கோரிக்கை பதிவு

வங்கிகளில் ஆவணங்களை தமிழில் வழங்க கோரிக்கை

புவனகிரி நுகர்வோர் உரிமை பாது காப்பு பேரவை சார்பில் தலைவர் செயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அனைத்து ஆவணங்களும் தமிழில் வழங்கவேண்டும் என நுகர் வோர் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அஞ்சல் அலுவலகங்களில் மாநில மொழிகளிலேயே மணியார்டர் விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஆவணங்களை தமிழில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து தமி ழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விரைந்து செயல்பட்டு வங்கிகளின் ஆவணங்களை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண் டும்” என கூறியுள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4ம் தேதி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.
கடலூர் நகர மா.கம்யூ., குழுக் கூட்டம் நடந்தது. ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமில்லாமல் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. நகர மெங்கும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு, பன்றிகளால் சிக்குன்-குனியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது. மக்களை நோய் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.
மாவட்ட சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் கொசு, பன்றிகளை அழித்திட நடவடிக்கை எடுத்திடக் கோரியும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடவும், இதயம், நரம்பியல் போன்ற  முக்கியத் துறைக்கு உடன் சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், கொடிய நோயிலிருந்து மக் களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் விதிமுறை மீறல் : புதுச்சேரிக்கு வருமானம்; தமிழகத்திற்கு பாதிப்பு

நெல்லிக்குப்பம் பெண் ணையாற்றில் விதிமுறைகளை மீறி புதுச்சேரி பாசிக் நிறுவனம் மணல் எடுத்து வருவதால் கரை பாதிக் கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் - முள்ளிகிராம்பட்டு இடையே தமிழக பகுதியில் பெண்ணையாற்றின் கரை உள்ளது. ஆற்றின் மறுபுறம் புதுச்சேரி மாநிலம் மணல்மேடு கிராமம் உள்ளது. தமிழக கரை வரை ஆறு முழுவதும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தது என கூறுகின்றனர். இதை காரணம் கூறி அம்மாநில கரையோரம் மணல் எடுக்காமல் தமிழக கரையையொட்டி ஆற்றில் மணல் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனமே மணல் குவாரியை நடத்துகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் செல்கிறது.
கரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் எடுக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி கரையோரம் மணல் எடுப்பதால் ஆற்றங்கரை பாதிக் கப்படும். மணல் குவாரியில் புதுச்சேரி அரசுக்கு வருமானம். ஆனால் தமிழக பகுதி பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு நிறுவனமே இதுபோன்று நடப்பதால் யாரும் கேட்க முடியாமல் தவிக்கின் றனர். தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரை பலமிழப்பதால் மழைக் காலத் தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால், கரை உடைந்து தண்ணீர் ஊரினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் அகலமுள்ளஆற்றின் கரையோரம் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த கடலூர் மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு 8ம் தேதி துவக்கம்! 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கடலூர் மாவட்டத் தில் 25,592 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதுகின் றனர். ஆரல், ஓரல் தேர்வுகள் வரும் 4 மற்றும் 5 தேதிகளில் நடக்கிறது. செய்முறைத் தேர்வு 8ம் தேதி முதல் துவங்குகிறது.பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி  துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. செய்முறைத் தேர்வுகள் 4ம் தேதி துவங்குகிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் (கேட்டல் திறன், பேசுதல் திறன்) எனப்படும் அக மதிப் பீட்டு தேர்வுகள் நடக் கிறது.
இதனைத் தொடர்ந்து 8ம் தேதி முதல் 20ம் தேதிவரை அறிவியல் பாடங் களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள்  நடக்கிறது.
இதற்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த வாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளா கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட கல் வித் துறை சார்பில் வினாத் தாள் அச்சடிப்பது, "பேட்ச்' பிரிப்பது உள்ளிட்ட  பணிகள் முடிந்து மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் 12208 மாணவர்கள், 13,384 மாணவிகள் என மொத்தம் 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களைவிட 1,176 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.
இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 99 பள்ளிகளைச் சேர்ந்த 8293 மாணவர்களும், 9909 மாணவிகளும், விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகளைச் சேர்ந்த 3915 மாணவர்களும், 3475 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
வரும் 8ம் தேதி துவங்கவுள்ள செய்முறைத் தேர் விற்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள் ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் கடலூர்  கணேசமூர்த்தி, விருத்தாச்சலம் குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழிதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 153 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் பள்ளிகளில் நடத் தப்படும் செய்முறைத் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக் கினர். அதில் செய்முறை தேர்வுகள் கால அட்டவணையில் உள்ள தேதிகளில் தவறாது நடத்த வேண்டும்.
மருத்துவ மற்றும் விபத்து காரணங்களால் குறித்த "பேட்ச்'ல்  தேர்வு எழுத இயலாத மாணவர்கள் உரிய கால அட்டவணைக்குள் வேறொரு நாளில், வேறொரு "பேட்ச்'ல் செய் முறைத் தேர்வை நடத்தி குறிப் பிட்ட இறுதி நாட்களுக் குள் முடிக்க வேண்டும்.  
தேர்வு நாளன்று ஆய்வகத்தில் அகத்தேர்வர், புறத் தேர்வர் அனுமதிக்கப் பட்ட ஆய்வக உதவியாளர் கள் மட்டுமே இருத்தல் வேண்டும். செய்முறைத் தேர்வு சார்பாக அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை முன்கூட் டியே வழங்க வேண்டும். செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் தலைமை ஆசிரியர்களிடம் செய்முறை தேர்விற்கான கால அட்டவணை, மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மற்றும் "பேட்ச்' பட்டியல்  வழங்கப்பட்டன.

3.பெயரளவில் நடந்த வேலை உறுதி திட்டம் : அதிக மழை பெய்தும் பயன் ஏதும் இல்லை

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வேலை உறுதி திட்டம் பெயரளவுக்கே நடந்துள்ளது. அதிக மழை பெய்திருந்த போதிலும், நீர் நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.கடலூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் செய்த பணிகள், பெயரளவிற்கு நடந்துள்ளது. உதாரணத்திற்கு விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட குளத்திற்கு வரத்து வாய்க் கால் சீரமைக்கப்படவில்லை. இதனால் குளம் வறண்டு கிடக்கிறது. அண்ணாகிராமம் ஒன்றியம் கோழிப்பாக்கம் ஊராட்சி குளத்திற்கு நீர் வரத்து வாய்க்கால் பெயரளவில் சீரமைக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் ஒரே நீர் நிலை அடுத்தடுத்த ஆண்டுகளில் சீரமைக்கப் பட்டுள்ளது.
 கடந்த ஆண்டைவிட நவம்பரில் 15 சதவீதமும், டிசம்பரில் 69 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.
இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை வறண்டும், புதர் மண்டியும் உள்ளது.விழுப்புரம் மாவட்டம்: ஊரக வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட மற் றும் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களில் ஒப்புக்காக செய்த பணிகளால் மீண்டும் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண் ணீர் சேமிக்க முடியாமல் வறண்டே காணப்படுகிறது.திருவெண்ணைநல்லூர் அடுத்த பேரங் கியூர் குச்சிப்பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் வேலை நடந்தது. ஏரியில் தண்ணீர் நின்றதால் ஆற்றில் வேலை கொடுத்து கூலி கொடுத்துள்ளனர். ஆற்றின் கரையை பலப்படுத்தி உபயோகமான வேலை செய்திருக்கலாம்; அதுவும் இல்லை.  வி.அரியலூர் ஊராட் சியில் ஒரே வாய்க்காலில் 10க்கும் மேற் பட்ட முறை வேலை செய்து பணத்தை விரயமாக்கியுள்ளனர்.

கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர், கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.2003 முதல் முடக்கி வைக்கப்பட்டு உள்ள கட்டடத் தொழிலாளர்களின் 65 ஆயிரம் மனுக்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். இதர வாரியங்களைப் போல் பதிவு செய்த நாள் முதல் வாரியப் பயன்களை வழங்க வேண்டும். நாலரை ஆண்டுகள் வாரிய உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு 60 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதிவுக்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் நகரத் தலைவர் ராமுமேஸ்திரி, புவனகிரி நகரத் தலைவர் வீரப்பன் மேஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர், கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன்

குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, நகராட்சி கடலூர் நகர மக்களை சிரமப்படுத்துவதில் போட்டா போட்டி!

கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துச் செல்லும் நிலையில் பணி முடிந்த சாலைகளை கூட சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி 40 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப் பட்டது. இதில் 148.7 கி.மீட்டர் தூரத்தில் 5,412 "மேன்ஹோல்', 15 ஆயிரத்து 50 வீட்டு இணைப்புகள், கம்மியம் பேட்டை, வரதராஜன் நகர், சீனுவாசன் நகர், ராஜாம்பாள் நகர், மணவெளி, மோகினி பாலம் ஆகிய இடங்களில் துணை சுத்திகரிப்பு நிலையங்களும், தேவனாம்பட்டினத்தில் பிரதான சுத்திகரிப்பு  நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டது. 20 எம்.எம்., பைப்புகள் முதல் 700 எம்.எம்., பைப்புகள் வரை பயன்படுத்தப்படும் இத்திட்டத் தில் 3 அடி முதல் 18 முதல் 20 அடி ஆழம் வரை நகரின் பல்வேறு சாலைகளை தோண்டி பைப்புகள் புதைக்கப் பட்டு வருகிறது.
மூன்றாண்டு முழுமையாக முடிந்த நிலையில் இதுவரை 5,111 மேன் ஹோல்கள், 13 ஆயிரத்து 324  வீட்டு இணைப்புகளுடன் 126.78 கி.மீட்டர் தூரம் பைப்புகள் புதைத் துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது.
இதில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 12.07 கி.மீட்டர் தூரத்தில் 8.6 கி.மீட்டர் முடித்து விட்டதாகவும், அதில் 6.23 கி.மீட்டர் தூரத்தை முழுவதும் முடித்து நெடுஞ்சாலைத்துறை வசமும், 110 கி.மீட்டர் தூர நகராட்சி சாலையை முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் கூறுகிறது.
ஆனால் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் இதுவரை 70 கி.மீட்டர் தூர சாலையைத்தான் ஒப்படைத்துள்ளனர்.  நாங்கள் 40 கி.மீட்டர் தூர சாலைகளை போட்டு விட்டோம் என்கின்றனர்.  இதில் யார் சொல்வது உண்மை? யார் பொய் சொல்கின்றனர் என தெரியவில்லை.
இதற்கிடையே பொதுநல இயக்கங்கள் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்ததையடுத்து 24ம் தேதி ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நெடுஞ்சாலைத் துறையினர் அரசு மருத்துவமனை தேவி கருமாரியம்மன் கோவிலிலிருந்து செம்மண்டலம் வரையிலான  சாலையை சீரமைக்கும் பணி 25ம் தேதி துவக்குவது எனவும், கலெக்டர் அலுவலக சாலை, சப்ஜெயில் ரோடு மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலைகளில் "பேட்ச் ஒர்க்கை' குடிநீர் வடிகால் வாரியம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், மறுநாள் ஒப்புக்காக குடிநீர் வடிகால் வாரியம், கலெக்டர் அலுவலக சாலை மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலையில் "பேட்ச் ஒர்க்' பணிகள் துவங்கியது.
ஆனால் மறுநாள் முதல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேப்போன்று நெல்லிக்குப்பம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை பணியை துவங்கவே இல்லை.  எது எப்படியிருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என கிளம்பும் பொதுநல அமைப்புகளுக்கு நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் "பெப்பே' காட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.