கோரிக்கை பதிவு

'அகம்' நானூறு!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து, முக்கிய நகரங்களில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறது, மின்வாரிய ஒழுங்காற்றுக் குழுமம். இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும், மின்கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் சொல்லப்போகிறார்கள்.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவின்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ.4 ஆகவும், 400 யூனிட் வரை ரூ.4.25 ஆகவும், 600 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75 ஆகவும் (வணிக மின்கட்டணத்துக்கு நிகராக)  தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக் கேட்புக்குப் பிறகு இதில் சில காசுகள் மட்டுமே மாறுபடும் என்று தெரிகிறது.
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்காற்றுக் குழுமம் தொடர்ந்து வலியுறுத்தக் காரணம், மின்உற்பத்தி செலவுக்கும் நுகர்வோருக்கு மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது அதன் உண்மையான விலைக்கும் தொடர்பில்லை என்பதுதான். தற்போதைய இந்த ஒழுங்காற்றுக் குழுமம் கட்டண உயர்வுக்குச் சில வரையறையை ஏற்படுத்தியுள்ளது.  நுகர்வோரிடம் மின்சாரத்தைக் கொண்டுசேர்க்கும்போது ஏற்படும் செலவையும் சேர்த்து ஒரு யூனிட்டுக்கு விலை நிர்ணயித்தல், நுகர்வோரின் வாங்குதிறன், மாநில அரசின் சமூக பொருளாதாரக் கொள்கை ஆகிய வரையறைகளைப் பார்க்கும்போது, வீட்டு மின்சாரக் கட்டணத்தை, தமிழக அரசின்  சமூகப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் நிர்ணயிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.
தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை, சிலவற்றைத் தவிர்த்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கட்டண உயர்வையும் தவிர்க்கலாம். அப்படியும்கூட, மின்கட்டணம் விதிக்க வேண்டும் என்றால், அந்தச் சுமையை வசதி உள்ளவர்கள் மீது ஏற்றி, வசதியில்லாத மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மீது அந்த சுமையை இலேசாக வைக்கலாம்.
2009-ம் ஆண்டு தமிழகத்தின் மின்சாரத் தேவை 9560 மெகாவாட் என்றால், நடப்பாண்டில் 10,000 மெகாவாட் என்பதாக உயரும் என்று மின்வாரியம் கணித்துள்ளது. தமிழகத்தின் மின்உற்பத்தி அளவு 8200 மெகாவாட் மட்டுமே. மின்உற்பத்தியை உயர்த்த திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அமலுக்கு வராத நிலையில் தற்போதைய தேவையைச் சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரத்தை பிற மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங்கியாக வேண்டும். இதன் மதிப்பு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இது நிச்சயம், ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்வாரியத்துக்குக் கூடுதல் சுமை. 2008-09-ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் ரூ.19,000 கோடி. ஆனால் மின்வாரியத்தின் மொத்தச் செலவு ரூ.24,000 கோடி. ஆக ரூ.5,000 கோடி இழப்பு. இந்த இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை என்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது.
மின் தேவையைச் சமாளிக்க மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இவ்வளவு பிரச்னை இருக்கும்போது, விநியோகத் தடத்தில் மின்இழப்பைக் குறைக்க வேண்டும் அல்லவா! ஆனால் அதைச் செய்வதற்கு மட்டும் தமிழ்நாடு மின்வாரியம் எந்தவொரு தனிக்கவனமும் செலுத்தவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தின் விநியோகத் தடத்தில் மின்இழப்பு 19.3 சதவீதமாக இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டும் மின்சார  ஒழுங்காற்றுக் குழுமம், இதைக் குறைத்தாலொழிய மின்வாரிய இழப்பு குறைய வாய்ப்பே இல்லை என்று சொல்லியும், இதைச் சரிசெய்ய இயலவில்லை. இந்த வழித்தட மின்இழப்பை பாதியாகக் குறைத்தாலே தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சுமார் 900 மெகாவாட் மிச்சமாகும். இதைக் கொண்டு மற்றவர்களிடம் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்காமலேயே மாநிலத்தின் தேவையைச் சமாளிக்க முடியும்.
அடுத்ததாக மின்திருட்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம், மதுரையில் உள்ள ஒரு தொழிற்கூடம் 9 மாதங்களில் ரூ.7.55 கோடி அளவுக்கு மின்சாரத் திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மட்டுமே இத்தகைய மின்திருட்டில் ஈடுபடும் என்றால், இன்னும் இதுபோன்ற மின்திருட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் குறைந்தது 5 சதவீதம் என்றாலும்கூட, எத்தகைய இழப்பை தமிழ்நாடு மின்வாரியம் சந்தித்து வருகிறது என்பதை உணர முடியும்.
தற்போது பொதுக்கூட்டங்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களுக்கு அமைக்கப்படும் மின்விளக்குகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீள்கின்றன. மேடை அலங்காரங்கள், தலைவர்களின் உருவத்தில் ஒளிரும் விளக்குகள் என மிகமிக அதிகமான மின்சாரம், அதிலும் குறிப்பாக மக்கள் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் வேளையாகிய மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை- ""எடுத்துக்கொள்ளப்படுகிறது''. இதற்குக் கட்டணம் வசூலிப்பதாக மின்வாரியம் சத்தியம் செய்யலாம். ஆனால் அந்தக் கட்டணம், பிற கட்சியினர் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்காக ஏதோ பெயரளவில் வாங்கப்படும் தொகையே தவிர, நிச்சயமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் அளவுக்கான கட்டணங்கள் இல்லை என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
வழித்தட மின்இழப்பு, மின்திருட்டு ஆகியவற்றைப் பாதியாகக் குறைப்பதும், ஆடம்பர விழாக்களுக்கான மின்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் அல்லது அதற்கு மிகைக் கட்டணம் நிர்ணயித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தற்போது அரசுக்கு ஏற்படும் இழப்பின் பெரும்பகுதியைக் குறைத்துவிட முடியும். அவ்வாறு குறைக்க முடிந்தால், வீட்டு மின்கட்டணத்தை மாற்றியமைக்காமலேயே மின்வாரியத்தின் இழப்பைச் சரிக்கட்ட முடியும்.
மேலும், இன்றைய தேதியில் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திலும் 5 குழல் விளக்குகள், ஒரு டிவி, நான்கு மின்விசிறிகள், ஒரு கிரைண்டர், ஒரு மிக்ஸி, ஒரு வாஷிங் மெஷின், நீரேற்றும் மோட்டார், ஒரு இஸ்திரிப்பெட்டி ஆகியன தவிர்க்க முடியாதவை. குடும்பத் தலைவர், அவரது பெற்றோர், மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட குடும்பத்துக்கு மேற்சொன்ன மின்சாதனங்களின் பயன்பாடு சராசரியாக என்ன இருக்கும், இரண்டு மாதங்களுக்கு அக்குடும்பத்தின் மின்தேவை எவ்வளவு ஏற்படும் என்பதை கணித்தால், 400 யூனிட்டுகளுக்குக் குறையாது. ஆகவே வீடுகளுக்கு மட்டும் இரு மாதங்களில் 400 யூனிட்டுக்கு மிகுந்தால் மட்டுமே கட்டணத்தை உயர்த்த வேண்டுமே தவிர, அதற்குக் கீழாக ஒரு ஸ்லாப் நிர்ணயிப்பது, நடுத்தர மக்களின் முதுகில் மற்றுமொரு சுமை என்பதை தமிழக அரசு புரிந்துகொண்டால் புண்ணியமாக இருக்கும்!


நன்றி தினமணி
 தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக