கோரிக்கை பதிவு

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை: நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தின.கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் லாரன்ஸ் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உடனடி, அத்தியாவசியத் தேவையாகவும் உள்ளது. ரயில்கள் முழுமையாக இயக்கப்படும்போது, போக்குவரத்து ஸ்தம்பித்துப் போவதைத் தடுக்க, லாரன்ஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், வண்டிப்பாளையம் சாலையையும், சரவணன் நகரையும் இணைக்கும் 300 மீட்டர் சாலையை உருவாக்க வேண்டும் என்பது கடலூர் நகர மக்களின் கோரிக்கை. மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் திறமையாகச் செயல்பட்டு இருக்குமாயின், 3 ஆண்டுகளாக அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளின் நடைபெற்றபோதே, ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்துக்கும், சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டத்துக்கும், தீர்வு காணப்பட்டு இருக்கும் என்பது, கடலூர் மக்களின் கருத்து. ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடந்தது. நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார்.  கூட்டமைப்பின் நிர்வாகிகள் எம்.மருதவாணன், வெண்புறா குமார், திருமார்பன், துரை.வேலு, பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ச.சிவராமன், பண்டரிநாதன், அருள்செல்வம், மணிவண்ணன், அரங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக