கோரிக்கை பதிவு

கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் இன்று முதல் துரிதப்படுத்த அதிகாரிகள் உறுதி

தாற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை, திங்கள்கிழமை  முதல் துரிதப்படுத்தபடும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ரூ.44 கோடியில் திட்டமிடப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் 30 மாதங்களுக்கு மேலாகியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது மற்றும் சாலைகள் சீர்குலைந்து கிடப்பதைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு 26-ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தது. இதையொட்டி கடலூர் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் நகர்மன்றத் தலைவர் து. தங்கராசு, நகர்மன்ற, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறுத்தப்பட்டு இருக்கும் பணிகளை திங்கள்கிழமை முதல் தொடங்கி துரிதமாக நடத்துவது என்று அதிகாரிகளால் கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வது என்றும், முன்னேற்றம் குறித்த தகவல்களை பொதுநல அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்தவாறு திங்கள்கிழமை வேலைகளைத் தொடங்கா விட்டால் 26-ம் தேதி கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் அறிவித்துள்ளன. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர்,  தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் உள்ளிட்டதொழிற்சங்கப் பிரதிநிதிகள், வெண்புறா பொதுநலப் பேரவைத் தலைவர் குமார், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை துணைபொதுச் செயலாளர் திருமார்பன், தராசு மக்கள் மன்றச் செயலாளர் துரைவேலு, கடலூர் தமிழ்ச்சங்க இணைச் செயலர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக