கோரிக்கை பதிவு

சொத்து ஜாமீனின்றி கல்விக் கடன் தர வங்கி மறுப்பு

பல்வேறு கனவுகளோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஏழை விவசாயி மகளுக்கு, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடர முடியாமல், கூலி வேலை செய்து வருகிறார்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் அருகே உள்ள நடுக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - மல்லிகா ஏழை விவசாய தம்பதியினரின் மகள் பிரவினா.  இவர், 2007ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 867 மதிப்பெண் பெற்றார். 72 சதவீத மதிப்பெண் பெற்ற இவர், வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் உயர் கல்வி படிக்க வங்கிகள் கடன் தருவதாக கூறினர்.அதை நம்பிய பன்னீர்செல்வம், தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தார். கவுன்சிலிங்கில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கோளம்பாக்கத்தில் உள்ள கற்பக வினாயகா பல் மருத்துவக் கல்லூரியில் "பி.டி.எஸ்.,' சீட் கிடைத்தது.  மகிழ்ச்சி அடைந்த பன்னீர்செல்வம், பிரவினாவை கல்லூரியில் சேர்த்தார்.

அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்லூரி விடுதியில்  ஐந்தாண்டுகள் (2007-12) தங்கி படிக்க, மொத்தம் நான்கு லட்சத்து 73 ஆயிரத்து 500 கட்ட வேண்டும். அதில், முதலாண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500ம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு தலா ஒரு லட்சத்து 10 ஆயிரமும், இறுதியாண்டு விடுதி கட்டணம் மட்டும் 25 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியது. பன்னீர்செல்வம் தனது மகளின் உயர் கல்விக்காக கடன் கோரி, பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு விண்ணப்பித்தார். அவர்கள், காடாம்புலியூரில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு பரிந்துரை செய்தனர். மனுவை பரிசீலித்த லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள், 10 லட்சம் ரூபாயிற்கு சொத்து ஜாமீன் அல்லது அரசு ஊழியர்கள் இருவர் ஜாமீன் அளித்தால் கடன் தருவதாக கூறினர். பன்னீர்செல்வத்தால் சொத்து ஜாமீன் கொடுக்க முடியாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கட்டணம் செலுத்தாததால், மாணவி பிரவினாவை இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.

இதுகுறித்து, பன்னீர்செல்வம் பிரதமர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.  அனைவருமே மனு மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்திருப்பதாக பதில் அனுப்பினர். இதனால், அடுத்த ஆண்டாவது வங்கியில் "லோன்' கிடைத்துவிடும்  எனக் கருதிய பன்னீர்செல்வம் 2008ம் ஆண்டு, மீண்டும் தனது மகளை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டு மீண்டும் கடன் கோரி வங்கிக்கு விண்ணப்பித்தார். அப்போதும் ஜாமீன் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கல்லூரிக்கு பணம் கட்டாததால், மாணவி பிரவினாவை மீண்டும் அதேபோன்று இரண்டு மாதத்தில் கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது.

பல்வேறு கனவுகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பிரவினாவிற்கு, வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க மறுத்து விட்டதால் தற்போது, பெற்றோருடன் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.கல்விக் கடனுக்கு எந்த ஜாமீனும் தேவையில்லை. கல்லூரி சேர்க்கை கடிதம் மற்றும் கல்லூரி கட்டண பட்டியல் இருந்தால் போதும் என, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் வேறு விதமாக உள்ளதால், ஏழை மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக