கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்ட வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்ட வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமைச்சர் - எம்.எல்.ஏ. பனிப்போர்: பாதியில் கிடக்கும் திட்டங்கள் கலங்கும் கடலூர்





மந்திரிக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான மோதலால் அரசின் திட்டங்கள் பாதிக்கப்படுவது கூட ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால், எங்கள் ஊரில் தி.மு.க. அமைச்சருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்குமான ஈகோ யுத்தத்தால் பல திட்டங்களும் பாதியில் கிடக்கின்றன...’’

-இப்படி குமுறுகிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

அவர்கள் குறிப்பிடுவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கும் இடையிலான பனிப் போரைத்தான்.

‘‘ரயில்வே சுரங்கப்பாதை, அரசு பொது மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி, துறைமுக வளர்ச்சித் திட்டம் என பல முக்கியத் திட்டங்கள் கடலூர் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், எம்.ஆர்.கே.வுக்கும், அய்யப்பனுக்கும் இடையிலான ஈகோ யுத்தத்தால் எதுவும் முழுதாக செயல்வடிவம் பெறவில்லை. அதிலும் கடலூர் லாரன்ஸ் ரோடு, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு கடந்த 93-ம் ஆண்டே திட்டம் தீட்டப்பட்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் இன்றுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை’’ என அலுத்துக் கொள்கிறார்கள் கடலூர் நகர வியாபாரிகள்.

அரசின் திட்டத்தில் தி.மு.க.வின் கோஷ்டிப் பூசல் வெட்ட வெளிச்சமாகக் கிடப்பதைக் கண்டித்து கடலூரின் பொது நல இயக்கங்கள், தொழிலாளர் நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் என மொத்தம் 75 அமைப்புகள் சேர்ந்து கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை ஆரம்பித்தனர். இந்தக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் என நடத்தியும் ஒன்றும் பயனில்லை.

எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்கும் இடையில் அப்படி என்னதான் நடக்கிறது? கடலூர் தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம்.

“சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்-போதே அய்யப்பனுக்கு சரியான ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்க மறுத்தார் எம்.ஆர்.கே. அதனால் அய்யப்பனுக்கு அவர்மேல் அதிருப்தி. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன், எம்.ஆர்.கே.வை எதிர்க்க அவருக்கு ஆதரவாக செயல்பட்டார் அய்யப்பன். பிறகு நடந்த கடலூர் நகர பிரதிநிதி நியமனத்திலும் இரு கோஷ்டினருக்கும் பிரச்னை ஏற்பட்டு உண்ணாவிரதம் வரை சென்று பின்னர் அறிவாலயத்தில் சமாதானம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மாவட்டச் செயலாளர் தேர்தல் வந்தபோது எம்.ஆர்.கே.அணிக்கு எதிராக அய்யப்பனும், சபா ராஜேந்திரனும் சிதம்பரத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணனை நிறுத்தினர். ஆனால் சரவணன் தோல்வி அடைந்தார். அன்று முதல் எம்.ஆர்.கே.வுக்கும் அய்யப்பனுக்குமான பிரச்னை மேலும் வலுத்துவிட்டது. மாவட்டத்தின் தலைமையிடமான கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் அய்யப்பன். இதனால் கடலூர் டவுனுக்கு எந்த முக்கியத் திட்டமும் நிறைவேறாமல் பார்த்துக் கொள்கிறார் எம்.ஆர்.கே. சுரங்கப்பாதைத் திட்டம் நிறைவேறினால் எங்கே அய்யப்பனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துவிடுமோ என்று இந்தத் திட்டத்தில் மெத்தனம் காட்டி வருகிறார் எம்.ஆர்.கே. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையிலான பிரச்னையால் மக்களுக்கு சேரவேண்டிய நல்ல திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இதனால் தி.மு.க.வுக்குத்தான் கெட்டபெயர்’’ என்றார்கள் வருத்தத்துடன்.

கூட்டு நடவடிக்கைக் குழுவில் இருப்பவரும் கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளருமான நிஜாமுதீனிடம் இதுபற்றிப் பேசினோம். “கடலூர் லாரன்ஸ் சாலை நகரின் இருதயம் போன்றது. இதன் வழியாகத்தான் மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் செல்லவேண்டும். மேலும் எஸ்.பி. அலுவலகம், கலைக் கல்லூரி, நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மிக முக்கிய பள்ளிகள் என எல்லாமே ரயில்வே கேட்டுக்கு முன்பக்கம்தான் உள்ளது. ஆனால் அந்தப் பக்கம் திருவந்திபுரம் கோயில், பாடலீசுரர் கோயில், மத்திய சிறைச்சாலை போன்றவை அமைந்துள்ளன. இந்தக் குறுகிய சாலையை கடக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ரயில்வே கேட் மூடப்படுவதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தீர்க்க 1970-லேயே ரயில்வே சுரங்கப் பாதை திட்டம் அமைக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தினோம். அதன் பேரில் கடந்த 93-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை.

வேங்கடபதி எம்.பி.யாக இருந்தபோது இதுபற்றி எடுத்துக் கூறினோம். இந்த சுரங்கப்பாதை லாரன்ஸ் சாலையில் வந்தால் தனக்கு ஆதரவான வசதி படைத்த நகை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த சுரங்கப்பாதை திட்டத்தை மக்கள் பயன்படாதவகையில் கடலூர்-விருத்தாசலம் சாலை தொடங்கி வண்டிப்பாளையம் சென்று அடையும்படி திட்டம் தீட்ட உத்தரவிட்டார் வேங்கடபதி. ஆனால் இது மக்களுக்குத் தெரியவில்லை. பின்பு எங்கள் குழுவின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளும்போதுதான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும், அதன் மூலம் சிலர் பணம் பார்த்ததும் தெரியவந்தது.

இதை எடுத்துக்கூறி அய்யப்பன் எம்.எல்.ஏ.விடம் திட்டத்தை முறையாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். மக்களின் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்ட அவர் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பி பழைய லாரன்ஸ் சாலைக்கே சுரங்கப் பாதை அமைக்க வழிவகை செய்தார். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.-பன்னீர்செல்வம் இதில் தலையிட்டதால் அமைச்-சருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பல கோரிக்கைகள், போராட்டங்கள், நடத்திய பிறகும் பெரும்பான்மை மக்களுக்கு தேவையான இத்திட்டம் தற்போது கடலூர் நகரமன்றத்தின் தீர்மானத்துக்காக காத்துக் கிடக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அய்யப்பனிடம் பேசினோம். “சுரங்கப்பாதை திட்டம் கோப்புகள் அனைத்தும் கையெழுத்-திடப்பட்டு டெண்டருக்காக காத்திருக்கிறோம். விரைவில் டெண்டரும் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மக்கள் நலனுக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்க என்னால் முடியும்” என்றார் சூசகமாக.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு நான் தடையும் செய்யமாட்டேன், தடையாகவும் இருக்கமாட்டேன். என் உதவியை நாடினால் நிச்சயம் நான் செய்வேன். ஆனால் தேவையில்லாமல் எனக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கிறார்கள். அது தோல்வியில்தான் முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாது’’ என்றார்.

‘பிரச்னை உனக்கும் எனக்கும்தான். இதில் அப்பாவிங்க பாதிக்கப்படக் கூடாது...’

-‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசும் இந்த வசனத்தை சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்த்தால் கடலூர் மக்களுக்கு நல்லது.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1437&rid=73

கடலூரில் 2 லட்சம் வீடுகளைக் கட்ட கொட்டிக் கிடக்கிறது எரிசாம்பல்; பயன்படுமா செங்கல் தயாரிப்புக்கு?

மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகளின் தேவை அதிகரிக்கிறது. இதனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான செங்கல்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.கடலூர் மாவட்டத்தில், விளை நிலங்களை அழித்துத்தான் பெரும்பாலான செங்கல் சூளைகள் அமைக்கப்படுகின்றன. சுரங்கத் துறையின் அனுமதி பெற்றுத்தான் செங்கல் சூளைகளை அமைக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால், கடலூர் மாவட்டத்தில் 40 செங்கல் சூளைகள்தான் சுரங்கத் துறையின் அனுமதி பெற்றவை. 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன. தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்துக்குத்தான் மணல் அல்லது சரளைக்கல் போன்றவற்றை எடுக்கலாம் என்பது சுரங்கத்துறையின் விதி. ஆனால் கடலூரில் விதிகளுக்கு மாறாக 15 அடி ஆழம் வரை களிமண், செம்மண், சரளைக்கல் போன்றவற்றை தாராளமாக எடுத்துச் செல்கிறார்கள்.இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று விட்டதாகவும், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.செங்கல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் 4 ஆயிரம் செங்கல், லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெற்றபோது கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதன் விளைவாக, 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. தற்போது விலை ரூ.11 ஆயிரம் வரை உள்ளது.  கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில், தமிழகத்திலேயே அதிக பட்சமாக 2.10 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இவை 4 ஆண்டுகளில் கட்டப்படும் என்கிறார்கள். 2.10 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 20 கோடி செங்கற்கள் தேவை என்று கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இத்தனை செங்கற்களையும் நான்கே ஆண்டுகளில் தயாரித்து அளிக்க வேண்டுமானால் எத்தனை செங்கல் சூளைகள் அமைக்க வேண்டியது இருக்கும்; அதற்காக எத்தனை விளை நிலங்களை சூளைகளாக மாற்ற வேண்டியது இருக்கும். பயன்பாட்டில் உள்ள சூளை நிலங்களில், இன்னும் எத்தனை அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படாதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.அனல் மின் நிலையங்களில் ஏராளமான டன் எரிசாம்பல், கழிவுகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான டன் எரிசாம்பல் சேமிப்பில் உள்ளது. எரிசாம்பல் காற்றில் கலந்து மனிதனின் உடலுக்குள் புகுந்து சுவாசக் கோளாறுகளுக்கும், காசநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகி விடுவதாக மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே எரிசாம்பலை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த, செங்கல் தயாரிப்பில் குறிப்பிட்ட சதவீதம் எரிசாம்பலைக் கலக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருப்பதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.எரிசாம்பல் கலந்த செங்கல்கள் உறுதியானவைதான் என்று தமிழகப் பொதுப்பணித் துறை சான்று அளித்து இருக்கிறது. அதனால் செங்கல் தயாரிப்பில் சிலர் 50 சதவீதம் கூட எரி சாம்பலை கலக்குகிறார்களாம். சிமென்ட் தயாரிப்பிலும் எரிசாம்பல் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் சூளை அதிகரிப்பால் நீராதாரங்கள் பாதிக்கப்படும். சூளையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் அனல் அருகில் உள்ள பயிர்களைப் பாதிக்கும். கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை பயன்படுத்துவது இல்லை. செங்கல் தேவை திடீரென அதிகரிக்கும் சூழ்நிலையில், செங்கல்களுக்கான மண் தேவையை கணிசமாகக் குறைக்கும் வகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பலை கலக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாகக் குறையும்.  என்.எல்.சி. நிறுவனம் எரிசாம்பலை இலவசமாக வழங்க வேண்டும். எளிதாக எடுத்துச் செல்ல பாதைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். இது குறித்து கடலூர் மாவட்டக் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ராஜா கூறுகையில், செங்கல் தயாரிப்பில் எரிசாம்பல் கலக்கலாம். ஆனால் சூளை போடுவோர் அதை சரியான விகிதத்தில், முறையாகக் கலக்காததால் நம்பகத் தன்மை இல்லை. எனவே வீடு கட்டுவோரும் ஏற்பது இல்லை. சாம்பலை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும், எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அரசு, சட்டமாக வெளியிட வேண்டும் என்றார்.

ரூ.25 கோடியில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்

கடலூர் நகராட்சியில் ரூ. 25.35 கோடியில் புதிய சாலைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கு புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகராட்சி இயல்புக் கூட்டம் புதன்கிழமை நகராட்சித் தலைவர் து.தங்கராசு தலைமையில் நடந்தது.  பாதாளச் சாக்கடைத் திட்டத்தாலும் மழையினாலும் பழுதடைந்த சாலைகளை புதியதாக அமைக்க நகராட்சி திட்டம் தயாரித்து உள்ளது. அதன்படி 46.9 கி.மீ. தார்ச் சாலையும், 48.5 கி.மீ. சிமென்ட் சாலையும் (160 சாலைகள்) அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.இச்சாலைகள் ரூ. 25.35 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொகையை அரசு மானியத்துடன் கடனாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசைக் கோரலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்:  நகராட்சி கூட்ட மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைப்பது. இத்தீர்மானத்தை நகராட்சித் துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கொண்டு வந்தார்.  ஆற்றுத் திருவிழாவுக்காக பெண்ணை ஆற்றங்கரையை சுத்தம் செய்த பணிக்கு ரூ. 1.5 லட்சம் அனுமதிப்பது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதுயுகம் மற்றும் குட்லக் என்டர்டெய்ன்மெண்ட் சர்வீசஸ்  நிறுவனத்துக்கு பொருள்காட்சி நடத்த தடையில்லாச் சான்று வழங்குவது.கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தற்போது ரூ.424 லட்சத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.505 லட்சத்துக்கு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகளை பார்வையிட மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 2 மேற்பார்வையாளர் பணியிடங்களை, ஒப்பந்தப்புள்ளி கோரி மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிரப்ப அனுமதிக்கலாம்.இதனால் ஆண்டுச் செலவு ரூ. 61 ஆயிரம். கடலூர் நகராட்சி பகுதியில் 34 குடிசைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 14,911 குடும்பங்களின் வறுமை மற்றும் வாழ்வாதார நிலைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணிக்கு, ரூ. 2.5 லட்சம் அனுமதிப்பது.  நகராட்சி சார்பில் கம்மியம்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ள நவீன எரிவாயு தகன மேடையை எவ்வாறு செயல்படுத்துவது, நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது என்பது பற்றி நகராட்சித் தலைவர் உள்ளிட்டோர் பழநி, ஈரோடு நகராட்சிகளுக்குச் சென்று பார்த்து வந்தச் செலவுத் தொகை ரூ. 60 ஆயிரம் அனுமதிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட் டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு : கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் கடலூர் கலெக் டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் மற்றும் சப் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், தாசில் தார் கள், பி.டி.ஓ.,க்கள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் சந்தேகங்கள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் 'இத் திட்டம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் உள்ள 405 கிராமங்களில் நடக்கிறது. இதுவரை 47,221 வீடுகள் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. 19 கிராமங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந் துள்ளது.மக்கள் விழிப்புடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கெடுக்கும் பணிக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்: புதிது புதிதாக முளைக்கும் குடிசைகள்

கடலூர் மாவட்டத்தில் தற்போது பல இடங்களில் குடிசை வீடுகள், புதிது புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளைக் காரை வீடுகளாக மாற்றுவதற்காக கலைஞரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மார்ச் 29-ம் தேதி குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.95 லட்சம் குடிசைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.உண்மையான குடிசை வீடுகளைக் கண்டறிய ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப் பணியாளர் என மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுக்கள் குடிசைகளை கணக்கடுக்கும் பணியை மார்ச் 29-ம் தொடங்கி நடத்தி வருகிறது. கணக்கெடுக்கும் பணிக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.29-ம் தேதி கடலூர் அருகே கன்னாரப்பேட்டை கிராமத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். குடிசைகள் கணக்கெடுக்கும் பணிகுறித்து பொதுமக்களுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லை, தகவல் முறையாகச் சென்றடையவில்லை என்பதை அப்போது ஆட்சியர் கண்டறிந்தார், எனவே கலைஞர் வீட்டுவசதித் திட்டம் குறித்து நன்றாக விளம்பரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக மார்ச் 29-ம் தேதி 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும் 379 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பின் போது குடும்ப அட்டை, மின்இணைப்பு அட்டை, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணம் (பட்டா அல்லது உரிமைப் பத்திரம்) பயனாளிகள் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் புதிது புதிதாகக் குடிசை வீடுகள் முளைக்கத் தொடங்கி உள்ளது. கடலூரை அடுத்த கோண்டூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே திடீரென 20க்கும் மேற்பட்ட குடிசைகள் போட்டப்பட்டு இருந்தன (படம்).இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அந்த இடத்தில் மருதாடு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 42 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர். கடந்த 18 ஆண்டுளுக்கு முன்பே அவர்களுக்குப் பட்டா வழங்கியும் நிலத்தை அளந்து கல் நட்டுக் கொடுக்கவில்லையாம். நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அண்மையில்தான் சாதமாகத் தீர்ப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகட்ட வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதி உடனடியாக குடிசைகளை அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் தனித்தனியாகவும் குடிசை வீடுகளைப் புதிதாகக் கட்டி வருகிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் கிராமங்களில், பல குடிசை வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள்.  இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குடிசைகள் எண்ணிக்கை உத்தேச மதிப்பீட்டுக்கும், உண்மை நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு வேகமாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 28 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். குடிசை வீடுகள் என்பதற்கு 4 ஆவணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் திடீரென உருவாகும் குடிசைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமித்துக் குடிசை அமைத்து இருப்போர் ஆகியோருக்கு இது பொருந்தாது. நெடுஞ்சாலையோரம் உள்ள குடிசைகளுக்கு புதிதாக குறியீடு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் அதிகம். எனவே கடலூர் மாவட்டத்தில் அதிக வீடுகள் கட்ட வாய்ப்பு இருக்கிறது என்றார் ஆட்சியர்.

'அகம்' நானூறு!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து, முக்கிய நகரங்களில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறது, மின்வாரிய ஒழுங்காற்றுக் குழுமம். இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும், மின்கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் சொல்லப்போகிறார்கள்.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவின்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ.4 ஆகவும், 400 யூனிட் வரை ரூ.4.25 ஆகவும், 600 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75 ஆகவும் (வணிக மின்கட்டணத்துக்கு நிகராக)  தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக் கேட்புக்குப் பிறகு இதில் சில காசுகள் மட்டுமே மாறுபடும் என்று தெரிகிறது.
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்காற்றுக் குழுமம் தொடர்ந்து வலியுறுத்தக் காரணம், மின்உற்பத்தி செலவுக்கும் நுகர்வோருக்கு மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது அதன் உண்மையான விலைக்கும் தொடர்பில்லை என்பதுதான். தற்போதைய இந்த ஒழுங்காற்றுக் குழுமம் கட்டண உயர்வுக்குச் சில வரையறையை ஏற்படுத்தியுள்ளது.  நுகர்வோரிடம் மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது ஏற்படும் செலவையும் சேர்த்து ஒரு யூனிட்டுக்கு விலை நிர்ணயித்தல், நுகர்வோரின் வாங்குதிறன், மாநில அரசின் சமூக பொருளாதாரக் கொள்கை ஆகிய வரையறைகளைப் பார்க்கும்போது, வீட்டு மின்சாரக் கட்டணத்தை, தமிழக அரசின்  சமூகப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் நிர்ணயிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.
தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை, சிலவற்றைத் தவிர்த்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கட்டண உயர்வையும் தவிர்க்கலாம். அப்படியும்கூட, மின்கட்டணம் விதிக்க வேண்டும் என்றால், அந்தச் சுமையை வசதி உள்ளவர்கள் மீது ஏற்றி, வசதியில்லாத மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மீது அந்த சுமையை இலேசாக வைக்கலாம்.
2009-ம் ஆண்டு தமிழகத்தின் மின்சாரத் தேவை 9560 மெகாவாட் என்றால், நடப்பாண்டில் 10,000 மெகாவாட் என்பதாக உயரும் என்று மின்வாரியம் கணித்துள்ளது. தமிழகத்தின் மின்உற்பத்தி அளவு 8200 மெகாவாட் மட்டுமே. மின்உற்பத்தியை உயர்த்த திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அமலுக்கு வராத நிலையில் தற்போதைய தேவையைச் சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங்கியாக வேண்டும். இதன் மதிப்பு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இது நிச்சயம், ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாரியத்துக்குக் கூடுதல் சுமை. 2008-09-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.19,000 கோடி. ஆனால் மின்வாரியத்தின் மொத்தச் செலவு ரூ.24,000 கோடி. ஆக ரூ.5,000 கோடி இழப்பு. இந்த இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை என்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது.
மின் தேவையைச் சமாளிக்க மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, விநியோகத் தடத்தில் மின்இழப்பைக் குறைக்க வேண்டும் அல்லவா! ஆனால் அதைச் செய்வதற்கு மட்டும் தமிழ்நாடு மின்வாரியம் எந்தவொரு தனிக்கவனமும் செலுத்தவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தின் விநியோகத் தடத்தில் மின்இழப்பு 19.3 சதவீதமாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டும் மின்சார  ஒழுங்காற்றுக் குழுமம், இதைக் குறைத்தாலொழிய மின்வாரிய இழப்பு குறைய வாய்ப்பே இல்லை என்று சொல்லியும், இதைச் சரிசெய்ய இயலவில்லை. இந்த வழித்தட மின்இழப்பை பாதியாகக் குறைத்தாலே தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சுமார் 900 மெகாவாட் மிச்சமாகும். இதைக் கொண்டு மற்றவர்களிடம் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்காமலேயே மாநிலத்தின் தேவையைச் சமாளிக்க முடியும்.
அடுத்ததாக மின்திருட்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம், மதுரையில் உள்ள ஒரு தொழிற்கூடம் 9 மாதங்களில் ரூ.7.55 கோடி அளவுக்கு மின்சாரத் திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மட்டுமே இத்தகைய மின்திருட்டில் ஈடுபடும் என்றால், இன்னும் இதுபோன்ற மின்திருட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தது 5 சதவீதம் என்றாலும்கூட, எத்தகைய இழப்பை தமிழ்நாடு மின்வாரியம் சந்தித்து வருகிறது என்பதை உணர முடியும்.
தற்போது பொதுக்கூட்டங்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு அமைக்கப்படும் மின்விளக்குகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீள்கின்றன. மேடை அலங்காரங்கள், தலைவர்களின் உருவத்தில் ஒளிரும் விளக்குகள் என மிகமிக அதிகமான மின்சாரம், அதிலும் குறிப்பாக மக்கள் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் வேளையாகிய மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை- ""எடுத்துக்கொள்ளப்படுகிறது''. இதற்குக் கட்டணம் வசூலிப்பதாக மின்வாரியம் சத்தியம் செய்யலாம். ஆனால் அந்தக் கட்டணம், பிற கட்சியினர் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்காக ஏதோ பெயரளவில் வாங்கப்படும் தொகையே தவிர, நிச்சயமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் அளவுக்கான கட்டணங்கள் இல்லை என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
வழித்தட மின்இழப்பு, மின்திருட்டு ஆகியவற்றைப் பாதியாகக் குறைப்பதும், ஆடம்பர விழாக்களுக்கான மின்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதற்கு மிகைக் கட்டணம் நிர்ணயித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தற்போது அரசுக்கு ஏற்படும் இழப்பின் பெரும்பகுதியைக் குறைத்துவிட முடியும். அவ்வாறு குறைக்க முடிந்தால், வீட்டு மின்கட்டணத்தை மாற்றியமைக்காமலேயே மின்வாரியத்தின் இழப்பைச் சரிக்கட்ட முடியும்.
மேலும், இன்றைய தேதியில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திலும் 5 குழல் விளக்குகள், ஒரு டிவி, நான்கு மின்விசிறிகள், ஒரு கிரைண்டர், ஒரு மிக்ஸி, ஒரு வாஷிங் மெஷின், நீரேற்றும் மோட்டார், ஒரு இஸ்திரிப்பெட்டி ஆகியன தவிர்க்க முடியாதவை. குடும்பத் தலைவர், அவரது பெற்றோர், மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட குடும்பத்துக்கு மேற்சொன்ன மின்சாதனங்களின் பயன்பாடு சராசரியாக என்ன இருக்கும், இரண்டு மாதங்களுக்கு அக்குடும்பத்தின் மின்தேவை எவ்வளவு ஏற்படும் என்பதை கணித்தால், 400 யூனிட்டுகளுக்குக் குறையாது. ஆகவே வீடுகளுக்கு மட்டும் இரு மாதங்களில் 400 யூனிட்டுக்கு மிகுந்தால் மட்டுமே கட்டணத்தை உயர்த்த வேண்டுமே தவிர, அதற்குக் கீழாக ஒரு ஸ்லாப் நிர்ணயிப்பது, நடுத்தர மக்களின் முதுகில் மற்றுமொரு சுமை என்பதை தமிழக அரசு புரிந்துகொண்டால் புண்ணியமாக இருக்கும்!


நன்றி தினமணி
 தலையங்கம்

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,448 கோடி திட்ட மதிப்பீடு தயார்

மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ஆயிரத்து 448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க முன்னோடி வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கான கடன் திட்டம் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயத்திற்கு 1,017 கோடியே 24 லட்சம்,  தொழில்களுக்கு 66 கோடியே 89 லட்சம், இதர முன்னுரிமை கடன்களுக்கு 364 கோடியே 40 லட்சம் என மொத்தம் 1,448 கோடியே 53 லட்சம் ரூபாய் கடன் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை வர்த்தக வங்கிகள் 1,139 கோடியே 22 லட்சம், கூட்டுறவு வங்கிகள் 219 கோடியே 16 லட்சம், பல்லவன் கிராம வங்கி 82 கோடியே 67 லட்சம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 7 கோடியே 48 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்ட அறிக்கையை வங்கியாளர்கள் கூட்டத்திற்கு தலைமை 

தாங்கிய கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டார். நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் ராஜகோபாலன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முத்துக்கருப்பையா, இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் பிற வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னோடி வங்கி மேலாளர் கபிலன் நன்றி கூறினார்.