கடலூர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும், அனைத்து பொது பிரச்சனைகளும் இந்த தளத்தில் காணலாம், கடலூர் மாவட்டத்தை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
தினமணி தலையங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி தலையங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எப்போது தெரியும்?
பள்ளிக் கல்விக் கட்டண வசூல் ஒழுங்குமுறைச் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், பள்ளிகளுக்கு எத்தகைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி, தமிழக அரசு இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் எவ்வளவு என்பது தெரியாமல் அவதிப்படுவது வழக்கம்போல பெற்றோர்கள் மட்டுமே!பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன என்று மக்கள் தாங்கமாட்டாமல் புலம்பியதால்தான் அரசு இந்தப் பிரச்னையில் ஆர்வம் காட்டியது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை) சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கில், இந்தச் சட்டம் செல்லும் என்று தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். தமிழக அரசுக்கு இதைவிட சாதகமான தீர்ப்பு வேறு ஏதும் கிடையாது. ஆனாலும், இதுவரை அரசு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை.அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்பதற்காக, தனியார் பள்ளிகள் சும்மா இருந்துவிடவில்லை. அவர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர் சேர்க்கை சின்ன நோட்டுப் புத்தகத்திலும், வெறும் துண்டுச் சீட்டிலுமாக நடந்து கொண்டிருக்கிறது. சில பள்ளிகள் கட்டணங்களையும் வசூலித்துவிட்டன. சில பள்ளிகள் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்துகின்றன. கட்டணங்களைப் பிறகு சொல்கிறோம் என்று கூறுகின்றன. இத்தனை நடைமுறை ஊழல்களுக்கும் காரணம்- இன்னமும் அரசு தான் நிர்ணயித்துள்ள கட்டண விகிதத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதுதான்.இந்தச் சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் தங்கள் விண்ணப்பங்களை விற்பனை செய்யவில்லையே தவிர, மாணவர் சேர்க்கையை நடத்திக் கொண்டே இருக்கின்றன. பெற்றோர்களும், முந்திக்கொண்டு குழந்தைகளைச் சேர்க்காமல் அரசு அறிவிப்புக்காகக் காத்திருந்தால், நம் குழந்தைக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக இந்தப் பள்ளிகள் சொல்லும் அனைத்துக்கும் கட்டுப்பட்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் பணத்தைக் கொடுத்து அனுமதியை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.சென்ற ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. 2008-09-ம் ஆண்டுகளில் வசூலித்த கட்டணம், சிறப்புக் கட்டணம் மற்றும் வரவு செலவுக் கணக்குகள் ஆகியவற்றை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் வழக்குத் தொடுத்ததுடன், வழக்கு முடியும்வரை நமது வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவையும் எடுத்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வருவதற்கு ஓராண்டு காலம் ஆன நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் என்ன செய்து கொண்டிருந்தது? அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் தாங்கள் செலுத்திய கட்டண விவரங்களின் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தாலே போதுமே, கொட்டித் தீர்த்திருப்பார்களே! கல் வித் துறை ஏற்கெனவே இத்தகவல்கள் அனைத்தையும் பெற்று, ஒவ்வொரு பள்ளியையும் அதன் வசதிகளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்திருந்திருந்தால், இப்போது வெளிப்படையாக கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக அறிவிக்க வேண்டியதுதானே. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன, இவை எந்த அடிப்படையில் ஏ, பி, சி, என தரம் பிரிக்கப்பட்டன, இவற்றுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? சிறப்புக் கட்டணம் எவ்வளவு? என்பதை ஒட்டுமொத்தமாக இணையதளத்தில் வெளியிட்டால், பெற்றோர்கள் அனைவருமே பார்த்து அறிந்துகொள்ள முடியுமே! அரசு ஏன் இதில் இன்னமும் மெüனம் காக்க வேண்டும்.மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகம் ரூ. 445, யு.கே.ஜி. ரூ. 500, முதல் வகுப்பு ரூ. 655 என ஐந்தாம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறினாலும் இதை ஏன் மக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.1973-ல் இயற்றப்பட்ட தனியார் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 32-ன் படி, எந்த ஒரு தனியார் பள்ளியும் தகுதிவாய்ந்த அதிகாரி குறிப்பிட்டுள்ள கட்டணம் தவிர, வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக கல்வித் துறை அதிகாரிகள் ஏன் மெüனமாக இந்த கல்விக் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்?கல்லூரிகள் விவகாரத்திலும் இதே மெüனம்தான் நீடிக்கிறது. அதிகக் கட்டணம், நன்கொடை போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக, கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்து ஓராண்டு ஆகப் போகிறது. ஆனால் அந்தக் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது யாருக்குமே தெரியாது.சென்ற ஆண்டு பல பொறியியல் கல்லூரிகளில் அரசு அறிவித்த குழு நேரில் சென்று பல்வேறு புகார்களை விசாரித்தது. சில கல்லூரிகள் அலுவலகங்களைப் பூட்டிக்கொண்டு அலட்சியப்படுத்தின. ஆனால் எந்தப் பொறியியல் கல்லூரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள் தற்போது நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு தகுதியானவையா இல்லையா? இன்னும் அறிவிப்பு இல்லை.ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு? முறைகேடு செய்த பொறியியல் கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை? கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இப்போது சொல்லாவிட்டால், வேறு எப்போது சொல்வார்கள்!
கட்டுகள்
கல்வி,
தினமணி தலையங்கம்,
பள்ளி
முறைப்படுத்துதல் முறையா?
சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப் பஞ்சாயத்துகளில் முறையான அனுமதி இல்லாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை, இரட்டிப்பு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு முறைப்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நியாயமாகப் பார்த்தால், இந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து, இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடுத்து அபராதம் விதிப்பதுடன், இதற்குக் காரணமான உள்ளாட்சி அமைப்பின் அதிகாரி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.தற்போது குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகூட உள்ளாட்சித் தணிக்கையிலும் பொதுத் தணிக்கை அறிக்கையிலும் தொடர்ந்து இத்தவறுகளைச் சுட்டிக்காட்டி வருவதால் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளிலும் குடிநீர்க் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கு ஏற்படும் மின்கட்டணம் ஆகியவற்றை ஒப்பீடு அடிப்படையில் தணிக்கை செய்யும்போது, உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல் அம்பலப்பட்டுப் போகிறது.உதாரணமாக, ஒரு நகராட்சியின் பதிவேட்டின்படி உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை, அவற்றின் குழாய் அளவு, குடிநீர் விநியோகிக்கப்படும் கால அளவு ஆகியவற்றைக் கொண்டு அந்த நகரின் ஒட்டுமொத்தக் குடிநீர் அளவு எட்டப்படுகிறது. இதில் நீர் கசிவுகளையும் கழித்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு அந்த நிலையத்தின் குதிரைத்திறனுக்கு ஏற்ப எத்தனை மணிநேரம் இயங்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், மின்மோட்டர் இயங்கிய கால அளவுக்கும், வெளியேற்றப்பட்ட குடிநீர் அளவுக்கும், இணைப்புப் பெற்ற வீடுகளுக்குத் தேவையான குடிநீர் அளவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் தணிக்கைத் துறையினர் தொடர்ந்து சுட்டிக்காட்டும் குறைபாடு. தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறைபாட்டை மட்டுமே பேச முடியும். ஊழல் நடைபெறும் விதத்தை விளக்க வழியில்லை. குடிநீர் ஊழல் எப்படி நடக்கிறது என்றால், அனுமதியில்லாத இணைப்புகள் இந்தக் குடிநீரை முறைகேடாகப் பயன்படுத்துவது ஒருபுறம். அடுத்ததாக மாநகராட்சி ஊழியர்களும் உள்ளாட்சிப் பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் முறைகேடாக லாரிகளுக்கு இத்தண்ணீரை வழங்கி, அதை வெளியே விற்று பணம் சம்பாதிப்பதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தமிழக உள்ளாட்சிகளுக்கு மின்கட்டணம் மூலம் சில நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இழப்பை மக்கள் வரிப் பணத்திலிருந்து ஈடுகட்டிக் கொண்டிருக்கிறோம்.மின்கட்டணம் மட்டுமே இழப்பு அல்ல. இந்த முறையற்ற இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் நியாயத்துக்குப் பயந்த மனிதர்கள் அல்லர். அவர்கள் இந்தக் குடிநீரை தங்கள் உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியெடுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சொந்த வசதிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருதும்போது, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புரியும்.முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவதால் ஊழல் அதிகாரிகள் மற்றும் அடாவடி அரசியல்வாதிகளின் செயல்களை நியாயப்படுத்துகிற ஆபத்து உள்ளது. மேலும் பணம் படைத்திருந்தால் எவர் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டலாம், பிறகு முறைப்படுத்திக்கொள்ளலாம் என்பது நியாயமான வழியில் நேர்மையாக அனுமதியைப் பெறும் பொதுஜனத்தை கேலிக்குள்ளாக்குவதாக ஆகிவிடும்.இதே விதமாகத்தான் முறையான அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும், ஏன் கல்லூரிகளும்கூட இதில் விதிவிலக்கல்ல, முறையான அனுமதி பெறாமல் மாணவர்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டு, பிறகு மாணவர்களின் கண்ணீர் பேட்டியை நிர்வாகமே அரங்கேற்றி, பொதுவான பரிதாப உணர்வைத் தூண்டிவிட்டு, அந்தப் படிப்பை முறைப்படுத்துவது அல்லது அந்தப் பயிற்சிக் கல்லூரியை முறைப்படுத்துவது என்பதுதான் இதுநாள் வரை நடந்து வந்துகொண்டிருக்கிறது.வெறும் வேளாண் விளைநிலங்களை மனைகளாக்கி விற்றுவிட்டு, குடியிருப்புகள் உருவான பிறகு அதன் மனைகளை முறைப்படுத்துவது ஒரு தொழிலாகவே நடந்துகொண்டிருக்கிறது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முறையான அனுமதி பெறாமல் மாடிக் கட்டடங்கள் விருப்பம்போல கட்டப்படுகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளுக்கும், அந்த வார்டில் தொடர்புடைய அரசியல்வாதிக்கும் தெரிந்துதான் இது நடத்தப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் முறைகேடான கட்டடங்கள் நிறைந்தவுடன் முறையற்ற கட்டடங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. அல்லது நடவடிக்கை எடுத்து இடிப்பதுபோல பாவனை காட்டினால் அவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, காலத்தை நீட்டிக்கிறார்கள்.இப்படி முறையற்ற செய்கை அனைத்தையும் பணத்தால் முறைப்படுத்த முடியும் என்று அரசே ஊக்கப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. "தாட்சண்யம் தனநாசம்' என்பார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முறைப்படுத்துவதால் அரசுப் பணம்தான் வீணாகும். மீண்டும் எந்த பயமும் இல்லாமல், எப்படியும் முறைப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முறைகேடுகளை இவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளவே செய்வார்கள்.
நன்றி தினமணி
தலையங்கம்
நன்றி தினமணி
தலையங்கம்
கட்டுகள்
கடலூர்,
கடலூர் நகராட்சி,
தினமணி தலையங்கம்
மாற்றிக் கட்டுவோம்
கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் சில ஊர்களில் மட்டுமே வெயில் அதிகம் என்று பயந்த காலம் மாறி, இப்போது எல்லா ஊர்களிலும் ஏறக்குறைய 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலைவிடக் கொடுமை பகல்நேர மின்வெட்டு. அலுவலகம், வீடு எங்கே என்றாலும் உட்கார முடிவதில்லை. உடலும் சேர்ந்து கொதிக்கிற வேளையில்தான் நம் முன்னோர்களின் கட்டடக் கலை நினைவுக்கு வருகிறது.தமிழகத்தின் கோயில்கள், அரண்மனைகள், பழமைவாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் இந்தியச் சுற்றுச்சூழல், தட்பவெப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டப்பட்டவை. பத்மநாபபுரம் அரண்மனை இன்றளவும் பொறியாளர்கள் சென்று பார்த்து வியக்கும் ஒரு கட்டடமாக இருந்து வருகிறது. காரணம், அந்த அரண்மனைக்குள் எப்போதும், எந்தப் பருவ காலத்திலும் தட்பவெப்பம் இதமாக இருப்பதால்தான். திருமலை நாயக்கர் மகாலும் அப்படிப்பட்டதே.ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட எந்தவொரு அலுவலகம் அல்லது வீட்டுக்குச் சென்றால்கூட, வெளியே எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும், கட்டடத்துக்குள் ஒருவிதமான குளுமை எப்போதும் இருக்கும். கூரையிலிருந்து 20 அடி நீளக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறிகள் சுழலாத போதும் இந்தக் குளுமை நீடிக்கவே செய்யும். காரணம், அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அந்த அளவுக்கு உயரமாகவும், ஜன்னல்கள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தது. ஆனால் இன்றைய பொறியாளர்கள், வெளிநாடுகளில் உள்ள கட்டடங்களை அப்படியே காப்பியடித்து இங்கு கட்டுகிறார்கள்.பத்து ஆண்டுகள் முன்புவரை குடிசைகள் கட்டுவோர், ஓலையால் கூரை வேய்ந்து, சுற்றுச் சுவரை மண்ணால் கட்டினார்கள். அத்தகைய வீடுகள் மழையிலும், வெயிலிலும் குளுமையாகவே இருந்தன. இப்போது, அதே அளவில், தாட்கோ நிதியுதவியுடன் கட்டப்படும் ஆதிதிராவிடர் நலக் குடியிருப்புகளில் பகல்நேரத்தில் வேறு வழியின்றி இருந்தாக வேண்டும். இரவில் கான்கிரீட் வெப்பத்தைக் கக்கும்போது, இந்த ஏழைகள், வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கிராமங்களிலாவது வெளியே வாசலில், திண்ணையில் படுத்து உறங்க முடிகிறது. நகரத்தில் வசிக்கும் மக்கள் திருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே உடல் வெம்பிக் கிடக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உடல் வெம்புதல் காரணமாக, நகர்வாழ் மக்களைப் பாலுணர்வு சிக்கல்களில் கொண்டு சேர்க்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன. பழைய காலத்துக் கட்டடங்களில் பெரும்பாலானவை கருங்கற்களால் கட்டப்பட்டவை. கருங்கற்கள் வெயில் சூட்டை உள்வாங்கி, அதே திசையில் வெளியேற்றிவிடும். கட்டடத்துக்குள் இருப்பவர்களுக்கு வெயில் தெரியாது. ஆனால், இன்றைய கான்கிரீட் கட்டடங்கள், வெப்பத்தை வாங்கி வீட்டுக்குள் பரவச் செய்கின்றன. அதைத் தணிக்க மின்விசிறி, வசதியிருப்பின் ஏர்-கண்டிஷன் ஆகியவை தேவையாக இருக்கிறது. இதனால் மின்சாரத் தேவையும் கூடுகிறது. தற்போது கிரீன் பில்டிங் என்ற கருத்தாக்கம் பரவலாகி வருகிறது. இதன் நோக்கம் மின்சாரம் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடங்களை வடிவமைப்பதுதான். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டடங்களை உருவாக்குவதுதான் இதன் அடிப்படைக் கருத்து. கட்டடத்தைச் சுற்றி மரங்களை வளர்த்துவிட்டால், அதன் மூலம் பசுமைச் சூழலை ஏற்படுத்தலாமே தவிர, எரிசக்தி இல்லாத கட்டடமாக அதை மாற்ற முடியாது. மின்சாரம் மிகக் குறைவாகத் தேவைப்படும் வீடுகள், பங்களாக்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை வடிவமைப்பதுதான் இன்றைய அவசியத் தேவை. பெருநகரங்களில் உள்ள வீடுகளிலும் அலுவலகங்களிலும் பகல் நேரத்தில் எரியும் விளக்குகள், இயங்கும் குளிரூட்டு சாதனங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்து. இவர்கள் பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தை மட்டும் கணக்கிட்டால் மின் உற்பத்தியில் பாதியை நகரங்கள் விழுங்கிக் கொண்டிருப்பதை உணரலாம். இந்த மின்தேவையைப் பாதியாகக் குறைத்தாலும்கூட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா? நகரங்களில் மக்கள்தொகை பல கோடியாக அதிகரித்துவிட்ட நிலையில், அனைவருக்கும் வீட்டுவசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டடங்கள் உருவாக்கப்படும்போது, இத்தகைய கிரீன் பில்டிங் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும்கூட, நமது பாரம்பரியக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கட்டடத்தின் உட்கூரையை உயரமாக அமைப்பதும், ஜன்னல்களை அதிக எண்ணிக்கையில் வைப்பதும், சிமென்ட் பயன்பாட்டைக் குறைப்பதும், கட்டடம் எந்தத் திசையில் இருந்தாலும் எப்போதும் வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் வகையில் வடிவமைப்பதும்தான் இன்றையத் தேவை. கடந்த இரு ஆண்டுகளாக கட்டடப் பொறியாளர் படிப்புக்கு (சிவில் என்ஜினீயரிங்)அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. காரணம், உலகம் முழுவதும் பாலங்கள், புதிய கட்டடங்கள், சாலைகள் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதாலும், அதனால் வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் முந்திக்கொள்கிறார்கள், அல்லது பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுகிறார்கள்.இந்த மண்ணின் தட்பவெப்பம், சூழல் அறிந்து, முன்னோர் காட்டிய வழியில், இன்றைய கட்டுமானப் பொருளைப் பயன்படுத்தும் பொறியாளர்கள் நமக்குத் தேவை. இப்போது படிக்கும் இந்த மாணவர்களில் 10 சதவீதம்பேரையாகிலும் மரபின் பொறியாளர்களாக இப்பல்கலைக்கழகங்கள் மாற்றும் என்றால், மக்கள் பயன்பெறுவர், நாடும் பயன்பெறும்.
நன்றி தினமணி
தலையங்கம்
நன்றி தினமணி
தலையங்கம்
கட்டுகள்
தினமணி தலையங்கம்
'அகம்' நானூறு!
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து, முக்கிய நகரங்களில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறது, மின்வாரிய ஒழுங்காற்றுக் குழுமம். இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும், மின்கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் சொல்லப்போகிறார்கள்.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவின்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ.4 ஆகவும், 400 யூனிட் வரை ரூ.4.25 ஆகவும், 600 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75 ஆகவும் (வணிக மின்கட்டணத்துக்கு நிகராக) தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக் கேட்புக்குப் பிறகு இதில் சில காசுகள் மட்டுமே மாறுபடும் என்று தெரிகிறது.
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்காற்றுக் குழுமம் தொடர்ந்து வலியுறுத்தக் காரணம், மின்உற்பத்தி செலவுக்கும் நுகர்வோருக்கு மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது அதன் உண்மையான விலைக்கும் தொடர்பில்லை என்பதுதான். தற்போதைய இந்த ஒழுங்காற்றுக் குழுமம் கட்டண உயர்வுக்குச் சில வரையறையை ஏற்படுத்தியுள்ளது. நுகர்வோரிடம் மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது ஏற்படும் செலவையும் சேர்த்து ஒரு யூனிட்டுக்கு விலை நிர்ணயித்தல், நுகர்வோரின் வாங்குதிறன், மாநில அரசின் சமூக பொருளாதாரக் கொள்கை ஆகிய வரையறைகளைப் பார்க்கும்போது, வீட்டு மின்சாரக் கட்டணத்தை, தமிழக அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் நிர்ணயிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.
தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை, சிலவற்றைத் தவிர்த்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கட்டண உயர்வையும் தவிர்க்கலாம். அப்படியும்கூட, மின்கட்டணம் விதிக்க வேண்டும் என்றால், அந்தச் சுமையை வசதி உள்ளவர்கள் மீது ஏற்றி, வசதியில்லாத மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மீது அந்த சுமையை இலேசாக வைக்கலாம்.
2009-ம் ஆண்டு தமிழகத்தின் மின்சாரத் தேவை 9560 மெகாவாட் என்றால், நடப்பாண்டில் 10,000 மெகாவாட் என்பதாக உயரும் என்று மின்வாரியம் கணித்துள்ளது. தமிழகத்தின் மின்உற்பத்தி அளவு 8200 மெகாவாட் மட்டுமே. மின்உற்பத்தியை உயர்த்த திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அமலுக்கு வராத நிலையில் தற்போதைய தேவையைச் சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங்கியாக வேண்டும். இதன் மதிப்பு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இது நிச்சயம், ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாரியத்துக்குக் கூடுதல் சுமை. 2008-09-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.19,000 கோடி. ஆனால் மின்வாரியத்தின் மொத்தச் செலவு ரூ.24,000 கோடி. ஆக ரூ.5,000 கோடி இழப்பு. இந்த இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை என்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது.
மின் தேவையைச் சமாளிக்க மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, விநியோகத் தடத்தில் மின்இழப்பைக் குறைக்க வேண்டும் அல்லவா! ஆனால் அதைச் செய்வதற்கு மட்டும் தமிழ்நாடு மின்வாரியம் எந்தவொரு தனிக்கவனமும் செலுத்தவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தின் விநியோகத் தடத்தில் மின்இழப்பு 19.3 சதவீதமாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டும் மின்சார ஒழுங்காற்றுக் குழுமம், இதைக் குறைத்தாலொழிய மின்வாரிய இழப்பு குறைய வாய்ப்பே இல்லை என்று சொல்லியும், இதைச் சரிசெய்ய இயலவில்லை. இந்த வழித்தட மின்இழப்பை பாதியாகக் குறைத்தாலே தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சுமார் 900 மெகாவாட் மிச்சமாகும். இதைக் கொண்டு மற்றவர்களிடம் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்காமலேயே மாநிலத்தின் தேவையைச் சமாளிக்க முடியும்.
அடுத்ததாக மின்திருட்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம், மதுரையில் உள்ள ஒரு தொழிற்கூடம் 9 மாதங்களில் ரூ.7.55 கோடி அளவுக்கு மின்சாரத் திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மட்டுமே இத்தகைய மின்திருட்டில் ஈடுபடும் என்றால், இன்னும் இதுபோன்ற மின்திருட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தது 5 சதவீதம் என்றாலும்கூட, எத்தகைய இழப்பை தமிழ்நாடு மின்வாரியம் சந்தித்து வருகிறது என்பதை உணர முடியும்.
தற்போது பொதுக்கூட்டங்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு அமைக்கப்படும் மின்விளக்குகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீள்கின்றன. மேடை அலங்காரங்கள், தலைவர்களின் உருவத்தில் ஒளிரும் விளக்குகள் என மிகமிக அதிகமான மின்சாரம், அதிலும் குறிப்பாக மக்கள் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் வேளையாகிய மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை- ""எடுத்துக்கொள்ளப்படுகிறது''. இதற்குக் கட்டணம் வசூலிப்பதாக மின்வாரியம் சத்தியம் செய்யலாம். ஆனால் அந்தக் கட்டணம், பிற கட்சியினர் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்காக ஏதோ பெயரளவில் வாங்கப்படும் தொகையே தவிர, நிச்சயமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் அளவுக்கான கட்டணங்கள் இல்லை என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
வழித்தட மின்இழப்பு, மின்திருட்டு ஆகியவற்றைப் பாதியாகக் குறைப்பதும், ஆடம்பர விழாக்களுக்கான மின்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதற்கு மிகைக் கட்டணம் நிர்ணயித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தற்போது அரசுக்கு ஏற்படும் இழப்பின் பெரும்பகுதியைக் குறைத்துவிட முடியும். அவ்வாறு குறைக்க முடிந்தால், வீட்டு மின்கட்டணத்தை மாற்றியமைக்காமலேயே மின்வாரியத்தின் இழப்பைச் சரிக்கட்ட முடியும்.
மேலும், இன்றைய தேதியில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திலும் 5 குழல் விளக்குகள், ஒரு டிவி, நான்கு மின்விசிறிகள், ஒரு கிரைண்டர், ஒரு மிக்ஸி, ஒரு வாஷிங் மெஷின், நீரேற்றும் மோட்டார், ஒரு இஸ்திரிப்பெட்டி ஆகியன தவிர்க்க முடியாதவை. குடும்பத் தலைவர், அவரது பெற்றோர், மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட குடும்பத்துக்கு மேற்சொன்ன மின்சாதனங்களின் பயன்பாடு சராசரியாக என்ன இருக்கும், இரண்டு மாதங்களுக்கு அக்குடும்பத்தின் மின்தேவை எவ்வளவு ஏற்படும் என்பதை கணித்தால், 400 யூனிட்டுகளுக்குக் குறையாது. ஆகவே வீடுகளுக்கு மட்டும் இரு மாதங்களில் 400 யூனிட்டுக்கு மிகுந்தால் மட்டுமே கட்டணத்தை உயர்த்த வேண்டுமே தவிர, அதற்குக் கீழாக ஒரு ஸ்லாப் நிர்ணயிப்பது, நடுத்தர மக்களின் முதுகில் மற்றுமொரு சுமை என்பதை தமிழக அரசு புரிந்துகொண்டால் புண்ணியமாக இருக்கும்!

கடலூர் மாவட்ட வளர்ச்சி,
தினமணி தலையங்கம்,
மின்வாரியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)