கோரிக்கை பதிவு

பாதாளச் சாக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதாளச் சாக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூரில் பெய்த கனமழையால் பாதாள சாக்கடை பணி முடக்கம்

கடலூரில் பெய்த கனமழை காரணமாக சகதி நகரமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூரில் நேற்று காலை திடீரென பெய்த மழையால் மஞ்சக்குப்பம் மைதானம், ஜட்ஜ் பங்களா ரோடு, செம்மண்டலம் பகுதி வெள்ளக் காடானது. ஏற்கனவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு கொட்டப்பட்ட 
மண்மேடுகள் கரைந்து சாலைகள் சகதியானது. மேலும் சரியாக மூடாத பள்ளங்களில் மண் உள்வாங்கியதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது கடலூர் நகரின் பிரதான சாலைகளான பீச்ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, புதுப் பாளையம் மெயின்ரோடு உட்பட பல இடங்களில் பாதாள சாக்கடைத்திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. இச்சாலைகளில் பெரிய அளவிலான பைப்புகள் பதித்து வருவதால் சாலைகளில் அதிக ஆழம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களும் தூர்ந்து போய் உள்ளன. கன மழையால் முழு வீச்சில் நடந்து வந்த பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முடங்கியுள்ளன.

மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதானதால் வாகன போக்குவரத்து பாதிப்பு

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.குறிப்பாக சண்முகம் பிள்ளைத்தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அங் காளம்மன் கோவில் தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் செம்மண்டத்தில் துவங்கி மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இணையும் இந்த சாலை 100 அடி அகலம் இருப்பதால் அரசு மருத்துவமனை சாலைக்கு மாற்று சாலையாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத மழையில் நெல்லிக்குப்பம் சாலை பெரிதும் பாதிக் கப்பட்ட போது பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத்தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. அதுவரை சிறந்த நிலையில் இருந்த சாலை கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சாலைகளில் ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமானது.மஞ்சக்குப்பம் அங் காளம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து யானைப் பிடிக்கும் பள்ளமானது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதாள சாக்கடைத் திட்டப்பணி செயல் படுத்தாத காரணத்தால் இந்த சாலையாவது நகராட்சி உடனே போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் - செம்மண்டலம் சாலைக்கு மாற்று சாலையாக கருதி தரமாக போடப்பட்டால் தான் எதிர்காலத்தில் வாகனங்கள் சென்றால் பழுதடையாமல் இருக்கும்.

படுகுழிக்குள் வீழ்த்தும் பாதாள சாக்கடைத் திட்டம்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் நகரில் பலரை படுகுழிக்குள் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது.  இத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில், குழிகளில், நூற்றுக் கணக்கானோர் விழுந்து காயம் அடைந்துள்ளனர்; பலர் இறந்துள்ளனர்.  பாதாள சாக்கடைத் திட்டத்தில் விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ அரசோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ பொறுப்பல்ல என்பது, காண்ட்ராக்ட் விதிமுறைகளில் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவோர், மக்கள்படும் அவதியைக் கண்டு சற்றும் கவலை கொள்வதில்லை. கடலூரில் மூன்றில் இரு பங்கு வார்டுகளில், ரூ.44 கோடியில் தொடங்கி ரூ.70 கோடியை தொட்டுக் கொண்டு இருக்கும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது.ஒரு திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, அத்திட்டத்தின் பலனை எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். அது திட்டத்தின் வெற்றியை மனதில் கொண்டதாக அமையும். ஆனால் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, இத்திட்டத்தை நிறைவேற்றும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து, துயரங்களில் இருந்து, சங்கடங்களில் இருந்து, கடலூர் மக்கள் எப்போது விடுபடுவார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.வரும் 20 ஆண்டுகளில் கடலூர் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்ற கணக்கின் அடிப்படையில், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே பிரச்னைகளும் தோன்றிவிடும் என்றும், அனுபவமிக்க பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கியது முதல் பள்ளத்தில் விழுந்து திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மூவர், பொதுமக்களில் ஒருவர், விபத்தில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விழுந்து, பலத்த காயங்களுடன், பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து உயிர் பிழைத்து உள்ளனர்.இந்தப் பட்டியல் மேலும் தொடரும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் 3-வது கட்டமாக தோண்டப்பட்ட குழியில், செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சைக்கிளுடன் விழுந்தார். அவர் நீதிமன்றக் காவலாளியான சந்திரன் (58) என்று பின்னர் தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து, அவரைக் காப்பாற்றி உள்ளனர். திட்டம் முடிவடையும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரவும், நல்ல சாலைகளை கடலூர் மக்கள் அனுபவிக்க முடியாத துயரம் தொடரவும் இத்திட்டம் வழிவகுத்து உள்ளது.  ஆனால் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.44 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக தற்போது உயர்ந்து இருக்கிறது. இது மேலும் உயராது என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டு இருப்பதுதான் வேதனை தரும் விஷயமாகக் கருதுகிறார்கள் கடலூர் மக்கள். மண்ணில் புதைக்கப்படும் பணத்தை யாரால் ஆய்வு செய்ய முடியும்.

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் பாதாள சாக் கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத் தும் பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ் சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த் தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் இழுபறி: மாற்றுப் பாதை தயார்படுத்தாததால் தாமதம்

கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை.
தற்போது வாகனங்களின் போக்குவரத்தால் கடலூர் புழுதி நகரமாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரிதமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. நெடுஞ்சாலையில் பெரிய குழாய்கள் பதிக் கும் பணி இதுவரை தொடங்கவில்லை. கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்திய பிறகுதான் சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் நகராட்சி உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் 6 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டால்தான் கழிவுநீர் இயற்கையாக சென்று சேரும். ஆனால் கடலோரப்பகுதி என்பதால் 6 மீட்டர் ஆழம் தோண்டும் போது நீர் ஊற்று ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே தற்போது ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தை மாற்றி 3.15 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய் யப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டர் மூலம் பம்ப் செய்துதான் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வடிகால் வாரியம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடித்த சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு சாலை போடுவதற்காக நகராட்சி, அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளது.
கோடை காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது.பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் இதுவரை தொடங்கப் படாமல் உள்ளன. இந்த ஆண்டாவது பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் முடிக்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்.

புழுதி பறந்த நெல்லிக்குப்பம் ரோட்டில்தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
கடலூர் நகராட்சி பகுதியில் 40.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிக்காக கடலூர் நகரின் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையான நெல்லிக்குப்பம் ரோட்டில் சாவடி முதல் பொதுப்பணித்துறை அலுவலகம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.பைப்புகள் புதைத்த பின்னர் பள்ளத்தில் மணலை கொட்டி மூடாமல், தோண்டி எடுத்த மண்ணை கொட்டி மூடியதால் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாகி வயல் வெளிபோல் காட்சி அளித்தது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.இதனைக் கண்டித்தும், சாலையை சீரமைக்கக் கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தின. அதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் பொது நல அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்படும் என கலெக்டர் உறுதியாளித்தார்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர்-நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு மற்றும் போடிசெட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்தரை கிலோ மீட்டார் தூர சாலையை சீரமைக்க 1.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.அதனையொட்டி தற்போது நெல்லிக்குப்பம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய் புதைத்த இடத்தில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அகற்றிவிட்டு அதன் மீது ஜல்லி கொட்டி சாலை அமைக்கப்பட உள்ளது.இதேபோன்று வண்டிப்பாளையம் சாலை விரிவுப்படுத்தி சீரமைக்கும் பொருட்டு சாலையின் மேற்கு பகுதியில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது

நகராட்சி கண்டுகொள்ளவில்லை சாலையை போலீசாரே சீரமைத்தனர்


நகராட்சியினர் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால் காவல்துறையினரே தற்காலிகமாக சீரமைக்கும் பணியை செய்தனர்.
கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக நகரின் அனைத்து பகுதி யிலும் சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் பணி முடிக்கப்பட்ட இடங்கள் சரிசெய்யப்படாமல் இருப்பதால் வாகனங்களில் செல்லும் மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தன. அதைத்தொடர்ந்து விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும் என நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 
இந்நிலையில் மாவட்ட காவல் துறை அலுவலகம் உள்ள பகுதியிலும் பணி நடக்கவில்லை. இது குறித்து போலீசார் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடலூர் எஸ்பி அலுவலகம், சிறப்பு பிரிவு அலுவலகம், அதி விரைவுபடை, ஊர்க்காவல் படை அலுவலகம், காவலர் குடியிருப்பு, க்யூ பிராஞ்சு, மாவட்ட குற்ற புலனாய்வு துறை, தவுலத் நகர், ஆனைக்குப்பம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய ஆனைக்குப்பம் சாலை, எஸ்பி அலுவலக சாலை உள்ளிட்ட சாலைகளை போலீசாரே தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 30 லாரி செம்மண் மற்றும் கிராவல் மூலம் சாலையில் உள்ள குழிகளை மறைத்து சமன்படுத்தும் பணியை ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆலோக்கியராஜ், சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் மேற்பார்வையில் பணி நடந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது 1396984945 டிஐஜி கேட்டுக்கொண்டதின் பேரில் சம்பந்தப்பட்ட துறையினரிடம் டிஎஸ்பி முறையிட்டும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடந்தது. அதனால் போலீசார் மற்றுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையடுத்து காவல் துறையினரின் நிதி பங்களிப்போடு தற்காலிகமாக சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றனர்.

கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்த அதிகாரிகள் உறுதி

தாற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை, திங்கள்கிழமை  முதல் துரிதப்படுத்தபடும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ரூ.44 கோடியில் திட்டமிடப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் 30 மாதங்களுக்கு மேலாகியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது மற்றும் சாலைகள் சீர்குலைந்து கிடப்பதைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு 26-ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தது. இதையொட்டி கடலூர் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் நகர்மன்றத் தலைவர் து. தங்கராசு, நகர்மன்ற, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறுத்தப்பட்டு இருக்கும் பணிகளை திங்கள்கிழமை முதல் தொடங்கி துரிதமாக நடத்துவது என்று அதிகாரிகளால் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வது என்றும், முன்னேற்றம் குறித்த தகவல்களை பொதுநல அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்தவாறு திங்கள்கிழமை வேலைகளைத் தொடங்கா விட்டால் 26-ம் தேதி கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அறிவித்துள்ளன. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர்,  தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் உள்ளிட்டதொழிற்சங்கப் பிரதிநிதிகள், வெண்புறா பொதுநலப் பேரவைத் தலைவர் குமார், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை துணைபொதுச் செயலாளர் திருமார்பன், தராசு மக்கள் மன்றச் செயலாளர் துரைவேலு, கடலூர் தமிழ்ச்சங்க இணைச் செயலர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2010 செப்டம்பரில் முடிவடையும்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன் தெரிவித்தார்.


இது தொடர்பாக குடிநீர் வாரிய செயற் பொறியாளர் ரகுநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:


கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 4 பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. தெருக்களில் ஆள்கள் நுழையும் தொட்டிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட முதல்பிரிவு பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிவடையும்.


தொட்டிகள் இணைப்பு உள்ளிட்ட 2-வது பிரிவு பணிகள் 2010 பிப்ரவரி மாதம் முடிவடையும்.


கழிவு நீரேற்று நிலையங்கள் அமைக்கும் 3-வது பிரிவு பணிகள் நகராட்சி உரிய காலத்தில் நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், 2010 ஏப்ரல் மாதம் முடிவடையும்.


சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 4-வது பிரிவுப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும்.


பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக 150 கி.மீ. நீளச் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.


அதில் 126 கி.மீ. தூரம் முடிக்கப்பட்டு விட்டது. 115 கி.மீ. நீளச் சாலைகள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.


தேசிய நெடுஞ்சாலையில் 7.1 கி.மீ. நீளத்துக்கு பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது.


ரூ. 21 கோடிக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


சாலைகள் சீரமைப்புக்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 2 கோடி வழங்கி இருக்கிறோம். நகராட்சி மூலம் ரூ. 16.98 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.


வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு செலவிட்டு இருக்கிறோம்.


நகராட்சியிடம் இருந்து ரூ. 10 கோடி நிதி வரவேண்டியது இருக்கிறது என்றார் ரகுநாதன்.


உடனிருந்த கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது:


பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக, ரூ. 10 கோடி நிதி விடுவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். சாலைகளை சீரமைக்க ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம்.


பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து ரூ. 15 கோடி வசூலிக்க வேண்டியது இருக்கிறது என்றார் தங்கராசு.


ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


குடிநீர் வாரிய அதிகாரிகள், பணிகளை முடித்து சாலைகளை ஒப்படைத்து விட்டோம் என்றும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிரிகாரிகள் அதற்கு மறுப்பும் தெரிவித்தனர்.