கோரிக்கை பதிவு

அமைச்சர் - எம்.எல்.ஏ. பனிப்போர்: பாதியில் கிடக்கும் திட்டங்கள் கலங்கும் கடலூர்





மந்திரிக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான மோதலால் அரசின் திட்டங்கள் பாதிக்கப்படுவது கூட ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால், எங்கள் ஊரில் தி.மு.க. அமைச்சருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குமான ஈகோ யுத்தத்தால் பல திட்டங்களும் பாதியில் கிடக்கின்றன...’’

-இப்படி குமுறுகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

அவர்கள் குறிப்பிடுவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கும் இடையிலான பனிப் போரைத்தான்.

‘‘ரயில்வே சுரங்கப்பாதை, அரசு பொது மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி, துறைமுக வளர்ச்சித் திட்டம் என பல முக்கியத் திட்டங்கள் கடலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், எம்.ஆர்.கே.வுக்கும், அய்யப்பனுக்கும் இடையிலான ஈகோ யுத்தத்தால் எதுவும் முழுதாக செயல்வடிவம் பெறவில்லை. அதிலும் கடலூர் லாரன்ஸ் ரோடு, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு கடந்த 93-ம் ஆண்டே திட்டம் தீட்டப்பட்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் இன்றுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை’’ என அலுத்துக் கொள்கிறார்கள் கடலூர் நகர வியாபாரிகள்.

அரசின் திட்டத்தில் தி.மு.க.வின் கோஷ்டிப் பூசல் வெட்ட வெளிச்சமாகக் கிடப்பதைக் கண்டித்து கடலூரின் பொது நல இயக்கங்கள், தொழிலாளர் நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் என மொத்தம் 75 அமைப்புகள் சேர்ந்து கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை ஆரம்பித்தனர். இந்தக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் என நடத்தியும் ஒன்றும் பயனில்லை.

எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்கும் இடையில் அப்படி என்னதான் நடக்கிறது? கடலூர் தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம்.

“சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்-போதே அய்யப்பனுக்கு சரியான ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்க மறுத்தார் எம்.ஆர்.கே. அதனால் அய்யப்பனுக்கு அவர்மேல் அதிருப்தி. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன், எம்.ஆர்.கே.வை எதிர்க்க அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் அய்யப்பன். பிறகு நடந்த கடலூர் நகர பிரதிநிதி நியமனத்திலும் இரு கோஷ்டினருக்கும் பிரச்னை ஏற்பட்டு உண்ணாவிரதம் வரை சென்று பின்னர் அறிவாலயத்தில் சமாதானம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மாவட்டச் செயலாளர் தேர்தல் வந்தபோது எம்.ஆர்.கே.அணிக்கு எதிராக அய்யப்பனும், சபா ராஜேந்திரனும் சிதம்பரத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணனை நிறுத்தினர். ஆனால் சரவணன் தோல்வி அடைந்தார். அன்று முதல் எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்குமான பிரச்னை மேலும் வலுத்துவிட்டது. மாவட்டத்தின் தலைமையிடமான கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் அய்யப்பன். இதனால் கடலூர் டவுனுக்கு எந்த முக்கியத் திட்டமும் நிறைவேறாமல் பார்த்துக் கொள்கிறார் எம்.ஆர்.கே. சுரங்கப்பாதைத் திட்டம் நிறைவேறினால் எங்கே அய்யப்பனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துவிடுமோ என்று இந்தத் திட்டத்தில் மெத்தனம் காட்டி வருகிறார் எம்.ஆர்.கே. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான பிரச்னையால் மக்களுக்கு சேரவேண்டிய நல்ல திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இதனால் தி.மு.க.வுக்குத்தான் கெட்டபெயர்’’ என்றார்கள் வருத்தத்துடன்.

கூட்டு நடவடிக்கைக் குழுவில் இருப்பவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளருமான நிஜாமுதீனிடம் இதுபற்றிப் பேசினோம். “கடலூர் லாரன்ஸ் சாலை நகரின் இருதயம் போன்றது. இதன் வழியாகத்தான் மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் செல்லவேண்டும். மேலும் எஸ்.பி. அலுவலகம், கலைக் கல்லூரி, நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மிக முக்கிய பள்ளிகள் என எல்லாமே ரயில்வே கேட்டுக்கு முன்பக்கம்தான் உள்ளது. ஆனால் அந்தப் பக்கம் திருவந்திபுரம் கோயில், பாடலீசுரர் கோயில், மத்திய சிறைச்சாலை போன்றவை அமைந்துள்ளன. இந்தக் குறுகிய சாலையை கடக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படுவதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தீர்க்க 1970-லேயே ரயில்வே சுரங்கப் பாதை திட்டம் அமைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தினோம். அதன் பேரில் கடந்த 93-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை.

வேங்கடபதி எம்.பி.யாக இருந்தபோது இதுபற்றி எடுத்துக் கூறினோம். இந்த சுரங்கப்பாதை லாரன்ஸ் சாலையில் வந்தால் தனக்கு ஆதரவான வசதி படைத்த நகை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த சுரங்கப்பாதை திட்டத்தை மக்கள் பயன்படாதவகையில் கடலூர்-விருத்தாசலம் சாலை தொடங்கி வண்டிப்பாளையம் சென்று அடையும்படி திட்டம் தீட்ட உத்தரவிட்டார் வேங்கடபதி. ஆனால் இது மக்களுக்குத் தெரியவில்லை. பின்பு எங்கள் குழுவின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளும்போதுதான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும், அதன் மூலம் சிலர் பணம் பார்த்ததும் தெரியவந்தது.

இதை எடுத்துக்கூறி அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் திட்டத்தை முறையாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். மக்களின் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்ட அவர் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பி பழைய லாரன்ஸ் சாலைக்கே சுரங்கப் பாதை அமைக்க வழிவகை செய்தார். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.-பன்னீர்செல்வம் இதில் தலையிட்டதால் அமைச்-சருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பல கோரிக்கைகள், போராட்டங்கள், நடத்திய பிறகும் பெரும்பான்மை மக்களுக்கு தேவையான இத்திட்டம் தற்போது கடலூர் நகரமன்றத்தின் தீர்மானத்துக்காக காத்துக் கிடக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அய்யப்பனிடம் பேசினோம். “சுரங்கப்பாதை திட்டம் கோப்புகள் அனைத்தும் கையெழுத்-திடப்பட்டு டெண்டருக்காக காத்திருக்கிறோம். விரைவில் டெண்டரும் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மக்கள் நலனுக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்க என்னால் முடியும்” என்றார் சூசகமாக.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு நான் தடையும் செய்யமாட்டேன், தடையாகவும் இருக்கமாட்டேன். என் உதவியை நாடினால் நிச்சயம் நான் செய்வேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கிறார்கள். அது தோல்வியில்தான் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது’’ என்றார்.

‘பிரச்னை உனக்கும் எனக்கும்தான். இதில் அப்பாவிங்க பாதிக்கப்படக் கூடாது...’

-‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் இந்த வசனத்தை சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்த்தால் கடலூர் மக்களுக்கு நல்லது.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1437&rid=73

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக