கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரமபி விட்டன. இதனால் உபரியான 26 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வீணாகக் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு வாரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மிகப்பெரிய ஏரியான வீராணத்தின் மொத்த உயரம் 47.5 அடி. கொள்ளிடம் கீழணையில் இருந்து பெறப்படும் காவிரி நீர் நிறுத்தப்பட்டு விட்ட நிலையிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் வீராணம் ஏரிக்கு 1800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீர் முழுவதும் வெள்ளியங்கால் வடிகால் வாய்க்காலில் 1000 கன அடி வீதமும், வெள்ளாற்றில் 600 கன அடி வீதமும் கடலுக்குத் திறந்து விடப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் வீராணம் ஏரியின் பாதுகாப்பைக் கருதி 43.5 அடிக்கு மேல் நீரைத் தேக்க வேண்டாம் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனினும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை 44 அடியாக உயர்ந்தது. எனவே ஏரிக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கொள்ளிடம் கீழணைக்கு கல்லணையில் இருந்து பெறப்படும் காவிரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் மழை காரணமாக அணைக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த நீர் முழுவதும் கடலில் திறந்து விடப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வடவாறில் கலக்கும் மழைநீராலும், நேரடி பாசனப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீராலும் மணவாய்க்காலில் (வடிகால்) 10 ஆயிரம் கன அடி நீர், வெள்ளியங்கால் வடிகால் வாய்க்கால் மூலம் கடலுக்குச் சென்று கொண்டு இருப்பதாக, கீழணை விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயமூர்த்தி தெரிவித்தார். வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை நிரம்பி விட்டதால் இவற்றில் இருந்து சுமார் 13 ஆயிரம் கன அடி நீர் பரவனாற்றில் திறந்து விடப்பட்டு கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. பெண்ணையாறு, கெடிலம் ஆறு ஆகியவற்றில் சுமார் 2 ஆயிரம் கனஅடி நீர் எதற்கும் பயன்படாமல் கடலில் கலந்து கொண்டு இருக்கிறது. வெலிங்டன் ஏரியில் கரை சீரமைப்புப் பணிகள் நடப்பதால், ஏரிக்கு வரும் 1400 கன அடி நீர் வெள்ளாற்றில் திருப்பி விடப்பட்டு இருக்கிறது. கொள்ளிடம், வெள்ளாறு, பரவனாறு, மணிமுத்தாறு, கெடிலம், பெண்ணை ஆறு ஆகியவற்றின் மூலமாக ஆண்டுதோறும் 100 டி.எம்.சி. நீர் கடலில் வீணாகக் கலப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், ஒரு வாரம் பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி 26 ஆயிரம் கன அடி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் மழை முடிந்ததும் டெல்டா விவசாயிகள் மீண்டும் மேட்டூர் அணையின் கதவைத் தட்ட வேண்டி இருக்கிறது. வீராணம் ஏரியில் இருந்து 600 கன அடி நீர் பாசனத்துக்கு திறக்க கெஞ்ச வேண்டிய பரிதாப நிலை 15 தினங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வீராணம் ஏரிக்கு வரும் 1800 கன அடி நீரும் கடலுக்குத் திறந்து விடப்படுவது எத்தனை சோகம். ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார். கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், விவசாயிகள் கூறுவதை அரசு கேட்பதே இல்லை. காவிரி, கொள்ளிடத்தில் கதவணைகள் கட்டி, பொன்னேரி, வீராணம் ஏரி ஆகியவற்றை ஆழப்படுத்தினாலே போதும், கொள்ளிடத்தில் வீணாகும் நீரை சேமிக்க முடியும். அரசு குறுகியகால நோக்கங்களைக் கைவிட்டு, தொலை நோக்குடன் புதிய பாசனத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.