கோரிக்கை பதிவு

கடலூரில் விஷக் காய்ச்சல்

கடலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் ஒரு வாரமாக விஷக்காய்ச்சல் பரவி வருகிறது.

ஏற்கெனவே சிப்காட் ரசாயன ஆலைக் கழிவுகளால் கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராமங்கள் காற்றும் நிலமும் மாசுபட்டதாகி விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் சாலைகள் கிராமச் சாலைகளைவிட மோசமாகி, புழுதி மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் இங்கு சுவாசக் கோளாறுகள், சளித்தொல்லை, அதைத் தொடர்ந்து ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்குக் குறைவே இல்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்டு இருக்கும் பருவநிலை மாற்றம், நோய்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. பகல் பொழுதில் கடும் வெயில், அதிகாலை 3 மணி முதல் பனிப்பொழிவு உள்ளது.

இதனால் கடலூர் நகரிலும் காரைக்காடு செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம் கிராமங்களிலும் ஏராளமான மக்கள் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விஷக் காய்ச்சல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் வியாழக்கிழமை கூறியது: கடலூர் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 3,500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இது படிப்படியாக உயர்ந்து கடந்த 19-ம் தேதி 5,184-ஐ தொட்டது. வியாழக்கிழமை 5,838 பேர் சிகிச்சைக்கு வந்தனர். மொத்த புறநோயாளிகளில் 2 சதம் பேர் காய்ச்சல் நோய் கண்டவர்களாக இருப்பர். இது தற்போது 5 சதமாக உயர்ந்து இருக்கிறது. எனவே 20-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் அழைத்து தகுந்த அறிவுரை வழங்கி இருக்கிறோம்.

தேவையான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளன. ரத்தப் பரிசோதனை செய்ததில் இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இது 3 முதல் 5 நாள்கள் வரை நீடிக்கும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரும் பீதிஅடையத் தேவையில்லை என்றார் ஜெயவீரகுமார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஆர்.மீரா இதுபற்றிக் கூறியது:
கடந்த 10 நாள்களாக சங்கொலிக்குப்பம், காரைக்காடு, செம்மங்குப்பம் பகுதி மக்களுக்கு, விஷக் காய்ச்சல் காணப்பட்டது.10 நாள்களாக எங்களது மருத்துவக்குழு அப்பகுதிகளில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறது.
ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சிக்கன் குனியா போன்ற நோய் எதுவும் இல்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட சாதாரணக் காய்ச்சல்தான். யாரும் பீதி அடையத் தேவையில்லை. இந்தக் காய்ச்சலுக்கு வேறு காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பருவநிலை மாற்றம் இருந்த போதிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இத்தகைய காய்ச்சல் இல்லை என்றார் டாக்டர் மீரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக