கோரிக்கை பதிவு

மீனவன் அநாதை..? கடல் புறம்போக்கு?


டல்புற மீனவன் மறுபடியும் கதிகலங்கிக் கிடக்கிறான்... இந்த தடவை அவன் பயம் உயிர் மட்டுமல்ல... ஒட்டுமொத்த வாழ்வாதாரமும்தான்!
'தாய்மடி', 'கடலம்மா' என்றெல்லாம் கொண்டாடும் கடலைத் தங்களிடமிருந்து மொத்தமாகப் பிரித்துவிடுவார் களோ என்று அஞ்சிக் கிடக்கிறான் அவன். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் 'மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம்' என்ற புதிய சட்ட முன்வரைவு, நாட்டின் மொத்த மீனவர்களையும் அப்படிப் பதறவைத்து விட்டது.
''இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மீனவர்களுக்கு இரண்டே வழிதான்... கடலோரத்தை விட்டு வேறு தொழில் பார்க்கப் போக வேண்டும். இல்லையென்றால், பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களிடம் கூலியாட் களாக சேரவேண்டும்...'' என்று அதிர்ச்சி தெறிக்கும் பார்வையோடு நம்மிடம் ஆரம்பித்தார், பேராசிரியர் வறீதய்யா கான்ஸ்டன்டின். நாகர்கோவில்காரரான இவர் 'நெய்தல் சுவடுகள்,' 'ஆழிப் பேரிடருக்குப் பின்,' 'அணியம்' போன்ற கடலோர வாழ்வடங்கிய நூல்களை எழுதியவர். இந்த சட்ட முன்வரைவு பற்றி விளக்கமாகப் பேசினார்.
''சர்வதேச சட்டப்படி, ஒவ்வொரு நாட்டின் கடற்கரை யில் இருந்து 12 நாட்டிக்கல்
மைல் தூரம்தான் அந்த நாட்டின் கடல் எல்லை... அதாவது, மீன்பிடி எல்லை. இதற்குள்தான் மீன்பிடிக்கலாம். அதுபோக, 200 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு உள்ள கனிமவளம், மீன்வளம் எண்ணெய் வளம் அனைத்தும் அந்தந்த நாட்டுக்குத்தான். இந்தியாவில், மாநில அரசுகள்தான் மீன்பிடி நிர்வாகத்தைக் கவனிக்கின்றன. கடலுக்குள் மீன்பிடிக்கும் படகுகள் லைசென்ஸ் வாங்குவதையும், புதுப்பிப்பதையும் மாநில அரசிடமே செய்துகொள்ளலாம். இந்த புதிய சட்டம், மாநில அரசின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசிடம் மாற்றிவிடுகிறது. இது அமலானால், கட்டுமரம் வைத்திருப்பவன்கூட லைசென்ஸ் வாங்க டெல்லிக்குத்தான் போகவேண்டும். 'எந்த இடத்தில், எத்தனை நாட்கள் மீன் பிடிக்கப் போகிறேன்' என்று முன்கூட்டியே குறிப்பிடவேண்டுமாம்! சர்வே நம்பர், சதுர அடி கணக்கெல்லாம் போட்ட பிறகு மீன் பிடிக்க, கடல் என்ன புறம்போக்கு நிலமா? அதோடு, 'என்ன வகையான மீனை, என்ன முறையில் பிடிக்கப் போகிறோம்?' என்று குறிப்பிட்டால்தான் லைசென்ஸாம்! பல வகையான வலைகளும் தேவைதான். ஒவ்வொரு வகை வலைக்கும் சில மீன்கள் சிக்கும். எந்த மீன், என்ன வலை என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்வது எப்படி சாத்தியம்? இன்னொரு நிபந்தனை, 'என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்பது! இந்த நிபந்தனை, வயிற்றுப்பாட்டுக்கு மீன் பிடிப் பவன், தொழில்ரீதியாக பிடிப்பவன் என்று இரண்டு வகையாக மீனவர்களைப் பிரிக்கிறது. இந்த சட்டப்படி, எந்த வகை படகும் 12 நாட்டிக்கல் மைல் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது. அதை மீறி மீன்பிடித்தால், 9 லட்ச ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை! எந்த வகைப் படகானாலும் ஒரு நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமான மீன் பிடிக்கக்கூடாது. மீறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், கோஸ்ட் கார்டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சகல அதிகாரங்களும் கொண்ட அவர்கள், மீனவர்களை இந்திய பிரஜைகளாகவே மதிப்பதில்லை! அவர்கள் படகை மறித்து, பிடிக்கப்பட்ட மீனின் வகை, மதிப்பு, என்ன வகை வலை என அனைத்தையும் பரிசோதிக்கலாம். பறிமுதல் செய்யவும் அதிகாரம் உண்டு. இதுபற்றி குறிப்பிடும்போது, 'உங்களை கைது செய்து கோஸ்ட் கார்டு ஆபீஸர் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவே கருதப்படும். தவறு இழைக்கலாம் என்ற அனுமானத்தின் பேரில் முன்கூட்டியே கைது செய்யும் அதிகாரமும் அவர் களுக்கு உண்டு. ஒருவேளை, கைதுக்கான காரணங்கள் தவறானவை என பின்னர் தெரியவந்தால், கோஸ்ட் கார்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது!' என்று அரசின் சட்ட முன்வரைவில் தெளிவாக உள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும்கூட இத்தனை மோசமான சட்டம் வரவில்லை. விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளவே தகுதியற்ற இந்த சட்டத்தை, மீனவர்களின் கருத்தைக்கூட கேட்காமல் நிறைவேற்றத் துடிப்பதில் துளியும் நியாயமில்லை!'' என்று பொங்கிய வறீதய்யா, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு கோடி இந்திய மீனவர்களில், 10 லட்சம் பேர் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவர்கள். இப்படி இந்த மரபுவழி மீனவர்களை கடல் புறத்தில் இருந்து அப்புறப் படுத்தி, ஒட்டுமொத்தமாக பன்னாட்டு நிறுவனங்களிடம் கடலை பட்டா போட்டு ஒப்படைப்பதுதான் இந்திய அரசின் திட்டம். 'நீங்கள் என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்ற கேள்வியிலேயே அது தெரிகிறது.
ஏற்கெனவே 'கடற்கரையோர மேலாண்மைத் திட்டம்' என்று மீனவர்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு செயல்படுத்த முனைந்தது. ஆனால் அது, கருத்துக் கேட்புக்கு விடப்பட்டபோது, நாடு முழுவதும் மக்களிடம் எதிர்ப்பு... அதில் தோற்ற அரசு, இப்போது புதிய வடிவத்துடன் மீனவர்களை வெளியேற்ற வந்திருக்கிறது.இது மீனவர்களின் பிரச்னை மட்டுமில்லை... இந்திய மக்களில் சரிபாதி, மீன் சாப்பிடுபவர்கள். 'ஒமேகா கொழுப்பு அமிலம்' என்ற கடல் மீனில் இருக்கும் புரதச் சத்து, மனித மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. இன்னும் சில ரத்த நோய்களுக்கும் மருந்து! ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 15 கிலோ மீன் சாப்பிடுகின்றனர். இந்தியர்கள் 7 முதல் 8 கிலோ மீன்களே சாப்பிடுகின்றனர். அதுவும் புரதச் சத்துள்ள மீன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால், இந்திய கடல் எல்லையில் இறால், சிங் இறால், மஞ்சள் துடுப்பு சூறை, பாறை, கணவாய் போன்ற புரதச் சத்துள்ள ஏராள மீன்கள் உள்ளன. இவை பிடிக்கப் பட்டதும், கரைக்கே வராமல் நடுக்கடலில் வைத்தே வெளிநாட்டுக் கப்பல்களுக்கு கைமாற்றப்படுகின்றன! அந்நியச் செலாவணி என்று இதை நியாயப்படுத்தும் அரசு, இத்தகைய வெளிநாட்டு முதலீடுள்ள கப்பல்களுக்கு வெறும் 16 ரூபாய் என்ற உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குகிறது. கஷ்டப்பட்டு மீன்பிடித்து, அதை உள்ளூர் சந்தைக்குக் கொண்டுவரும் இந்திய மீனவனுக்கோ, ஒரு லிட்டருக்கு வெறும் ஒரு ரூபாய்தான் மானியம்! ஏற்றுமதியாகும் மீன்களுக்கு அந்த நிறுவனங்கள்தான் விலை நிர்ணயிக்கின்றன. சராசரியாக ஒரு கிலோ 186 ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், அதே மீன்களுக்கு நம் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோவுக்கு 250 ரூபாய் வரை கிடைக்கிறது. இப்படி, சகல வகையிலும் மீனவர்களை வஞ்சிக்கிறது அரசு. 1981-ல் வெளிநாட்டுக் கப்பல்களை ஒழுங்குபடுத்த ஒரு சட்டம் உருவானது. கண்காணிப்பது, சோதனையிடுவது போன்ற அந்தச் சட்ட அம்சங்களை அப்படியே இந்த புதிய சட்டத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது, இந்திய மீனவர்களை வெளிநாட்டு ஆட்கள் போல நடத்துகின்றனர்! கடல் தொழிலின் மேன்மையும், மீனவர்களின் வாழ்க்கையும் புரியாதவர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த சட்டத்தால் பயனடையப்போவது, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள்தான்... யாருமே ஆதரவுக்கு வராத அநாதை மீனவர்கள் அல்ல!'' என்று கொதிப்புடன் முடித்தார் பேராசிரியர். - பாரதி தம்பி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக