கோரிக்கை பதிவு

சிப்காட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிப்காட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மெள்ள மெள்ளக் கொல்லும்

''மேட்டூர், கடலூர் உட்பட பல இடங்களில், மெள்ள மெள்ளக் கொல்லும் ஆலைக் கழிவு அபாயம் அரங்கேறி வருகிறது. இந்த மாதிரியான ஆலைகள் பலவும் அரசின் அனுமதி இல்லாமலேயே இயங்குகின்றன. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2,500 நடுத்தர, பெரும் தொழில் நிறுவனங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குகின்றன. இப்படி இருந்தால், அரசின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?'' என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
போபால் நீதிக்கான பிரசாரத்தின் உறுப்பினரும், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்வேதா நாராயணையும் சந்தித்தோம், ''கடலூர், பெரும் ஆபத்து மையமாக மாறிவருகிறது. அங்கு உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் கெட்டுவிட்டது. 2008-ல் இங்கு ஆய்வுசெய்த மத்திய அரசின் 'நீரி' சூழல் நிறுவனம், 'இந்த ஆலைகளின் கழிவுகளால் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது' என அறிக்கை அளித்தது. நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 'மாதிரி' ஆய்வுகளில், 'இங்கு வெளியேறும் 25 வேதிக் கழிவுகளில், 12 கழிவுகள் புற்றுநோயை உண்டாக்குபவை. அதிலும், பென்சீன் என்பது, மற்றவற்றைவிட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும்' எனக் கண்டறிந்தோம். அதேபோல், டால்மியாபுரம் சிமென்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காட்மியம், பெரிலியம், பேரியம் உள்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் இருப்பதும் தெரிந்தது. கடந்த பிப்ரவரி நிலவரப்படி, கடலூர் சிப்காட்டில் 25 ஆலைகளில் 20 ஆலைகளுக்கு லைசென்ஸ் இல்லை!'' என்று சொல்லி மூச்சுத் திணறவைத்தார்.
- இரா. தமிழ்க்கனல்

பச்சை வேர்க்கடலை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் : கலெக்டர் சீத்தாராமன் 'அட்வைஸ்'

கோடை காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு பச்சை வேர்க் கடலை அதிகம் கொடுக்க வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் சிப்காட் பகுதி மற்றும் அருகாமையில் அமைந்துள்ள கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்த சிறப்பு தோல் சிகிச்சை முகாம் கண்ணாரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சிப்காட் தொழிற்சாலை சங்கம், சாசன் கெமிக் கல்ஸ் அண்ட்ட்ரக்ஸ் நிறுவனத்தால் ஒருங்கிணைந்து நடத்திய முகாமில் பிரபல தோல் நோய் நல சிறப்பு மருத்துவ நிபுனர்களான ஜானகி, விஜய்கார்த்திக், இருதயராஜன் அடங்கிய குழுவினர் மற்றும் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்ற 160 பேரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
முகாமை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தபோது, 'ஆலா' கரைசலை குடித்துவிட்டதாக மூன்று வயது குழந்தையை  அழைத்து வந்தனர். உடன் அந்த குழந் தையை ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். பின்னர் வீடுகளில் ரசாயன பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் ஆரம்பசுகாதார நிலையத்தில் நோயாளிகள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில், பச்சை மணிலாவை சாப்பிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மாவட்டத்தில் மணிலா அறுவடை சீசன் துவங்கியுள்ளது.
கோடை வெயிலில் உடலுக்கு மிகுந்த உஷ்ணம் மற்றும் அஜீரண கோளாறு உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு பச்சை வேர்க்கடலை அதிகமாக கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

சிப்காட் தொழிற்பேட்டையில் ஆய்வு

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்த உள்ள ஐ.நா குழுவினரை சந்திக்க, விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் வேங்கடபதி, பொதுச்செயலாளர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் கீழ் அனுவம்பட்டு ரவீந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் உருவாக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற் சாலைகளால் நமது உணவு, குடிநீர், சுவாசிக்கும் காற்று மூன்றும் நஞ்சாகிவிட்டது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் வேக மாக சிதைக்கப்பட்டு வருகின்றன. சிப்காட் தொழிற்சலைகளால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகி றது. உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள் ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள விவசாய விளை நிலங்களை பாதுகாப்பது விவசாயிகளின் கடமை. இது குறித்து ஆய்வு நடத்த ஐ.நா சபையின் உணவு உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி ஆலிவர் ஷட்டர் தலைமையிலான குழு இன்று கடலூர் வரு கிறது. குழுவில் வழக்கறி ஞர், மருத்துவர், உணவுப்பொருட்கள் உற் பத்தி திறன் குறித்து ஆய்வு நடத்தும் பேராசிரியர்கள், விவசாயிகள் இடம் பெற்றுள்ளனர். பியான் அமைப் பின் தமிழ்நாடு தலைவர் குருசாமி குழுவை வழி நடத்துகிறார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பினரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இக்குழுவினர் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளையும், அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடலோர பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்துகின்றனர்.தொடர்ந்து இன்று(31ம் தேதி) மாலை கடலூர் டவுன்ஹாலில் விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிகிறார்கள். இந்த நிகழ்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனை வரும் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாது காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
விவசாயிகளுக்கு அழைப்பு

கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு

கடற்கரைப் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று,​​ தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.​ ​கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.​ மீனவர்களுக்கு எதிராக அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களை கூட்டமைப்பு எதிர்க்கும்.​ கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.​ மீனவர்களை மலைவாழ் மக்களுடன் இணைத்து இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.​ மக்கள் தொகை அடிப்படையில் மத்திய,​​ மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளில் மீனவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.​ மத்திய அரசில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.​ மே 9-ம் தேதி கடலூரில் மாநில மாநாடு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அனைத்து மீனவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.அப்பாராஜ் தலைமை வகித்தார்.​ ஆர்.கன்னியப்பன்,​​ சுப்புராயன்,​​ ஏழுமலை, பாலு ​ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ஜேபியார் பேரவைத் தலைவர் கனகராஜ் வரவேற்றார்.​ ​அகில இந்திய மீனவர் சங்க துணைத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் யாருக்கும் பயனின்றி முடங்கிப்போன நிலங்கள்

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.​ இதனால் விவசாயிகளிடம் ​ இருந்து கட்டாயமாக சொற்ப விலையில் கையகப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் யாருக்கும் பயனின்றி முடங்கிக் கிடக்கின்றன.​ ​ இதனால் அரசுக்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு வர வேண்டிய பணமும் வரவில்லை.​ வேறு நபர்களும் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கடலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.​ முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும்,​​ 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப் படுத்தப்பட்டு,​​ தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.​ நில வளமும்,​​ நீர் வளமும் கொண்ட இப்பகுதி,​​ பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால்,​​ பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன.சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி,​​ மணிலா,​​ சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு இருந்தன.​ இந்த நிலங்களுக்காக ​ விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம்.​ விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரூ.80 ஆயிரம் வரை பெற்றனர்.எந்த நோக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலை தற்போது உருவாகி உள்ளது.​ இந்த நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்கு முதலில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என வழங்கப்பட்டது.​ அது படிப்படியாக உயர்ந்து,​​ தற்போது ஏக்கர் ரூ.20 லட்சம் என குத்தகைக்கு வழங்கப்படுகிறது.சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது ரூ.200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் 4 தொழிற்சாலைகள் உள்பட,​​ 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.​ 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.​ ​ரூ.200 கோடி மூலதனத்தில்,​​ 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே.​ ஃபார்மா,​​ 60 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.மூடிக்கிடக்கும் தொழிற்சாலையை அரசு ஏலம் விட்டாலன்றி,​​ யாரும் அதை வாங்க முடியாது.​ அவ்வாறு ஏலம் விடுவதற்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகள் ஆகிறதாம்.​ ஏலத்தில் எடுத்த பிறகும்,​​ பல்வேறு துறைகளில் உள்ள நிலுவைத் தொகைகளைச் செலுத்தி மீண்டும் தொழில் தொடங்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாகக் கூறப்படுகிறது.இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக,​​ தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 320 ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைகள் மூடப்பட்டதால்,​​ எந்த பயனுமின்றிக் முடங்கிக் கிடக்கின்றன.​ இந்த நிலங்களால் அவற்றை விற்பனை செய்த விவசாயிகளுக்கும் பயனில்லை.​ வாங்கிய தொழிற்சாலைகளுக்கு,​​ அரசுக்கும் பயனில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.​ நிதி நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் மக்கள் பணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.​ ​இது குறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர்குமார் கூறியது:​ மூடிக்கிடக்கும் ஆலைகளின் நிலங்களை வேறு நபர்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிக்கலான நடைமுறைகள் உள்ளன.​ அரசோ,​​ வங்கிகளோ ஏலம் விட்டால் மட்டுமே மற்றவர்கள் அந்த தொழிற்சாலையை வாங்க முடியும்.​ பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நிலங்களுக்கு,​​ மீண்டும் இப்போதைய சந்தை மதிப்பில்,​​ வித்தியாசத் தொகையை வழங்க வேண்டியது இருக்கிறது.​ ஏலம் விடும் ஆலைகளைப் பல நேரங்களில் இடைத்தரகர்கள் வாங்குகிறார்கள்.​ மூடிக்கிடக்கும் ஆலையை வாங்க வேண்டுமானால் பல வகைளில் பணம் செலவிட்டாக வேண்டியது இருக்கிறது.​ மூடப்பட்ட ஆலைகளின் நிர்வாகமே வேறு நபருக்கு நேரடியாக விற்கவும்,​​ வாங்கும் நபர் அதற்கான நிலுவைத் தொகை அனைத்தையும் ஏற்கும் வகையிலும் விதிகள் இருந்தால்,​​ இங்கு மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளே இருக்காது என்றார் இந்தர்குமார்.இது குறித்து சிப்காட் நிர்வாக அலுவலர் செல்வம் கூறியது:​ மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை,​​ மற்றவர்கள் வாங்குவதற்கான நடைமுறைகள் எளிதாகவே உள்ளன.​ ஆனால்,​​ அவைகள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகள்,​​ கடன்கள் கோடிக்கணக்கில் உள்ளன.​ நிலத்துக்கான வித்தியாச விலை வழங்கத்தான் வேண்டும்.​ ​ அண்மையில் 3 தொழிற்சாலைகள் ஏலம் மூலம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.​ வங்கிகளும் ஏலம் விடுகின்றன என்றார் செல்வம்.

சிப்காட்டில் கம்பெனிகளை ஆய்வு செய்ய முடிவு ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு அனுப்ப மாவட்ட ஊராட்சி குழு முடிவு செய் துள்ளது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கடலூரில் நடந் தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரான் சிஸ்மேரி, ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அணைக் கரை  பாலத்தை விரைந்து கட்டவும், காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர் கந்தசாமி பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பிரபாகரன், சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகம் மினி பஸ் நிலையமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்றார். குண்டுஉப்பலவாடி பாலம் கட்ட 11 முறை டெண்டர் விட்டும் பணிகள் நடக்கவில்லை. பாலம் கட்ட உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கவுன்சிலர் ஜெயகாந்தன் பேசினார். சிதம்பரம் புறவழிச் சாலை பணியில் வடிகால் வாய்க்கால்கள் தூர்க்கப் பட்டுள்ளதால் மழை காலங்களில் மணலூர் மேற்கு பகுதியில் உள்ள விளை நிலங்கள் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வாய்க்கால் கட்ட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கருப்பன் வலியுறுத்தினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மாவட்டத்தில் கோவில், பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும்.
சேத்தியாத்தோப்பு 16 கண் மதகு பாலம், வடக்குத்து பாலம், பறவனாற்றுப் பாலங்களை போர்க்கால அடிப்படையில்  துப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் போக் குவரத்து துறையினரை கண்டித்து  மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் குறித்த கவுன்சிலர்களின் புகார்களுக்கு மாசுகாட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்காததால், மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன கம்பெனிகளை ஆய்வு செய்து, அறிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க அரசிற்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கடலூர் வந்த கத்தாரின் 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல்

பிப்.23 (டிஎன்எஸ்)  கத்தாரிலிருந்து, 'காஸ்' ஏற்றி புறப்பட்ட 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், கடலூர் வந்தது.

கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், 'வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட 'நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் (பிப்.21) கடலூர் வந்தடைந்தது.

இந்த கப்பல் மூலப்பொருட்களை இறக்கியபின், நேற்று காலை (பிப்.22)  கத்தார் நாட்டிற்கு பயணமானது.

பிப்.27ஆம் தேதி மேலும் ஒரு கப்பல் காஸ் ஏற்றிக் கொண்டு கடலூர் வருகிறது. (டிஎன்எஸ்)

ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?

கட​லூர் உப்​ப​னாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.​ அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.கடலூர் உப்பனாற்றில் சிப்காட் தொழிற்சாலைகளின் மோசமான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதாக,​​ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் தொழிற்சாலைகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.​ சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலப்பதாகத் தெரிவித்து வருகின்றன.​ மாசுக்கட்டுப்பாடு வாரியமும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் உப்பனாற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்துவதும்,​​ அதன்பிறகு ஓசையின்றிப் போவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது.குற்றச்சாட்டுகள் மக்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும்,​​ ஆய்வின் முடிவுகளையோ,​​ அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாகத் தெரிவித்தது இல்லை.உப்பனாற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதற்கு ஆதாரமான நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது.​ கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வி.சண்முகம் ​(40).​ கடந்த பிப்ரவரி 26-ம் தேதி காலை 10 மணிக்கு,​​ சிப்காட் தொழிற்சாலைகளுக்குப் பின்புறம் உள்ள உப்பனாற்றில் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்.வலை உப்பனாறின் உள்ளே சிக்கிக் கொண்டது.​ அதை எடுப்பதற்காக உப்பனாற்று நீரில் கழுத்தளவுக்கு மூழ்கியபோது,​​ தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது.​ வீடு திரும்பியதும் எரிச்சல் அதிகரித்தது.சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.​ எனவே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து,​​ ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.எனினும் அவருக்கு தொடர்ந்து அரிப்பும்,​​ உடல் நலம் பாதிப்பும் இருப்பதால்,​​ தோல்நோய் நிபுணரிடம் காண்பிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.இது குறித்து புகார் மனு ஒன்றை சண்முகம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் அளித்தார்.​ உடலில் பல இடங்களில் வடுக்கள் இருப்பதையும் ​ காண்பித்தார்.கடலூர் உப்பனாற்றில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி,​​ இத்தகைய ​ நிலை ஏற்படுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.​ மீனவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழநிவேல்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருள்செல்வம்,​​ புகழேந்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

தனியார் அனல் மின் நிலையம்: மீனவர் பேரவை எதிர்ப்பு

கடலூர் அருகே அமைய இருக்கும் தனியார் அனல் மின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், செயலாளர்  கே.முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அமைந்து இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதால், மீனவர்களின் தொழில் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுக்குப்பம் அருகே தனியார் அனல் மின் நிலையம் அமைக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் அருகே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் அங்கு அமைக்கப் பட்டால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும்.  எனவே இந்த தனியார் அனல் மின் நிலையத்தை மீனவர் பேரவை கடுமையாக  எதிர்க்கிறது. தனியார் அனல் மின் நிலையம் அமைய இருப்பதைக் கண்டித்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, இம்மாதம் 25-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​க​ட​ லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு இருக்​கி​றது. மேற்​கொண்​டும் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. ​இந்​நி​லை​யில் இயற்கை எழில் மிகுந்த,​ மணல் குன்​று​கள் நிறைந்த திருச்​சோ​பு​ரம் பகு​தி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.நி​லத்தை அளந்து பல இடங்​க​ளில் கொடி நட்டு இருந்​த​னர். இதற்கு அப் பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். இத​னால் நில அள​வைத் துறை அலு​வ​லர்​க​ளுக்​கும் பொது​மக்​க​ளுக்​கும் இடையே கடும் வாக்​கு​வா​த​மும் தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. ​மக்​கள் எதிர்ப்பு கார​ண​மாக நில​அ​ள​வைத்​துறை அதி​கா​ரி​கள் அங்​கி​ருந்து திரும்​பிச் சென்று விட்​ட​னர்.நி​லம் கொடுத்து மறுப்பு தெரி​வித்​தது குறித்து திருச்​சோ​பு​ரம் பிர​மு​கர் பாலு கூறி​யது:​ ​த ​னி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு திருச்​சோ​பு​ரம் கிரா​மத்​தில் நிலம் ஆர்​ஜி​தம் செய்ய நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் முயன்​ற​னர்.தி​ருச்​சோ​பு​ர​நா​தர் கோயி​லுக்​குச் சொந்​த​மான 30 ஏக்​கர் நிலத்தை அதி​கா​ரி​கள் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு வழங்​கும் முயற்​சி​யில் இறங்கி உள்​ள​னர்.இந்த நிலத்​தில் சுமார் 10 ஏக்​க​ரில் 200-க்கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​கட்டி வசிக்​கின்​ற​னர். நாங்​கள் வீடு​களை காலி செய்ய மாட்​டோம் என்று தெரி​வித்து விட்​டோம். ​வீ​டு​கள் கட்டி இருக்​கும் 10 ஏக்​கர் உள்​ளிட்ட 30 ஏக்​கர் கோயில் நிலத்​தை​யும் தொழிற்​சா​லைக்கு ஆர்​ஜி​தம் செய்து கொடுக்​கும் முயற்​சி​யில் அதி​கா​ரி​கள் ஈடு​பட்டு இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கோயில் நிலத்தை தனி​யார் நிறு​வ​னத்​துக்கு அதி​கா​ரி​கள் எப்​படி வழங்க முடி​யும்?​ என்​றார் பாலு.

கடலூரில் விஷக் காய்ச்சல்

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஒரு வாரமாக விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.

ஏற்கெனவே சிப்காட் ரசாயன ஆலைக் கழிவுகளால் கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்கள் காற்றும் நிலமும் மாசுபட்டதாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் சாலைகள் கிராமச் சாலைகளைவிட மோசமாகி, புழுதி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு சுவாசக் கோளாறுகள், சளித்தொல்லை, அதைத் தொடர்ந்து ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்குக் குறைவே இல்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்டு இருக்கும் பருவநிலை மாற்றம், நோய்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. பகல் பொழுதில் கடும் வெயில், அதிகாலை 3 மணி முதல் பனிப்பொழிவு உள்ளது.

இதனால் கடலூர் நகரிலும் காரைக்காடு செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம் கிராமங்களிலும் ஏராளமான மக்கள் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விஷக் காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் வியாழக்கிழமை கூறியது: கடலூர் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 3,500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இது படிப்படியாக உயர்ந்து கடந்த 19-ம் தேதி 5,184-ஐ தொட்டது. வியாழக்கிழமை 5,838 பேர் சிகிச்சைக்கு வந்தனர். மொத்த புறநோயாளிகளில் 2 சதம் பேர் காய்ச்சல் நோய் கண்டவர்களாக இருப்பர். இது தற்போது 5 சதமாக உயர்ந்து இருக்கிறது. எனவே 20-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் அழைத்து தகுந்த அறிவுரை வழங்கி இருக்கிறோம்.

தேவையான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளன. ரத்தப் பரிசோதனை செய்ததில் இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இது 3 முதல் 5 நாள்கள் வரை நீடிக்கும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரும் பீதிஅடையத் தேவையில்லை என்றார் ஜெயவீரகுமார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா இதுபற்றிக் கூறியது:
கடந்த 10 நாள்களாக சங்கொலிக்குப்பம், காரைக்காடு, செம்மங்குப்பம் பகுதி மக்களுக்கு, விஷக் காய்ச்சல் காணப்பட்டது.10 நாள்களாக எங்களது மருத்துவக்குழு அப்பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சிக்கன் குனியா போன்ற நோய் எதுவும் இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட சாதாரணக் காய்ச்சல்தான். யாரும் பீதி அடையத் தேவையில்லை. இந்தக் காய்ச்சலுக்கு வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பருவநிலை மாற்றம் இருந்த போதிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இத்தகைய காய்ச்சல் இல்லை என்றார் டாக்டர் மீரா.