கோரிக்கை பதிவு

2010 செப்டம்பரில் முடிவடையும்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன் தெரிவித்தார்.


இது தொடர்பாக குடிநீர் வாரிய செயற் பொறியாளர் ரகுநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:


கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் 4 பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. தெருக்களில் ஆள்கள் நுழையும் தொட்டிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட முதல்பிரிவு பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிவடையும்.


தொட்டிகள் இணைப்பு உள்ளிட்ட 2-வது பிரிவு பணிகள் 2010 பிப்ரவரி மாதம் முடிவடையும்.


கழிவு நீரேற்று நிலையங்கள் அமைக்கும் 3-வது பிரிவு பணிகள் நகராட்சி உரிய காலத்தில் நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், 2010 ஏப்ரல் மாதம் முடிவடையும்.


சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 4-வது பிரிவுப் பணிகள் 2010 செப்டம்பர் மாதம் முடிவடையும்.


பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக 150 கி.மீ. நீளச் சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.


அதில் 126 கி.மீ. தூரம் முடிக்கப்பட்டு விட்டது. 115 கி.மீ. நீளச் சாலைகள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.


தேசிய நெடுஞ்சாலையில் 7.1 கி.மீ. நீளத்துக்கு பணிகள் நடைபெற வேண்டியது இருக்கிறது.


ரூ. 21 கோடிக்கான பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


சாலைகள் சீரமைப்புக்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ. 2 கோடி வழங்கி இருக்கிறோம். நகராட்சி மூலம் ரூ. 16.98 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.


வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு செலவிட்டு இருக்கிறோம்.


நகராட்சியிடம் இருந்து ரூ. 10 கோடி நிதி வரவேண்டியது இருக்கிறது என்றார் ரகுநாதன்.


உடனிருந்த கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது:


பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக, ரூ. 10 கோடி நிதி விடுவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். சாலைகளை சீரமைக்க ரூ. 12 கோடி கடன் கேட்டு இருக்கிறோம்.


பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து ரூ. 15 கோடி வசூலிக்க வேண்டியது இருக்கிறது என்றார் தங்கராசு.


ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


குடிநீர் வாரிய அதிகாரிகள், பணிகளை முடித்து சாலைகளை ஒப்படைத்து விட்டோம் என்றும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிரிகாரிகள் அதற்கு மறுப்பும் தெரிவித்தனர்.

பாதாள சாக்கடைத் திட்டத்தால் அரசுக்கு அவப்பெயர்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முறையாக நடைபெறாததால், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

ரூ. 44 கோடியில் 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், 30 மாதங்களுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விபத்துகள் அதிகரித்து விட்டன. எனவே பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர், வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் முடிவு அடையாததால் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நகராட்சிக்கும் அவப்பெயர்.
அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தனியார் பஸ் தொழிலாளர்கள் இதற்காக போராட்டம் நடத்தவும், நகராட்சித் தலைவர் அவர்களை அழைத்துப் பேசவும் வேண்டிய நிலையும் ஏற்பட்டு விட்டது.
கடந்த 9 மாதங்களில் மட்டும் 115 பேர் சாலை விபத்துகளில் இறக்கக் காரணமான தனியார் பஸ் தொழிலாளர்கள், சாலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
சாலைகள் மோசமாக இருக்கும் போதே 115 பேரைச் சாகடித்தவர்கள், சாலைகள் நன்றாக இருந்தால் மேலும் 115 பேரை சாகடித்து இருப்பார்கள்.
நாமே வம்பை விலைகொடுத்து வாங்கி இருக்கிறோம். எனது வாகனம்கூட இந்தச் சாலைகளில் 10 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்ல முடியவில்லை.
சைக்கிளில் செல்பவர்களின் நிலை மேலும் மோசம். அமைச்சர்கள் உயர்அதிகாரிகள் வரும்போதெல்லாம், பிரச்னையாக இருக்கிறது.
திட்டம், நிதி, கான்டிராக்ட், அனைத்தையும் கொடுத்து இருக்கிறது அரசு. ஆனால் அரசுத் துறைகளிடையே இணக்கம் இல்லாததால், திட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இனி இத்திட்டம் வேகமாகவும் தரமானதாகவும் நடக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் அன்றாடம் எனக்கு அறிக்கை தர வேண்டும். நாளைமுதல் நகராட்சித் தலைவர் வேறு வேலைகளைப் பார்க்க மாட்டார். நகராட்சி சாலைகள், கிராமச் சாலைகளைவிட மோசமாகி விட்டன. இதனால் நகராட்சித் தலைவர், கிராம ஊராட்சித் தலைவராகி விட்டார். நான் ஒருநாள் விட்டு ஒருநாள் இப்பணிகளை ஆய்வு செய்வேன். நகராட்சித் தலைவர் தினமும் ஆய்வு செய்வார். மக்கள் குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும்.மழைக் காலத்துக்கு முன் முக்கியப் பணிகளை முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலூர் கோட்டாட்சியர் செயல்படுவார் என்றார் ஆட்சியர். நகராட்சித் தலைவர் து.தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் குறைகளைத் தெரிவித்தனர். குடிநீர் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் நடனசபாபாதி, நகராட்சி ஆணையர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூரில் விஷக் காய்ச்சல்

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஒரு வாரமாக விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.

ஏற்கெனவே சிப்காட் ரசாயன ஆலைக் கழிவுகளால் கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்கள் காற்றும் நிலமும் மாசுபட்டதாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் சாலைகள் கிராமச் சாலைகளைவிட மோசமாகி, புழுதி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு சுவாசக் கோளாறுகள், சளித்தொல்லை, அதைத் தொடர்ந்து ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்குக் குறைவே இல்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்டு இருக்கும் பருவநிலை மாற்றம், நோய்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. பகல் பொழுதில் கடும் வெயில், அதிகாலை 3 மணி முதல் பனிப்பொழிவு உள்ளது.

இதனால் கடலூர் நகரிலும் காரைக்காடு செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம் கிராமங்களிலும் ஏராளமான மக்கள் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விஷக் காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் வியாழக்கிழமை கூறியது: கடலூர் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 3,500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இது படிப்படியாக உயர்ந்து கடந்த 19-ம் தேதி 5,184-ஐ தொட்டது. வியாழக்கிழமை 5,838 பேர் சிகிச்சைக்கு வந்தனர். மொத்த புறநோயாளிகளில் 2 சதம் பேர் காய்ச்சல் நோய் கண்டவர்களாக இருப்பர். இது தற்போது 5 சதமாக உயர்ந்து இருக்கிறது. எனவே 20-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் அழைத்து தகுந்த அறிவுரை வழங்கி இருக்கிறோம்.

தேவையான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளன. ரத்தப் பரிசோதனை செய்ததில் இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இது 3 முதல் 5 நாள்கள் வரை நீடிக்கும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரும் பீதிஅடையத் தேவையில்லை என்றார் ஜெயவீரகுமார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா இதுபற்றிக் கூறியது:
கடந்த 10 நாள்களாக சங்கொலிக்குப்பம், காரைக்காடு, செம்மங்குப்பம் பகுதி மக்களுக்கு, விஷக் காய்ச்சல் காணப்பட்டது.10 நாள்களாக எங்களது மருத்துவக்குழு அப்பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சிக்கன் குனியா போன்ற நோய் எதுவும் இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட சாதாரணக் காய்ச்சல்தான். யாரும் பீதி அடையத் தேவையில்லை. இந்தக் காய்ச்சலுக்கு வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பருவநிலை மாற்றம் இருந்த போதிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இத்தகைய காய்ச்சல் இல்லை என்றார் டாக்டர் மீரா.

பெரியார் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு


கடலூர் பெரியார் கலைக்கல்லூரி தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் ஜனாதிபதி விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். செம்மொழித்தமிழ் மொழியில் சிறப்பாகப் பணியாற்றும் அறிஞர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப் பட்டு வருகிறது. ஐந்து நபர்களுக்கு வழங் கப்படும் "இளம் அறிஞர்' விருதிற்கு கடலூர் பெரியார் கலைக் கல்லுரி தமிழ் இணைப்பேராசிரியர் பழனிவேலு தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இவர் புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல்கேட்டை சேர்ந்தவர். தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், புதுச்சேரி பல் கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றவர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். "தமிழர் தம் கல்வி வரலாறு' என்ற இவரின் ஆய்வேடு தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள் ளது. இந்நூல் கோவை, பாரதியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டங்களில் இடம் பெற் றுள்ளன.

இவரின் "கல்வி வரலாறு சில பார்வைகள்' என்ற நூல் புதுச்சேரி அரசின் 2001ம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரை நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டு கம்பன் புகழ் பரிசு பெற் றுள்ளது. புதுச்சேரி பகுதிகளை கள ஆய்வு செய்து எழுதப்பட்ட இவரின் முதுகலை ஆய்வேடு, "தமிழர் தம் குடிப்பழக் கம்' என்ற நூலாக வெளி வந்துள்ளது. சென்னை மொழி அறக்கட்டளையின் தமிழ் மரபுத்தொடர் அகராதியில் 1993முதல் 95 வரை ஆராய்ச்சி உதவியாளராகவும், 98ம் ஆண்டு வரை புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

பின்னர் 1998ம் ஆண்டு முதல் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார நவீன திறனாய்வுக் கோட்பாடுகளைத் தமிழிலக்கியங்களில் பொருத்தி ஆய்வு செய்து வரும் இவர், கோட்பாட்டியல் திறனாய்வுகள், பனுவல் எடுத்துரைப்பு திறனாய்வு ஆகிய இரு திறனாய்வு நூல்களையும், 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.