கோரிக்கை பதிவு

பாதாள சாக்கடைத் திட்டத்தால் அரசுக்கு அவப்பெயர்

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முறையாக நடைபெறாததால், அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

ரூ. 44 கோடியில் 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய கடலூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், 30 மாதங்களுக்கு மேலாகியும் முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விபத்துகள் அதிகரித்து விட்டன. எனவே பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர், வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம் முடிவு அடையாததால் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நகராட்சிக்கும் அவப்பெயர்.
அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தனியார் பஸ் தொழிலாளர்கள் இதற்காக போராட்டம் நடத்தவும், நகராட்சித் தலைவர் அவர்களை அழைத்துப் பேசவும் வேண்டிய நிலையும் ஏற்பட்டு விட்டது.
கடந்த 9 மாதங்களில் மட்டும் 115 பேர் சாலை விபத்துகளில் இறக்கக் காரணமான தனியார் பஸ் தொழிலாளர்கள், சாலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
சாலைகள் மோசமாக இருக்கும் போதே 115 பேரைச் சாகடித்தவர்கள், சாலைகள் நன்றாக இருந்தால் மேலும் 115 பேரை சாகடித்து இருப்பார்கள்.
நாமே வம்பை விலைகொடுத்து வாங்கி இருக்கிறோம். எனது வாகனம்கூட இந்தச் சாலைகளில் 10 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்ல முடியவில்லை.
சைக்கிளில் செல்பவர்களின் நிலை மேலும் மோசம். அமைச்சர்கள் உயர்அதிகாரிகள் வரும்போதெல்லாம், பிரச்னையாக இருக்கிறது.
திட்டம், நிதி, கான்டிராக்ட், அனைத்தையும் கொடுத்து இருக்கிறது அரசு. ஆனால் அரசுத் துறைகளிடையே இணக்கம் இல்லாததால், திட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இனி இத்திட்டம் வேகமாகவும் தரமானதாகவும் நடக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் அன்றாடம் எனக்கு அறிக்கை தர வேண்டும். நாளைமுதல் நகராட்சித் தலைவர் வேறு வேலைகளைப் பார்க்க மாட்டார். நகராட்சி சாலைகள், கிராமச் சாலைகளைவிட மோசமாகி விட்டன. இதனால் நகராட்சித் தலைவர், கிராம ஊராட்சித் தலைவராகி விட்டார். நான் ஒருநாள் விட்டு ஒருநாள் இப்பணிகளை ஆய்வு செய்வேன். நகராட்சித் தலைவர் தினமும் ஆய்வு செய்வார். மக்கள் குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும்.மழைக் காலத்துக்கு முன் முக்கியப் பணிகளை முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலூர் கோட்டாட்சியர் செயல்படுவார் என்றார் ஆட்சியர். நகராட்சித் தலைவர் து.தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் உறுப்பினர்கள் குறைகளைத் தெரிவித்தனர். குடிநீர் வாரிய செயற்பொறியாளர் கே.ரகுநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் நடனசபாபாதி, நகராட்சி ஆணையர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக