கோரிக்கை பதிவு

கடலூர் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குப்பை மேடானது சில்வர் பீச்

விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

கடலூர் நகர பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கடலூரில் அரசு அலுவலர்கள் குடியிருக்கும் நகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என 450 குடும்பங்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டு வசதி வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு பராமரிப்பு செலவிற்காக 60 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.தற்போது இந்தப் பகுதி பராமரிப்பு பணிகள் கடலூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள மேல்நிலை தேக்கத் தொட்டிலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேல்நிலைத் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அதிலிருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து கிழே விழுந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டி சீர் செய்ய டெண்டர் விடப்பட்டது.பணியை எடுத்த ஒப்பந்தக்காரர் பணியை துவங்கி மூன்ற மாதங்கள் ஆகியும் இதுவரை முடிக்காததால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. காலை நேரத்தில் தண்ணீர் தொட்டியில் ஏற்ற முடியாமல் நேரடியாக வழங்கப்படுவதால் தண்ணீர் கலர் மாறி பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.இந்த தண்ணீரை குளியல் மற்றம் துணி துவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கு ஒரு குடம் 3 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் குடிநீர் தொட்டி இருந்தும் நல்ல குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடன் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதானதால் வாகன போக்குவரத்து பாதிப்பு

கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.குறிப்பாக சண்முகம் பிள்ளைத்தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, அங் காளம்மன் கோவில் தெருக்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறவில்லை. ஆனால் செம்மண்டத்தில் துவங்கி மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இணையும் இந்த சாலை 100 அடி அகலம் இருப்பதால் அரசு மருத்துவமனை சாலைக்கு மாற்று சாலையாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாத மழையில் நெல்லிக்குப்பம் சாலை பெரிதும் பாதிக் கப்பட்ட போது பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத்தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. அதுவரை சிறந்த நிலையில் இருந்த சாலை கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் சாலைகளில் ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமானது.மஞ்சக்குப்பம் அங் காளம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் ஜல்லி பெயர்ந்து யானைப் பிடிக்கும் பள்ளமானது. இதன் காரணமாக லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதாள சாக்கடைத் திட்டப்பணி செயல் படுத்தாத காரணத்தால் இந்த சாலையாவது நகராட்சி உடனே போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் - செம்மண்டலம் சாலைக்கு மாற்று சாலையாக கருதி தரமாக போடப்பட்டால் தான் எதிர்காலத்தில் வாகனங்கள் சென்றால் பழுதடையாமல் இருக்கும்.

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக

நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு வசதியாக, ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணியை கடலூர் நகராட்சி மேற்கொண்டு வருகிறது.கடலூர் உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்து சில்வர் பீச் வரை சுமார் 5 கி.மீ. தூரம், சுனாமி நிவாரண நிதியில் இருந்து, சாலையின் இருபுறமும் ரூ. 5 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. வாய்க்கால் மீது காங்கிரீட் தளம் அமைத்து மூடப்பட்டு, நடைபாதையாகப் மாற்றப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாநில நெடுஞ்சாலைப் பட்டியலில் இச்சாலை உள்ளது.நடைபாதை அமைக்கும் பணிக்காக, ஒரு சில நாள்கள் காலி செய்து கொடுத்த வியாபாரிகள், பணி முடிந்ததும் நடைபாதை மீது, மீண்டும் கடைகளை அமைத்துக் கொண்டனர்.தற்போது இந்த நடைபாதையை அழகுபடுத்தும் முயற்சியாக, கடலூர் நகராட்சி ரூ. 20 லட்சத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியைக் ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. பிற்பட்ட பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணி நடப்பதாக நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இப்பணியும் மிகவும் தரமற்றதாக செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.÷காங்கிரீட் தளத்தின் மீது 2 அங்குல உயரத்துக்கு ஆற்று மணல் கொட்டி, அதில் சிமென்டைக் கரைத்து லேசாகத் தெளித்துவிட்டு, அதன்மீது டைல்ஸ்கள் வைத்து வருகிறார்கள்.டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்து விட்டன. மேலும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நடைபாதையில், சில தினங்களாக லாரிகளையும் நிறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் டைல்ஸ்கள் நொறுங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே கடலூர் நகர ஆட்டோக்கள், நடைபாதைகளைத்தான் ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றன.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது நகராட்சிக்கு வேண்டாத வேலை. அங்கு டைல்ஸ் பதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ரூ. 15 கோடிக்கு மேல் தமிழக அரசு மானியமாக வழங்கினால்தான்  சாலைகளை செப்பனிட முடியும் என்ற நிலையில் இருக்கும் கடலூர் நகராட்சி, இந்த ரூ. 20 லட்சத்தைக் கொண்டு இரு சாலைகளைச் செப்பனிட முடியும் என்று  மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.கடற்கரைச் சாலையில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வணிகர்கள் கடைகளை அமைத்து இருப்பதாலும் உட்லண்ட்ஸ் திருப்பத்தில் ஆட்டோக்களை இடையூராக நிறுத்துவதாலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும்  இச்சாலையில், தொடர்ந்து போக்குரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கடலூரில் மாதம் ஒருமுறை  "நடைபாதை நடப்பதற்கே' என்ற போராட்டமும், வாரம் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போராட்டமும் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை எச்சரித்துள்ளது.பேரவையின் நிர்வாகப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மற்றும் கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

கடலூரில் நேற்று அனல் காற்று வீசியதால் சில்வர் பீச்சில் மக்கள் கூட் டம் அதிகமாக இருந்தது.
சுனாமிக்கு பிறகு வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகின்றன. சில நேரங்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதும் நடந்து வருகிறது. கடந்த 2 வாரம் முன் சுனாமி பீதி காரணமாக பீச்சிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப் பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட "லைலா' புயல் காரணமாக மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சில்வர் பீச்சிற்கு வரும் மக்கள் கூட்டமும் குறைந் திருந்தது. நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அனல் காற்று வீசியது. அதனால் மாலை நேரத்தில் சில்வர் பீச்சில் மக்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை: நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தின.கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் லாரன்ஸ் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உடனடி, அத்தியாவசியத் தேவையாகவும் உள்ளது. ரயில்கள் முழுமையாக இயக்கப்படும்போது, போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதைத் தடுக்க, லாரன்ஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், வண்டிப்பாளையம் சாலையையும், சரவணன் நகரையும் இணைக்கும் 300 மீட்டர் சாலையை உருவாக்க வேண்டும் என்பது கடலூர் நகர மக்களின் கோரிக்கை. மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் திறமையாகச் செயல்பட்டு இருக்குமாயின், 3 ஆண்டுகளாக அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளின் நடைபெற்றபோதே, ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்துக்கும், சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டத்துக்கும், தீர்வு காணப்பட்டு இருக்கும் என்பது, கடலூர் மக்களின் கருத்து. ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடந்தது. நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார்.  கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.மருதவாணன், வெண்புறா குமார், திருமார்பன், துரை.வேலு, பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.சிவராமன், பண்டரிநாதன், அருள்செல்வம், மணிவண்ணன், அரங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

படுகுழிக்குள் வீழ்த்தும் பாதாள சாக்கடைத் திட்டம்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் நகரில் பலரை படுகுழிக்குள் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது.  இத்திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களில், குழிகளில், நூற்றுக் கணக்கானோர் விழுந்து காயம் அடைந்துள்ளனர்; பலர் இறந்துள்ளனர்.  பாதாள சாக்கடைத் திட்டத்தில் விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ அரசோ, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ பொறுப்பல்ல என்பது, காண்ட்ராக்ட் விதிமுறைகளில் இருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவோர், மக்கள்படும் அவதியைக் கண்டு சற்றும் கவலை கொள்வதில்லை. கடலூரில் மூன்றில் இரு பங்கு வார்டுகளில், ரூ.44 கோடியில் தொடங்கி ரூ.70 கோடியை தொட்டுக் கொண்டு இருக்கும் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது.ஒரு திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, அத்திட்டத்தின் பலனை எப்போது அனுபவிப்போம் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக இருக்கும். அது திட்டத்தின் வெற்றியை மனதில் கொண்டதாக அமையும். ஆனால் கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது முடிவடையும் என்ற கேள்வி, இத்திட்டத்தை நிறைவேற்றும்போது ஏற்படும் துன்பங்களில் இருந்து, துயரங்களில் இருந்து, சங்கடங்களில் இருந்து, கடலூர் மக்கள் எப்போது விடுபடுவார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.வரும் 20 ஆண்டுகளில் கடலூர் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்ற கணக்கின் அடிப்படையில், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே பிரச்னைகளும் தோன்றிவிடும் என்றும், அனுபவமிக்க பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கியது முதல் பள்ளத்தில் விழுந்து திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மூவர், பொதுமக்களில் ஒருவர், விபத்தில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விழுந்து, பலத்த காயங்களுடன், பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து உயிர் பிழைத்து உள்ளனர்.இந்தப் பட்டியல் மேலும் தொடரும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் 3-வது கட்டமாக தோண்டப்பட்ட குழியில், செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சைக்கிளுடன் விழுந்தார். அவர் நீதிமன்றக் காவலாளியான சந்திரன் (58) என்று பின்னர் தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து, அவரைக் காப்பாற்றி உள்ளனர். திட்டம் முடிவடையும் வரை இத்தகைய சம்பவங்கள் தொடரவும், நல்ல சாலைகளை கடலூர் மக்கள் அனுபவிக்க முடியாத துயரம் தொடரவும் இத்திட்டம் வழிவகுத்து உள்ளது.  ஆனால் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.44 கோடியில் இருந்து ரூ.70 கோடியாக தற்போது உயர்ந்து இருக்கிறது. இது மேலும் உயராது என்று யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டு இருப்பதுதான் வேதனை தரும் விஷயமாகக் கருதுகிறார்கள் கடலூர் மக்கள். மண்ணில் புதைக்கப்படும் பணத்தை யாரால் ஆய்வு செய்ய முடியும்.

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் பாதாள சாக் கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத் தும் பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ் சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த் தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.  பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:  நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.  ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ்  நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.  நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முறைப்படுத்துதல் முறையா?

சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப் பஞ்சாயத்துகளில் முறையான அனுமதி இல்லாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை, இரட்டிப்பு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு முறைப்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நியாயமாகப் பார்த்தால், இந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து, இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடுத்து அபராதம் விதிப்பதுடன், இதற்குக் காரணமான உள்ளாட்சி அமைப்பின் அதிகாரி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.தற்போது குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகூட உள்ளாட்சித் தணிக்கையிலும் பொதுத் தணிக்கை அறிக்கையிலும் தொடர்ந்து இத்தவறுகளைச் சுட்டிக்காட்டி வருவதால் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளிலும் குடிநீர்க் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கு ஏற்படும் மின்கட்டணம் ஆகியவற்றை ஒப்பீடு அடிப்படையில் தணிக்கை செய்யும்போது, உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல் அம்பலப்பட்டுப் போகிறது.உதாரணமாக, ஒரு நகராட்சியின் பதிவேட்டின்படி உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை, அவற்றின் குழாய் அளவு, குடிநீர் விநியோகிக்கப்படும் கால அளவு ஆகியவற்றைக் கொண்டு அந்த நகரின் ஒட்டுமொத்தக் குடிநீர் அளவு எட்டப்படுகிறது. இதில் நீர் கசிவுகளையும் கழித்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு அந்த நிலையத்தின் குதிரைத்திறனுக்கு ஏற்ப எத்தனை மணிநேரம் இயங்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், மின்மோட்டர் இயங்கிய கால அளவுக்கும், வெளியேற்றப்பட்ட குடிநீர் அளவுக்கும், இணைப்புப் பெற்ற வீடுகளுக்குத் தேவையான குடிநீர் அளவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் தணிக்கைத் துறையினர் தொடர்ந்து சுட்டிக்காட்டும் குறைபாடு. தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறைபாட்டை மட்டுமே பேச முடியும். ஊழல் நடைபெறும் விதத்தை விளக்க வழியில்லை. குடிநீர் ஊழல் எப்படி நடக்கிறது என்றால்,  அனுமதியில்லாத இணைப்புகள் இந்தக் குடிநீரை முறைகேடாகப் பயன்படுத்துவது ஒருபுறம். அடுத்ததாக மாநகராட்சி ஊழியர்களும் உள்ளாட்சிப் பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் முறைகேடாக லாரிகளுக்கு இத்தண்ணீரை வழங்கி, அதை வெளியே விற்று பணம் சம்பாதிப்பதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தமிழக உள்ளாட்சிகளுக்கு மின்கட்டணம் மூலம் சில  நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இழப்பை மக்கள் வரிப் பணத்திலிருந்து ஈடுகட்டிக் கொண்டிருக்கிறோம்.மின்கட்டணம் மட்டுமே இழப்பு அல்ல. இந்த முறையற்ற இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் நியாயத்துக்குப் பயந்த மனிதர்கள் அல்லர். அவர்கள் இந்தக் குடிநீரை தங்கள் உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியெடுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சொந்த வசதிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருதும்போது, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புரியும்.முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவதால் ஊழல் அதிகாரிகள் மற்றும் அடாவடி அரசியல்வாதிகளின் செயல்களை நியாயப்படுத்துகிற ஆபத்து உள்ளது. மேலும் பணம் படைத்திருந்தால் எவர் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டலாம், பிறகு முறைப்படுத்திக்கொள்ளலாம் என்பது நியாயமான வழியில் நேர்மையாக அனுமதியைப் பெறும் பொதுஜனத்தை கேலிக்குள்ளாக்குவதாக ஆகிவிடும்.இதே விதமாகத்தான் முறையான அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும், ஏன் கல்லூரிகளும்கூட இதில் விதிவிலக்கல்ல, முறையான அனுமதி பெறாமல் மாணவர்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டு, பிறகு மாணவர்களின் கண்ணீர் பேட்டியை நிர்வாகமே அரங்கேற்றி, பொதுவான பரிதாப உணர்வைத் தூண்டிவிட்டு, அந்தப் படிப்பை முறைப்படுத்துவது அல்லது அந்தப் பயிற்சிக் கல்லூரியை முறைப்படுத்துவது என்பதுதான் இதுநாள் வரை நடந்து வந்துகொண்டிருக்கிறது.வெறும் வேளாண் விளைநிலங்களை மனைகளாக்கி விற்றுவிட்டு, குடியிருப்புகள் உருவான பிறகு அதன் மனைகளை முறைப்படுத்துவது ஒரு தொழிலாகவே நடந்துகொண்டிருக்கிறது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முறையான அனுமதி பெறாமல் மாடிக் கட்டடங்கள் விருப்பம்போல கட்டப்படுகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளுக்கும், அந்த வார்டில் தொடர்புடைய அரசியல்வாதிக்கும் தெரிந்துதான் இது நடத்தப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் முறைகேடான கட்டடங்கள் நிறைந்தவுடன் முறையற்ற கட்டடங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. அல்லது நடவடிக்கை எடுத்து இடிப்பதுபோல பாவனை காட்டினால் அவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, காலத்தை நீட்டிக்கிறார்கள்.இப்படி முறையற்ற செய்கை அனைத்தையும் பணத்தால் முறைப்படுத்த முடியும் என்று அரசே ஊக்கப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. "தாட்சண்யம் தனநாசம்' என்பார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முறைப்படுத்துவதால் அரசுப் பணம்தான் வீணாகும். மீண்டும் எந்த பயமும் இல்லாமல், எப்படியும் முறைப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முறைகேடுகளை இவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளவே செய்வார்கள்.

நன்றி தினமணி
 தலையங்கம்

பொலிவிழந்த முதுநகர் காந்தி பூங்கா

கடலூர் முதுநகர் காந்திப் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.கடலூர் முதுநகர் மணிகூண்டு எதிரில் பழமையான காந்திப் பூங்கா உள்ளது. இப்பூங்கா கடந்த 2005ம் ஆண்டு பொது நிதி மூலம் 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பூங்காவிற்கு மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்துச் செல்வார்கள்.
தற்போது இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்திசிலை முற்றிலும் பொலிவிழந்துள்ளது. மின் விளக்குகள் முற்றிலும் எரியாததால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டிணம் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாதனங்களும் முற்றிலும் பழுதடைந்துள்ளன. நீரூற்றும் இயங்காததால் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த புல்தரைகளும் காய்ந்துள்ளது.கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பூங்காவிற்கு மாலை நேரங்களில் பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் பொலிவிழந்து காணப்படும் காந்தி பூங்காவை கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய் உடைப்பு கடலூருக்கு குடிநீர் தட்டுப்பாடு

திருவந்திபுரம் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடலூருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை 
நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இதற்கு எட்டு போர்வெல் மூலம் தண் ணீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், கே.கே.நகர், அண்ணா நகர் மற்றும் பத்மாவதி நகர், போலீஸ் குடியிருப்பு, தேவனாம் பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள எட்டு மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.இந்நிலையில் கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் கழிவு நீர் குழாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவந்திபுரத்திலிருந்து வரும் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் நேற்று காலை 9 மணியிலிருந்து குடிநீர் வெளியேறியது.தகவலறிந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர்கள் பகல் 2 மணி முதல் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.இந்த குடிநீர் குழாய் உடைப்பால் கடலூருக்கு முழு அளவு தண்ணீர் கிடைப்பது இரண்டு நாட்களாகும் என தெரிகிறது.

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் இழுபறி: மாற்றுப் பாதை தயார்படுத்தாததால் தாமதம்

கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை.
தற்போது வாகனங்களின் போக்குவரத்தால் கடலூர் புழுதி நகரமாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரிதமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. நெடுஞ்சாலையில் பெரிய குழாய்கள் பதிக் கும் பணி இதுவரை தொடங்கவில்லை. கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்திய பிறகுதான் சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் நகராட்சி உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் 6 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டால்தான் கழிவுநீர் இயற்கையாக சென்று சேரும். ஆனால் கடலோரப்பகுதி என்பதால் 6 மீட்டர் ஆழம் தோண்டும் போது நீர் ஊற்று ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே தற்போது ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தை மாற்றி 3.15 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய் யப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டர் மூலம் பம்ப் செய்துதான் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வடிகால் வாரியம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடித்த சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு சாலை போடுவதற்காக நகராட்சி, அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளது.
கோடை காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது.பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் இதுவரை தொடங்கப் படாமல் உள்ளன. இந்த ஆண்டாவது பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் முடிக்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்.

10 ஆண்டாக செயல்படவில்லை - பாழடைந்து கிடக்கும் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையம்

கடலூரில் உள்ள மண்டல பனைப்பொருட்கள் பயிற்சி நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. பனை தொழில் மீண்டும் பொலிவு பெற தமிழக அரசு நிதி ஒதுக்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் கடற்கரை சாலையில் மண்டல பனைப்பொருள் தயாரிப்பு மற்றும் பயிற்சி நிலையம் உள்ளது. தமிழ்நாடு கதர்கிராம கைத் தொழில் வாரியத்தின் கீழ் இந்நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பயிற்சி நிலையம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒரே பனை பொருள் பயிற்சி நிலையமாக செயல்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையத்தில் பனை ஓலைப்பொருட்கள், பனைநார் பொருட்கள், தூரிகைகள், பதநீர், பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து 5 பிரிவாக வகுப்பு கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையம் கதர் கிராம கைத்தொழில் வாரியத்தின் ஆதரவை கடந்த 2001ம் ஆண்டு முதல் இழந்தது. இதனால் இங்கு பணியாற்றி வந்த மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் பனை மர அபி விருத்தி நிலையங்களின் கிளைகள் படர்ந்துள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொந்த இடங்களும், கட்டிடங்களும் இருந்தும் இந்நிலையங்களுக்கு போதிய நிதி ஆதாரமின்றி 
செயலிழந்து உள்ளது. கடலூர் மண்டல பனை பொருள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட் டில் விற்பனை நிலையங்கள் சிதம்பரம், பூம்புகார், நெய் வேலி ஆகிய இடங்களில் அமைந்துள் ளது. ஆனால் பனை பொருள் உற்பத்தியின்றி இந்த இடங்கள் மூடப்பட்டுள்ளன.
அரசு பனை யிலான தூரிகைகள், கூடைகள் பயன்படுத்த அனைத்து நக ராட்சி மற்றும் இதர துறை அலுவலகங்களுக்கு உத்தர விட வேண்டும். பனை வெல்லம் சத்துணவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மீண்டும் பனை பயிற்சி மற்றும் பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் தழைத்தோங்கும். தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கிராம தொழிலை அபிவிருத்தி செய்ய வழி காண வேண்டும் என பனை தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

ரேஷன்​ கடையை முற்​றுகையிட்ட மக்கள்

தொடர்ந்து தாம​தமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர் .விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில்,​​ ​ ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.​ அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது.கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடை தொடர்ந்து,​​ தாமதமாகத் திறக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் இக்கடையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது இல்லை என்றும்,​​ பல நாள்கள் மூடியே கிட்டப்பதாகவும் பொதுக்கள் தெரிவிக்கிறார்கள்.​ துவரம்பருப்பு,​​ கோதுமைமாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணி ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாதது குறித்து ​மக்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர்.​ ரேஷன் கடை விற்பனையாளருக்கு எதிராக சிறிது நேரம் குரல் எழுப்பினர்.​ பின்னர் விற்பனையாளர் வந்து கடையைத் திறந்தபோது,​​ அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

கடலூர் நேத்தாஜி சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு

கடலூர் நேத்தாஜி சாலை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
கடலூர் மஞ்சக்குப்பம் முதல் டவுன்ஹால் வரை சாலை குறுகலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் இந்த சாலை அகலப்படுத்தும் திட்டம் இருந்தது. அதற்குள் திட்டப்பணி முடிந்து விட்டதால் சாலை அகலப்படுத்தும் திட்டமும் கைவிடப்பட்டது.
குறுகலான இந்த சாலையில் இருபுறமும் நடைபாதைக்கென பிளாட்பாரம் போடப்பட்டுள்ளதால், சாலை மேலும் குறுகலாகிவிட்டது. இதனால் வாகனங்கள் சென்றுவர முடியாததால் நேத்தாஜி சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதன் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட பிளாட்பாரத்தில், கடைகளுக்கு முன்பு கீற்று கொட்டகை போட்டு நடைபாதை கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்லும் மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.
இந்நிலையில் இந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரம் முன்பு தாசில்தார் தட்சணாமூர்த்தி முன்னிலையில் நகர நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. சிலர் தாமாகவே ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றிக் கொண்டதால் சாலை சற்று விசாலமாக காணப்பட்டது. இந்த நிலை ஓரிரு தினங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அப்பகுதி வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு முன் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கொட்டகை போட்டுள்ளனர்.

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங்பவுடர் தொட்டியில் கலக்கப்படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது.  இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு, குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை. மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.

எமனாக மாறி வரும் மணல் சாலைகள்

கடலூர் நகரம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பராமரிப்பு இன்மையால், பெரும்பகுதி மணலால் மூடப்பட்டு மக்களுக்கு எமனாக மாறிவருகிறது.தேசிய நெடுஞ்சாலை 45ஏ கடலூர் நகராட்சி பகுதி வழியாக, 15 கி.மீ. தூரம் கடந்து செல்கிறது. பல கோடி செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தச் சாலை, முறையாகப் பராமரிப்பு இல்லாததால், பெரும்பகுதி மணல் படிந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்கள் பெட்டிக் கடைகள், ஹோட்டல்கள், திடீர் கோயில்கள், குளிர்பானக் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இச்சாலை நிர்மாணிக்கப்பட்ட பிறகு, வாகனப் போக்குவரத்து பன்மடங்கு பெருகிவிட்டது.அதற்கேற்ப விரிவுப்படுத்தும் பணியையோ, பராமரிப்புப் பணிகளையோ செய்யாததால், தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாறி வருகிறது.பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கான அகலம் போக மீதம் உள்ள பகுதி முழுவதும், ஒரு அடி உயரத்துக்கு மணல் படிந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நடந்து செல்வோருக்கும் எமனாக மாறி இருக்கிறது.இந்த மணல் மேடுகளில் சிக்கி விழுந்து, அவர்கள் மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூவர் இறந்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை நடைபாதை முழுவதும் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அலுவலர்களைக் கண்டு, ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் கவலைப்படவே இல்லை.  இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கும், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.அதற்கும் பலன் ஏதும் இல்லை. எனவே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர், விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:கடந்த 19-ம் தேதி கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பு நாடகமாக நடந்தது. எந்த ஆக்கிரமிப்பையும்அகற்றவில்லை.எந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்ற அளவுகூட அவர்களிடம் இல்லை. வெறுமனே விளம்பர போர்டுகளை மட்டுமே வைத்து அகற்றுமாறு கூறிச் சென்றனர். அதைக்கூட யாரும் அகற்றவில்லை. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பராமரிப்பு இன்றி மண் மேடிட்டுக் கிடப்பது மக்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

அடிப்படை வசதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூரில் 25 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்காததைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் திடீர்குப்பம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 110 குடும்பங்கள் வசிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த நகரில் வசிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சியால் வழங்கப் படவில்லை.இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை திடீர் குப்பம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க கிளைச் செயலர் புகழேந்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் சுப்புராயன், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புழுதி பறந்த நெல்லிக்குப்பம் ரோட்டில்தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
கடலூர் நகராட்சி பகுதியில் 40.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிக்காக கடலூர் நகரின் முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையான நெல்லிக்குப்பம் ரோட்டில் சாவடி முதல் பொதுப்பணித்துறை அலுவலகம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.பைப்புகள் புதைத்த பின்னர் பள்ளத்தில் மணலை கொட்டி மூடாமல், தோண்டி எடுத்த மண்ணை கொட்டி மூடியதால் மழைக் காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாகி வயல் வெளிபோல் காட்சி அளித்தது. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.இதனைக் கண்டித்தும், சாலையை சீரமைக்கக் கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தின. அதனைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் பொது நல அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்படும் என கலெக்டர் உறுதியாளித்தார்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர்-நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு மற்றும் போடிசெட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்தரை கிலோ மீட்டார் தூர சாலையை சீரமைக்க 1.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.அதனையொட்டி தற்போது நெல்லிக்குப்பம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதில் பாதாள சாக்கடை திட்ட குழாய் புதைத்த இடத்தில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அகற்றிவிட்டு அதன் மீது ஜல்லி கொட்டி சாலை அமைக்கப்பட உள்ளது.இதேபோன்று வண்டிப்பாளையம் சாலை விரிவுப்படுத்தி சீரமைக்கும் பொருட்டு சாலையின் மேற்கு பகுதியில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது