கோரிக்கை பதிவு

கடலூர் நகர பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கடலூரில் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் நகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என 450 குடும்பங்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வசதி வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு பராமரிப்பு செலவிற்காக 60 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.தற்போது இந்தப் பகுதி பராமரிப்பு பணிகள் கடலூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள மேல்நிலை தேக்கத் தொட்டிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல்நிலைத் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அதிலிருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து கிழே விழுந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டி சீர் செய்ய டெண்டர் விடப்பட்டது.பணியை எடுத்த ஒப்பந்தக்காரர் பணியை துவங்கி மூன்ற மாதங்கள் ஆகியும் இதுவரை முடிக்காததால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. காலை நேரத்தில் தண்ணீர் தொட்டியில் ஏற்ற முடியாமல் நேரடியாக வழங்கப்படுவதால் தண்ணீர் கலர் மாறி பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.இந்த தண்ணீரை குளியல் மற்றம் துணி துவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு ஒரு குடம் 3 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் குடிநீர் தொட்டி இருந்தும் நல்ல குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடன் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக