கோரிக்கை பதிவு

ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கடலூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள்

கடலூர் ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்களின் இன விருத்தி காலமான ஏப்ரல் 15 முதல் 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீன் வளத்தை மேம்படுத்தி மீனவர்கள் பயன்பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகால உத்தரவை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை யாக ரூ.500 வழங்கப்படும். மீனவர் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்புக்கான 668 ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 87 ஆயிரத்து 482 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சப்& காண்ட்ராக்ட் விட்டதால் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்காக மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 648 குடிநீர் பணிகளுக்காக ரூ.9 கோடியே 78 லட்சத்து 3 ஆயிரமும், நகராட்சி பகுதிகளில் 99 குடிநீர் பணிகளுக்காக ரூ.2 கோடியே 6 லட்சமும், பேரூராட்சி பகுதிகளில் 267 பணிகளுக்காக ரூ.3 கோடியே 21 லட்சத்து 14 ஆயிரம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 14 பணிகளுக்காக இதுவரை ரூ.15 கோடியே 5 லட்சத்து 17 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சரி செய்யும் விதமாக என்.எல்.சி நிர்வாகத்திடமும் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்று மாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு 42 ஊராட்சிகளில் முடிந்தது : கலெக்டர்

கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட் டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட்வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்: புதிது புதிதாக முளைக்கும் குடிசைகள்

கடலூர் மாவட்டத்தில் தற்போது பல இடங்களில் குடிசை வீடுகள், புதிது புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளைக் காரை வீடுகளாக மாற்றுவதற்காக கலைஞரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மார்ச் 29-ம் தேதி குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.95 லட்சம் குடிசைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.உண்மையான குடிசை வீடுகளைக் கண்டறிய ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப் பணியாளர் என மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுக்கள் குடிசைகளை கணக்கடுக்கும் பணியை மார்ச் 29-ம் தொடங்கி நடத்தி வருகிறது. கணக்கெடுக்கும் பணிக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.29-ம் தேதி கடலூர் அருகே கன்னாரப்பேட்டை கிராமத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். குடிசைகள் கணக்கெடுக்கும் பணிகுறித்து பொதுமக்களுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லை, தகவல் முறையாகச் சென்றடையவில்லை என்பதை அப்போது ஆட்சியர் கண்டறிந்தார், எனவே கலைஞர் வீட்டுவசதித் திட்டம் குறித்து நன்றாக விளம்பரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக மார்ச் 29-ம் தேதி 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும் 379 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பின் போது குடும்ப அட்டை, மின்இணைப்பு அட்டை, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணம் (பட்டா அல்லது உரிமைப் பத்திரம்) பயனாளிகள் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் புதிது புதிதாகக் குடிசை வீடுகள் முளைக்கத் தொடங்கி உள்ளது. கடலூரை அடுத்த கோண்டூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே திடீரென 20க்கும் மேற்பட்ட குடிசைகள் போட்டப்பட்டு இருந்தன (படம்).இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அந்த இடத்தில் மருதாடு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 42 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர். கடந்த 18 ஆண்டுளுக்கு முன்பே அவர்களுக்குப் பட்டா வழங்கியும் நிலத்தை அளந்து கல் நட்டுக் கொடுக்கவில்லையாம். நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அண்மையில்தான் சாதமாகத் தீர்ப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகட்ட வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதி உடனடியாக குடிசைகளை அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் தனித்தனியாகவும் குடிசை வீடுகளைப் புதிதாகக் கட்டி வருகிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் கிராமங்களில், பல குடிசை வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள்.  இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குடிசைகள் எண்ணிக்கை உத்தேச மதிப்பீட்டுக்கும், உண்மை நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு வேகமாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 28 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். குடிசை வீடுகள் என்பதற்கு 4 ஆவணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் திடீரென உருவாகும் குடிசைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமித்துக் குடிசை அமைத்து இருப்போர் ஆகியோருக்கு இது பொருந்தாது. நெடுஞ்சாலையோரம் உள்ள குடிசைகளுக்கு புதிதாக குறியீடு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் அதிகம். எனவே கடலூர் மாவட்டத்தில் அதிக வீடுகள் கட்ட வாய்ப்பு இருக்கிறது என்றார் ஆட்சியர்.

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,448 கோடி திட்ட மதிப்பீடு தயார்

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ஆயிரத்து 448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க முன்னோடி வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான கடன் திட்டம் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயத்திற்கு 1,017 கோடியே 24 லட்சம்,  தொழில்களுக்கு 66 கோடியே 89 லட்சம், இதர முன்னுரிமை கடன்களுக்கு 364 கோடியே 40 லட்சம் என மொத்தம் 1,448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை வர்த்தக வங்கிகள் 1,139 கோடியே 22 லட்சம், கூட்டுறவு வங்கிகள் 219 கோடியே 16 லட்சம், பல்லவன் கிராம வங்கி 82 கோடியே 67 லட்சம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 7 கோடியே 48 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்ட அறிக்கையை வங்கியாளர்கள் கூட்டத்திற்கு தலைமை 

தாங்கிய கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டார். நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் ராஜகோபாலன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முத்துக்கருப்பையா, இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் பிற வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னோடி வங்கி மேலாளர் கபிலன் நன்றி கூறினார். 

போலி டாக்டர் கைது விவகாரம்

போலி டாக்டர் என தன்னை கைது செய்தது தொடர்பாக கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்பட 7 பேர் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள் ளது. கடலூர் முதுநகரில் கடந்த ஆண்டு போலீசார் அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த முருகேசன் என்பவரை போலி டாக்டர் என கைது செய்தனர். தான் கொல்கத்தாவில் மருத்துவ படிப்பு படித்துள்ளதாகவும்.
இதில் தன்னை டாக்டர் என்று குறிப்பிடலாம் என்று முருகேசன் கூறினார். ஆனால் போலீசார் போலி டாக்டர்கள் பிரிவில் முரு கேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் என தான் படித்த படிப்பிற்கு தன்னை குறிப்பிடலாம்.ஆனால் போலீசார் போலி டாக்டர் பட்டியலில் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண் டும் என கோரி முருகேசன் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்திரன் தமிழக உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், எஸ்பி அஷ்வின் கோட்னீஸ், டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்&இன்ஸ்பெக்டர்கள் சேக்கிழார், பிரேமா உள்ளிட்ட 7 பேர் வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

பச்சை வேர்க்கடலை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் : கலெக்டர் சீத்தாராமன் 'அட்வைஸ்'

கோடை காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு பச்சை வேர்க் கடலை அதிகம் கொடுக்க வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் சிப்காட் பகுதி மற்றும் அருகாமையில் அமைந்துள்ள கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்த சிறப்பு தோல் சிகிச்சை முகாம் கண்ணாரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சிப்காட் தொழிற்சாலை சங்கம், சாசன் கெமிக் கல்ஸ் அண்ட்ட்ரக்ஸ் நிறுவனத்தால் ஒருங்கிணைந்து நடத்திய முகாமில் பிரபல தோல் நோய் நல சிறப்பு மருத்துவ நிபுனர்களான ஜானகி, விஜய்கார்த்திக், இருதயராஜன் அடங்கிய குழுவினர் மற்றும் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்ற 160 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
முகாமை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தபோது, 'ஆலா' கரைசலை குடித்துவிட்டதாக மூன்று வயது குழந்தையை  அழைத்து வந்தனர். உடன் அந்த குழந் தையை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். பின்னர் வீடுகளில் ரசாயன பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஆரம்பசுகாதார நிலையத்தில் நோயாளிகள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில், பச்சை மணிலாவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மணிலா அறுவடை சீசன் துவங்கியுள்ளது.
கோடை வெயிலில் உடலுக்கு மிகுந்த உஷ்ணம் மற்றும் அஜீரண கோளாறு உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு பச்சை வேர்க்கடலை அதிகமாக கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

அரசு பணிகளில் தமிழை முதன்மைப்படுத்த வேண்டும்

கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை மூலம் ஆட்சி மொழிப் பயிலரங்கம் கடலூர் ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட உதவி இயக்குநர் ஆருண்ரசீத் வரவேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் பயிலரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, உலகத் திலேயே தொன்மையும், பெருமையும் வாய்ந்தது தமிழ்மொழி. நாம் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமை யாக கருதுகிறோம். நம் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்ச்சி அடை கிறோம். முதலில் நம் மொழியை நாம் மதிக்க வேண்டும். தமிழ்மொழியில் எழுதவும், பேசவும் வேண் டும். அடுத்த தலைமுறைக் கும் தமிழின் அருமையை நாம் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் மொழிக்கு முதலிடமும், முக்கியத்துவமும் தர வேண்டும். அலுவலக பணிகளை தமிழில் செய்ய வேண்டும், என்றார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பேசும்போது, தமிழ் பேசும் மக்களின் வரி பணத்தில் அரசு அலுவலர்கள் சம்பளம் பெறுகிறோம். நாம் செய்யும் பணிகள் மக்களுக்கு புரி கின்ற வகையில் இருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் தமிழில் கையெழுத் திட வேண்டும். அரசு பணிகளை தமிழ்மொழியில் மேற்கொள்ள வேண்டும். நம் தாய்மொழியை ஆட்சி பணிகளில் முதன்மை படுத்திட வேண்டும், என்றார். அரசு அலுவலர்களுக்கு மொழி பயிற்சியை பெரியார் அரசுக்கல்லூரி உதவி பேராசிரியர் அர்த்த நாரி அளித்தார். ஆட்சி மொழி ஆய்வும், குறைகளும் பற்றி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் புலவர் ஆறுமுகம், குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் குறித்து முனைவர் ராஜேந்திரனும் அளித்தனர்.
இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் ஆட்சியர் சீத்தாராமன் தலைமை உரையாற்றுகிறார்.

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்த கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.கடலூரில் நெல்லிக்குப் பம் ரோட்டில் பாதாள சாக்கடை 
திட்ட பணியால் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணியை கலெக் டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்துள்ள போடிச்செட்டித் தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, தேரடி தெரு, வெள் ளக்கரை-குமளங்குளம் சாலை, கடலூர்-சித்தூர் சாலைகள் 1கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் (இன்று) நேற்று முதல் துவக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் வரும் மே 31ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், கமிஷனர் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு

கடலூர் அடுத்த பெரியபட்டு அருகே கடந்த நவம்பர் 23ம் தேதி தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் ஒரு மாணவர் இறந் தார். 34க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். அடுத்த சில நாட்களில் நாகை மாவட் டத்தில் தனியார் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்ததில் 10 மாணவர்களும், ஒரு ஆசிரியரும் இறந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வாகனங்களை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கூடுதல் மாணவர்கள் ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களுக்கு உரிய அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதனை மீறும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரித்தார். அதன்படி அதிகாரிகள் சில நாட்கள் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். இந்த சம்பரதாயம் ஓரிரு நாளில் முடிந்தது. அதன்பிறகு பள்ளி வாகனங்கள் "மாமூலாக'  அதிக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். நேற்று நடந்த விபத்தில் சிக்கிய வேனில் 18 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆனால் அதில் 32 மாணவ, மாணவிகளும் ஐந்து ஆசிரியர்கள் சென்றுள் ளனர். அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென் றதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

யானைக்கால் நோய் ஒழிப்பு பணி: டி.இ.சி., மாத்திரை இன்று வினியோகம்

பொது மக்கள் டி.இ,சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்."கியூலக்ஸ்' வகை கொசுக்கள் மூலம் பரவும் யானைக்கால் என்னும் கொடிய நோய் ஒழிப்பு பணி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளதால் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள ஆலோசனைப்படி ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட ஒரே நாளில் அனைவரும் தமது வயதிற்கு ஏற்ப டி.இ.சி., அல்பண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதால் இந்நோயினை அறவே ஒழிக்க முடியும்.இதனை கருத்தில் கொண்டு பொது சுகாதாரத்துறை அறிவுரையின்பேரில் குறிப்பிட்ட அனைவரும் உட்கொள்ளும் நிகழ்வு மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) நடக்கிறது.

100 மி.கி., கொண்ட டி.இ.சி., மாத்திரைகள் 2-5 வயதுள்ளோருக்கு ஒன்றும், 6-14 வயதுள்ளோருக்கு இரண்டும், 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றும், அவரவர் வயதிற்கேற்ப வழங்கப்படும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற் பட்டவர், நீண்ட காலமாக நோய்வாய் பட்டவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இம் மாத்திரைகளை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒருசிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுமாயின் அது அவர்களின் உடலுக்குள் உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப்படுவதன் விளைவேயின்றி அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

ரூ. 470 கோடியில் வெள்ளத்தடுப்பு, மராமத்துப் பணிகள்

கடலூர் மாவட்டத்தில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கவும், ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளுக்கும் ரூ. 470 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:இந்த நிதியில் இருந்து ரூ. 106 கோடியில் கொள்ளிடம் வடக்குக்கரை சீரமைப்புப் பணிகள், ரூ. 26 கோடியில் வீராணம் ஏரி சீரமைப்புப் பணிகள், ரூ. 7.5 கோடியில் கான்சாகிப் மராமத்துப் பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கிறது.÷இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் 15-2-2010 அன்று விவாதிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ. 353 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.இந்தப் பணிகளை இப்பகுதி விவசாயிகளைக் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன். வீராணம் சீரமைப்புத் திட்டத்தில் ஏரியின் முழு கொள்ளளவுக்கு நீர் பிடிக்கும் போது, ஏரியின் மேற்குக்கரை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விடுவதைத் தடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.இது குறித்து அவர் பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். அந்தப் பதிவேடு வாரம்தோறும் எனது பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை முடிவுக்கு வந்துள்ளது. எனவே வெள்ளத் தடுப்பு மற்றும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மராமத்துப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் உண்மையான ரேஷன் கார்டுகள் 1 லட்சம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கல் அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். ரேஷன் கடைகளில் அரிசியின் தரம் மோசமாக உள்ளது. வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம்: வாலாஜா ஏரிக்கு ஒரு கரை மட்டுமே உள்ளது. இதனால் அதிகரித்து விட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரை அமைக்க வேண்டும்.வாலாஜா ஏரியை ஆழப்படுத்த என்.எல்.சி. 3 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ரூ. 25 கோடி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: மழை காலங்களில் சிதம்பரம் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் பாசிமுத்தான் ஓடையில் தாங்கும் அளவைவிட கூடுதலாகத் தண்ணீர் வருவதுதான். எனவே பாசிமுத்தான் ஓடை கரைகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி களத்துக்கே வந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட முதல் அமைச்சருக்கு நன்றி.விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை சேமித்து வைக்க வசதி இல்லை. அரசு சேமிப்புக் கிடங்குகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் அறுவடை செய்த உடனே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடபதி: சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 65 சதவீதம் மானியம் அறிவித்து இருக்கிறது அரசு. அரசு குறிப்பிட்டபடி சொட்டு நீர்ப் பாசன அமைப்புகளை அமைக்க, ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் ஆகிறது. ஆனால் மானியம் 37,500 தான் வழங்குகிறார்கள். 65 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.÷கரும்பு டிராக்டர்கள் சங்கத் தலைவர் வீரபாண்டியன்: விருத்தாசலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ஆனால் வாகனப் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதைக்கு வாய்ப்பு இருந்தும், சரியாக ஏற்படுத்த வில்லை.ஆட்சியர் குறுக்கிட்டு: இது குறித்து நான் கடிதம் கொடுத்தும் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வில்லை. மக்களைக் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும்.சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: தரமான விதை நெல் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. ஆனால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.கூடுதல் விலை வழங்க வேண்டும். போக்கு வரத்துச் செலவை அரசே ஏற்க வேண்டும். விதைநெல்லை பதப்படுத்த கூடுதல் வசதி வேண்டும்.வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம்: பெண்ணாடம் கரும்பு விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முத்தரப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.வெள்ளாற்றில் மணல் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை நீக்க வேண்டும். வெள்ளாற்றினால் விளைநிலங்கள் அரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணாமல் போகும் கடலூர் கலெக்டர்!

கடலூர் மாவட்ட கலெக்டர் சீதா ராமன் கீழ்நிலையில் இருந்து பதவி உயர்வு மூலம் கலெக்டரானவர். ஆகவே, எல்லாத் துறைகளிலும் தேர்ந்தஅனுபவம் உள்ளவர். அந்த அனுபவத்தைப் பயன் படுத்தி, ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து அவர் வேலை வாங்கினால், மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக ஆக்கிவிட முடியும். ஆனால், அவர் அப்படி எந்தக் காரியமும் செய்யவில்லை என்பதுதான் வேதனையானவிஷயம்!

கலெக்டர் வளாகத்தில் உள்ள அலுவலகஊழியர்கள், "அலுவலர்களிடம் பணி சம்பந்தமாக கலெக்டர் பேசும் போது, எல்லாம் தனக்குத் தெரியும் என்றே பேசுகிறார். லாஜிக்குடன் ஊழியர்கள் மறுத்துப் பேசினால்... ஏக வசனத்தில் இறங்கி விடுகிறார். சமீபத்தில், மாவட்ட வழங்கல் அலுவலக ஊழியர்களிடம் இவர் ஏகவசனத்தில் பேச... அவர்கள் கொதித்துப்போய் ஒட்டுமொத்தமாக விடுப்புக் கேட்க, அதன் பின்னரே பதறிப்போய் சமாதானம் பேசினார் கலெக்டர். அது மட்டுமில்லை... ராத்திரி பத்து மணிக்கு மேல் காலை எட்டு மணி வரை யாரையும் பார்க்கவும் மாட்டார்; செல்போனையும் அட்டெண்ட் பண்ண மாட்டார். அதே போல, கேம்ப் ஆபீசுக்கு போய் விட்டாலும் யாரையும் சந்திக்க மாட்டார்!" என்று சலித்துக் கொண்டார்கள்.
பொதுமக்களும், "இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டரெல்லாம் சாதாரண மக்களிடம் நெருக்கமாப் பழகி மனசுல இடம் பிடிச்சாங்க. ஆனா, சீதாராமன் எங்கேயாவது ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மட்டும்... வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போறாரு. மத்தபடி வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது, பள்ளிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்றது போன்ற எந்த வேலையையும் செய்றதில்லை. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துக்குற விழாக்கள்ல மட்டும்தான் அவர் தலையைப் பார்க்க முடியுது. அங்கெல்லாம், 'மக்கள் நன்றியோட இருக்கணும்'னு கிட்டத்தட்ட ஆளுங்கட்சியோட மாவட்டச் செயலாளர் ரேஞ்சுக்கு மேடையில பேசுறாரு!" என்று சீறினார்கள்.

கலெக்டர் புராணம் போதும்... மற்றத் துறைகள் பக்கமும் பார்வையைத் திருப்புவோமா?

முதலில் மக்கள் தொடர்பு அலுவலகம்... "அரசின் செய்திகளை எந்தப் பத்திரிகைக்கும் தகவல்களாக அனுப்புவதில்லை; எந்த விழாக்களுக்கும் யாரையும் அழைப்பதில்லை. உதவி அதிகாரி ஒருவர்தான் உச்சகட்ட வசூல் மன்னன். எந்த விழாவுக்குப் போனா லும் 40 பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி, மற்ற மாவட்டங்களைப் போலவே கவர் வாங்கி விடுகிறார். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான அந்த உதவி அதிகாரி அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!" என்று புலம்புகிறார்கள் கடலூர் பத்திரிகையாளர்கள்.

மீன்வளத் துறை பக்கம் வலம் வந்தபோது, "இப்படி ஒரு துறை இருப்பதே பெரும்பாலான மீனவர்களுக்குத் தெரியாது. விவரம் தெரிந்த ஒரு சில மீனவர்கள்தான் அலுவலக ஊழியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு கடன்வசதி, மானிய உதவி என்பதையெல்லாம் பெற்று வருகிறார்கள். மீனவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கக்கூட அலுவலகம் முன்வரவில்லை. கடந்த மாதம் சிங்களக் கடற்படை தொடர்ந்து கடலூர் மீனவர்களைத் தாக்கிய பிறகுதான், அடையாள அட்டை கொடுக்க முடிவெடுத்து வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்!" என்றார்கள்.

தமிழ்வளர்ச்சித் துறையைப் பற்றி விசாரித்தால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக, "கலெக்டர் ஆபீஸில் இருப்பவர்களுக்கே இப்படி ஓர் அலுவலகம் இருப்பது தெரியாது. மாதத்தில் ஒரு சில நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எல்லாம் இந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் கடிதங்களை வாங்கக்கூட இங்கு ஆட்கள் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை செய்ய வந்த குழு, பூட்டியிருந்த அலுவலகத்தைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றது. பிறகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களை வரச்சொல்லி இருக்கிறார்கள். விளக்கம் கேட்டால், 'எங்களுக்கு நீங்கள் வரும் தகவல் தெரியாது' என்று பதில் சொன்னார்களாம் ஊழியர்கள்!" என்கிறார்கள்.

வேளாண்மைத் துறையைப் பற்றி அறிந்தவர்களிடம் பேசியபோது, "சிறு குறு விவசாயிகளைக் கண்டு கொள்ளாதவர்கள்தான் இந்தத் துறையில் இருப்பவர்கள். வரும் மானியம், இலவசம் எல்லாவற்றையும் தங்களுக்கு வேண்டியவர்களாகப் பார்த்துத் தள்ளிவிடும் தாராள குணம் படைத்தவர்கள். சமீபத்தில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பவர்டில்லர் வாங்க அரசாங்கம் 45 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுத்தது. அது முழுவதும் பெரு விவசாயிகள் சிலருக்கும், ஊழியர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டது. தங்களுக்கு எதிர்ப்பு இருக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முழங்கும் சில விவசாயி களுக்கு மட்டும் அவர்கள் எது கேட்டாலும் செய்து கொடுத்து விடுகிறார்கள் இங்குள்ளவர்கள்!" என்று புட்டுப் புட்டு வைத்தார்கள்.

சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. "ஆனால், மருத்துவம் அப்படி இல்லை. மழைக்கால முன் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. பல இடங்களில் பரவி வரும் காய்ச்சலைக்கூடக் கண்டுகொள்வதில்லை. மாவட்ட தலைமை மருத்துவ மனையில் அவசர சிகிச்சைக்கு வரும் கேஸ்களில் பாதிக்கு மேல் புதுச்சேரிக்கோ, சென்னைக்கோ திருப்பி அனுப்பப்படுகின்றன!" என்கிறார்கள் சுகாதாரத் துறையில் இருக்கும் சிலர்.

கனிமவளத் துறை பற்றி விசாரித்தால், "மணல் விஷயத்தில் எந்த விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. சரியாக கவனித்து விட்டால் போதும்... சம்பந்தமே இல்லாமல் எந்த ஆய்வும் செய்யாமல் எங்கு வேண்டு மானாலும் மணல் அள்ள அனுமதி கொடுப்பார்கள் அதிகாரிகள். குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளிக்கொள்ள ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். அதே போல, இங்குள்ள லாரிகள் திருவண்ணாமலை போன்ற வெளியூர்களுக்கு லோடு போய்விட்டுத் திரும்பும்போது பில் இல்லாமல் ஜல்லி ஏற்றி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்க மாதாந்திர மாமூல் கட்டவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அப்படி மாமூல் கட்டாத லாரிகள் பிடிபட்டால், 25 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும். அதிலும் விதிவிலக்கு வைத்திருக்கிறார்கள். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால், அபராதம் கிடையாது!" என்று கொந்தளிப்போடு சொன்னார்கள்.

"மாவட்டத் தலைநகரான கடலூரில் பாதாள சாக்கடைப் பணிகளால் நகரமே சிதைந்து போய்க் கிடக்கிறது. லட்சக்கணக்கில் மக்கள் சென்று திரும்பும் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்ட அரசு சார்பில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை, பேருந்து நிலையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணவில்லை!" என்று ஏகப்பட்ட புகார்களை வாசிக்கிறார்கள் கடலுர் நகர மக்கள்.

இவை எதையும் காதில் வாங்காமல் கனஜோராக நடக்குது கடலூர் மாவட்ட நிர்வாகம்!
- கரு.முத்து

வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்றாவிட்டால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்

கடலூர் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை உரிமையாளர்கள் அகற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் கொசு தொல்லை ஒழிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கி னார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா முன்னிலை வகித்தார். கொசுக்களை நிரந்தரமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து கொசு ஒழிப்பு குழு கூட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். நகர விரிவாக்கங்களால் பெருகி வரும் குடியிருப்புகள் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டு வருவதால் நக ராட்சி நிர்வாகங்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவதில் பிரச்சனை ஏற்படுகிறது என எடுத் துரைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட் சியர் சீத்தாராமன் பேசுகை யில், “நகர விரிவாக்கம் காரணமாக பஞ்சாயத்துக்களில் அதிக எண்ணிக்கை யில் குடியிருப்புகள் பெருகி வருகிறது. இங்கு முறைப்படி கழிவு நீர் வெளியேற்ற நடவடிக்கை என்பது குறை பாடாக உள்ளது.
எனவே பஞ்சாயத்து எல்லையில் வீடுகள் பெருகி வந்தாலும் அதனை பஞ்சாயத்து தலைவர்கள் கொசு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனம் பொருட்கள் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் கொசுக் கள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது என ஆய்வில் தெரிய வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வீட்டு வாயில்களில் சாக்கடை உள்ளிட்ட நிரந்தர நீர் தேக்கங்களை தவிர்ப்பதற்கு பொது சுகாதார சட்டம் 1939ம் ஆண்டு 84(1), 86 மற்றும் 87(1) பிரிவுகளின் படி சட்ட ரீதியாக நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது“ என்றார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர், கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.2003 முதல் முடக்கி வைக்கப்பட்டு உள்ள கட்டடத் தொழிலாளர்களின் 65 ஆயிரம் மனுக்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். இதர வாரியங்களைப் போல் பதிவு செய்த நாள் முதல் வாரியப் பயன்களை வழங்க வேண்டும். நாலரை ஆண்டுகள் வாரிய உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு 60 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதிவுக்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் நகரத் தலைவர் ராமுமேஸ்திரி, புவனகிரி நகரத் தலைவர் வீரப்பன் மேஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர், கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன்

கடலூர் மாவட்டத்தில் ரூ. 14 கோடியில் நீர்வள மேம்பாட்டு திட்டம்

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆறு வடிநிலப் பகுதிகளில் நீர்வள மேம்பாட்டு திட்டம் ரூ. 14 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யும் ஊர்தியை, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து, உலக வங்கி நிதிஉதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் கெடிலம் ஆற்றில் உள்ள திருவந்திபுரம், திருவதிகை, வானமாதேவி அணைகளைச் சீரமைத்தல் மற்றும் 37 ஏரிகள், வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆகியவற்றின் மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நீர்ப்பாசனச் சங்கங்கள் அமைத்து அவைகள் மூலம் இப்பணிகள் நிறைவேற்றப்படும். மாற்றுப்பயிர் சாகுபடி, பழத் தோட்டங்கள் அமைத்தல், காய்கறி பயிரிடுதல், செம்மை நெல் சாகுபடி, சொட்டுநீர்ப் பாசனம், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீன் வளர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகளும் இதில் எடுத்துக் கொள்ளப்படும். வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 14 கோடியில் இத்திட்டங்கள் 3 ஆண்டுகளில் (2013 வரை) நிறைவேற்றப்பட இருக்கிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரசார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்தி கெடிலம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 21 கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளும். பிரசார ஊர்தியின் பணியை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் கொடி அசைத்துக் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வெள்ளாறு உபவடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பு இளங்கோ, உதவி செயற்பொறியாளர்கள் குணசேகரன், குமார், திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய உதவிப் பொறியாளர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆட்​சி​யர் அறி​வுரை

மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார்.÷24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​னர். இத​னால் மீனவ மக்​க​ளி​டையே கொந்​த​ழிப்பு ஏற்​பட்​டது. எனவே வியா​ழக்​கி​ழமை மாலை மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​களை அழைத்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​÷க​ டற்​படையினர் மீன​வர்​க​ளைத் தாக்​கக்​கூ​டாது என்று மீன​வர்​கள் கேட்​டுக் கொண்​ட​னர். சந்​தே​கப்​பட்​டால் மீன​வர்​க​ளைப் பிடித்து,​ கட​லூர் காவல் துறை​யி​ன​ரி​டம் ஒப்​ப​டைக்​க​லாம் என்​றும் கூறி​னர். கடற்​ப​டை​யி​ன​ரி​டம் இருந்து தங்​க​ளுக்​குப் பாது​காப்பு வேண்​டும் என்​றும் கோரி​னர்.÷இந்​திய இறை​யாண்​மைக்கு அச்​சு​றுத்​தல் ஏற்​பட்டு இருப்​ப​தா​லேயே நாட்டு நலன் கருதி கடற்​ப​டை​யி​னர் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கி​றார்​கள் என்று மீன​வர்​க​ளி​டம் எடுத்​துக் கூறப்​பட்​டது. அவர்​க​ளும் ஏற்​றுக் கொண்​ட​னர். அனைத்து மீன​வர்​க​ளுக்​கும் விரை​வில் அடை​யாள அட்டை வழங்க மீன்​வ​ளத் துறைக்கு உத்​த​ர​வி​டப்​பட்டு இருக்​கி​றது.÷மீ​ன​வர் அடை​யாள அட்டை வழங்​கும் வரை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை மீன​வர்​கள் எடுத்​துச் செல்​லு​மாறு அறி​வு​றுத்​தப்​பட்டு இருக்​கி​றது. மீன​வர்​கள் அச்​ச​மின்றி மீன் பிடிக்​கச் செல்​ல​லாம் என்​றார் ஆட்​சி​யர்.÷கூட் ​டத்​தில் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன்,​ கட​லூர் நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மீன் வளத்​துறை உதவி இயக்​கு​நர் அறி​வு​மதி,​ மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் சுப்​பு​ரா​யன்,​ ஏகாம்​ப​ரம்,​ குப்​பு​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு இலவசமாக கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவசமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர 1.1.2010 அன்று 20 வயதிற்கு குறையாமலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் உள்ள இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு ஆன பிஎஸ்வி பேட்ஜ் வைத்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.19,500 ஆகும். இதனை முழுவதும் அரசே ஏற்கிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி சான்று, சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இதர வாகன ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன், தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுனர் பயிற்சி பிரிவு, கும்மிடிபூண்டி& 601201, திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 7&12&09க்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.