கோரிக்கை பதிவு

ரசாயனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசாயனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​ சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும்,​​ மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும்,​​ கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.​ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​ ​ மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார்.​ மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை,​​ குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ்,​​ ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,​​ ​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன்,​​ பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ்,​​ தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன்,​​ நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி,​​ வழக்கறிஞர் கோ.மன்றவாணன்,​​ வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார்,​​ தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.​ ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.  பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது.  மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். அவர் மேலும் கூறியது: கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.

கடலூர் அருகே ரசாயன கப்பல் கடலில் தவிப்பு

வங்ககடலில் உருவாகியுள்ள வார்ட் புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பிவிசி தொழிற்சாலைகளுக்கு ஜப்பானில் இருந்து விசிஎம் (வினையல் குளோரைடு மோனமார்) என்ற ரசாயனத்துடன் வந்துள்ள 2 கப்பல்கள் அலையின் சீற்றத்தால் சித்திரைப் பேட்டையில் உள்ள துறைமுகத்திற்கு வரமுடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 7 ஆயிரம் டன் ரசாயனமும், மற் றொரு கப்பலில் 3 ஆயிரம் டன் ரசாயனமும் இருக்கிறது. இது குறித்து கடலூர் துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது “இரண்டு கப்பல்களும் புயல் காரணமாக துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கப்பல்களில் உள்ள ரசாயனம் போதிய பாதுகாப்புடன் உள்ளது. புயல் தாக்கத்தால் பாதிப்புகள் வராது. எனினும் கடலில் அலையின் சீற்றம் குறைந்த பிறகே கப்பல்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படும்.
அது வரையில் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக நடுகடலில் 10 ஆயிரம் டன் ரசாயனத்துடன்
கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் கடலூர் கடற்கரை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.