கோரிக்கை பதிவு

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடலூரில் பாதாள சாக் கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு வரையிலும், திருப்பாதிரிப்புலியூர் பிள்ளையார் கோவில் நான்கு முனை சந்திப்பு முதல் சுப்புராய செட்டி தெரு, சங்கரநாயுடு தெரு பெருமாள் கோவில் வரை குழாய் பதிக்கும் பணி மற்றும் வீடுகளுக்கு இணைப்பு குழாய் பொருத் தும் பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இப் பணியை விரைந்து முடிக்க வசதியாக போக்குவரத்தை மாற்று வழியில் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் கடலூர் டவுன் ஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், டி.எஸ்.பி., ஸ்டாலின், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ் சாலை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும், வர்த் தக சங்க நிர்வாகிகள் மற் றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்

மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடை யாள அட்டை, வங்கி பாஸ் புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண் ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.  பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:  நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.  ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ்  நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.  நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எப்​போது தெரி​யும்?

பள்​ளிக் கல்​விக் கட்​டண வசூல் ஒழுங்​கு​மு​றைச் சட்​டம் செல்​லும் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்கி பத்து நாள்​க​ளுக்கு மேலா​கி​றது.​ ஆனால்,​​ பள்​ளி​க​ளுக்கு எத்​த​கைய கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது என்​பது பற்றி,​​ தமி​ழக அரசு இது​வரை வெளிப்​ப​டை​யாக எதை​யும் பேச​வில்லை.​ ஒவ்​வொரு பள்​ளிக்​கும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு என்​பது தெரி​யா​மல் அவ​திப்​ப​டு​வது வழக்​கம்​போல பெற்​றோர்​கள் மட்​டுமே!​பள்​ளிக் கட்​ட​ணங்​கள் மிக அதி​க​மாக உள்​ளன என்று மக்​கள் தாங்​க​மாட்​டா​மல் புலம்​பி​ய​தால்​தான் அரசு இந்​தப் பிரச்​னை​யில் ஆர்​வம் காட்​டி​யது.​ உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதி​பதி கோவிந்​த​ரா​ஜன் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டது.​ தமிழ்​நாடு பள்​ளி​கள் ​(கட்​டண வசூல் ஒழுங்​கு​முறை)​ சட்​டம் 2009 கொண்​டு​வ​ரப்​பட்​டது.​ இந்​தச் சட்​டத்​துக்கு எதி​ரா​கத் தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் தொடுத்த வழக்​கில்,​​ இந்​தச் சட்​டம் செல்​லும் என்று தலைமை நீதி​பதி எச்.எல்.​ கோகலே,​​ நீதி​பதி கே.கே.​ சசி​த​ரன் ஆகி​யோர் தீர்ப்பு வழங்​கி​னர்.​ தமி​ழக அர​சுக்கு இதை​விட சாத​க​மான தீர்ப்பு வேறு ஏதும் கிடை​யாது.​ ஆனா​லும்,​​ இது​வரை அரசு எந்த அறி​விப்​பை​யும் செய்​ய​வில்லை.​அரசு எந்த அறி​விப்​பும் செய்​ய​வில்லை என்​ப​தற்​காக,​​ தனி​யார் பள்​ளி​கள் சும்மா இருந்​து​வி​ட​வில்லை.​ அவர்​கள் தங்​கள் பள்​ளி​யில் மாண​வர்​க​ளைச் சேர்த்​துக் கொண்​டு​தான் இருக்​கி​றார்​கள்.​ ஆனால் இந்த மாண​வர் சேர்க்கை சின்ன நோட்​டுப் புத்​த​கத்​தி​லும்,​​ வெறும் துண்​டுச் சீட்​டி​லு​மாக நடந்து கொண்​டி​ருக்​கி​றது.​ சில பள்​ளி​கள் கட்​ட​ணங்​க​ளை​யும் வசூ​லித்​து​விட்​டன.​ சில பள்​ளி​கள் மாண​வர் சேர்க்கை மட்​டும் நடத்​து​கின்​றன.​ கட்​ட​ணங்​க​ளைப் பிறகு சொல்​கி​றோம் என்று கூறு​கின்​றன.​ இத்​தனை நடை​முறை ஊழல்​க​ளுக்​கும் கார​ணம்-​ இன்​ன​மும் அரசு தான் நிர்​ண​யித்​துள்ள கட்​டண விகி​தத்தை வெளிப்​ப​டை​யாக அறி​விக்​கா​மல் இருப்​ப​து​தான்.​இந்​தச் சட்​டத்​தில்,​​ மாண​வர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பங்​களை தனி​யார் பள்​ளி​கள் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதிக்​குள் வழங்​கி​விட வேண்​டும் என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ள​தால்,​​ தனி​யார் பள்​ளி​கள் தங்​கள் விண்​ணப்​பங்​களை விற்​பனை செய்​ய​வில்​லையே தவிர,​​ மாண​வர் சேர்க்​கையை நடத்​திக் கொண்டே இருக்​கின்​றன.​ பெற்​றோர்​க​ளும்,​​ முந்​திக்​கொண்டு குழந்​தை​க​ளைச் சேர்க்​கா​மல் அரசு அறி​விப்​புக்​கா​கக் காத்​தி​ருந்​தால்,​​ நம் குழந்​தைக்கு இடம் கிடைக்​கா​மல் போய்​வி​டும் என்ற பயத்​தின் கார​ண​மாக இந்​தப் பள்​ளி​கள் சொல்​லும் அனைத்​துக்​கும் கட்​டுப்​பட்டு,​​ எந்த ஆதா​ர​மும் இல்​லா​மல் நம்​பிக்​கை​யின் அடிப்​ப​டை​யில் பணத்​தைக் கொடுத்து அனு​ம​தியை உறு​திப்​ப​டுத்​திக் கொள்​கி​றார்​கள்.​சென்ற ஆண்டு ஜூலை மாதம்,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து தனி​யார் பள்​ளி​க​ளுக்​கும் அரசு ஒரு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யது.​ 2008-09-ம் ஆண்​டு​க​ளில் வசூ​லித்த கட்​ட​ணம்,​​ சிறப்​புக் கட்​ட​ணம் மற்​றும் வரவு செல​வுக் கணக்​கு​கள் ஆகி​ய​வற்றை மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று கேட்​டி​ருந்​தது.​ ஆனால்,​​ இந்த நட​வ​டிக்​கையை எதிர்த்து,​​ தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் வழக்​குத் தொடுத்​த​து​டன்,​​ வழக்கு முடி​யும்​வரை நமது வரவு செல​வுக் கணக்​கு​களை சமர்ப்​பிக்க வேண்​டிய அவ​சி​ய​மில்லை என்ற முடி​வை​யும் எடுத்​த​தா​கத் தெரி​கி​றது.​ ​இந்த வழக்​கில் அரசு கொண்​டு​வந்​துள்ள சட்​டம் செல்​லும் என்று தீர்ப்பு வரு​வ​தற்கு ஓராண்டு காலம் ஆன நிலை​யில்,​​ மெட்​ரி​கு​லே​ஷன் பள்ளி ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் என்ன செய்து கொண்​டி​ருந்​தது?​ அந்​தந்​தப் பள்​ளி​க​ளில் படிக்​கும் குழந்​தை​க​ளின் பெற்​றோ​ரி​டம் தாங்​கள் செலுத்​திய கட்​டண விவ​ரங்​க​ளின் நகலை அனுப்பி வைக்​கும்​படி கேட்​டி​ருந்​தாலே போதுமே,​​ கொட்​டித் தீர்த்​தி​ருப்​பார்​களே!​ ​கல் ​வித் துறை ஏற்​கெ​னவே இத்​த​க​வல்​கள் அனைத்​தை​யும் பெற்று,​​ ஒவ்​வொரு பள்​ளி​யை​யும் அதன் வச​தி​க​ளுக்கு ஏற்ப தரம் பிரித்து முடித்​தி​ருந்​தி​ருந்​தால்,​​ இப்​போது வெளிப்​ப​டை​யாக கட்​டண விவ​ரங்​களை வகுப்பு வாரி​யாக அறி​விக்க வேண்​டி​ய​து​தானே.​ தமிழ்​நாட்​டில் மாவட்ட வாரி​யாக எத்​தனை தனி​யார் பள்​ளி​கள் உள்​ளன,​​ இவை எந்த அடிப்​ப​டை​யில் ஏ,​​ பி,​​ சி,​​ என தரம் பிரிக்​கப்​பட்​டன,​​ இவற்​றுக்​கான கல்​விக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ சிறப்​புக் கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ என்​பதை ஒட்​டு​மொத்​த​மாக இணை​ய​த​ளத்​தில் வெளி​யிட்​டால்,​​ பெற்​றோர்​கள் அனை​வ​ருமே பார்த்து அறிந்​து​கொள்ள முடி​யுமே!​ அரசு ஏன் இதில் இன்​ன​மும் மெüனம் காக்க வேண்​டும்.​மெட்​ரி​கு​லே​ஷன் பள்​ளி​க​ளில் எல்.கே.ஜி.​ மாண​வர் சேர்க்கை மற்​றும் புத்​த​கம் ரூ.​ 445,​ யு.கே.ஜி.​ ரூ.​ 500,​ முதல் வகுப்பு ரூ.​ 655 என ஐந்​தாம் வகுப்பு வரை கட்​ட​ணம் நிர்​ண​யித்து,​​ பள்​ளி​க​ளுக்கு சுற்​ற​றிக்கை அனுப்​பி​யுள்​ள​தா​கக் கல்​வித்​துறை வட்​டா​ரங்​கள் கூறி​னா​லும் இதை ஏன் மக்​கள் அறிந்​து​கொள்​ளும்​படி வெளிப்​ப​டை​யா​கத் தெரி​விக்​க​வில்லை.​1973-ல் இயற்​றப்​பட்ட தனி​யார் பள்ளி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் பிரிவு 32-ன் படி,​​ எந்த ஒரு தனி​யார் பள்​ளி​யும் தகு​தி​வாய்ந்த அதி​காரி குறிப்​பிட்​டுள்ள கட்​ட​ணம் தவிர,​​ வேறு எந்​தக் கட்​ட​ண​மும் வசூ​லிக்​கக்​கூ​டாது என்று தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது என்​பதை நீதி​ப​தி​கள் தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்​ள​னர்.​ அப்​ப​டி​யா​னால்,​​ இத்​தனை ஆண்​டு​க​ளாக கல்​வித் துறை அதி​கா​ரி​கள் ஏன் மெüன​மாக இந்த கல்​விக் கட்​ட​ணக் கொள்​ளையை வேடிக்கை பார்த்​துக் கொண்​டி​ருந்​தார்​கள்?​கல்​லூ​ரி​கள் விவ​கா​ரத்​தி​லும் இதே மெüனம்​தான் நீடிக்​கி​றது.​ அதி​கக் கட்​ட​ணம்,​​ நன்​கொடை போன்ற முறை​கே​டு​க​ளில் ஈடு​பட்​ட​தாக,​​ கோவை​யைச் சேர்ந்த ஒரு கல்​லூரி மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று அமைச்​சர் பொன்​முடி அறி​வித்து ஓராண்டு ஆகப் போகி​றது.​ ஆனால் அந்​தக் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது என்​பது யாருக்​குமே தெரி​யாது.​சென்ற ஆண்டு பல பொறி​யி​யல் கல்​லூ​ரி​க​ளில் அரசு அறி​வித்த குழு நேரில் சென்று பல்​வேறு புகார்​களை விசா​ரித்​தது.​ சில கல்​லூ​ரி​கள் அலு​வ​ல​கங்​க​ளைப் பூட்​டிக்​கொண்டு அலட்​சி​யப்​ப​டுத்​தின.​ ஆனால் எந்​தப் பொறி​யி​யல் கல்​லூரி மீது என்ன நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது.​ அந்​தக் கல்​லூ​ரி​கள் தற்​போது நடை​பெ​ற​வுள்ள கலந்​தாய்​வுக்கு தகு​தி​யா​ன​வையா இல்​லையா?​ இன்​னும் அறி​விப்பு இல்லை.​ஒவ்​வொரு தனி​யார் பள்​ளிக்​கும் அரசு நிர்​ண​யித்​துள்ள கட்​ட​ணம் எவ்​வ​ளவு?​ முறை​கேடு செய்த பொறி​யி​யல் கல்​லூ​ரி​கள் மீது என்ன நட​வ​டிக்கை?​ கல்​வி​யாண்டு தொடங்​க​வுள்ள நிலை​யில் இப்​போது சொல்​லா​விட்​டால்,​​ வேறு எப்​போது சொல்​வார்​கள்!

பிச்சாவரத்தில் ரூ.2 கோடி வருவாய்

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அரணாக இக்காடுகள் அமைந்துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில் 
6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது. வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் 
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சமீபத் தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர் காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் நிர்மல்சன் இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க இங்கு ஆய்வு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏப்ரல் முதல் மார்ச் வரை வெளிநாட்டினர் மற்றும் இந்தியர் என பிச்சாவரம் வந்த சுற்றுலா பயணிகளும், அதனால் கிடைத்த வருவாயும் வருமாறு: 2006-07ல் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளால் 28 லட்சம் ரூபாயும், 2007-08ல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பயணிகளால் 31 லட்ச மும், 2008 -09 ஒருலட்சத்து 42 ஆயிரம் பயணிகளால் 60 லட்சமும், 2009-10 ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் 
பயணிகளால் 85 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே நான்கு லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிச்சாவரம் வன சுற்றுலா மையம்தங்கும் இடம் அதிகரிக்குமா அரசு?

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வரும் வெளிநாட்டினர் தங்க, வசதியான இடம் இல்லாததால், அவர்களின் வருகை குறைகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது. 1,358 எக்டர் பரப்பில் சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன.

காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சமீபத்தில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே உள்ளிட்டோர், காடுகளை பார்த்து வியந்து சென்றனர். மேற்கு வங்க துணை முதல்வர் 
நிர்மல் சன், இப்பகுதி வனங்களை போல் மேற்கு வங்கத்தில் அமைக்க, இங்கு ஆய்வு செய்தார்.

பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரையிலான கடந்த ஆண்டில், 85 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டை விட 2009-10ல் வருவாய் அதிகமாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வெளிநாட்டினர் இப்பகுதியில் தங்குவதற்கான வசதி இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.

கடலூர்: மீன்பிடி ​ தடைக்காலம் தொடங்கியது

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.​ இந்தத் தடைகாலத்தில் ​ இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது.​ ​

கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப் படகுகள் சுமார் 700 உள்ளன.​ இவைகளுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது சாதாரண படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க முடியும்.​ ஏப்ரல் 15 முதல் மே கடைசி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம்.​ எனவே கடலில் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்பட இவ்வாறு மீன்பிடி தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது.


பொதுவாகவே கடல் வளம் குறைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு,​​ மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைந்து விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.​ கரையில் இருந்து 5 கி.மீ.​ தூரத்துக்குள் பெரும்பாலும் மீன்கள் கிடைப்பது இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இனி இயலாத காரியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

இந்நிலையில் இழுவை வலைகளை பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிப்பது,​​ ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடை விதிப்பதாகவே உள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:

அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் 700 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க இயலாது.​ ஆனால் இந்த இயந்திரப் படகுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கண்ணாடி இழைப் படகுகள் 2 ஆயிரம் உள்ளன.​ மீன்படித் தடைகாலத்தில் இந்த 2 ஆயிரம் படகுகளுக்கும் அவைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.

இந்த ஆண்டு பொதுவாகவே மீன்கள் கிடைப்பது மிகக்குறைவாக இருந்தது.​ புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக பூமியில் மட்டுமன்றி கடலிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.​ சீசன்கள் மாறியிருக்கின்றன.

ஒரு மாதமாகத்தான் மீன்கள் கிடைத்துக் கொண்டு இருந்தன.​ தற்போது அதிகமாக மீன்கள் கிடைக்கும் காலம்.​ இந்த நேரத்தில் தடை விதித்து இருப்பது முறையாகத் தெரியவில்லை.

கடலூர் மாவட்ட எல்லை நெடுகிலும் ஆழ்கடலில் தைவான்,​​ நார்வே,​​ பர்மா,​​ மலேசியா போன்ற வெளிநாடுகளின் மீன்பிடிக் கப்பல்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித்துக் கொண்டு இருக்கின்றன.​ அந்தக் கப்பல்களுக்கும் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்.​ இல்லையேல் தமிழக மீனர்களுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்தத் தடை,​​ பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு சாதகமாக எடுத்த முடிவாகத்தான் அமையும் என்றார்.

தீயணைப்பு மீட்ப்பு பணிகள் துறை

கடலூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள்

கடலூர் ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்களின் இன விருத்தி காலமான ஏப்ரல் 15 முதல் 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீன் வளத்தை மேம்படுத்தி மீனவர்கள் பயன்பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகால உத்தரவை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை யாக ரூ.500 வழங்கப்படும். மீனவர் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்புக்கான 668 ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 87 ஆயிரத்து 482 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சப்& காண்ட்ராக்ட் விட்டதால் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்காக மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 648 குடிநீர் பணிகளுக்காக ரூ.9 கோடியே 78 லட்சத்து 3 ஆயிரமும், நகராட்சி பகுதிகளில் 99 குடிநீர் பணிகளுக்காக ரூ.2 கோடியே 6 லட்சமும், பேரூராட்சி பகுதிகளில் 267 பணிகளுக்காக ரூ.3 கோடியே 21 லட்சத்து 14 ஆயிரம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 14 பணிகளுக்காக இதுவரை ரூ.15 கோடியே 5 லட்சத்து 17 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சரி செய்யும் விதமாக என்.எல்.சி நிர்வாகத்திடமும் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்று மாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நந்தன் நுழைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி சிதம்பரம் தெற்கு சன்னதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படம்) புதன்கிழமை நடைபெற்றது.ஏழைகள் முன்னேற்றக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் பேரவை, தமிழக சமாஜவாதி கட்சி, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி, அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி., எஸ்டி ஆசிரியர் சங்கம், மக்கள் தேசம் கட்சி, ஆதிதிராவிடர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எம்.ஏ.டி.அர்ச்சுனன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தமிழக சமாஜவாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ், வழக்கறிஞர் ப.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மக்கள் தேசம் கட்சி தலைவர் மு.ராசிக்ஃபரித் உள்ளிட்டோர் பேசினர்.

முறைப்படுத்துதல் முறையா?

சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப் பஞ்சாயத்துகளில் முறையான அனுமதி இல்லாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை, இரட்டிப்பு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு முறைப்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நியாயமாகப் பார்த்தால், இந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து, இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடுத்து அபராதம் விதிப்பதுடன், இதற்குக் காரணமான உள்ளாட்சி அமைப்பின் அதிகாரி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.தற்போது குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகூட உள்ளாட்சித் தணிக்கையிலும் பொதுத் தணிக்கை அறிக்கையிலும் தொடர்ந்து இத்தவறுகளைச் சுட்டிக்காட்டி வருவதால் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளிலும் குடிநீர்க் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கு ஏற்படும் மின்கட்டணம் ஆகியவற்றை ஒப்பீடு அடிப்படையில் தணிக்கை செய்யும்போது, உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல் அம்பலப்பட்டுப் போகிறது.உதாரணமாக, ஒரு நகராட்சியின் பதிவேட்டின்படி உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை, அவற்றின் குழாய் அளவு, குடிநீர் விநியோகிக்கப்படும் கால அளவு ஆகியவற்றைக் கொண்டு அந்த நகரின் ஒட்டுமொத்தக் குடிநீர் அளவு எட்டப்படுகிறது. இதில் நீர் கசிவுகளையும் கழித்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு அந்த நிலையத்தின் குதிரைத்திறனுக்கு ஏற்ப எத்தனை மணிநேரம் இயங்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், மின்மோட்டர் இயங்கிய கால அளவுக்கும், வெளியேற்றப்பட்ட குடிநீர் அளவுக்கும், இணைப்புப் பெற்ற வீடுகளுக்குத் தேவையான குடிநீர் அளவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் தணிக்கைத் துறையினர் தொடர்ந்து சுட்டிக்காட்டும் குறைபாடு. தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறைபாட்டை மட்டுமே பேச முடியும். ஊழல் நடைபெறும் விதத்தை விளக்க வழியில்லை. குடிநீர் ஊழல் எப்படி நடக்கிறது என்றால்,  அனுமதியில்லாத இணைப்புகள் இந்தக் குடிநீரை முறைகேடாகப் பயன்படுத்துவது ஒருபுறம். அடுத்ததாக மாநகராட்சி ஊழியர்களும் உள்ளாட்சிப் பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் முறைகேடாக லாரிகளுக்கு இத்தண்ணீரை வழங்கி, அதை வெளியே விற்று பணம் சம்பாதிப்பதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தமிழக உள்ளாட்சிகளுக்கு மின்கட்டணம் மூலம் சில  நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இழப்பை மக்கள் வரிப் பணத்திலிருந்து ஈடுகட்டிக் கொண்டிருக்கிறோம்.மின்கட்டணம் மட்டுமே இழப்பு அல்ல. இந்த முறையற்ற இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் நியாயத்துக்குப் பயந்த மனிதர்கள் அல்லர். அவர்கள் இந்தக் குடிநீரை தங்கள் உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியெடுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சொந்த வசதிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருதும்போது, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புரியும்.முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவதால் ஊழல் அதிகாரிகள் மற்றும் அடாவடி அரசியல்வாதிகளின் செயல்களை நியாயப்படுத்துகிற ஆபத்து உள்ளது. மேலும் பணம் படைத்திருந்தால் எவர் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டலாம், பிறகு முறைப்படுத்திக்கொள்ளலாம் என்பது நியாயமான வழியில் நேர்மையாக அனுமதியைப் பெறும் பொதுஜனத்தை கேலிக்குள்ளாக்குவதாக ஆகிவிடும்.இதே விதமாகத்தான் முறையான அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும், ஏன் கல்லூரிகளும்கூட இதில் விதிவிலக்கல்ல, முறையான அனுமதி பெறாமல் மாணவர்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டு, பிறகு மாணவர்களின் கண்ணீர் பேட்டியை நிர்வாகமே அரங்கேற்றி, பொதுவான பரிதாப உணர்வைத் தூண்டிவிட்டு, அந்தப் படிப்பை முறைப்படுத்துவது அல்லது அந்தப் பயிற்சிக் கல்லூரியை முறைப்படுத்துவது என்பதுதான் இதுநாள் வரை நடந்து வந்துகொண்டிருக்கிறது.வெறும் வேளாண் விளைநிலங்களை மனைகளாக்கி விற்றுவிட்டு, குடியிருப்புகள் உருவான பிறகு அதன் மனைகளை முறைப்படுத்துவது ஒரு தொழிலாகவே நடந்துகொண்டிருக்கிறது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முறையான அனுமதி பெறாமல் மாடிக் கட்டடங்கள் விருப்பம்போல கட்டப்படுகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளுக்கும், அந்த வார்டில் தொடர்புடைய அரசியல்வாதிக்கும் தெரிந்துதான் இது நடத்தப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் முறைகேடான கட்டடங்கள் நிறைந்தவுடன் முறையற்ற கட்டடங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. அல்லது நடவடிக்கை எடுத்து இடிப்பதுபோல பாவனை காட்டினால் அவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, காலத்தை நீட்டிக்கிறார்கள்.இப்படி முறையற்ற செய்கை அனைத்தையும் பணத்தால் முறைப்படுத்த முடியும் என்று அரசே ஊக்கப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. "தாட்சண்யம் தனநாசம்' என்பார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முறைப்படுத்துவதால் அரசுப் பணம்தான் வீணாகும். மீண்டும் எந்த பயமும் இல்லாமல், எப்படியும் முறைப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முறைகேடுகளை இவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளவே செய்வார்கள்.

நன்றி தினமணி
 தலையங்கம்

பொலிவிழந்த முதுநகர் காந்தி பூங்கா

கடலூர் முதுநகர் காந்திப் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.கடலூர் முதுநகர் மணிகூண்டு எதிரில் பழமையான காந்திப் பூங்கா உள்ளது. இப்பூங்கா கடந்த 2005ம் ஆண்டு பொது நிதி மூலம் 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பூங்காவிற்கு மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்துச் செல்வார்கள்.
தற்போது இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்திசிலை முற்றிலும் பொலிவிழந்துள்ளது. மின் விளக்குகள் முற்றிலும் எரியாததால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டிணம் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாதனங்களும் முற்றிலும் பழுதடைந்துள்ளன. நீரூற்றும் இயங்காததால் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த புல்தரைகளும் காய்ந்துள்ளது.கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பூங்காவிற்கு மாலை நேரங்களில் பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் பொலிவிழந்து காணப்படும் காந்தி பூங்காவை கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய் உடைப்பு கடலூருக்கு குடிநீர் தட்டுப்பாடு

திருவந்திபுரம் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடலூருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை 
நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இதற்கு எட்டு போர்வெல் மூலம் தண் ணீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், கே.கே.நகர், அண்ணா நகர் மற்றும் பத்மாவதி நகர், போலீஸ் குடியிருப்பு, தேவனாம் பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள எட்டு மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.இந்நிலையில் கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் கழிவு நீர் குழாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவந்திபுரத்திலிருந்து வரும் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் நேற்று காலை 9 மணியிலிருந்து குடிநீர் வெளியேறியது.தகவலறிந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர்கள் பகல் 2 மணி முதல் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.இந்த குடிநீர் குழாய் உடைப்பால் கடலூருக்கு முழு அளவு தண்ணீர் கிடைப்பது இரண்டு நாட்களாகும் என தெரிகிறது.

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் இழுபறி: மாற்றுப் பாதை தயார்படுத்தாததால் தாமதம்

கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை.
தற்போது வாகனங்களின் போக்குவரத்தால் கடலூர் புழுதி நகரமாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரிதமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. நெடுஞ்சாலையில் பெரிய குழாய்கள் பதிக் கும் பணி இதுவரை தொடங்கவில்லை. கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்திய பிறகுதான் சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் நகராட்சி உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.மேலும் பீச்ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் 6 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டால்தான் கழிவுநீர் இயற்கையாக சென்று சேரும். ஆனால் கடலோரப்பகுதி என்பதால் 6 மீட்டர் ஆழம் தோண்டும் போது நீர் ஊற்று ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே தற்போது ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தை மாற்றி 3.15 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய் யப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டர் மூலம் பம்ப் செய்துதான் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வடிகால் வாரியம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடித்த சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு சாலை போடுவதற்காக நகராட்சி, அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளது.
கோடை காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது.பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் இதுவரை தொடங்கப் படாமல் உள்ளன. இந்த ஆண்டாவது பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் முடிக்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்.

கடலூரில் துறைமுக பணிகள் விரைவில் துவங்கும்

கடலூரில் ரூ.1,000 கோடியில் துறைமுக பணிகள் விரைவில் தொடங்க தயார் நிலையில் உள்ளது என ஐயப்பன் எம்எல்ஏ கூறினார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதியில் அரசு நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நகர திமுக சார்பில் நடந்தது. நகர அவைத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். கடலூர் நகர்மன்ற தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். கழக பேச்சாளர் ஏகாம்பரம் பேசினார்.
கூட்டத்தில் ஐயப்பன் எம்எல்ஏ பேசும்போது, கடலூர் நகர, ஒன்றிய பகுதியில் மக்கள் நல திட்டங்களுக்கான பணிகள் அரசு சார்பில் நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம், வட்டியில்லா கடன், முது கலை வரை இலவச கல்வி என எண்ணற்ற பயன்களை மக்களுக்கு முதல்வர் வழங்கி வருகிறார். கடலூர் பகுதி மக்கள் முன்னேற்றம் காண தொழில் துறையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடிப் படையில் பல்வேறு நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் செயல்பட துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ரூ.1,000 கோடியில் துறைமுக பணிகள் அனைத்து கட்ட நிர்வாக வேலைகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளது, என்றார். கவுன்சிலர்கள் பூங்காவனம், தமிழ்மாறன், இளங்கோ, நித்யானந்தம், சிவானந்தம், ஒன்றிய கவுன்சிலர்கள் கஜேந்திரன், ரவிராஜ், மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன், ஜெயசந்திரன், சித்ராலயா ரவி, தனஞ்செயன், சிவக்குமார், ஆதிபெருமாள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
ஐயப்பன் எம்எல்ஏ தகவல்

10 ஆண்டாக செயல்படவில்லை - பாழடைந்து கிடக்கும் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையம்

கடலூரில் உள்ள மண்டல பனைப்பொருட்கள் பயிற்சி நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. பனை தொழில் மீண்டும் பொலிவு பெற தமிழக அரசு நிதி ஒதுக்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் கடற்கரை சாலையில் மண்டல பனைப்பொருள் தயாரிப்பு மற்றும் பயிற்சி நிலையம் உள்ளது. தமிழ்நாடு கதர்கிராம கைத் தொழில் வாரியத்தின் கீழ் இந்நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பயிற்சி நிலையம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒரே பனை பொருள் பயிற்சி நிலையமாக செயல்பட்டு வந்ததுள்ளது. இந்த நிலையத்தில் பனை ஓலைப்பொருட்கள், பனைநார் பொருட்கள், தூரிகைகள், பதநீர், பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து 5 பிரிவாக வகுப்பு கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையம் கதர் கிராம கைத்தொழில் வாரியத்தின் ஆதரவை கடந்த 2001ம் ஆண்டு முதல் இழந்தது. இதனால் இங்கு பணியாற்றி வந்த மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 20 இடங்களில் பனை மர அபி விருத்தி நிலையங்களின் கிளைகள் படர்ந்துள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொந்த இடங்களும், கட்டிடங்களும் இருந்தும் இந்நிலையங்களுக்கு போதிய நிதி ஆதாரமின்றி 
செயலிழந்து உள்ளது. கடலூர் மண்டல பனை பொருள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட் டில் விற்பனை நிலையங்கள் சிதம்பரம், பூம்புகார், நெய் வேலி ஆகிய இடங்களில் அமைந்துள் ளது. ஆனால் பனை பொருள் உற்பத்தியின்றி இந்த இடங்கள் மூடப்பட்டுள்ளன.
அரசு பனை யிலான தூரிகைகள், கூடைகள் பயன்படுத்த அனைத்து நக ராட்சி மற்றும் இதர துறை அலுவலகங்களுக்கு உத்தர விட வேண்டும். பனை வெல்லம் சத்துணவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மீண்டும் பனை பயிற்சி மற்றும் பொருட்கள் உற்பத்தி நிலையங்கள் தழைத்தோங்கும். தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கிராம தொழிலை அபிவிருத்தி செய்ய வழி காண வேண்டும் என பனை தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு 42 ஊராட்சிகளில் முடிந்தது : கலெக்டர்

கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட் டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட்வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

​ ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ தொடங்குகிறது.கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.​ கடலூர்,​​ விழுப்புரம்,​​ வேலூர்,​​ திருவண்ணாமலை,​​ காஞ்சிபுரம்,​​ திருவள்ளூர்,​​ சென்னை,​​ புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.சிப்பாய் நர்ஸிங் உதவியாளர்,​​ சிப்பாய் டெக்னீஷியன்,​​ சிப்பாய் பொதுப்பணி,​​ சிப்பாய் கிளர்க்,​​ சிப்பாய் வர்த்தகப் பணி,​​ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்,​​ உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.​ உதவி ரெக்ரூட்டிங் அலுவலர் கெடாவூர் தலைமையில் ஆள்கள் தேர்வுப் பணி நடக்கிறது.ஆட்சியர் பார்வையிட்டார்: ராணுவத்துக்கு ஆள்கள் சேர்க்கும் முகாம் ஏற்பாடுகளை,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார்.​ அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடப்பதால்,​​ 19-ம் தேதி வரை ​ விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.இந்த முகாமுக்கு தேர்வுக்காக தினமும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் முதல் கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்த்தல்,​​ அடுத்து உடல்திறன் தேர்வும்,​​ மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும்.இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு,​​ ஜூலை மாதத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு,​​ தகுதி அடிப்படையில் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை

மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்பு பேரவை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அப்பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.​ அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி முயற்சியால் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.அது போல அனைத்து வகையிலும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடலூரிலோ,​​ வடலூரிலோ அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும்.​ கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.​ எனவே விரைவில் கடலூர் மாவடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

கடலூர் அருகே லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு

கடலூர் அருகே கங்கணாங்குப்பத்தில் காவல்துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பயிரிடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, சிறப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பிரிவாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது.
மாவட்ட அளவில் செயல்படும் இப்பிரிவின் அலுவலகம் கடலூர் அண்ணா நகரில் தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. அனைத்து துறைகளில் நடக்கும் லஞ்சம் தொடர்பான வழக்கு களை விசாரிக்கவும், லஞ்சம் பெறுபவர்களை பிடிக்கவும் செயல்படும் இப்பிரிவிற்கு நிரந்தர கட்டிடம் அரசு சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் சம்பந்தப்பட்ட பிரிவின் அலுவலகம் மற்றும் பணியாற்றும் காவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது.
மாவட்ட அளவில் செயல்படும் இந்த அலுவலகத்திற்கு லஞ்சம் குறித்து புகார் கொடுக்க வருபவர்கள் கங்கணாங்குப்பத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்து வர இயலாது என்று சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவினர் காவல் துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறைக்கான இடத்தில் சுற்றுப்புற கிராம விவசாயிகள் சிலர் நெல் நடவு செய்து பயிரிட்டு வருகின்றனர். அரசு துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் விளைநிலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, தற்பொழுது இப்பிரிவில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர் உள்பட 17 போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் குடியிருப்பு மற்றும் அலுவலகத்திற்காக கங்கணாங்குப்பத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரிவின் முக்கியத்துவம் கருதி கடலூர் நகரிலேயே இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட காவல் துறையிடம் கோரப்பட்டுள்ளது.
இடம் ஒதுக்கீடு செய்தவுடன் கங்கணாங்குப்பம் இடம் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்பொழுது கங்கணாங்குப்பத்தில் வேலி அமைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

பள்ளி செல்லா குழந்தைகள் கடலூரில் 63 பேர் கண்டுபிடிப்பு

கடலூர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதில் 2 நாட்களில் 63 மாணவ& மாணவிகள் கண்டறியப்பட்டுள்ளனர். வரும் 15 தேதி வரை மாவட்டம் முழுவதும் 13 வட்டார வள மையபகுதியிலும் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
நாட்டில் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டாய ஆரம்ப கல்வி சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்விதிட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மாநில அரசுகளின் உதவியுடன் மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 6 வயது முதல் 14 வயது வரையுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி கடலூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 24 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து பள்ளியில் இடை நின்ற மாணவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிந்து கல்வியின் முக்கியதுவத்தை கூறி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி பணியின் துவக்க விழா நடந்தது. நேற்று முன்தினம் (7ம் தேதி) மற்றும் நேற்று (8ம் தேதி) இரண்டு நாட்களில் 91 கிராம பகுதி குடியிருப்புகள் மற்றும் 8 நகராட்சி வார்டு பகுதியில் கடலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிரிஸ்டி எமரால்ட், ஒருங்கிணைப்பாளர் அனந்தநாராயணன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி பகுதியில் 8, கிராமபுறங்களில் 55 மாணவ& மாணவி கள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட் டது.
மாவட்டம் முழுவதும் 13 ஒன்றியங்களில் இந்த கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி செல்லா குழந்தைகளின் மொத்த பட்டியலும் கணக்கிடப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணவ& மாணவிகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக அவர்களது குடும்ப சூழ்நிலையை இருப்பதாக ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாணவ& மாணவிகளையும் மீண்டும் அவர்களது குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
15ம் தேதி வரை கணக்கெடுப்பு

ரயில்வே சுரங்கப்பாதை கோரி கடலூர் பொதுநல அமைப்புகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்

கடலூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடலூர் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை. ரயில்வே மேம்பாலத் திட்டத்துடன், சுரங்கப்பாதை திட்டமும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டும் திட்டம் நிறைவேறவில்லை. வரும் 15-ம் தேதி முதல் விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்ககப்படுகிறது. எனவே ரயில்கள் இயங்கத் தொடங்கியதும் லாரன்ஸ் சாலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும். அதனால் சுரங்கப்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கடலூர் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ரயில்வே துறையில் இருந்து முறையான தகவல்கள் வெளியாகாததால் ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் முன், 6-4-2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கடலூர் பொது நல அமைப்புகள் அறிவித்து இருந்தன. ஆர்ப்பாட்டம்  நடத்துவதற்காக பஸ்கள் மற்றும் கார்களில் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 6 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறார்கள் என்று பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.

15-ம் தேதி முதல் 45 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை

வரும் 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு விசைப் படகுகள், கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. கடல்தான் இவர்களின் வாழ்வாதாரம். ஆயிரக்கணக்கான விசைப் படகுகள், சிறிய படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன.  பெரிய படகுகள் சுருக்கு வலை, இரட்டைமடி வலை, கொல்லிமடி வலை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வலைகளைப் பயன்படுத்துகின்றன. இதனால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, பெருமளவுக்கு மீன்கள் பிடிக்கப்பட்டு விடுகின்றன. எனவே கடல் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மீனவர்களுக்கு பரவலாக பல மாதங்கள் மீன் கிடைக்கவும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 15 நாள்கள் விசைப் படகுகள் மீன்பிடிக்க அரசு தடை விதிக்கிறது.  மேலும் ஏப்ரல், மே மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாள்களில் உற்பத்தியாகும் மீன் குஞ்சுகளையும் பிடித்து விட்டால், மற்ற நாள்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிடும் என்று கருதப்படுவதால் மேற்கண்ட நாள்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்குத் தடையில்லை. கடந்த 7 ஆண்டுகளாக இந்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மீன்பிடித் தடைக் காலத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலத்தில் குடும்பத்துக்கு ரூ.500 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்த நிவாரணத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார். அவர் மேலும் கூறியது: கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு முழுவதும் மீன்கள் சரியாகக் கிடைக்கவில்லை. கரையோரப் பகுதிகளில்தான் மீன்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. ஆனால் கடற்கரைகளில் பெருகிவரும் ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலில் பெருமளவுக்கு கழிவுகள் கலக்கின்றன. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் கிடைப்பது அரிதாகி, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார் சுப்புராயன்.

ரேஷன்​ கடையை முற்​றுகையிட்ட மக்கள்

தொடர்ந்து தாம​தமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர் .விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில்,​​ ​ ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.​ அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது.கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடை தொடர்ந்து,​​ தாமதமாகத் திறக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் இக்கடையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது இல்லை என்றும்,​​ பல நாள்கள் மூடியே கிட்டப்பதாகவும் பொதுக்கள் தெரிவிக்கிறார்கள்.​ துவரம்பருப்பு,​​ கோதுமைமாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள்.செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணி ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாதது குறித்து ​மக்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர்.​ ரேஷன் கடை விற்பனையாளருக்கு எதிராக சிறிது நேரம் குரல் எழுப்பினர்.​ பின்னர் விற்பனையாளர் வந்து கடையைத் திறந்தபோது,​​ அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

மாற்றிக் கட்டுவோம்

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது.​ முன்பெல்லாம் சில ஊர்களில் மட்டுமே வெயில் அதிகம் என்று பயந்த காலம் மாறி,​​ இப்போது எல்லா ஊர்களிலும் ஏறக்குறைய 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.​ கோடை வெயிலைவிடக் கொடுமை பகல்நேர மின்வெட்டு.​ அலுவலகம்,​​ வீடு எங்கே என்றாலும் உட்கார முடிவதில்லை.​ உடலும் சேர்ந்து கொதிக்கிற வேளையில்தான் நம் முன்னோர்களின் கட்டடக் கலை நினைவுக்கு வருகிறது.தமிழகத்தின் கோயில்கள்,​​ அரண்மனைகள்,​​ பழமைவாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் இந்தியச் சுற்றுச்சூழல்,​​ தட்பவெப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டப்பட்டவை.​ பத்மநாபபுரம் அரண்மனை இன்றளவும் பொறியாளர்கள் சென்று பார்த்து வியக்கும் ஒரு கட்டடமாக இருந்து வருகிறது.​ காரணம்,​​ அந்த அரண்மனைக்குள் எப்போதும்,​​ எந்தப் பருவ காலத்திலும் தட்பவெப்பம் இதமாக இருப்பதால்தான்.​ திருமலை நாயக்கர் மகாலும் அப்படிப்பட்டதே.ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட எந்தவொரு அலுவலகம் அல்லது வீட்டுக்குச் சென்றால்கூட,​​ வெளியே எத்தனை டிகிரி வெயில் இருந்தாலும்,​​ கட்டடத்துக்குள் ஒருவிதமான குளுமை எப்போதும் இருக்கும்.​ கூரையிலிருந்து 20 அடி நீளக் கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறிகள் சுழலாத போதும் இந்தக் குளுமை நீடிக்கவே செய்யும்.​ காரணம்,​​ அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அந்த அளவுக்கு உயரமாகவும்,​​ ஜன்னல்கள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தது.​ ஆனால் இன்றைய பொறியாளர்கள்,​​ வெளிநாடுகளில் உள்ள கட்டடங்களை அப்படியே ​ காப்பியடித்து இங்கு கட்டுகிறார்கள்.பத்து ஆண்டுகள் முன்புவரை குடிசைகள் கட்டுவோர்,​​ ஓலையால் கூரை வேய்ந்து,​​ சுற்றுச் சுவரை மண்ணால் கட்டினார்கள்.​ அத்தகைய வீடுகள் மழையிலும்,​​ வெயிலிலும் குளுமையாகவே இருந்தன.​ இப்போது,​​ அதே அளவில்,​​ தாட்கோ நிதியுதவியுடன் கட்டப்படும் ஆதிதிராவிடர் நலக் குடியிருப்புகளில் பகல்நேரத்தில் வேறு வழியின்றி இருந்தாக வேண்டும்.​ இரவில் கான்கிரீட் வெப்பத்தைக் கக்கும்போது,​​ இந்த ஏழைகள்,​​ வீட்டுக்கு வெளியே படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.​ கிராமங்களிலாவது வெளியே வாசலில்,​​ திண்ணையில் படுத்து உறங்க முடிகிறது.​ நகரத்தில் வசிக்கும் மக்கள் திருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே உடல் வெம்பிக் கிடக்க வேண்டியுள்ளது.​ இவ்வாறு உடல் வெம்புதல் காரணமாக,​​ நகர்வாழ் மக்களைப் பாலுணர்வு ​ சிக்கல்களில் கொண்டு சேர்க்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.​ ​பழைய காலத்துக் கட்டடங்களில் பெரும்பாலானவை கருங்கற்களால் கட்டப்பட்டவை.​ கருங்கற்கள் வெயில் சூட்டை உள்வாங்கி,​​ அதே திசையில் வெளியேற்றிவிடும்.​ கட்டடத்துக்குள் இருப்பவர்களுக்கு வெயில் தெரியாது.​ ஆனால்,​​ இன்றைய கான்கிரீட் கட்டடங்கள்,​​ வெப்பத்தை வாங்கி வீட்டுக்குள் பரவச் செய்கின்றன.​ அதைத் தணிக்க மின்விசிறி,​​ வசதியிருப்பின் ஏர்-கண்டிஷன் ஆகியவை தேவையாக இருக்கிறது.​ இதனால் மின்சாரத் தேவையும் கூடுகிறது.​ ​தற்போது கிரீன் பில்டிங் என்ற கருத்தாக்கம் பரவலாகி வருகிறது.​ இதன் நோக்கம் மின்சாரம் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடங்களை வடிவமைப்பதுதான்.​ சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டடங்களை உருவாக்குவதுதான் இதன் அடிப்படைக் ​ கருத்து.​ கட்டடத்தைச் சுற்றி மரங்களை வளர்த்துவிட்டால்,​​ அதன் மூலம் பசுமைச் சூழலை ஏற்படுத்தலாமே தவிர,​​ எரிசக்தி இல்லாத கட்டடமாக அதை மாற்ற முடியாது.​ ​மின்சாரம் மிகக் குறைவாகத் தேவைப்படும் வீடுகள்,​​ பங்களாக்கள்,​​ அலுவலகங்கள் ஆகியவற்றை வடிவமைப்பதுதான் இன்றைய அவசியத் தேவை.​ பெருநகரங்களில் உள்ள வீடுகளிலும் அலுவலகங்களிலும் பகல் நேரத்தில் எரியும் விளக்குகள்,​​ இயங்கும் குளிரூட்டு சாதனங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்து.​ இவர்கள் பகல் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தை மட்டும் கணக்கிட்டால் மின் உற்பத்தியில் பாதியை நகரங்கள் விழுங்கிக் கொண்டிருப்பதை உணரலாம்.​ இந்த மின்தேவையைப் பாதியாகக் குறைத்தாலும்கூட,​​ சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா?​ நகரங்களில் மக்கள்தொகை பல கோடியாக அதிகரித்துவிட்ட நிலையில்,​​ அனைவருக்கும் வீட்டுவசதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டடங்கள் உருவாக்கப்படும்போது,​​ இத்தகைய கிரீன் பில்டிங் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.​ இருப்பினும்கூட,​​ நமது பாரம்பரியக் கட்டடக் கலையின் நுட்பங்களைப் புரிந்துகொண்டு,​​ அதற்கேற்ப கட்டடத்தின் உட்கூரையை உயரமாக அமைப்பதும்,​​ ஜன்னல்களை அதிக எண்ணிக்கையில் வைப்பதும்,​​ சிமென்ட் பயன்பாட்டைக் குறைப்பதும்,​​ கட்டடம் எந்தத் திசையில் இருந்தாலும் எப்போதும் வீட்டுக்குள் வெளிச்சம் இருக்கும் வகையில் வடிவமைப்பதும்தான் இன்றையத் தேவை.​ ​கடந்த இரு ஆண்டுகளாக கட்டடப் பொறியாளர் படிப்புக்கு ​(சிவில் என்ஜினீயரிங்)அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.​ காரணம்,​​ உலகம் முழுவதும் பாலங்கள்,​​ புதிய கட்டடங்கள்,​​ சாலைகள் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதாலும்,​​ அதனால் வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் முந்திக்கொள்கிறார்கள்,​​ அல்லது பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தள்ளி விடுகிறார்கள்.இந்த மண்ணின் தட்பவெப்பம்,​​ சூழல் அறிந்து,​​ முன்னோர் காட்டிய வழியில்,​​ இன்றைய கட்டுமானப் பொருளைப் பயன்படுத்தும் பொறியாளர்கள் நமக்குத் தேவை.​ இப்போது படிக்கும் இந்த மாணவர்களில் 10 சதவீதம்பேரையாகிலும் மரபின் பொறியாளர்களாக இப்பல்கலைக்கழகங்கள் மாற்றும் என்றால்,​​ மக்கள் பயன்பெறுவர்,​​ நாடும் பயன்பெறும்.​

 நன்றி தினமணி
 தலையங்கம்

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட் டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு : கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் கடலூர் கலெக் டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் மற்றும் சப் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், தாசில் தார் கள், பி.டி.ஓ.,க்கள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் சந்தேகங்கள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் 'இத் திட்டம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் உள்ள 405 கிராமங்களில் நடக்கிறது. இதுவரை 47,221 வீடுகள் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. 19 கிராமங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந் துள்ளது.மக்கள் விழிப்புடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கெடுக்கும் பணிக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு விலை குறையும் வாய்ப்பு

பண்ருட்டியில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு பலாப்பழ விளைச்சல் அதிகரிப்பு மற்றும் பலாப்பழம் கூடுதல் விலை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டியில் தற்போது தினந்தோறும் நான்கு லாரிகள் அளவில் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. பண்ருட்டி பலாப்பழம் சுவையும், இனிப்பும் அதிகமாக இருப்பதால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசி வரை பலாப்பழம் விற்பனைக்கு வரும் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது ஒருகிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. 20 நாட்களுக்கு பின் தினந்தோறும் 10 லோடுகள் பலாப்பழம் வரத்துவங்கினால் பலாப்பழ விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

ரூ.71 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணி தீவிரம்

கடலூர் அருகே ரூ. 71 லட்சம் மதிப்பில் அழகியநத்தம் - மருதாடு கிராம சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
கடலூர் பகுதியில் இருந்து 15 கிராமங்களுக்கு இதன் மூலம் துரிதமான போக்குவரத்திற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற சாலைகள் பெரும்பாலும் அகலத்தில் குறைந்தும் கனரக வாகனங்கள் சிரமமான பயணத்தை ஏற்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது. இதன் நிலையை மாற்றியமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள பிரதான சாலைகளை இருவழி போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக கடலூர் ஒன்றியத்தில் தூக்கணாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தால் 
தமிழக - புதுச்சேரி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்றுள்ளன. இதுபோன்று தற்பொழுது கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் - மருதாடு சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
அழகியநத்தம் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து மருதாடு கிராமத்தில் கடலூர் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையை இணைக்கும் வகையில் இக்கிராம சாலை விரிவாக்க திட்டம் 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விரிவாக்க பணியால் 3.45 மீட்டர் அகலம் கொண்ட சாலை 1.75 மீட்டர் புதிதாக அமைக்கப்பட்டு 
5.5 மீட் டராக மாற்றப்படுகிறது.
இதன் மூலம் இருவழி போக்குவரத்திற்கு தடையில்லாமல் வாகனங்கள் பயணிக்க முடியும். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய பணி 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை விரிவாக்கத்தினால் கடலூரில் இருந்து மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், அகரம், கடுவானூர், கிருஷ்ணாபுரம், நத்தம் மற்றும் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு விரைவாக செல்லமுடியும். சாலை விரிவாக்க பணி நன்மை என்றாலும் சாலையின் ஒரத்தில் இருந்த பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
சுற்றுசூழல் கருத்தில் கொண்டு வெட்டிய மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் வைத்து மரங்களை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 கிராமங்கள் பயன்பெறும்

கடலூர் மாவட்டம்: புதிது புதிதாக முளைக்கும் குடிசைகள்

கடலூர் மாவட்டத்தில் தற்போது பல இடங்களில் குடிசை வீடுகள், புதிது புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளைக் காரை வீடுகளாக மாற்றுவதற்காக கலைஞரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மார்ச் 29-ம் தேதி குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.95 லட்சம் குடிசைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.உண்மையான குடிசை வீடுகளைக் கண்டறிய ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப் பணியாளர் என மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுக்கள் குடிசைகளை கணக்கடுக்கும் பணியை மார்ச் 29-ம் தொடங்கி நடத்தி வருகிறது. கணக்கெடுக்கும் பணிக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.29-ம் தேதி கடலூர் அருகே கன்னாரப்பேட்டை கிராமத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். குடிசைகள் கணக்கெடுக்கும் பணிகுறித்து பொதுமக்களுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லை, தகவல் முறையாகச் சென்றடையவில்லை என்பதை அப்போது ஆட்சியர் கண்டறிந்தார், எனவே கலைஞர் வீட்டுவசதித் திட்டம் குறித்து நன்றாக விளம்பரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக மார்ச் 29-ம் தேதி 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும் 379 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பின் போது குடும்ப அட்டை, மின்இணைப்பு அட்டை, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணம் (பட்டா அல்லது உரிமைப் பத்திரம்) பயனாளிகள் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் புதிது புதிதாகக் குடிசை வீடுகள் முளைக்கத் தொடங்கி உள்ளது. கடலூரை அடுத்த கோண்டூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே திடீரென 20க்கும் மேற்பட்ட குடிசைகள் போட்டப்பட்டு இருந்தன (படம்).இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அந்த இடத்தில் மருதாடு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 42 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர். கடந்த 18 ஆண்டுளுக்கு முன்பே அவர்களுக்குப் பட்டா வழங்கியும் நிலத்தை அளந்து கல் நட்டுக் கொடுக்கவில்லையாம். நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அண்மையில்தான் சாதமாகத் தீர்ப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகட்ட வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதி உடனடியாக குடிசைகளை அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் தனித்தனியாகவும் குடிசை வீடுகளைப் புதிதாகக் கட்டி வருகிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் கிராமங்களில், பல குடிசை வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள்.  இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குடிசைகள் எண்ணிக்கை உத்தேச மதிப்பீட்டுக்கும், உண்மை நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு வேகமாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 28 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். குடிசை வீடுகள் என்பதற்கு 4 ஆவணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் திடீரென உருவாகும் குடிசைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமித்துக் குடிசை அமைத்து இருப்போர் ஆகியோருக்கு இது பொருந்தாது. நெடுஞ்சாலையோரம் உள்ள குடிசைகளுக்கு புதிதாக குறியீடு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் அதிகம். எனவே கடலூர் மாவட்டத்தில் அதிக வீடுகள் கட்ட வாய்ப்பு இருக்கிறது என்றார் ஆட்சியர்.

'அகம்' நானூறு!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து, முக்கிய நகரங்களில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறது, மின்வாரிய ஒழுங்காற்றுக் குழுமம். இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும், மின்கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் சொல்லப்போகிறார்கள்.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவின்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ.4 ஆகவும், 400 யூனிட் வரை ரூ.4.25 ஆகவும், 600 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75 ஆகவும் (வணிக மின்கட்டணத்துக்கு நிகராக)  தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக் கேட்புக்குப் பிறகு இதில் சில காசுகள் மட்டுமே மாறுபடும் என்று தெரிகிறது.
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்காற்றுக் குழுமம் தொடர்ந்து வலியுறுத்தக் காரணம், மின்உற்பத்தி செலவுக்கும் நுகர்வோருக்கு மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது அதன் உண்மையான விலைக்கும் தொடர்பில்லை என்பதுதான். தற்போதைய இந்த ஒழுங்காற்றுக் குழுமம் கட்டண உயர்வுக்குச் சில வரையறையை ஏற்படுத்தியுள்ளது.  நுகர்வோரிடம் மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது ஏற்படும் செலவையும் சேர்த்து ஒரு யூனிட்டுக்கு விலை நிர்ணயித்தல், நுகர்வோரின் வாங்குதிறன், மாநில அரசின் சமூக பொருளாதாரக் கொள்கை ஆகிய வரையறைகளைப் பார்க்கும்போது, வீட்டு மின்சாரக் கட்டணத்தை, தமிழக அரசின்  சமூகப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் நிர்ணயிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.
தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை, சிலவற்றைத் தவிர்த்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கட்டண உயர்வையும் தவிர்க்கலாம். அப்படியும்கூட, மின்கட்டணம் விதிக்க வேண்டும் என்றால், அந்தச் சுமையை வசதி உள்ளவர்கள் மீது ஏற்றி, வசதியில்லாத மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மீது அந்த சுமையை இலேசாக வைக்கலாம்.
2009-ம் ஆண்டு தமிழகத்தின் மின்சாரத் தேவை 9560 மெகாவாட் என்றால், நடப்பாண்டில் 10,000 மெகாவாட் என்பதாக உயரும் என்று மின்வாரியம் கணித்துள்ளது. தமிழகத்தின் மின்உற்பத்தி அளவு 8200 மெகாவாட் மட்டுமே. மின்உற்பத்தியை உயர்த்த திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அமலுக்கு வராத நிலையில் தற்போதைய தேவையைச் சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங்கியாக வேண்டும். இதன் மதிப்பு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இது நிச்சயம், ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாரியத்துக்குக் கூடுதல் சுமை. 2008-09-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.19,000 கோடி. ஆனால் மின்வாரியத்தின் மொத்தச் செலவு ரூ.24,000 கோடி. ஆக ரூ.5,000 கோடி இழப்பு. இந்த இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை என்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது.
மின் தேவையைச் சமாளிக்க மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, விநியோகத் தடத்தில் மின்இழப்பைக் குறைக்க வேண்டும் அல்லவா! ஆனால் அதைச் செய்வதற்கு மட்டும் தமிழ்நாடு மின்வாரியம் எந்தவொரு தனிக்கவனமும் செலுத்தவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தின் விநியோகத் தடத்தில் மின்இழப்பு 19.3 சதவீதமாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டும் மின்சார  ஒழுங்காற்றுக் குழுமம், இதைக் குறைத்தாலொழிய மின்வாரிய இழப்பு குறைய வாய்ப்பே இல்லை என்று சொல்லியும், இதைச் சரிசெய்ய இயலவில்லை. இந்த வழித்தட மின்இழப்பை பாதியாகக் குறைத்தாலே தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சுமார் 900 மெகாவாட் மிச்சமாகும். இதைக் கொண்டு மற்றவர்களிடம் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்காமலேயே மாநிலத்தின் தேவையைச் சமாளிக்க முடியும்.
அடுத்ததாக மின்திருட்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம், மதுரையில் உள்ள ஒரு தொழிற்கூடம் 9 மாதங்களில் ரூ.7.55 கோடி அளவுக்கு மின்சாரத் திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மட்டுமே இத்தகைய மின்திருட்டில் ஈடுபடும் என்றால், இன்னும் இதுபோன்ற மின்திருட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தது 5 சதவீதம் என்றாலும்கூட, எத்தகைய இழப்பை தமிழ்நாடு மின்வாரியம் சந்தித்து வருகிறது என்பதை உணர முடியும்.
தற்போது பொதுக்கூட்டங்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு அமைக்கப்படும் மின்விளக்குகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீள்கின்றன. மேடை அலங்காரங்கள், தலைவர்களின் உருவத்தில் ஒளிரும் விளக்குகள் என மிகமிக அதிகமான மின்சாரம், அதிலும் குறிப்பாக மக்கள் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் வேளையாகிய மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை- ""எடுத்துக்கொள்ளப்படுகிறது''. இதற்குக் கட்டணம் வசூலிப்பதாக மின்வாரியம் சத்தியம் செய்யலாம். ஆனால் அந்தக் கட்டணம், பிற கட்சியினர் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்காக ஏதோ பெயரளவில் வாங்கப்படும் தொகையே தவிர, நிச்சயமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் அளவுக்கான கட்டணங்கள் இல்லை என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
வழித்தட மின்இழப்பு, மின்திருட்டு ஆகியவற்றைப் பாதியாகக் குறைப்பதும், ஆடம்பர விழாக்களுக்கான மின்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதற்கு மிகைக் கட்டணம் நிர்ணயித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தற்போது அரசுக்கு ஏற்படும் இழப்பின் பெரும்பகுதியைக் குறைத்துவிட முடியும். அவ்வாறு குறைக்க முடிந்தால், வீட்டு மின்கட்டணத்தை மாற்றியமைக்காமலேயே மின்வாரியத்தின் இழப்பைச் சரிக்கட்ட முடியும்.
மேலும், இன்றைய தேதியில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திலும் 5 குழல் விளக்குகள், ஒரு டிவி, நான்கு மின்விசிறிகள், ஒரு கிரைண்டர், ஒரு மிக்ஸி, ஒரு வாஷிங் மெஷின், நீரேற்றும் மோட்டார், ஒரு இஸ்திரிப்பெட்டி ஆகியன தவிர்க்க முடியாதவை. குடும்பத் தலைவர், அவரது பெற்றோர், மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட குடும்பத்துக்கு மேற்சொன்ன மின்சாதனங்களின் பயன்பாடு சராசரியாக என்ன இருக்கும், இரண்டு மாதங்களுக்கு அக்குடும்பத்தின் மின்தேவை எவ்வளவு ஏற்படும் என்பதை கணித்தால், 400 யூனிட்டுகளுக்குக் குறையாது. ஆகவே வீடுகளுக்கு மட்டும் இரு மாதங்களில் 400 யூனிட்டுக்கு மிகுந்தால் மட்டுமே கட்டணத்தை உயர்த்த வேண்டுமே தவிர, அதற்குக் கீழாக ஒரு ஸ்லாப் நிர்ணயிப்பது, நடுத்தர மக்களின் முதுகில் மற்றுமொரு சுமை என்பதை தமிழக அரசு புரிந்துகொண்டால் புண்ணியமாக இருக்கும்!


நன்றி தினமணி
 தலையங்கம்

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,448 கோடி திட்ட மதிப்பீடு தயார்

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ஆயிரத்து 448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க முன்னோடி வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான கடன் திட்டம் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயத்திற்கு 1,017 கோடியே 24 லட்சம்,  தொழில்களுக்கு 66 கோடியே 89 லட்சம், இதர முன்னுரிமை கடன்களுக்கு 364 கோடியே 40 லட்சம் என மொத்தம் 1,448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை வர்த்தக வங்கிகள் 1,139 கோடியே 22 லட்சம், கூட்டுறவு வங்கிகள் 219 கோடியே 16 லட்சம், பல்லவன் கிராம வங்கி 82 கோடியே 67 லட்சம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 7 கோடியே 48 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்ட அறிக்கையை வங்கியாளர்கள் கூட்டத்திற்கு தலைமை 

தாங்கிய கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டார். நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் ராஜகோபாலன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முத்துக்கருப்பையா, இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் பிற வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னோடி வங்கி மேலாளர் கபிலன் நன்றி கூறினார். 

கடலூர் அரசு மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் கருவி

கடலூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் கருவியை இணை இயக்குனர் துவக்கி  வைத்தார்.கடலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங் கத்தின் மூலம் ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தின் மூலம் எச்.ஐ.வி., பாதித்தவர்கள் சென்னை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக் தியை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்பில் எச்.ஐ.வி., பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை (வெள்ளையணுக்களின் எண்ணிக்கை) கண்டறியும் கருவி கடலூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அமைக் கப்பட்டுள்ளது. இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் பரஞ் ஜோதி முன்னிலை வகித் தார். முதுநிலை மருத்துவ அலுவலர் தேவ்ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊழியர் கள் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், உமா, சுதர்சனா, சிவராஜ் மற்றும் சுஜாதா, பாண்டியன், சந்தோஷ்குமார், செந்தில் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலையில் தமிழர்களக்கு 85% இடங்கள் கேட்டு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கக் கோரிக்கை விடுத்து, தமிழக மாணவர் முன்னணி சார்பில் நேற்று(31.03.2010) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தே.அரவிந்தன் முன்னிலை வகித்தார். ”அக்னிச் சிறகுகள்” குபேரன் கண்டன உரையாற்றினார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:

அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வடநாட்டு மாணவர் ஒருவர் ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, குடித்து விட்டு பைக் ஒட்டி விபத்தில் இறந்து போனார். அதற்கு பதிலடியாக வடநாட்டு மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் நம் மருத்துவமனையின் கண்ணாடிகளை, ஆம்புலன்சு வண்டிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நமக்கு 2 செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, வடநாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இங்குப் படிப்பதும், இரண்டாவதாக அவர்கள் ஒருங்கிணைந்த முறையில் இருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த மாணவர்கள் துணை வேந்தரை சந்திக்க முற்பட்ட போது அதற்கு மறுப்புத் தெரிவித்திரிக்கிறார் அவர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் துணை வேந்தர் பதவியே. அந்தப் பதிவியில் இருந்து கொண்டு அவர் சந்திக்க மறுத்தது நியாமில்லை. வடநாட்டு மாணவர்களாக இருந்தாலும், தமிழ் மாணவர்களாக இருந்தாலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கத் தானே அந்தப் பதவி. துணை வேந்தர் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வடநாட்டு மாணவர்கள் இங்கு படிப்பதோடு அல்லாமல் இங்கு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதும், வகுப்புகளை ஹிந்தியில் நடத்த வலியுறுத்துவதும், தமிழ் மாணவர்களை கேலி செய்வதும் இங்கு நடக்கிறது. அவர்கள் படித்து முடித்ததும் இங்கெயே தங்கி, வேலை புரிந்து, தங்கள் குடும்பங்களை இங்கேயே குடியமர்த்தி ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்கள்.

இலங்கையில் சிங்கள அரசு தமிழர் பகுதிகளில் எப்படி திட்டமிட்டு சிங்களர்களை குடியமர்த்துகிறதோ, அதைப் போல இந்திய அரசு தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குவிவதை விரும்புகிறது. இதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணை போகக் கூடாது.

இந்நிலை நீடித்தால், நமது மண்ணில் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் குடியேறி ஆக்கிரமிப்பு செய்வார்கள். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணத்தாசைக்கு ஆட்படாமல் வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் கேட்பது பீகாரிலோ, உத்திரப்பிரதேசத்திலோ அல்ல.

தமிழ்நாட்டில் செயல்படுகின்ற, தமிழர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் தான் தமிழர்களுக்கு இடங்களை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். இது சலுகைப் போராட்டம் அல்ல,  இன உரிமை போராட்டம் என்பதை நாம் உணர வேண்டும். நம் மண்ணை அயலாரிடமிருந்து மீட்க நாம் ஒன்று திரள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் தமிழ் மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முடிவில், திரு. சௌந்தரராசன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

போலி டாக்டர் கைது விவகாரம்

போலி டாக்டர் என தன்னை கைது செய்தது தொடர்பாக கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டாக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்பட 7 பேர் வரும் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள் ளது. கடலூர் முதுநகரில் கடந்த ஆண்டு போலீசார் அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த முருகேசன் என்பவரை போலி டாக்டர் என கைது செய்தனர். தான் கொல்கத்தாவில் மருத்துவ படிப்பு படித்துள்ளதாகவும்.
இதில் தன்னை டாக்டர் என்று குறிப்பிடலாம் என்று முருகேசன் கூறினார். ஆனால் போலீசார் போலி டாக்டர்கள் பிரிவில் முரு கேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தன் மீது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் என தான் படித்த படிப்பிற்கு தன்னை குறிப்பிடலாம்.ஆனால் போலீசார் போலி டாக்டர் பட்டியலில் தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண் டும் என கோரி முருகேசன் கடலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்திரன் தமிழக உள்துறை செயலர், மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், எஸ்பி அஷ்வின் கோட்னீஸ், டிஎஸ்பி ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்&இன்ஸ்பெக்டர்கள் சேக்கிழார், பிரேமா உள்ளிட்ட 7 பேர் வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் நேத்தாஜி சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு

கடலூர் நேத்தாஜி சாலை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
கடலூர் மஞ்சக்குப்பம் முதல் டவுன்ஹால் வரை சாலை குறுகலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில் இந்த சாலை அகலப்படுத்தும் திட்டம் இருந்தது. அதற்குள் திட்டப்பணி முடிந்து விட்டதால் சாலை அகலப்படுத்தும் திட்டமும் கைவிடப்பட்டது.
குறுகலான இந்த சாலையில் இருபுறமும் நடைபாதைக்கென பிளாட்பாரம் போடப்பட்டுள்ளதால், சாலை மேலும் குறுகலாகிவிட்டது. இதனால் வாகனங்கள் சென்றுவர முடியாததால் நேத்தாஜி சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதன் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட பிளாட்பாரத்தில், கடைகளுக்கு முன்பு கீற்று கொட்டகை போட்டு நடைபாதை கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்லும் மக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.
இந்நிலையில் இந்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரம் முன்பு தாசில்தார் தட்சணாமூர்த்தி முன்னிலையில் நகர நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. சிலர் தாமாகவே ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றிக் கொண்டதால் சாலை சற்று விசாலமாக காணப்பட்டது. இந்த நிலை ஓரிரு தினங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அப்பகுதி வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு முன் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கொட்டகை போட்டுள்ளனர்.

பச்சை வேர்க்கடலை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் : கலெக்டர் சீத்தாராமன் 'அட்வைஸ்'

கோடை காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு பச்சை வேர்க் கடலை அதிகம் கொடுக்க வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் சிப்காட் பகுதி மற்றும் அருகாமையில் அமைந்துள்ள கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்த சிறப்பு தோல் சிகிச்சை முகாம் கண்ணாரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சிப்காட் தொழிற்சாலை சங்கம், சாசன் கெமிக் கல்ஸ் அண்ட்ட்ரக்ஸ் நிறுவனத்தால் ஒருங்கிணைந்து நடத்திய முகாமில் பிரபல தோல் நோய் நல சிறப்பு மருத்துவ நிபுனர்களான ஜானகி, விஜய்கார்த்திக், இருதயராஜன் அடங்கிய குழுவினர் மற்றும் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்ற 160 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
முகாமை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தபோது, 'ஆலா' கரைசலை குடித்துவிட்டதாக மூன்று வயது குழந்தையை  அழைத்து வந்தனர். உடன் அந்த குழந் தையை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். பின்னர் வீடுகளில் ரசாயன பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஆரம்பசுகாதார நிலையத்தில் நோயாளிகள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில், பச்சை மணிலாவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மணிலா அறுவடை சீசன் துவங்கியுள்ளது.
கோடை வெயிலில் உடலுக்கு மிகுந்த உஷ்ணம் மற்றும் அஜீரண கோளாறு உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு பச்சை வேர்க்கடலை அதிகமாக கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.