கோரிக்கை பதிவு

ஆக்கிரமிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆக்கிரமிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் நேத்தாஜி சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு

கடலூர் நேத்தாஜி சாலை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
கடலூர் மஞ்சக்குப்பம் முதல் டவுன்ஹால் வரை சாலை குறுகலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் இந்த சாலை அகலப்படுத்தும் திட்டம் இருந்தது. அதற்குள் திட்டப்பணி முடிந்து விட்டதால் சாலை அகலப்படுத்தும் திட்டமும் கைவிடப்பட்டது.
குறுகலான இந்த சாலையில் இருபுறமும் நடைபாதைக்கென பிளாட்பாரம் போடப்பட்டுள்ளதால், சாலை மேலும் குறுகலாகிவிட்டது. இதனால் வாகனங்கள் சென்றுவர முடியாததால் நேத்தாஜி சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதன் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட பிளாட்பாரத்தில், கடைகளுக்கு முன்பு கீற்று கொட்டகை போட்டு நடைபாதை கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்லும் மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.
இந்நிலையில் இந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரம் முன்பு தாசில்தார் தட்சணாமூர்த்தி முன்னிலையில் நகர நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. சிலர் தாமாகவே ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றிக் கொண்டதால் சாலை சற்று விசாலமாக காணப்பட்டது. இந்த நிலை ஓரிரு தினங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அப்பகுதி வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு முன் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கொட்டகை போட்டுள்ளனர்.

எமனாக மாறி வரும் மணல் சாலைகள்

கடலூர் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்மையால், பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு மக்களுக்கு எமனாக மாறிவருகிறது.தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகராட்சி பகுதி வழியாக, 15 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது. பல கோடி செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, முறையாகப் பராமரிப்பு இல்லாததால், பெரும்பகுதி மணல் படிந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்கள் பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், திடீர் கோயில்கள், குளிர்பானக் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இச்சாலை நிர்மாணிக்கப்பட்ட பிறகு, வாகனப் போக்குவரத்து பன்மடங்கு பெருகிவிட்டது.அதற்கேற்ப விரிவுப்படுத்தும் பணியையோ, பராமரிப்புப் பணிகளையோ செய்யாததால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறி வருகிறது.பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கான அகலம் போக மீதம் உள்ள பகுதி முழுவதும், ஒரு அடி உயரத்துக்கு மணல் படிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் எமனாக மாறி இருக்கிறது.இந்த மணல் மேடுகளில் சிக்கி விழுந்து, அவர்கள் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூவர் இறந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை நடைபாதை முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலர்களைக் கண்டு, ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் கவலைப்படவே இல்லை.  இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.அதற்கும் பலன் ஏதும் இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கடந்த 19-ம் தேதி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பு நாடகமாக நடந்தது. எந்த ஆக்கிரமிப்பையும்அகற்றவில்லை.எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்ற அளவுகூட அவர்களிடம் இல்லை. வெறுமனே விளம்பர போர்டுகளை மட்டுமே வைத்து அகற்றுமாறு கூறிச் சென்றனர். அதைக்கூட யாரும் அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு இன்றி மண் மேடிட்டுக் கிடப்பது மக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

கோவில் கட்டி சாலைகள் ஆக்கிரமிப்பு : சர்வே எடுக்க அரசு உத்தரவு

தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறாக சாலையோரம், அரசு புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை சர்வே செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை, நகராட்சி சாலையில் அரசு புறம்போக்கில் கோவில் கட்டி அதன் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது.  சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்களை  சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கோவில் கட்டடங்கள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவற்றை சர்வே செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கோவில்கள், அதன் புகைப்படங்கள், ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள விவரம் போன்றவற்றை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சர்வேயர்கள் சர்வே செய்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதில் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான கோவில்கள் சாலையில் ஆக்கிரமித்து கட்டப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் நாளை அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ்நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்றுவர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் முக்கிய சாலையில் சர்வேயர் மூலம் அளக்கும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர். பெரும்பான்மையானவர் கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்ரமிப்புகளை 
அகற்றப்பட்டன.கட்டட ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.