கோரிக்கை பதிவு

பொதுநல அமைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுநல அமைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரயில்வே சுரங்கப்பாதை கோரி கடலூர் பொதுநல அமைப்புகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்

கடலூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடலூர் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை. ரயில்வே மேம்பாலத் திட்டத்துடன், சுரங்கப்பாதை திட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டும் திட்டம் நிறைவேறவில்லை. வரும் 15-ம் தேதி முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்ககப்படுகிறது. எனவே ரயில்கள் இயங்கத் தொடங்கியதும் லாரன்ஸ் சாலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். அதனால் சுரங்கப்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கடலூர் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே துறையில் இருந்து முறையான தகவல்கள் வெளியாகாததால் ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன், 6-4-2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கடலூர் பொது நல அமைப்புகள் அறிவித்து இருந்தன. ஆர்ப்பாட்டம்  நடத்துவதற்காக பஸ்கள் மற்றும் கார்களில் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறார்கள் என்று பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.

கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்த அதிகாரிகள் உறுதி

தாற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை, திங்கள்கிழமை  முதல் துரிதப்படுத்தபடும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ரூ.44 கோடியில் திட்டமிடப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் 30 மாதங்களுக்கு மேலாகியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது மற்றும் சாலைகள் சீர்குலைந்து கிடப்பதைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு 26-ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தது. இதையொட்டி கடலூர் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் நகர்மன்றத் தலைவர் து. தங்கராசு, நகர்மன்ற, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறுத்தப்பட்டு இருக்கும் பணிகளை திங்கள்கிழமை முதல் தொடங்கி துரிதமாக நடத்துவது என்று அதிகாரிகளால் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வது என்றும், முன்னேற்றம் குறித்த தகவல்களை பொதுநல அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்தவாறு திங்கள்கிழமை வேலைகளைத் தொடங்கா விட்டால் 26-ம் தேதி கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அறிவித்துள்ளன. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர்,  தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் உள்ளிட்டதொழிற்சங்கப் பிரதிநிதிகள், வெண்புறா பொதுநலப் பேரவைத் தலைவர் குமார், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை துணைபொதுச் செயலாளர் திருமார்பன், தராசு மக்கள் மன்றச் செயலாளர் துரைவேலு, கடலூர் தமிழ்ச்சங்க இணைச் செயலர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.