கோரிக்கை பதிவு

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கடலூரில் முத்துக்குமார் நினைவு தினம்

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவு தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கடலூரில் அனுசரிக்கப்பட்டது. கடலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக வந்தனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முத்துகுமார் பற்றி பலர் பேசினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் அறிவுடை நம்பி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் திருமேனி, அறச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சோ.பிரபு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன், கடலூர் நகராட்சித் தலைவர் தாமரைச் செல்வன், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலாலர் திருமார்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவுக்கரசு, நகரச் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவந்திபுரம் பகுதியில் குரங்குகள் கடித்து மாணவர்கள் காயம்

கடலூர் அருகே குரங்குகள் கடித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் மலைப்பகுதியில் குரங்குகள் அதிகம் காணப்படுகிறது. திருவந்திபுரம் பெருமாள் கோயி லுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வரும் உணவுகளை சாப்பிடும் போது, அங்கு குரங்குகள் வந்து உணவுகளை பிடுங்கி செல்கின்றன.
உணவு தர மறுத்தால் பக்தர்களை கடிக்க பாய்கின்றன. அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மதியம் நேரத்தில் மாணவர்கள் சாப்பிடும் போது, அங்கு சென்று மாணவர்களிடம் இருந்து உணவுகளை பறித்துக்கொண்டு செல்கின்றன. சில நேரங்களில் பள்ளி மாணவர்களை கடித்து விடுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரகுநாதன்(12), விக்னேஷ்(11) பிரவின்ராஜ்(11), அஜீத்குமார்(11) வசந்தா(11), அருண்பிரகாஷ்(15) உள்பட 30 மாணவர்கள் குரங்கு கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். அருகில் உள்ள கிராம மக்களையும் குரங்குகள் கடித்து வருகிறது. திருவந்திபுரம் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வனப்பகுதியில் விட வலியுறுத்தல்

கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: கோட்டாட்சியர் ஆய்வு

கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் ஆய்வு செய்தார். கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்து வருகிறார்கள். கடலூரில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இப்பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார். நிலை அலுவலர்கள் சரியான முறையீட்டு விவரங்களை பெற்றுள்ளனரா எனக் கேட்டறிந்தார். கோட்டாட்சியருடன் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்தனர் என செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கடலூர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடலூர் யில் பயிலும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.  அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும், தரமான உணவு வழங்கக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க கடலூர் மாவட்டத் தலைவர் டி.அரசன், துணைத் தலைவர் எஸ்.சிவபாலன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கெனவே மோசமான உணவு வழங்கப்பட்டு வந்த அரசுக் கல்லூரி விடுதிகள் தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. பெரியார் கலைக் கல்லூரிபெரும்பாலான உணவு விடுதிகளில் உணவுப் பட்டியலின்படி உணவு வழங்கப்படுவதில்லை.  விலைவாசி உயர்வு காரணமாக விடுதிகளில் வழங்கப்படும் உணவில் பருப்பு காய்கறிகள் குறைவாக உள்ளன. அரிசியின் தரமும் மோசமாக உள்ளது. இதனால் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சராசரி கலோரி உணவு கிடைப்பதில்லை. மாணவர் விடுதிகளுக்கு அரசு வழங்கும் தொகை, தரமான உணவு வழங்கப் போதுமானதாக இல்லை. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் விடுதிகளில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. விடுதி சுகாதாரமாக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அட்டவணைப்படி உணவு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கடலூரில் தொடரும் காய்ச்சல்

கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் நோய் தொடர்ந்து பரவி வருகிறது. காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மருந்துக் கடைகளில் மருந்து வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடலூரிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு, சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் பெருமளவுக்குப் பரவி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். கொசுக்களின் இனப்பெருக்கம், பன்றிகள் எண்ணிக்கை அதிகரிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாகப் பரவி வருவதை அரசு நிர்வாகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மூளைக்காய்ச்சல் காரணமாக கடலூரில் பள்ளி மணவர் ஒருவரும், டெங்குக் காயச்சல் காரணமாக அஸ்வத்தாமன் என்பவரும் புதுவை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு கடந்த வாரம் இறந்துள்ளனர். இந்த இருவரும் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறக்காததால் மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத் துறையும் அலட்சியமாக இருக்க முடியாது. கடலூர் மற்றும் கோண்டூர் உள்ளிட்ட 7 ஊராட்சிப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே அரசு போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு, மூளைக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் கூறியது: கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நாளொன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். இவர்களில் 60 சதவீதம் பேருக்கு காய்ச்சல் உள்ளது. தற்போது பெய்து வரும் அதிகப்படியான பனியாலும், கொசுக்களாலும், பாக்டீரியாக்களாலும் பரவும் காய்ச்சலாக அதிகம் காணப்படுகிறது. சிக்குன் குனியா போன்ற காய்ச்சல், டைஃபாய்டு காய்ச்சலும் உள்ளது.  காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் உள்ளன.  கடலூரில் கொசுத் தொல்லையால்தான் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆங்காங்கே தண்ணீரும் சாக்கடையும் தேங்கி விடுவதால் பல நோய்கள் பரவக் காரணம் ஆகிவிடுகிறது என்றார்.

கடலூர் மாவட்டத்தில் ரூ. 14 கோடியில் நீர்வள மேம்பாட்டு திட்டம்

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆறு வடிநிலப் பகுதிகளில் நீர்வள மேம்பாட்டு திட்டம் ரூ. 14 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யும் ஊர்தியை, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து, உலக வங்கி நிதிஉதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் கெடிலம் ஆற்றில் உள்ள திருவந்திபுரம், திருவதிகை, வானமாதேவி அணைகளைச் சீரமைத்தல் மற்றும் 37 ஏரிகள், வாய்க்கால்கள், கண்மாய்கள் ஆகியவற்றின் மதகுகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நீர்ப்பாசனச் சங்கங்கள் அமைத்து அவைகள் மூலம் இப்பணிகள் நிறைவேற்றப்படும். மாற்றுப்பயிர் சாகுபடி, பழத் தோட்டங்கள் அமைத்தல், காய்கறி பயிரிடுதல், செம்மை நெல் சாகுபடி, சொட்டுநீர்ப் பாசனம், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீன் வளர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகளும் இதில் எடுத்துக் கொள்ளப்படும். வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 14 கோடியில் இத்திட்டங்கள் 3 ஆண்டுகளில் (2013 வரை) நிறைவேற்றப்பட இருக்கிறது. இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரசார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்தி கெடிலம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 21 கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளும். பிரசார ஊர்தியின் பணியை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் கொடி அசைத்துக் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வெள்ளாறு உபவடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பு இளங்கோ, உதவி செயற்பொறியாளர்கள் குணசேகரன், குமார், திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய உதவிப் பொறியாளர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியரசு தினவிழா : ரூ.24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ரூ. 24.27 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வழங்கினார். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார். பின்னர் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பார்வையிட்டார். வருவாய்த்துறை சார்பில் 51 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, விதவை மகள் திருமண உதவித் திட்டத்தில் 10 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 24.27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சிறப்பாகப் பணிபுரிந்த தலைமைக் காவலர்கள் 43 பேருக்கு பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெறத் தேர்வு செய்யப்பட்ட காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், மாவட்ட அளவில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கம்மாபுரம் சிறுமலர், பரங்கிப்பேட்டை அன்னை, கடலூர் மூகாம்பிகை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
விருத்தாசலம் 
விருத்தாசலம், ஜன. 26: விருத்தாசலத்தில அரசு அலுவலகங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் சாந்தி தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியர் குமுதம் தலைமை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றினார். சாந்தி ஜெயின் சிறப்புப் பள்ளியில் நடந்த விழாவில் அரிமா சஙகத் தலைவர் அருணாச்சலம் தேசியக் கொடியை ஏற்றினார். எடச்சித்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் ஊராட்சித் தலைவர் தமிழரசி கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் உத்திராபதி தலைமை ஏற்றார். இதில் கலைஞர் கண்ணொளித் திட்டத்தின் கீழ், கண் குறைபாடுடைய மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் புரட்சிமணி கொடியேற்றினார். விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் முருகன் தலைமையேற்று கொடியேற்றினார். கார்மாங்குடி ஊராட்சி அலுவலகம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி கொடியேற்றினார். 
பண்ருட்டி
 பண்ருட்டி,ஜன.26: பண்ருட்டியில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் 61-வது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாகக் கொண்டாப்பட்டது. ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முன்னாள் கவுன்சிலர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சக்தி ஐடிஐயில் தாளாளர் ஆர்.சந்திரசேகர் தேசியக் கொடியை ஏற்றினார். மேற்கண்ட விழாவில் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் எம்.நடராஜன், சக்தி ஐடிஐ தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான அ.ப.சிவராமன், எஸ்.வி.ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, முன்னாள் கவுன்சிலர் டி.ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றினார். திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் பாலாஜி துணிக்கடை உரிமையாளர் கே.வி.ஆர்.ஜெயபால் தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளி அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ்.சுப்ரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விபத்தில் ஊனமுற்ற 9-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஆர்.சரவணனின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ரூ.12,500 ரொக்கமாக வழங்கப்பட்டது. ஸ்ரீ முத்தையர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆன்டனிராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.தண்டபாணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி பண்ருட்டி கிளை மேலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பண்ருட்டி நகராட்சியில் ஆணையர் கே.உமாமகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றினார்.

மொழிப்போர் தியாகிகள் தினம்

சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக:​​ நகர திமுக சார்​பில் காந்தி சிலையி​லிருந்து ஊர்வலமாகச் சென்று ​ அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.​ அங்கு நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந் நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு,​​ மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் த.ஜேம்ஸ் விஜயராகவன்,​​ நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன்,​​ குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் மறறும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுக:​​ நகர அதி​முக சார்​பில் கீழ​வீதி மாவட்ட கட்சி அலு​வ​லகத்திலிருந்து நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.
அங்கு ராஜேந்திரன் சிலைக்கு மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எம்.ஏ.கே.முகில்,​​ மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ,​​ செல்விராமஜெயம் எம்எல்ஏ,​​ மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் சொ.ஜவகர்,​​ முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.எஸ்.என்.குமார்,​​ மாவட்ட ஜெ.​ பேரவை செயலர் வி.கே.மாரிமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
மதிமுக:​​ மறு​ம​லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர மதிமுக அலுவலத்திலிருந்து நகரச் செயலர் எல்.சீனுவாசன் ஊர்வலமாக புறப்பட்டு ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் கு.பெருமாள்,​​ குமராட்சி ஒன்றியச் செயலர் பா.ராசாராமன்.​ சிவ.திருநாவுக்கரசு,​​ சி.ராஜூ உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.​ மதிமுக மாணவரணி சார்பில் மாணவரணி செயலாளர் தி.லோகசுப்பிரமணியன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.÷மதிமுக மாநில ஆசிரியர் மன்றத் தலைவர் முனைவர் மு.பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்த அதிகாரிகள் உறுதி

தாற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை, திங்கள்கிழமை  முதல் துரிதப்படுத்தபடும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ரூ.44 கோடியில் திட்டமிடப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் 30 மாதங்களுக்கு மேலாகியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது மற்றும் சாலைகள் சீர்குலைந்து கிடப்பதைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு 26-ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தது. இதையொட்டி கடலூர் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் நகர்மன்றத் தலைவர் து. தங்கராசு, நகர்மன்ற, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறுத்தப்பட்டு இருக்கும் பணிகளை திங்கள்கிழமை முதல் தொடங்கி துரிதமாக நடத்துவது என்று அதிகாரிகளால் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வது என்றும், முன்னேற்றம் குறித்த தகவல்களை பொதுநல அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்தவாறு திங்கள்கிழமை வேலைகளைத் தொடங்கா விட்டால் 26-ம் தேதி கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அறிவித்துள்ளன. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர்,  தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் உள்ளிட்டதொழிற்சங்கப் பிரதிநிதிகள், வெண்புறா பொதுநலப் பேரவைத் தலைவர் குமார், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை துணைபொதுச் செயலாளர் திருமார்பன், தராசு மக்கள் மன்றச் செயலாளர் துரைவேலு, கடலூர் தமிழ்ச்சங்க இணைச் செயலர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூரில் மாரத்தான் ஓட்டம்

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து இதனை  ஏற்பாடு செய்து இருந்தன. மாரத்தான் ஓட்டப்பந்தயம் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கியது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரங்கராஜன், மாவட்ட இளைஞர் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் ஜெயந்தி ரவிச்சந்திரன், அருமைச்செல்வம், டாக்டர் வி.கே.கணபதி, கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் வரவேற்றார். போட்டியில் வீரர் வீராங்கனைகள் 405 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான 15 கி.மீ. மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு, திருவந்திபுரம் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. பெண்களுக்கான 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, கே.என்.பேட்டை வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. பள்ளி மாணவ மாணவியருக்கான 5 கி.மீ. ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, சில்வர் பீச் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்:  ஆண்கள்: வெங்கடேசன் (விருத்தாசலம்), செந்தமிழ்செல்வன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), சாமிநாதன் (காராமணிக்குப்பம்). பெண்கள்: அன்புச்செல்வி (கடலூர் பெரியார் கல்லூரி), மாதவி (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்), பாரதி திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி). பள்ளி மாணவர்கள்: தமிழரசு (விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி), கார்த்திக் (என்.எல்.சி. பள்ளி) துரை (நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி). மாணவிகள்: குணா (திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ஸ்ரீதேவி (நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி), மோனிஷா (கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி).  ஆண்கள், பெண்களுக்கான முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ. 5 ஆயிரம், 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம். மாணவ மாணவியருக்கான முதல் 3 பரிசுத் தொகை முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ.1000. 4 முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் உண்டு. குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

கடலூர் சி.கே பள்ளியில் பருவ நிலை மாற்றம் குறித்த கண்காட்சி

பருவநிலை மாற்றங்களால்  புவி வெப்பமயமாதல் குறித்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடலூர் சி.கே பள்ளியில் நடந்தது. இதில் 1500 பள்ளி  மாணவர்கள் பங்கேற்றனர்.
கடலூர் சி.கே பிராக்டிக்கல் நாலேஜ்  பள்ளியில்  பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வினை உருவாக்கவும், அவர்களை இயற்கையின் தோழர்களாக மாற்றவும் ‘கிளைமேட்’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளியின் அறிவியல் பிரிவு, வாழ்வியல் கல்வி, தொழில்முனைவோர் பிரிவு ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. இதில் அனைத்து கல்வி துறைகளின் சார்பிலும் பருவநிலை மாற் றம் குறித்த மாணவர் கள் உருவாக்கிய பொருட்கள், மற்றும் ஆய்வு அறிக்கைகள், புள்ளி விவரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறு குழந்தைகள் முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை அனை வரும் பங்கேற்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் தார்சி யஸ் வரவேற்றார். இயக்குநர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.  பள்ளி தாளாளர் டாக்டர் ஹேமாசின்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி சிறப்புரையாற்றினார். கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே ரங்கநாதனின் துணைவியார் தேன்மொழி ரங்கநாதன் மாணவர்களை பாராட்டினார்.
பூமி தோற்றம் படிப்படி யான அதன் மாற்றம் பூமி யின் அழிவு ஆகியவற்றை  பள்ளி மாணவர்கள் இசை மற்றும் நடனத்தின் மூலம் கண்முன் கொண்டுவந்தார்கள். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந் தது. பருவநிலை மாற்றம் குறித்து மாணவர்கள் பல் வேறு கண்காட்சி பொருட் களை பார்வைக்கு வைத்திருந்தனர். அவர்கள் பனிக்கட்டியால் பனிக்கரடி செய்து பருவநிலை மாற்றத்தால் மெல்ல மெல்ல கரைந்து அழிவதை தத்ரூபமாக செய்திருந்தனர்.
லிம்கா சாதனை: இது தவிர பள்ளியில் யோகா மற்றும் தியானம் நடந்தது.  இதில் பள்ளி யோகா மாஸ் டர்   காளத்தீஸ்வரர் ஆணிப்படுக்கையின் மீது 50 வித மான யோகசானங்களை செய்து புதிய லிம்கா சாதனை படைத்தார். இதை போல் பள்ளி மாணவர்கள் நவீன், விக்னேஷ், அஜய், ராஜகண்ணன்,  சதீஷ், அஞ்சனா, ஜனனி, மதுமிதா ஆகியோர்  முட்டைகள் மீது அமர்ந்து அவை உடைந்து விடாமல் யோகாசனங்கள் செய் தனர்.
நவீன தொப்பி: பள்ளியின் தொழில்முனைவோர் பிரிவு மாணவர்கள் நவீனதொப்பியை தயாரித்து விற் பனை செய்தனர். தொப்பி யில் சிறிய மோட்டாரும் முன் பகுதியில் சிறிய சுழலும் விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது. சுவிட்ச் ஆன் செய் யும் போது விசிறி சுழன்று முகத்தில் ஜில்லென்ற காற்று வீசும். வெய்யில் காலத்தில் இந்த தொப்பி அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்று கூறி அவற்றை விற் பனை செய்தனர். கண்காட்சிக்கு வந்த அனைவரும் இந்த நவீன தொப்பியை வாங்கிச்சென்றனர்.
மேலும் மினி உழவர்சந்தையை பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்தனர். பொங்கலுக்கு தேவையான பொருட் களை மாணவர்கள் விற் பனை செய்தார்கள். இதன் மூலம் மாணவர்கள் தொழில்முனைவோராக சிறந்த பயிற்சி பெற்றதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். வாழ்வியல் கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் காயத்ரி உமாசங்கர் நன்றி கூறினார்.

விழுப்புரம்- மயிலாடுதுறை சரக்கு ரயில் 3 முறை இயக்கம்

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் நேற்று ஒரே நாளில் மூன்று முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டது. விழுப்புரம்-மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல பாதையாக மாற் றும் பணி கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. ரயில்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடத் தப்பட்டது.


கடந்த 5ம் தேதி இரண்டு சரக்கு ரயிலும், 7 மற்றும் 17ம் தேதிகளில் தலா ஒரு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. நேற்று ஐந்தாவது முறையாக மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. மயிலாடுதுறையில் காலை  7.30 மணிக்கு 45 காலி வேகன்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காலை 9.58 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து விழுப்புரம் சென்றது. பின் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் மாலை 3.20 மணிக்கு கடலூரை கடந்து கும்பகோணம் சென்றது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வருவதற்காக தஞ்சாவூருக்கு மற்றொரு சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

கட​லூ​ரில் கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க ​ ​பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை

கடல் நீர் உள்​பு​கு​வ​தைத் தடுக்க,​​ கட​லூர் பெண்ணை ஆற்​றில் ரூ.12 கோடி​யில் தடுப்​பணை கட்​டும் பணி தொடங்​கப்​பட்டு இருக்​கி​றது.​ ​க​ட​லூ​ரை​ யும் புதுவை மாநி​லம் கும்​தா​மேடு ​(பரிக்​கல் பட்டு ஊராட்சி)​ பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ இப்​ப​கு​தி​யில் பெண்ணை ஆற்​றின் வடக்​குக் கரை புதுவை மாநி​லத்​தி​லும்,​​ தெற்​குக் கரை கட​லூர் மாவட்​டத்​தி​லும் உள்​ளது.​ கட​லூர் அருகே தாழங்​குடா கடற்​க​ரை​யில் பெண்​ணை​யாறு கட​லில் சங்​க​மிக்​கி​றது.​ ​தா​ழங்​கு​டா​வில் இருந்து 15 கி.மீ.​ தூரம் வரை கடல் நீர் உள்​பு​குந்து விட்​டது.​ இத​னால் பெண்​ணை​யாற்​றின் கரை​யில் உள்ள கட​லூர் மாவட்​டம் மற்​றும் புதுவை மாநி​லத்​தில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் விளை நிலங்​க​ளில்,​​ நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ இத​னால் கட​லூர் நக​ரில் குடி​யி​ருப்​புப் பகு​தி​க​ளி​லும் நிலத்​தடி நீர் உவர் நீராக மாறி​விட்​டது.​ ​எ​னவே பெண்ணை ஆற்​றில் தடுப்​ப​ணை​கள் கட்ட வேண்​டும் என்று கட​லூர் எம்​எல்ஏ கோ.அய்​யப்​பன் தொடர்ந்து சட்​டப் பேர​வை​யி​லும் மாவட்ட நிர்​வா​கத்​தி​ட​மும் கோரிக்கை எழுப்பி வரு​கி​றார்.​ புதுவை மாநில விவ​சா​யி​க​ளும் விளை நிலங்​கள் பாதிக்​கப்​ப​டு​வ​தைத் தடுக்க இதே கோரிக்​கையை முன் வைத்​த​னர்.​பு​துவை மாநி​லம் மத்​திய அர​சின் நேரடி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் யூனி​யன் பிர​தே​ச​மாக இருப்​ப​தா​லும்,​​ திட்​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிதி தாரா​ள​மா​கக் கிடைப்​ப​தா​லும்,​​ விவ​சா​யி​க​ளின் கோரிக்​கையை ஏற்று பெண்ணை ஆற்​றில் தடுப்​பணை கட்ட முன்​வந்து இருக்​கி​றது.​ கட​லூர் மாவட்ட நிர்​வா​கத்​தின் ஒப்​பு​த​லு​டன் இந்​தத் தடுப்​பணை,​​ புதுவை அர​சால் ரூ.12 கோடி​யில் கட்​டப்​ப​டு​கி​றது.​ ​க​ட​லூர்-​ கும்​தா​மேடு இடையே 254 மீட்​டர் நீளத்​தில் 5 அடி உய​ரத்​தில்,​​ இந்​தத் தடுப்​பணை கட்​டப்​ப​டு​கி​றது.​ கட​லூர்-​ கும்​தா​மேடு இடையே பெண்ணை ஆற்​றின் குறுக்கே இரு​மா​நில மக்​கள் பயன்​ப​டுத்​தும் பால​மா​க​வும் இது அமை​யும்.​ ​த​டுப்​பணை கட்டி முடிக்​கப்​பட்ட பின்,​​ கடல் நீர் உள்​பு​கு​வது பெரு​ம​ள​வுக்​குத் தடுக்​கப்​ப​டும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ஆண்​டின் பெரும்​ப​குதி நாள்​கள்,​​ ​ தடுப்​ப​ணை​யில் இருந்து ஆற்​றில் குறைந்த பட்​சம் ஒரு கி.மீ.​ தூரத்​துக்கு ​ தண்​ணீர் தேங்கி நிற்​க​வும் வாய்ப்பு உள்​ளது.​ ​ இத​னால் இரு மாநி​லங்​க​ளை​யும் சேர்ந்த 5 ஆயி​ரம் ஏக்​கர் விளை நிலங்​கள் உவர் நீரில் இருந்து காப்​பாற்​றப்​ப​டும் என்​றும் எதிர்​பார்க்​கப்​ப​டு​கி​றது.​ ​பு​துவை அரசு இந்​தத் தடுப்​ப​ணை​யைக் கட்​டு​வது போல்,​​ தமி​ழக அர​சும் ​ பெண்ணை ஆற்​றில் மேலும் சில இடங்​க​ளில் தடுப்​ப​ணை​க​ளைக் கட்ட வேண்​டும்.​ அத​னால் கடல் நீர் உள்​பு​கு​வது தடுக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ பெண்ணை ஆற்​றில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்டு ஆண்​டு​தோ​றும் வீணா​கக் கட​லில் கலந்​து​கொண்டு இருக்​கும் நீர்,​​ தடுப்​ப​ணை​க​ளில் தேக்கி வைக்​கப்​பட்டு,​​ இப்​ப​கு​தி​க​ளில் நிலத்​தடி நீர் மட்​டம் உயர ஏது​வாக இருக்​கும் என்​றும் எம்​எல்ஏ அய்​யப்​பன் தெரி​வித்​தார்.

காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?


வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நகரப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் அத்தியாவசியமானதாகும். அரசே இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கி வருவதால் கிராமப்பகுதியில் காஸ் இணைப்பு அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில் விறகு மூலம் சமையல் செய்து வந்த கிராம மக்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமைக்க துவங்கியுள்ளனர். இதனால் பொதுவாக சமையல்காசிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாடை சமாளிக்க காஸ் ஒரு சிலிண்டர் வினியோகம் செய்த தேதியிலிருந்து 21 நாள் கழித்துதான் ஏஜென்சியில் மீண்டும் காஸ் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் ஏஜென்சியில் பதிவு செய்தவுடன் சிலிண்டர் வழங்குவதில்லை.
இதனால் மக்கள் சிலிண்டர் வருகையை எதிர்நோக்கி காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை லாவகமாக பயன்படுத்தி சிலிண்டர் வினியோகிப்பவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசு நிர்ணய விலையான 321.40 ரூபாய்க்கு பதிலாக 337 ரூபாயும், கிராம பகுதிகளில் 347 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே வீடுகளுக்கு வினியோகிப்படும் காஸ் சிலிண்டருக்கு 5 ரூபாய் "டிப்ஸ்' கேட்பது வழக்கம். இதுவே தற்போது நிர்ணய தொகையை போன்று ஒவ்வொரு சிலிண்டருக்கும் கூடுதல் தொகையாக 15, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையில் ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதா, அல்லது வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கா என்பது புரியவில்லை. இதனை வரைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா : அரசு மருத்துவமனைகளில் கூட்டம்


பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் சிக்குன் குனியா நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

                                                             
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பருவநிலை திடீர், திடீரென மாறுவதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் சிக்குன் குனியா நோய் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவதால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.
சிக்குன்குனியா நோய் தாக்குதலால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசி மற்றும் மருந்துகளுக்கே கட்டுப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக மூவாயிரம் புறநோயாளிகள் வருவார்கள். ஆனால் கடந்த 10 நாளாக தினசரி 4,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதேபோன்று சிதம்பரத்தில் 2,500 பேரும், விருத்தாசலத்தில் 1,500 பேரும், குறிஞ்சிப் பாடியில் 650 ருலிருந்து 1000 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட அரசுபொது மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் கூறியதாவது:

வழக்கம்போல் வைரஸ், சளி, இருமல், டைபாய்டு காய்ச்சலுடன் சிக்குன் குனியா நோய் தாக்குதல் உள்ளது. மழை விட்டு தேங்கும் சுத்தமான தண்ணீரில் உருவாகும்"ஏஜிடி' வகை கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இதனால் மூட்டுகளில் சவ்வுகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படும். பாதங்களில் வீக்கம் காணப்படும்.
இந்த வகை கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கொசுக்கள் பகலிலும் கடிக்கும் என்பதால் அலட்சியம் செய்யாமல் உடல் முழுவதும் கவர் செய்யும் விதமான உடைகளை அணிய வேண்டும். வீடுகளில் கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.
குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்காக உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தண்ணீரீல் 30 எம்.எல்., அளவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் இந்த வகை கொசு உருவாகாது.
   குடிப்பதற்கும் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ள தொட்டிகளில் இதை கண்டிப்பாக கலக்கக்கூடாது. இதற்கென தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. காய்ச்சல் மற்றும் வலிக்கு டாக்டர் பரிந்துரை செய்யும் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் போதுமானது. நோய் குணமாகி 10 அல்லது 15 நாட்களுக்கு உடன் வலி மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும். இதனால் அச்சம் அடையத் தேவையில்லை.அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தீவிர சிகிச்சையால் மாவட்டத்தில் பல இடங்களில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூன்று மாதத்திற்கு தேவையான நாய்க்கடி ஊசி 10 லட்சம் மதிப்பிலும், 25 லட்சம் மதிப்பில் மற்ற நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. மற்ற தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவையான அளவிற்கு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கு பணி நடந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்கள், வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.பெயர்களில் திருத்தம், நீக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டுப்போடத் தகுதியானவர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், பணியாளர்கள் அதைப் பதிவு செய்து வந்து, கணினியில் பதிவு செய்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களுக்குப் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான படிவம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் கடலூர் அருகே பாதிரிக்குப்பம் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை தணிக்கை செய்தார்.

இனிய புத்தாண்டு, பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்



ஆறுகளின் குறுக்கே தடுப்பு சுவர் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு கூட்டம் கடலூரில் நடந்தது. தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மருதவாணன், இணைச்செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் புருஷோத்தமன், சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுனாமி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தர வேண்டும். சுனாமி தகவல் மையம் நவீன வசதிகளுடன் கடற்கரையில் உருவாக்கப்படவேண்டும். புதிதாக கடலில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எதிர்கால திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சுனாமி பாதித்த மாணவர்கள் ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி வரை ஒரே இடத்தில் படிக்கும் வகையில் பல்கலைகழக அந்தஸ்துடன் கல்வி நிலையம் ஏற்படுத்த வேண்டும். சுனாமியால் உயிர் நீத்தவர்களின் நினைவாக மிகப்பெரிய நினைவுச்சின்னம் கட லூரில் அமைக்கப்பட வேண்டும். சுனாமி நீர் கெடிலம், பெண்ணையாற்றின் வழியாக சுமார் 7 கி.மீ தூரம் வரையிலும் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் இவ்வாறு ஏற்படாமல் இருக்க ஆறுகளின் குறுக்கே தடுப்புசுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பச்சையாங்குப்பம் - துறைமுகம் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்

கடலூர் துறைமுகத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடலூர் துறைமுகம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு முதல் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதனால் துறைமுகத்தில் 14 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, சுற்று சுவர் மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைத்து மேம்படுத்தப் பட்டது. ஆனால் துறைமுகச்சாலை என அழைக்கப்படும் பச்சையாங்குப்பம்-துறைமுகம் சாலை பல ஆண்டாக பராமரிப்பின்றி உள்ளதால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்றநிலையில் உள்ளது. இரவில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சற்றுகவனக்குறைவு ஏற்பட்டாலும் பள்ளத்தில் விழ வேண்டியுள்ளது.கடந்த மாதம் பெய்த மழையினால் சாலை மிகவும் மோசமானது.

இதனால் சாலையின் பல இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. தற்போது மீன்பிடி துறைமுகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இருப்பதால் இந்த சாலையை துறைமுக பொறுப்பில் இருந்து தற்போது நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகராட்சியாவது இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் மூன்றாண்டுக்கு பின் சரக்கு ரயில் வெள்ளோட்டம்

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று வெள்ளோட் டம் விடப்பட்டது.

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. முதல் கட்டமாக சீர்காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ., தூரம் பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜன., 28ம் தேதி முதல், சரக்கு ரயில்கள் இயங்கி வருகிறது.
ரண்டாம் கட்டமாக 48 கி.மீ., கடலூர் - விழுப்புரம் பாதை பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி, கடலூர் - விழுப்புரம் ரயில்வே பாதையில், இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.மூன்றாம் கட்டமாக கடலூர் - சிதம்பரம் வரையிலான பாதை, பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து, விழுப்புரத்திலிருந்து - மயிலாடுதுறைக்கு நேற்று காலை 7.40 மணிக்கு 3,632 டன் அரிசி ஏற்றிய, 41 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்றும், அதே போல் காலை 7.35 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு 3,630 டன் சர்க்கரை ஏற்றிய 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலும் வெள்ளோட்டமாகப் புறப்பட்டன.

இரண்டு ரயில்களும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் செல்லவும், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் 20 முதல் 30 கி.மீ., வேகத்திலும், செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சரக்குரயில் மதியம் 2 மணிக்கு மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயில் 1.45 மணிக்கும் விழுப்புரத்தையும் சென்றடைந்தன.ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு சோதனை செய்து, "பயணிகள் ரயில்கள் இயக்கப்படலாம்' என தரச்சான்று அளித்தவுடன், ரயில்கள் இயங்கும். இன்னும் முழுமை பெறாமல் உள்ள பணிகள் முடிவடைந்து, சோதனை செய்து தரச்சான்று வழங்க மூன்று முதல் ஐந்து மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

தாமதத்தை மறைக்க வெள்ளோட்டம் :சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டாலும், பணிகள் முழுமையாக முடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் "பாயின்ட்'களை, ஊழியர்களே இயக்கினர். "கேட்'கள் முழுமையாக மூட முடியாமல், ஸ்டேஷனில் பணிபுரிபவர்கள் கேட் அருகே வந்து, சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, ரயிலை அனுப்பி வைத்தனர். பணி துவங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆவதால், காலதாமதத்தை மறைக்க, அவசர அவசரமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.சிக்னல்கள் வேலை செய்யாத பட்சத்திலும், எந்த நேரத்தில் ரயில் வரும் என தெரியாத நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கும் போதிலும் விபத்துகள் நேர வாய்ப்புகள் உள்ளது.

பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில், "லூப் லைன்' பணிகளே நிறைவடையாத நிலையில் உள்ளது.ஆர்.வி.என்.எல்., நிறுவனம் பணிகளை முழுமையாக முடித்து, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகே, பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்காக கிராமங்களில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்


பொங்கல் பண்டிகைக்காக மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால்,  இன்றைய விஞ்ஞான உலகில் நகர பகுதிகளில் சம்பிரதாய பண்டிகையாக மாறியுள்ளது. காஸ் அடுப்பில் சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களில் பொங்கல் வைத்து வருகின்றனர். ஆனால் நாட்டின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களில் இன்றைக்கும் பாரம்பரியத்தையும், கலாசாரங்களை மறக்காமல் பொங்கல் மற்றும் மாட்டு
ப்பொங்கலை  வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதில் முதல்நாள் வீட்டுவாசல் அல்லது தோட்டங்களில் புதிய அடுப்பில் பெரிய மண்பானைகள் வைத்து குடும்பத்தினருடன் கூடி பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுகின்றனர். மண்பானை, சட்டி மற்றும் அடுப்பு தேவை அதிகம் உள்ளதால் கிராமங்களில் மண்பானை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பானைகளின் அளவிற்கு ஏற்ப 20 முதல் 80 ரூபாய் வரை விலை இருக்கும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில் பொங்கல் பண்டிகையினால் தற்போது சூடுபிடித்துள்ளது.

கடலூர் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்! : குறுகிய தூரத்தை கடக்க 4 சிக்னல்கள்


கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்கு பார்வையோடு புறவழிச் சாலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதாலும், ஒரே இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டம் லாரன்ஸ் ரோடில் குவிகின்றன. பஸ் நிலையம் பின்பகுதியில் ரயில்வே மேம்பாலம் திறந்துவிடப்பட்டாலும் மக்கள் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தற் போது எதிர்வரும் பொங் கல் பண்டிகையின்போது ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அதோ என இழுத் துக் கொண்டு வரும் சுரங்கப்பாதைப் பணியும் துவங்குவதற்கான சாத்தியகூறுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு ரயில் போக்குவரத்து துவங்கப்படுமாயின் ரயில்வே கேட் மூடி திறக்கும்போது "டிராபிக் ஜாம்'  தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஒரு சில வியாபாரிகள் சுயநல நோக்கத்திற்காக எல்லா திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு லாரன்ஸ் ரோடில் மக்கள் கூட்டத்தை தக்கவைத்துக் கொண்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் 2 ஆக பிரிக்கும் எண்ணம் கூட கைவிடப்பட்டது.
ஏற்கனவே லாரன்ஸ் ரோடில் வாகனங்கள் நிறுத்தவும், பிளாட்பாரத்தில் நடந்து செல்லவும்  மக்கள் படாதபாடு படும் நிலையில் ரயில் வருகையால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனம் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தை கடக்க பிள்ளையார்கோவில், போஸ்ட் ஆபீஸ், உட்லண்ட்ஸ், அண்ணாபாலம் ஆகிய சிக் னலை கடக்க வேண்டியுள்ளது. "பீக் அவரில்' வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது.
கடலூர் சிப்காட்டில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கெம்ப்ளாஸ்ட், துவங்கப்படவுள்ள நாகர் ஜூனா, பவர்பிளான்ட் போன்ற கம்பெனிகள் விரைவில் கால்பதிக்கப்படவுள்ளன.  ஐயாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய இக்கம்பெனிகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை சாலை வழியாகத்தான் கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல வேண்டும். அதற்கு தக்க சாலை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
சாதாரணமாக சிறிய நகரங்களில் கூட புறவழிச்சாலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்காலகட்டத் தில் கடலூர் நகருக்கு புறவழிச் சாலை இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சிதம்பரம், சீர்காழி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் போன்ற நகரங்களில் புறவழிச்சாலைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் நகருக்கு இதுவரை புறவழிச்சாலை திட்டத்தை துவங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
செம்மண்டலம் பகுதியில் பிரியும் சாலை கம்மியம்பேட்டை பாலம் கட்டப்பட்டும் சாலை பணிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. எனவே திருப்பாபுலியூர் ரயில்வே மேம்பாலம் எதிரெ உள்ள சாலையில் துவங்கி நத்தவெளி சாலை அருகே ஒரு புதிய புறவழிச்சாலை அமைக்க அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி முயற்சி மேற்கொண் டார். அந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் கடலூர் நகருக்குள் வராமலேயே வாகனங்கள் கடலூரை கடக்க முடியும்.
 அண்மையில் மேல்மருவத்தூர் பங்காருஅடிகளார் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதில் பல மணிநேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.  எனவே கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து நிறைவேற்றிட அதிகாரிகள் இப்போதே முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள். கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை.
 அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார் இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்
. 1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப்
போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" .(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞளசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம். பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால்
 இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா? கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு.
பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.

சுனாமி 5ம் ஆண்டு நினைவுநாள் கடற்கரையோர கிராமங்களில் கண்ணீர் அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் சுனாமி 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 16 கடற்கரை கிராமங்களில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேவனாம்பட்டினத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் ஆட்சியர் சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட வருவாய் அலு வலர் நடராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மீனவர் பேரவை, மாணவர்கள் பொது நல சேவை மையத்தின் சார்பில் தனித்தனியாக அமைதி பேரணி நடந்தது. அழகிரி எம்பி, ஐயப்பன் எம்எல்ஏ நகர்மன்ற தலை வர் தங்கராசு, மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழக னார், நகர்மன்ற துணை தலைவர் தாமரைசெல்வன், பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், மாணவர் அமைப் பின் தலைவர் ராஜா, செயலாளர் வினோத் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ& மாணவிகள் கலந்து கொண்டனர்.
அன்னை தெரசா பொது பொதுநல சேவை இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேராசிரியர் குழந்தைவேலனார், ஆசிரியர் ராஜன், ராஜேஷ், சண் முகம், ஜேம்ஸ், ரஞ்சித் குமார், பிரேமா, கலையரசி, சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிங்காரவேலர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுபாஷ் தலைமை யில் தேவனாம்பட்டினத்தில் உள்ள நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் ரகு, மாநில துணை தலைவர் தினகரன், மாநில துணை பொதுசெயலாளர் தாமோ தரன், மண்டல அமைப்பாளர் தேவராஜ் கலந்து கொண்டனர்.
விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் அமைதி ஊர்வலங்கள் நடந்தது.
இது போன்று துறை முகம், சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளையில் உள்ள பில்லுமேடு கிராமம், தோணித்துறை அருகே அன்னன் கோயில், மாதா கோயில், வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட 16 கடற்கரை கிராமங்களில் உள்ள நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

ஆறுகளின் குறுக்கே தடுப்பு சுவர் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு கூட்டம் கடலூரில் நடந்தது.
தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மருதவாணன், இணைச்செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் புருஷோத்தமன், சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுனாமி குடியிருப்பு
களில் அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தர வேண்டும். சுனாமி தகவல் மையம் நவீன வசதிகளு டன் கடற்கரையில் உருவாக்கப்படவேண்டும். புதிதாக கடலில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எதிர்கால திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். சுனாமி பாதித்த மாணவர்கள் ஆரம்ப பள்ளி முதல் கல் லூரி வரை ஒரே இடத்தில் படிக்கும் வகையில் பல் கலை கழக அந்தஸ்துடன் கல்வி நிலையம் ஏற்படுத்த வேண்டும். சுனாமியால் உயிர் நீத்தவர்களின் நினைவாக மிகப்பெரிய நினைவுச்சின்னம் கட லூரில் அமைக்கப்பட வேண்டும்.
சுனாமி நீர் கெடிலம், பெண்ணையாற்றின் வழியாக சுமார் 7 கி.மீ தூரம் வரையிலும் உள்ளே சென்று பாதிப்பை ஏற்
படுத்தியது. மீண்டும் இவ்வாறு ஏற்படாமல் இருக்க ஆறுகளின் குறுக்கே தடுப்புசுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்னும் 40 ஆண்டுகளில் துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் : நெய்வேலி பேராசிரியர் கருத்து

நெய்வேலி புதுநகர், 14-வது வட்டம் ஜவகர் அறிவியல் கல்லூரியில், குடிமக்கள், நுகர்வோர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் இணைந்து “உலக வெப்பமயமாதல்” விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவே கானந்தன் வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியரும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்கினார். உலக சுற்றுப் புறச்சூழல் துறை பேராசிரியர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

இன்றைய தினம் உலக நாடுகள் அனைத்தும் உலக வெப்ப மயமாகி வருவதை எண்ணி திகிலடைந்த வண்ணம் உள்ளனர். பல பனிப்பிரதேச நகரங்கள் உலககெங்கும் உலக வெப்ப மயமாவதால் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து வருகிறது.

இதேபோல் நீடித்தால் இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவில் சென்னை, கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு துறைமுக நகரங்கள் நீரில் மூழ்கி இருந்த இடமே தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

எனவே சுற்றுப்புற சூழழை பாதுகாத்து உலக வெப்பமயமாதலை எதிர்த்து போராட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இதை உணர்ந்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் முருகவேல் பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பேராசிரியர் பதில் அளித்து விளக்கம் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் விதவைகள்-ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் விதவைகள், ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெறவிண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம் மற்றும் இந்திராகாந்தி தேசியஉடல் ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசால்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 40 முதல் 64 வயதுடைய விதகைளும் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 முதல் 64 வரை வயதுடைய 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் உடல் ஊனமுள்ளவர்களும்ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

எனவே உரிய விண்ணப்பத்தினை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளசமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரிடம் வருகிற 9-ந் தேதிக்குள்நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்