கோரிக்கை பதிவு

மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதானதால் வாகன போக்குவரத்து பாதிப்பு

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.குறிப்பாக சண்முகம் பிள்ளைத்தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அங் காளம்மன் கோவில் தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் செம்மண்டத்தில் துவங்கி மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இணையும் இந்த சாலை 100 அடி அகலம் இருப்பதால் அரசு மருத்துவமனை சாலைக்கு மாற்று சாலையாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத மழையில் நெல்லிக்குப்பம் சாலை பெரிதும் பாதிக் கப்பட்ட போது பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத்தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. அதுவரை சிறந்த நிலையில் இருந்த சாலை கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சாலைகளில் ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமானது.மஞ்சக்குப்பம் அங் காளம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து யானைப் பிடிக்கும் பள்ளமானது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதாள சாக்கடைத் திட்டப்பணி செயல் படுத்தாத காரணத்தால் இந்த சாலையாவது நகராட்சி உடனே போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் - செம்மண்டலம் சாலைக்கு மாற்று சாலையாக கருதி தரமாக போடப்பட்டால் தான் எதிர்காலத்தில் வாகனங்கள் சென்றால் பழுதடையாமல் இருக்கும்.

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​ சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும்,​​ மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும்,​​ கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.​ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​ ​ மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார்.​ மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை,​​ குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ்,​​ ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,​​ ​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன்,​​ பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ்,​​ தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன்,​​ நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி,​​ வழக்கறிஞர் கோ.மன்றவாணன்,​​ வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார்,​​ தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.​ ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இம்மையத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட் டம் அதிகளவில் காணப்படும். பள்ளி திறந்ததும் பயணிகள் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது.இதன் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் கடந்த ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் 6 ஆயிரத்து 300 பேரும், வெளி நாட்டினர் 253 பேரும் வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் ஐந்து நாளில் படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.

கடலூரில் கடல் உள்வாங்கியது: படகுப் போக்குவரத்தில் சிரமம்

கடலூரில் சனிக்கிழமை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் கடலூரில் மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது. சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டக் கடல் பகுதிகளில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலில் நீரோட்டங்களிலும் ஏற்படும் பல மாற்றங்களை மீனவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் மீன்பிடித் தொழில் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது. கடலில் ஏற்படும் மாற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் மீன் வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் மீன் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் மீன் உணவை விரும்புவோரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் உள்வாங்கியது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் இத்தகைய மாற்றங்கள் மிகச் சாதாரணமாகி விட்டது. கடந்த இரு நாள்களாக கடல் உள்வாங்கிக் காணப்படுகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு இந்த மாற்றங்கள் அடிக்கடி நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் மீன்பிடித் தொழிலில் தற்போதைக்கு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. கடலூர் துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்ந்து கிடப்பதால், கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில், மீன்பிடிப் படகுகள் கடலுக்குள் சென்றுவருவது சிரமமாக இருக்கிறது. மீன் பிடித்துவிட்டு படகுகள் கரை திரும்பும்போது, கடல் உள்வாங்கி விட்டால், படகை கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவோம். அங்கேயே காத்து இருந்து, பின்னர் கடல் மட்டம் உயரும் போதுதான், படகுகள் கரைக்குத் திரும்பும். கடல் உள்வாங்கி இருக்கும் நேரங்களில் அதைப் பொருள்படுத்தாமல் சிலர், கடலுக்குள் செல்லவோ, கரை திரும்பவோ நேரிடும்போது, படகுகள் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் அந்தப் படகு உரிமையாளர் வேறு படகுகளில் கூலிக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள் என்றார்.

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக

நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு வசதியாக, ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணியை கடலூர் நகராட்சி மேற்கொண்டு வருகிறது.கடலூர் உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்து சில்வர் பீச் வரை சுமார் 5 கி.மீ. தூரம், சுனாமி நிவாரண நிதியில் இருந்து, சாலையின் இருபுறமும் ரூ. 5 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. வாய்க்கால் மீது காங்கிரீட் தளம் அமைத்து மூடப்பட்டு, நடைபாதையாகப் மாற்றப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாநில நெடுஞ்சாலைப் பட்டியலில் இச்சாலை உள்ளது.நடைபாதை அமைக்கும் பணிக்காக, ஒரு சில நாள்கள் காலி செய்து கொடுத்த வியாபாரிகள், பணி முடிந்ததும் நடைபாதை மீது, மீண்டும் கடைகளை அமைத்துக் கொண்டனர்.தற்போது இந்த நடைபாதையை அழகுபடுத்தும் முயற்சியாக, கடலூர் நகராட்சி ரூ. 20 லட்சத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியைக் ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. பிற்பட்ட பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணி நடப்பதாக நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இப்பணியும் மிகவும் தரமற்றதாக செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.÷காங்கிரீட் தளத்தின் மீது 2 அங்குல உயரத்துக்கு ஆற்று மணல் கொட்டி, அதில் சிமென்டைக் கரைத்து லேசாகத் தெளித்துவிட்டு, அதன்மீது டைல்ஸ்கள் வைத்து வருகிறார்கள்.டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்து விட்டன. மேலும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நடைபாதையில், சில தினங்களாக லாரிகளையும் நிறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் டைல்ஸ்கள் நொறுங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே கடலூர் நகர ஆட்டோக்கள், நடைபாதைகளைத்தான் ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றன.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது நகராட்சிக்கு வேண்டாத வேலை. அங்கு டைல்ஸ் பதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ரூ. 15 கோடிக்கு மேல் தமிழக அரசு மானியமாக வழங்கினால்தான்  சாலைகளை செப்பனிட முடியும் என்ற நிலையில் இருக்கும் கடலூர் நகராட்சி, இந்த ரூ. 20 லட்சத்தைக் கொண்டு இரு சாலைகளைச் செப்பனிட முடியும் என்று  மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.கடற்கரைச் சாலையில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வணிகர்கள் கடைகளை அமைத்து இருப்பதாலும் உட்லண்ட்ஸ் திருப்பத்தில் ஆட்டோக்களை இடையூராக நிறுத்துவதாலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும்  இச்சாலையில், தொடர்ந்து போக்குரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கடலூரில் மாதம் ஒருமுறை  "நடைபாதை நடப்பதற்கே' என்ற போராட்டமும், வாரம் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போராட்டமும் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை எச்சரித்துள்ளது.பேரவையின் நிர்வாகப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மற்றும் கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

மெள்ள மெள்ளக் கொல்லும்

''மேட்டூர், கடலூர் உட்பட பல இடங்களில், மெள்ள மெள்ளக் கொல்லும் ஆலைக் கழிவு அபாயம் அரங்கேறி வருகிறது. இந்த மாதிரியான ஆலைகள் பலவும் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2,500 நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. இப்படி இருந்தால், அரசின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?'' என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
போபால் நீதிக்கான பிரசாரத்தின் உறுப்பினரும், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்வேதா நாராயணையும் சந்தித்தோம், ''கடலூர், பெரும் ஆபத்து மையமாக மாறிவருகிறது. அங்கு உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-ல் இங்கு ஆய்வுசெய்த மத்திய அரசின் 'நீரி' சூழல் நிறுவனம், 'இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது' என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 'மாதிரி' ஆய்வுகளில், 'இங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில், 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை. அதிலும், பென்சீன் என்பது, மற்றவற்றைவிட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும்' எனக் கண்டறிந்தோம். அதேபோல், டால்மியாபுரம் சிமென்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருப்பதும் தெரிந்தது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, கடலூர் சிப்காட்டில் 25 ஆலைகளில் 20 ஆலைகளுக்கு லைசென்ஸ் இல்லை!'' என்று சொல்லி மூச்சுத் திணறவைத்தார்.
- இரா. தமிழ்க்கனல்

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் அனல்மின் நிலையங்கள் கூடாது

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று, கடலூரில் சனிக்கிழமை நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் உலக  சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ள கடலூர் பிச்சாவரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பால் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக கடலூர் மாங்குரோவ் காடுகளுக்கு அருகே 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மாங்குரோவ் காடுகளுக்கு அருகே அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி கூடாது.இந்தியாவில் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் கடலூர் 16-வது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் 250 ச.கி.மீ. பரப்பளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மேலும் ரசாயன ஆலைகளையும், அனல்மின் நிலையங்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நிறுவக் கூடாது. தற்போது உள்ள ஆலைகள் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளில் அதிக அளவில் மரங்களை நடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் சிறப்புரை நிகழ்த்தினார். சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள் நெய்வேலி தங்கம், பண்ருட்டி நடராஜன், மணிவண்ணன், சிப்காட் சுற்றுச்சூழல் கணகாணிப்புக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களும் பெயர் பலகை தமிழில் கட்டாயமாக இருக்க வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தும் போது தமிழ் மொழி முதலிலும், ஆங்கிலம் 2வதாகவும், பிறமொழி அடுத்தும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொழிலாளர் ஆய்வர்கள் ஆய்வு செய்து நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகள் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கடலூரில்புவி வெப்பமாதல் விழிப்புணர்வு விழா

புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு விழா கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நடந்தது.வட்டார தளபதி கேதார்நாதன் தலைமை தாங்கினார். துணை வட் டார தளபதி ஜெயந்தி ரவிச் சந்திரன் முன்னிலை வகித் தார். கம்பெனி காமாண்டர் ரகுபதி வரவேற்றார்.ஊர்க்காவல் படை சார்பில் புவி வெப்பமாதல் குறித்து நடந்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு விழுப்புரம் சரக துணை தளபதி ராஜேந்திரன் பரிசு வழங்கி பேசினார். உதவி படை தளபதி பழனி நன்றி கூறினார்.