கோரிக்கை பதிவு

காணாமல் போகும் கடலூர் கலெக்டர்!

கடலூர் மாவட்ட கலெக்டர் சீதா ராமன் கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு மூலம் கலெக்டரானவர். ஆகவே, எல்லாத் துறைகளிலும் தேர்ந்தஅனுபவம் உள்ளவர். அந்த அனுபவத்தைப் பயன் படுத்தி, ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து அவர் வேலை வாங்கினால், மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக ஆக்கிவிட முடியும். ஆனால், அவர் அப்படி எந்தக் காரியமும் செய்யவில்லை என்பதுதான் வேதனையானவிஷயம்!

கலெக்டர் வளாகத்தில் உள்ள அலுவலகஊழியர்கள், "அலுவலர்களிடம் பணி சம்பந்தமாக கலெக்டர் பேசும் போது, எல்லாம் தனக்குத் தெரியும் என்றே பேசுகிறார். லாஜிக்குடன் ஊழியர்கள் மறுத்துப் பேசினால்... ஏக வசனத்தில் இறங்கி விடுகிறார். சமீபத்தில், மாவட்ட வழங்கல் அலுவலக ஊழியர்களிடம் இவர் ஏகவசனத்தில் பேச... அவர்கள் கொதித்துப்போய் ஒட்டுமொத்தமாக விடுப்புக் கேட்க, அதன் பின்னரே பதறிப்போய் சமாதானம் பேசினார் கலெக்டர். அது மட்டுமில்லை... ராத்திரி பத்து மணிக்கு மேல் காலை எட்டு மணி வரை யாரையும் பார்க்கவும் மாட்டார்; செல்போனையும் அட்டெண்ட் பண்ண மாட்டார். அதே போல, கேம்ப் ஆபீசுக்கு போய் விட்டாலும் யாரையும் சந்திக்க மாட்டார்!" என்று சலித்துக் கொண்டார்கள்.
பொதுமக்களும், "இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டரெல்லாம் சாதாரண மக்களிடம் நெருக்கமாப் பழகி மனசுல இடம் பிடிச்சாங்க. ஆனா, சீதாராமன் எங்கேயாவது ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மட்டும்... வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போறாரு. மத்தபடி வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது, பள்ளிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்றது போன்ற எந்த வேலையையும் செய்றதில்லை. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துக்குற விழாக்கள்ல மட்டும்தான் அவர் தலையைப் பார்க்க முடியுது. அங்கெல்லாம், 'மக்கள் நன்றியோட இருக்கணும்'னு கிட்டத்தட்ட ஆளுங்கட்சியோட மாவட்டச் செயலாளர் ரேஞ்சுக்கு மேடையில பேசுறாரு!" என்று சீறினார்கள்.

கலெக்டர் புராணம் போதும்... மற்றத் துறைகள் பக்கமும் பார்வையைத் திருப்புவோமா?

முதலில் மக்கள் தொடர்பு அலுவலகம்... "அரசின் செய்திகளை எந்தப் பத்திரிகைக்கும் தகவல்களாக அனுப்புவதில்லை; எந்த விழாக்களுக்கும் யாரையும் அழைப்பதில்லை. உதவி அதிகாரி ஒருவர்தான் உச்சகட்ட வசூல் மன்னன். எந்த விழாவுக்குப் போனா லும் 40 பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி, மற்ற மாவட்டங்களைப் போலவே கவர் வாங்கி விடுகிறார். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த உதவி அதிகாரி அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!" என்று புலம்புகிறார்கள் கடலூர் பத்திரிகையாளர்கள்.

மீன்வளத் துறை பக்கம் வலம் வந்தபோது, "இப்படி ஒரு துறை இருப்பதே பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியாது. விவரம் தெரிந்த ஒரு சில மீனவர்கள்தான் அலுவலக ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு கடன்வசதி, மானிய உதவி என்பதையெல்லாம் பெற்று வருகிறார்கள். மீனவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கக்கூட அலுவலகம் முன்வரவில்லை. கடந்த மாதம் சிங்களக் கடற்படை தொடர்ந்து கடலூர் மீனவர்களைத் தாக்கிய பிறகுதான், அடையாள அட்டை கொடுக்க முடிவெடுத்து வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்!" என்றார்கள்.

தமிழ்வளர்ச்சித் துறையைப் பற்றி விசாரித்தால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, "கலெக்டர் ஆபீஸில் இருப்பவர்களுக்கே இப்படி ஓர் அலுவலகம் இருப்பது தெரியாது. மாதத்தில் ஒரு சில நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எல்லாம் இந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்களை வாங்கக்கூட இங்கு ஆட்கள் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை செய்ய வந்த குழு, பூட்டியிருந்த அலுவலகத்தைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றது. பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லி இருக்கிறார்கள். விளக்கம் கேட்டால், 'எங்களுக்கு நீங்கள் வரும் தகவல் தெரியாது' என்று பதில் சொன்னார்களாம் ஊழியர்கள்!" என்கிறார்கள்.

வேளாண்மைத் துறையைப் பற்றி அறிந்தவர்களிடம் பேசியபோது, "சிறு குறு விவசாயிகளைக் கண்டு கொள்ளாதவர்கள்தான் இந்தத் துறையில் இருப்பவர்கள். வரும் மானியம், இலவசம் எல்லாவற்றையும் தங்களுக்கு வேண்டியவர்களாகப் பார்த்துத் தள்ளிவிடும் தாராள குணம் படைத்தவர்கள். சமீபத்தில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பவர்டில்லர் வாங்க அரசாங்கம் 45 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுத்தது. அது முழுவதும் பெரு விவசாயிகள் சிலருக்கும், ஊழியர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டது. தங்களுக்கு எதிர்ப்பு இருக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முழங்கும் சில விவசாயி களுக்கு மட்டும் அவர்கள் எது கேட்டாலும் செய்து கொடுத்து விடுகிறார்கள் இங்குள்ளவர்கள்!" என்று புட்டுப் புட்டு வைத்தார்கள்.

சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. "ஆனால், மருத்துவம் அப்படி இல்லை. மழைக்கால முன் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. பல இடங்களில் பரவி வரும் காய்ச்சலைக்கூடக் கண்டுகொள்வதில்லை. மாவட்ட தலைமை மருத்துவ மனையில் அவசர சிகிச்சைக்கு வரும் கேஸ்களில் பாதிக்கு மேல் புதுச்சேரிக்கோ, சென்னைக்கோ திருப்பி அனுப்பப்படுகின்றன!" என்கிறார்கள் சுகாதாரத் துறையில் இருக்கும் சிலர்.

கனிமவளத் துறை பற்றி விசாரித்தால், "மணல் விஷயத்தில் எந்த விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. சரியாக கவனித்து விட்டால் போதும்... சம்பந்தமே இல்லாமல் எந்த ஆய்வும் செய்யாமல் எங்கு வேண்டு மானாலும் மணல் அள்ள அனுமதி கொடுப்பார்கள் அதிகாரிகள். குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளிக்கொள்ள ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். அதே போல, இங்குள்ள லாரிகள் திருவண்ணாமலை போன்ற வெளியூர்களுக்கு லோடு போய்விட்டுத் திரும்பும்போது பில் இல்லாமல் ஜல்லி ஏற்றி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்க மாதாந்திர மாமூல் கட்டவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்படி மாமூல் கட்டாத லாரிகள் பிடிபட்டால், 25 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும். அதிலும் விதிவிலக்கு வைத்திருக்கிறார்கள். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால், அபராதம் கிடையாது!" என்று கொந்தளிப்போடு சொன்னார்கள்.

"மாவட்டத் தலைநகரான கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளால் நகரமே சிதைந்து போய்க் கிடக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் சென்று திரும்பும் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட அரசு சார்பில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை, பேருந்து நிலையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணவில்லை!" என்று ஏகப்பட்ட புகார்களை வாசிக்கிறார்கள் கடலுர் நகர மக்கள்.

இவை எதையும் காதில் வாங்காமல் கனஜோராக நடக்குது கடலூர் மாவட்ட நிர்வாகம்!
- கரு.முத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக