொச்சிக்காடு கிராமத்துக்கு வரும் ஒரே ஒரு பேருந்தை விட்டால் வேறு வழியில்லை. பேருந்தை தவறவிட்ட பலர் உப்பனாற்றைப் படகில் கடந்துச் சென்று பஸ்களைப் பிடிக்க வேண்டியது இருக்கிறது. மாணவர்கள் உரிய நேரத்துக்குப் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை. கூலி வேலைகளுக்குச் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஜனவரி 27-ம் தேதி படகு கவிழ்ந்து மாணவர்கள் உப்பனாற்றில் விழவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே கூடுதலாகப் பேருந்துகள் விட வேண்டும். உப்பனாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக