கோரிக்கை பதிவு

நூலகர் இல்லாததால் பூட்டிக் கிடக்குது நூலகம்

கடலூரில் நூலகர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால் கடந்த 6 நாட்ளாக பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் புதுப்பாளையத்தில் தங்கராஜ் நூற்றாண்டு நினைவு நூலகம் இயங்கி வருகிறது. கடலூர் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நூலகத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். புதன் கிழமை வார விடுமுறையாகும். இங்கு பணியாற்றிய வந்த நூலகர் சேகர் உடல் நிலைக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 14ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்று விட் டார். அவருக்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் வேறு நூலகர்களை இங்கு நியமிக்காததால் கடந்த 14ம் தேதி முதல் நூலகம் பூட்டியே கிடக்கிறது.
இதனால் நூலகத்திற்கு அன்றாடம் வரும் வாசகர்கள் பெருத்த ஏமாற்றத் திற்குள்ளாகியுள்ளனர். மருத்துவ விடுப்பில் சென் றுள்ள நூலகர் மீண்டும் பணிக்கு வரும் வரை தற்காலிகமாக வேறு நூலகர்களை நியமித்து, நூலகத்தை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலிண்டர் வினியோகத்தில் ஸ்டிக்கர் முறை அறிமுகம்! முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகத் தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க மாவட்டத்தில் முதல் முறையாக இன்டேன் நிறுவனம் "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மூன்று லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர், நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜென்சியும், இந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப் பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட் ரோலிய நிறுவனம் சார் பில் பண்ருட்டியில் இரண்டு, நெய்வேலி மற் றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜென்சி என மொத்தம் 15 காஸ் ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன. இருப்பினும் அனைத்து பகுதிகளிலும் காஸ் சிலிண்டர் தட்டுப் பாடு நிலவி வருகிறது.
வீட்டு உபயோக காஸ் இணைப்புகளுக்கு 21 நாட் களுக்கு ( தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு திட்டத்தில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 நாட்களுக்கு)  ஒரு சிலிண்டர் வழங்க வேண்டும் என விதி இருந்தாலும் இதனை பெரும்பாலான ஏஜன்சிகள் பின்பற்றுவதில்லை. நிறுவனங்கள் நிர்ணயித்த காலக்கெடு முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர்.
இலவச காஸ் இணைப் புதாரர்களுக்கு மூன்று மாதத்திற்கு பிறகே மறு சிலிண்டருக்கு பதிவு செய் யப்படுகிறது.
காஸ் சிலிண்டர் வினியோகத்தில் பெரும்பாலான ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாகவும், அதன் காரணமாக சிலிண் டர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு  அதிகரித்து வருகிறது. குறிப் பாக வீட்டு உபயோக சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு ஓட்டல்கள் மற் றும் கார்களுக்கு விற்பனை செய்வதால் தான் தட்டுப் பாடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து "இன்டேன் காஸ்' நிறுவனம் ( இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) சிலிண்டர் வினியோகத் தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்த் திட முன் மாதிரியாக "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இணைப்பிற் கும் தனித் தனி நான்கு இலக்க எண் மற்றும் ஏஜென்சியின் பெயர் அடங்கிய "ஸ்டிக் கர்' வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது.
இன்டேன் நிறுவனத்தில் காஸ் இணைப்பு பெற்றவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏஜென் சிகளில் ரேஷன் கார்டு மற் றும் காஸ் இணைப் பிற் கான "பாஸ் புக்'கை காண் பித்து பதிவு செய்து கொண்டு நான்கு இலக்க எண் கொண்ட 32 ஸ்டிக்கர் பெற்றுக் கொள்ள வேண் டும். அனைத்து ஸ்டிக்கர்களிலும் ஒரே எண் இருக் கும். ஒவ்வொரு இணைப் பிற்கும் வழங்கிய குறியீட்டு எண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். அதன்பிறகு சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும். வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வருபவரிடம் சிலிண்டரை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதில் கையெழுத்து போட்டு, நிறுவனம் கொடுத்த ஸ்டிக்கரில் ஒன்றை அந்த ரசீதியில் ஒட்டி ஒப்படைக்க வேண் டும்.
இதன் மூலம் தினசரி குடோனில் எடுத்துச் செல் லப்படும் சிலிண்டர்கள் ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாவட்டத்தில் இன் டேன் நிறுவனம் சார்பில் உள்ள ஏழு ஏஜன்சிகளிலும் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நுகர்வோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே முறையை மாவட் டத்தில் உள்ள இந்துஸ் தான் பெட்ரோலியம் மற் றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் காஸ் ஏஜென்சிகளிலும் அமல்படுத்தினால் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் - எம்.எல்.ஏ. பனிப்போர்: பாதியில் கிடக்கும் திட்டங்கள் கலங்கும் கடலூர்





மந்திரிக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான மோதலால் அரசின் திட்டங்கள் பாதிக்கப்படுவது கூட ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால், எங்கள் ஊரில் தி.மு.க. அமைச்சருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குமான ஈகோ யுத்தத்தால் பல திட்டங்களும் பாதியில் கிடக்கின்றன...’’

-இப்படி குமுறுகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

அவர்கள் குறிப்பிடுவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கும் இடையிலான பனிப் போரைத்தான்.

‘‘ரயில்வே சுரங்கப்பாதை, அரசு பொது மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி, துறைமுக வளர்ச்சித் திட்டம் என பல முக்கியத் திட்டங்கள் கடலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், எம்.ஆர்.கே.வுக்கும், அய்யப்பனுக்கும் இடையிலான ஈகோ யுத்தத்தால் எதுவும் முழுதாக செயல்வடிவம் பெறவில்லை. அதிலும் கடலூர் லாரன்ஸ் ரோடு, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு கடந்த 93-ம் ஆண்டே திட்டம் தீட்டப்பட்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் இன்றுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை’’ என அலுத்துக் கொள்கிறார்கள் கடலூர் நகர வியாபாரிகள்.

அரசின் திட்டத்தில் தி.மு.க.வின் கோஷ்டிப் பூசல் வெட்ட வெளிச்சமாகக் கிடப்பதைக் கண்டித்து கடலூரின் பொது நல இயக்கங்கள், தொழிலாளர் நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் என மொத்தம் 75 அமைப்புகள் சேர்ந்து கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை ஆரம்பித்தனர். இந்தக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் என நடத்தியும் ஒன்றும் பயனில்லை.

எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்கும் இடையில் அப்படி என்னதான் நடக்கிறது? கடலூர் தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம்.

“சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்-போதே அய்யப்பனுக்கு சரியான ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்க மறுத்தார் எம்.ஆர்.கே. அதனால் அய்யப்பனுக்கு அவர்மேல் அதிருப்தி. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன், எம்.ஆர்.கே.வை எதிர்க்க அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் அய்யப்பன். பிறகு நடந்த கடலூர் நகர பிரதிநிதி நியமனத்திலும் இரு கோஷ்டினருக்கும் பிரச்னை ஏற்பட்டு உண்ணாவிரதம் வரை சென்று பின்னர் அறிவாலயத்தில் சமாதானம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மாவட்டச் செயலாளர் தேர்தல் வந்தபோது எம்.ஆர்.கே.அணிக்கு எதிராக அய்யப்பனும், சபா ராஜேந்திரனும் சிதம்பரத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணனை நிறுத்தினர். ஆனால் சரவணன் தோல்வி அடைந்தார். அன்று முதல் எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்குமான பிரச்னை மேலும் வலுத்துவிட்டது. மாவட்டத்தின் தலைமையிடமான கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் அய்யப்பன். இதனால் கடலூர் டவுனுக்கு எந்த முக்கியத் திட்டமும் நிறைவேறாமல் பார்த்துக் கொள்கிறார் எம்.ஆர்.கே. சுரங்கப்பாதைத் திட்டம் நிறைவேறினால் எங்கே அய்யப்பனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துவிடுமோ என்று இந்தத் திட்டத்தில் மெத்தனம் காட்டி வருகிறார் எம்.ஆர்.கே. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான பிரச்னையால் மக்களுக்கு சேரவேண்டிய நல்ல திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இதனால் தி.மு.க.வுக்குத்தான் கெட்டபெயர்’’ என்றார்கள் வருத்தத்துடன்.

கூட்டு நடவடிக்கைக் குழுவில் இருப்பவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளருமான நிஜாமுதீனிடம் இதுபற்றிப் பேசினோம். “கடலூர் லாரன்ஸ் சாலை நகரின் இருதயம் போன்றது. இதன் வழியாகத்தான் மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் செல்லவேண்டும். மேலும் எஸ்.பி. அலுவலகம், கலைக் கல்லூரி, நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மிக முக்கிய பள்ளிகள் என எல்லாமே ரயில்வே கேட்டுக்கு முன்பக்கம்தான் உள்ளது. ஆனால் அந்தப் பக்கம் திருவந்திபுரம் கோயில், பாடலீசுரர் கோயில், மத்திய சிறைச்சாலை போன்றவை அமைந்துள்ளன. இந்தக் குறுகிய சாலையை கடக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படுவதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தீர்க்க 1970-லேயே ரயில்வே சுரங்கப் பாதை திட்டம் அமைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தினோம். அதன் பேரில் கடந்த 93-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை.

வேங்கடபதி எம்.பி.யாக இருந்தபோது இதுபற்றி எடுத்துக் கூறினோம். இந்த சுரங்கப்பாதை லாரன்ஸ் சாலையில் வந்தால் தனக்கு ஆதரவான வசதி படைத்த நகை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த சுரங்கப்பாதை திட்டத்தை மக்கள் பயன்படாதவகையில் கடலூர்-விருத்தாசலம் சாலை தொடங்கி வண்டிப்பாளையம் சென்று அடையும்படி திட்டம் தீட்ட உத்தரவிட்டார் வேங்கடபதி. ஆனால் இது மக்களுக்குத் தெரியவில்லை. பின்பு எங்கள் குழுவின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளும்போதுதான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும், அதன் மூலம் சிலர் பணம் பார்த்ததும் தெரியவந்தது.

இதை எடுத்துக்கூறி அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் திட்டத்தை முறையாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். மக்களின் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்ட அவர் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பி பழைய லாரன்ஸ் சாலைக்கே சுரங்கப் பாதை அமைக்க வழிவகை செய்தார். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.-பன்னீர்செல்வம் இதில் தலையிட்டதால் அமைச்-சருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பல கோரிக்கைகள், போராட்டங்கள், நடத்திய பிறகும் பெரும்பான்மை மக்களுக்கு தேவையான இத்திட்டம் தற்போது கடலூர் நகரமன்றத்தின் தீர்மானத்துக்காக காத்துக் கிடக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அய்யப்பனிடம் பேசினோம். “சுரங்கப்பாதை திட்டம் கோப்புகள் அனைத்தும் கையெழுத்-திடப்பட்டு டெண்டருக்காக காத்திருக்கிறோம். விரைவில் டெண்டரும் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மக்கள் நலனுக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்க என்னால் முடியும்” என்றார் சூசகமாக.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு நான் தடையும் செய்யமாட்டேன், தடையாகவும் இருக்கமாட்டேன். என் உதவியை நாடினால் நிச்சயம் நான் செய்வேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கிறார்கள். அது தோல்வியில்தான் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது’’ என்றார்.

‘பிரச்னை உனக்கும் எனக்கும்தான். இதில் அப்பாவிங்க பாதிக்கப்படக் கூடாது...’

-‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் இந்த வசனத்தை சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்த்தால் கடலூர் மக்களுக்கு நல்லது.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1437&rid=73

கடலூரில் 2 லட்சம் வீடுகளைக் கட்ட கொட்டிக் கிடக்கிறது எரிசாம்பல்; பயன்படுமா செங்கல் தயாரிப்புக்கு?

மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகளின் தேவை அதிகரிக்கிறது. இதனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான செங்கல்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.கடலூர் மாவட்டத்தில், விளை நிலங்களை அழித்துத்தான் பெரும்பாலான செங்கல் சூளைகள் அமைக்கப்படுகின்றன. சுரங்கத் துறையின் அனுமதி பெற்றுத்தான் செங்கல் சூளைகளை அமைக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால், கடலூர் மாவட்டத்தில் 40 செங்கல் சூளைகள்தான் சுரங்கத் துறையின் அனுமதி பெற்றவை. 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன. தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்துக்குத்தான் மணல் அல்லது சரளைக்கல் போன்றவற்றை எடுக்கலாம் என்பது சுரங்கத்துறையின் விதி. ஆனால் கடலூரில் விதிகளுக்கு மாறாக 15 அடி ஆழம் வரை களிமண், செம்மண், சரளைக்கல் போன்றவற்றை தாராளமாக எடுத்துச் செல்கிறார்கள்.இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று விட்டதாகவும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.செங்கல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் 4 ஆயிரம் செங்கல், லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெற்றபோது கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதன் விளைவாக, 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. தற்போது விலை ரூ.11 ஆயிரம் வரை உள்ளது.  கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், தமிழகத்திலேயே அதிக பட்சமாக 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இவை 4 ஆண்டுகளில் கட்டப்படும் என்கிறார்கள். 2.10 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 20 கோடி செங்கற்கள் தேவை என்று கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இத்தனை செங்கற்களையும் நான்கே ஆண்டுகளில் தயாரித்து அளிக்க வேண்டுமானால் எத்தனை செங்கல் சூளைகள் அமைக்க வேண்டியது இருக்கும்; அதற்காக எத்தனை விளை நிலங்களை சூளைகளாக மாற்ற வேண்டியது இருக்கும். பயன்பாட்டில் உள்ள சூளை நிலங்களில், இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படாதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.அனல் மின் நிலையங்களில் ஏராளமான டன் எரிசாம்பல், கழிவுகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டன் எரிசாம்பல் சேமிப்பில் உள்ளது. எரிசாம்பல் காற்றில் கலந்து மனிதனின் உடலுக்குள் புகுந்து சுவாசக் கோளாறுகளுக்கும், காசநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகி விடுவதாக மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே எரிசாம்பலை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த, செங்கல் தயாரிப்பில் குறிப்பிட்ட சதவீதம் எரிசாம்பலைக் கலக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.எரிசாம்பல் கலந்த செங்கல்கள் உறுதியானவைதான் என்று தமிழகப் பொதுப்பணித் துறை சான்று அளித்து இருக்கிறது. அதனால் செங்கல் தயாரிப்பில் சிலர் 50 சதவீதம் கூட எரி சாம்பலை கலக்குகிறார்களாம். சிமென்ட் தயாரிப்பிலும் எரிசாம்பல் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் சூளை அதிகரிப்பால் நீராதாரங்கள் பாதிக்கப்படும். சூளையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் அனல் அருகில் உள்ள பயிர்களைப் பாதிக்கும். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை பயன்படுத்துவது இல்லை. செங்கல் தேவை திடீரென அதிகரிக்கும் சூழ்நிலையில், செங்கல்களுக்கான மண் தேவையை கணிசமாகக் குறைக்கும் வகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை கலக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும்.  என்.எல்.சி. நிறுவனம் எரிசாம்பலை இலவசமாக வழங்க வேண்டும். எளிதாக எடுத்துச் செல்ல பாதைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். இது குறித்து கடலூர் மாவட்டக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ராஜா கூறுகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பல் கலக்கலாம். ஆனால் சூளை போடுவோர் அதை சரியான விகிதத்தில், முறையாகக் கலக்காததால் நம்பகத் தன்மை இல்லை. எனவே வீடு கட்டுவோரும் ஏற்பது இல்லை. சாம்பலை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும், எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அரசு, சட்டமாக வெளியிட வேண்டும் என்றார்.

கடலூர் நகர பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கடலூரில் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் நகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என 450 குடும்பங்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வசதி வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு பராமரிப்பு செலவிற்காக 60 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.தற்போது இந்தப் பகுதி பராமரிப்பு பணிகள் கடலூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள மேல்நிலை தேக்கத் தொட்டிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல்நிலைத் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அதிலிருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து கிழே விழுந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டி சீர் செய்ய டெண்டர் விடப்பட்டது.பணியை எடுத்த ஒப்பந்தக்காரர் பணியை துவங்கி மூன்ற மாதங்கள் ஆகியும் இதுவரை முடிக்காததால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. காலை நேரத்தில் தண்ணீர் தொட்டியில் ஏற்ற முடியாமல் நேரடியாக வழங்கப்படுவதால் தண்ணீர் கலர் மாறி பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.இந்த தண்ணீரை குளியல் மற்றம் துணி துவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு ஒரு குடம் 3 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் குடிநீர் தொட்டி இருந்தும் நல்ல குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடன் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.