கோரிக்கை பதிவு

கடலோரக் காவல் படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலோரக் காவல் படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீனவன் அநாதை..? கடல் புறம்போக்கு?


டல்புற மீனவன் மறுபடியும் கதிகலங்கிக் கிடக்கிறான்... இந்த தடவை அவன் பயம் உயிர் மட்டுமல்ல... ஒட்டுமொத்த வாழ்வாதாரமும்தான்!
'தாய்மடி', 'கடலம்மா' என்றெல்லாம் கொண்டாடும் கடலைத் தங்களிடமிருந்து மொத்தமாகப் பிரித்துவிடுவார் களோ என்று அஞ்சிக் கிடக்கிறான் அவன். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் 'மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மைச் சட்டம்' என்ற புதிய சட்ட முன்வரைவு, நாட்டின் மொத்த மீனவர்களையும் அப்படிப் பதறவைத்து விட்டது.
''இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மீனவர்களுக்கு இரண்டே வழிதான்... கடலோரத்தை விட்டு வேறு தொழில் பார்க்கப் போக வேண்டும். இல்லையென்றால், பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களிடம் கூலியாட் களாக சேரவேண்டும்...'' என்று அதிர்ச்சி தெறிக்கும் பார்வையோடு நம்மிடம் ஆரம்பித்தார், பேராசிரியர் வறீதய்யா கான்ஸ்டன்டின். நாகர்கோவில்காரரான இவர் 'நெய்தல் சுவடுகள்,' 'ஆழிப் பேரிடருக்குப் பின்,' 'அணியம்' போன்ற கடலோர வாழ்வடங்கிய நூல்களை எழுதியவர். இந்த சட்ட முன்வரைவு பற்றி விளக்கமாகப் பேசினார்.
''சர்வதேச சட்டப்படி, ஒவ்வொரு நாட்டின் கடற்கரை யில் இருந்து 12 நாட்டிக்கல்
மைல் தூரம்தான் அந்த நாட்டின் கடல் எல்லை... அதாவது, மீன்பிடி எல்லை. இதற்குள்தான் மீன்பிடிக்கலாம். அதுபோக, 200 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு உள்ள கனிமவளம், மீன்வளம் எண்ணெய் வளம் அனைத்தும் அந்தந்த நாட்டுக்குத்தான். இந்தியாவில், மாநில அரசுகள்தான் மீன்பிடி நிர்வாகத்தைக் கவனிக்கின்றன. கடலுக்குள் மீன்பிடிக்கும் படகுகள் லைசென்ஸ் வாங்குவதையும், புதுப்பிப்பதையும் மாநில அரசிடமே செய்துகொள்ளலாம். இந்த புதிய சட்டம், மாநில அரசின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசிடம் மாற்றிவிடுகிறது. இது அமலானால், கட்டுமரம் வைத்திருப்பவன்கூட லைசென்ஸ் வாங்க டெல்லிக்குத்தான் போகவேண்டும். 'எந்த இடத்தில், எத்தனை நாட்கள் மீன் பிடிக்கப் போகிறேன்' என்று முன்கூட்டியே குறிப்பிடவேண்டுமாம்! சர்வே நம்பர், சதுர அடி கணக்கெல்லாம் போட்ட பிறகு மீன் பிடிக்க, கடல் என்ன புறம்போக்கு நிலமா? அதோடு, 'என்ன வகையான மீனை, என்ன முறையில் பிடிக்கப் போகிறோம்?' என்று குறிப்பிட்டால்தான் லைசென்ஸாம்! பல வகையான வலைகளும் தேவைதான். ஒவ்வொரு வகை வலைக்கும் சில மீன்கள் சிக்கும். எந்த மீன், என்ன வலை என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்வது எப்படி சாத்தியம்? இன்னொரு நிபந்தனை, 'என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்பது! இந்த நிபந்தனை, வயிற்றுப்பாட்டுக்கு மீன் பிடிப் பவன், தொழில்ரீதியாக பிடிப்பவன் என்று இரண்டு வகையாக மீனவர்களைப் பிரிக்கிறது. இந்த சட்டப்படி, எந்த வகை படகும் 12 நாட்டிக்கல் மைல் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது. அதை மீறி மீன்பிடித்தால், 9 லட்ச ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை! எந்த வகைப் படகானாலும் ஒரு நேரத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமான மீன் பிடிக்கக்கூடாது. மீறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், கோஸ்ட் கார்டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சகல அதிகாரங்களும் கொண்ட அவர்கள், மீனவர்களை இந்திய பிரஜைகளாகவே மதிப்பதில்லை! அவர்கள் படகை மறித்து, பிடிக்கப்பட்ட மீனின் வகை, மதிப்பு, என்ன வகை வலை என அனைத்தையும் பரிசோதிக்கலாம். பறிமுதல் செய்யவும் அதிகாரம் உண்டு. இதுபற்றி குறிப்பிடும்போது, 'உங்களை கைது செய்து கோஸ்ட் கார்டு ஆபீஸர் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவே கருதப்படும். தவறு இழைக்கலாம் என்ற அனுமானத்தின் பேரில் முன்கூட்டியே கைது செய்யும் அதிகாரமும் அவர் களுக்கு உண்டு. ஒருவேளை, கைதுக்கான காரணங்கள் தவறானவை என பின்னர் தெரியவந்தால், கோஸ்ட் கார்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது!' என்று அரசின் சட்ட முன்வரைவில் தெளிவாக உள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும்கூட இத்தனை மோசமான சட்டம் வரவில்லை. விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளவே தகுதியற்ற இந்த சட்டத்தை, மீனவர்களின் கருத்தைக்கூட கேட்காமல் நிறைவேற்றத் துடிப்பதில் துளியும் நியாயமில்லை!'' என்று பொங்கிய வறீதய்யா, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு கோடி இந்திய மீனவர்களில், 10 லட்சம் பேர் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவர்கள். இப்படி இந்த மரபுவழி மீனவர்களை கடல் புறத்தில் இருந்து அப்புறப் படுத்தி, ஒட்டுமொத்தமாக பன்னாட்டு நிறுவனங்களிடம் கடலை பட்டா போட்டு ஒப்படைப்பதுதான் இந்திய அரசின் திட்டம். 'நீங்கள் என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கிறீர்கள்?' என்ற கேள்வியிலேயே அது தெரிகிறது.
ஏற்கெனவே 'கடற்கரையோர மேலாண்மைத் திட்டம்' என்று மீனவர்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு செயல்படுத்த முனைந்தது. ஆனால் அது, கருத்துக் கேட்புக்கு விடப்பட்டபோது, நாடு முழுவதும் மக்களிடம் எதிர்ப்பு... அதில் தோற்ற அரசு, இப்போது புதிய வடிவத்துடன் மீனவர்களை வெளியேற்ற வந்திருக்கிறது.இது மீனவர்களின் பிரச்னை மட்டுமில்லை... இந்திய மக்களில் சரிபாதி, மீன் சாப்பிடுபவர்கள். 'ஒமேகா கொழுப்பு அமிலம்' என்ற கடல் மீனில் இருக்கும் புரதச் சத்து, மனித மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. இன்னும் சில ரத்த நோய்களுக்கும் மருந்து! ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 15 கிலோ மீன் சாப்பிடுகின்றனர். இந்தியர்கள் 7 முதல் 8 கிலோ மீன்களே சாப்பிடுகின்றனர். அதுவும் புரதச் சத்துள்ள மீன்கள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால், இந்திய கடல் எல்லையில் இறால், சிங் இறால், மஞ்சள் துடுப்பு சூறை, பாறை, கணவாய் போன்ற புரதச் சத்துள்ள ஏராள மீன்கள் உள்ளன. இவை பிடிக்கப் பட்டதும், கரைக்கே வராமல் நடுக்கடலில் வைத்தே வெளிநாட்டுக் கப்பல்களுக்கு கைமாற்றப்படுகின்றன! அந்நியச் செலாவணி என்று இதை நியாயப்படுத்தும் அரசு, இத்தகைய வெளிநாட்டு முதலீடுள்ள கப்பல்களுக்கு வெறும் 16 ரூபாய் என்ற உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குகிறது. கஷ்டப்பட்டு மீன்பிடித்து, அதை உள்ளூர் சந்தைக்குக் கொண்டுவரும் இந்திய மீனவனுக்கோ, ஒரு லிட்டருக்கு வெறும் ஒரு ரூபாய்தான் மானியம்! ஏற்றுமதியாகும் மீன்களுக்கு அந்த நிறுவனங்கள்தான் விலை நிர்ணயிக்கின்றன. சராசரியாக ஒரு கிலோ 186 ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், அதே மீன்களுக்கு நம் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோவுக்கு 250 ரூபாய் வரை கிடைக்கிறது. இப்படி, சகல வகையிலும் மீனவர்களை வஞ்சிக்கிறது அரசு. 1981-ல் வெளிநாட்டுக் கப்பல்களை ஒழுங்குபடுத்த ஒரு சட்டம் உருவானது. கண்காணிப்பது, சோதனையிடுவது போன்ற அந்தச் சட்ட அம்சங்களை அப்படியே இந்த புதிய சட்டத்தில் புகுத்தியுள்ளனர். அதாவது, இந்திய மீனவர்களை வெளிநாட்டு ஆட்கள் போல நடத்துகின்றனர்! கடல் தொழிலின் மேன்மையும், மீனவர்களின் வாழ்க்கையும் புரியாதவர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த சட்டத்தால் பயனடையப்போவது, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள்தான்... யாருமே ஆதரவுக்கு வராத அநாதை மீனவர்கள் அல்ல!'' என்று கொதிப்புடன் முடித்தார் பேராசிரியர். - பாரதி தம்பி 


கடலோர கிராமங்களில் நாளை 2ம் கட்டமாக கைரேகை பதிவு

கடற்கரை பாதுகாப்பையொட்டி கடலோர கிராமங்களில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு சேகரிக்கும் பணி 2ம் கட்டமாக நாளை துவங்கிறது.கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு கடலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிப்பது தொடர்பாக முதல் கட்டமாக ஏற்கனவே ஒவ்வொரு தனிநபர் பற்றி விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவை சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணி 2ம் கட்டமாக நாளை (22ம் தேதி) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

இப்பணியின்போது கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகைப்படம் எடுக்கும் கீழ்கண்ட நாளில் அந்தந்த கிராமங்களில் உள்ள மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்வர். காயல்பட்டில் 22, 23 தேதிகளிலும், ஆண்டார்முள்ளிப்பள்ளம்,குடிகாடு கிராமங்களில் 22, 23 தேதிகளிலும், பச்சாங்குப்பம் கிராமத்தில் 22 முதல் 24 வரையிலும், சிங்கிரிகுடியில் 23ம் தேதியும், குண்டுஉப்பலவாடியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தியாகவல்லி, திருச்சோபுரத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் நடைபெறும்.ஏற்கனவே புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் அந்தந்த மையங்களில் வந்து புகைப்படம் மற்றும் கைரேகையினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை! -கசந்துபோன கடலூர் மீனவர்கள்

நம்மவர்களையே அடித்த கடலோரக் காவல்படை!
-கசந்துபோன கடலூர் மீனவர்கள்

கடலுக்குள் 25 கிலோ மீட்டரை கடந்து மீன் பிடிக்கக் கூடாது என்ற புதிய சட்டம் வரப்போகிறதாம். இந்த மீன்பிடி மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த மசோதா மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆந்திர, கேரள மீனவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறது மீன்பிடி மசோதா.


இந்த நிலையில், கடந்தவாரம் கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல, ‘25 கிலோ மீட்டர் தாண்டி ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்ட கடலோரக் காவல்படையினர் அவர்களை அடித்து அவர்களின் படகையும் சேதப்படுத்தினர். இச்சம்பவத்துக்குப் பிறகு வெடவெடத்துக் கிடக்கிறார்கள்.

25 கிலோ மீட்டர் கடந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லக் கூடாது என்பது மீன்பிடி மசோதாவின் ஓர் அங்கம். இதைக் கண்டித்தும், தாக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவர்களை சுதந்திரமாகச் செயல்பட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட மீனவ அமைப்புகளான ‘விடுதலை மீனவ வேங்கைகள்,’ ‘வீரவிடுதலை வேங்கைகள்’, ‘மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டத்தில் குதித்துள்ளன.

கடலோரக் காவல் படையினரால் தாக்கப்பட்ட மீனவர் முருகனை சந்தித்தோம்.

“போனவாரம் சாயங்காலம் மூணு மணிக்கு அஞ்சு படகுல தொழிலுக்குப் போனோம். முப்பது கிலோ மீட்டர் போய் வலையை விரிச்சோம். அப்போ, எங்ககிட்ட வந்து நின்ன ஒரு கப்பலிலிருந்து வெள்ள டிரெஸ் போட்ட ஆபீசருங்க அஞ்சு பேர் வந்தாங்க.

நாங்க இருந்த படகுலயே இறங்கிட்டாங்க. எங்ககிட்ட வந்து துப்பாக்கிய காட்டி மிரட்டினாங்க. எவ்ளோ சொல்லியும் கேட்காம எங்களை அடிச்சாங்க. ‘அடையாள அட்டை கொடு’ என்று கேட்டார்கள். எங்கக்கிட்ட இல்லை. அதுக்குள்ள படகுல இருந்த வலையை எல்லாம் சேதப்படுத்திட்டாங்க.

அவங்களுக்குப் பயந்து நாங்க கரைக்குத் திரும்பிட்டோம். மீன்வளத்துறை தனி அதிகாரி அப்பர்கிட்ட இதுபற்றிச் சொன்னோம். அவர் எங்கக்கிட்ட புகார் எழுதி வாங்கிக்கிட்டாரு. 15 வருஷமா தொழில் செய்யறோம். இதுபோல நடந்ததேயில்லை. இது எங்களுக்குப் புதுசா இருக்கு. அதனால தொழிலுக்குப் போகவே பயமா இருக்கு.

இதுசம்பந்தமா கலெக்டரை போய்ப் பார்த்து சொன்னோம். அவரும் எங்க ஊருக்கு வந்து சமாதானம் சொல்லிட்டு, விசாரிக்கறதா சொல்லியிருக்காரு. இதுக்கு ஒரு தீர்வு வராம கடலுக்குப் போறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒருவாரமா தொழிலுக்குப் போகலை” என்றார் சோகத்தோடு.

இவரைத் தொடந்து ஊர்ப் பிரமுகரான சாமிநாதனிடம் பேசினோம்.

“கடலம்மாவை நம்பி எங்க ஊருல 700 குடும்பங்கள் இருக்கு. ஆனா இந்தக் கடலோரக் காவல்படை போலீஸ்காரங்க திடீர்னு முரட்டுத்தனமாத் தாக்கியிருக்காங்க. கேட்டா, ‘25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல வராதீங்க’ன்னு சொல்றாங்க.

ஆழமான பகுதியிலதான் வெலை உசந்த மீன்கள் கிடைக்கும். இதையே நம்பி வாழும் எங்களை இதைச் செய்யாதீங்க.. அதைச் செய்யாதீங்கன்னு சொன்னா எப்படி? இதுவரைக்கும் மீன்பிடிக்க எந்தச் சட்டதிட்டமும் எங்களுக்கு இருந்ததில்லை. இப்பதான் ஏதோ புதுசா சொல்றாங்க.

படகுல இத்தனை பேருதான் போகணும்னு வரைமுறைப் படுத்துறாங்க. இதுசம்பந்தமா எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லலை. இவங்களா ஒரு சட்டத்தை வச்சிக்கிட்டு எங்களை வஞ்சிக்கிறாங்க. செல்வநாதன், கோபி, அமிர்தலிங்கம், கார்த்திகேயன், ஆறுமுகம், மனோகரன், முருகன்னு மீன்பிடிக்கப் போன பலரையும் அடிச்சி அவங்க படகையும் சேதப்படுத்தி வலையையும் அபகரிச்சிக்கிட்டாங்க. இதற்கான நிவாரணத்தை உடனடியா வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வரணும். ‘நீங்க எல்லாம் உடனே அடையாள அட்டை வாங்கிக்கணும்னு சொல்லுறாரு கலெக்டரு. தொழிலுக்குப் போற நாங்க உயிரையே கையில பிடிச்சிட்டு போய்வர்றோம். இதுல அடையாள அட்டையை எங்க பாதுகாக்கிறது” என்றார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். “இப்படி ஒரு சம்பவம் இதுதான் முதன்முறை. இது சம்பந்தமாகக் கடலோரக் காவல் படை அதிகாரிகளிடம் பேசினேன். ‘இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது’ என்று உறுதியளித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளோம். இனிமேல் இவங்க தொழிலுக்குப் போகும்போது அடையாள அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் படகு சம்பந்தமான சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக எடுத்துச் சென்று மீனவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” என்றார்.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பனிடம் பேசினோம்.

“இந்தச் சம்பவம் கேள்விப்பட்ட உடனே விசாரிக்கத் தொடங்கினேன். எப்போதும்போல கடலோரக் காவல் படையினர் மீனவர்களை விசாரணை செய்வது வழக்கம். அப்போது இந்த மீனவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் இவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். உடனே அதுசம்பந்தமான அதிகாரிகளிடம் பேசினேன். அதில் சிங் என்ற உயர் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோரை அழைத்துச் சென்று அந்த ஊரில் சமாதானக் கூட்டம் போட்டு அவர்களை மீண்டும் தொழிலுக்குப் போகும்படி வலியுறுத்தி உள்ளேன். விரைவில் தொழிலுக்குச் செல்வார்கள் என நம்புகிறேன்” என்றார் ஐயப்பன்.

இப்போதே மீனவர்களுக்கு உள்ளூர் போலீஸ், கடலோரக் காவல்படை, கடற்படை என மூன்றடுக்குத் தொல்லை இருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு கொண்டுவரப் போகும் இந்தப் புதிய மசோதா, மீனவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.