கோரிக்கை பதிவு

கடலூர் அருகே பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுப்பு

கடலோர கிராமமான தியாகவல்லியில் பழங்கால பிரெஞ்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.​ ​கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கச்சிராயர்.​ ​ கடலூர் திரைப்பட இயக்கச் செயலாளராகவும் குறும்படத் தயாரிப்பாளராகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.​ சாமிக்கச்சிராயர் தனது கிராமத்தில் தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.​ ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள வயல் வெளியில் பழங்காலச் செப்பக்காசு ஒன்றை கண்டெடுத்தார்.​ வட்ட வடிவமான இந்தச் செப்புக் காசின் ஒரு புறம் கோழிச்சின்னமும்,​​ மறுபுறம் புதுச்சேரி 1837 என்றும் உள்ளது.இதுகுறித்துச் சாமிக் கச்சிராயர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:​ ​கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் புதுவை மாநிலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் அரிக்கமேடுவரை பல்லாண்டுகளாக பழந்தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் நாணையங்கள்,​​ பானை ஓடுகள்,​​ சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கலன்கள்,​​ ​ மது ஜாடிகள்,​​ பாசிமணிகள் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்து உள்ளன.​ ​

கடலூர் கடற்கரையோர கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் திட்டுகள் பல காலங்களில் நடந்த கடல்கோள்களால் அழிந்த நகரங்கள்,​​ கிராமங்களின் சுவடுகளாக உள்ளன.​ அத்தகைய மணல் குன்றுகளில் இருந்துதான் இத்தகைய பழங்கால பொருள்கள் கிடைத்து வருகின்றன.​ இந்த மணல் குன்றுகள் பல ரசாயனத் தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.​ ​தற்போது கிடைத்து இருக்கும் செப்புக்காசு கடலூர் பகுதியில் பிரெஞ்சு அரசின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை எடுத்துக் காட்டுகிறது.​ கிராமங்களில் கோழிக்காசு என்று முதியோர் பலர் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் கடலூர் பகுதிகளில் ஆபரணத் தொழிற்சாலைகள் இருந்தது முன்னரே கண்டறியப்பட்ட தகவல் ஆகும்.​ எனவே கடலூர் துறைமுகம் பழங்காலத்தில் மேன்மையுடன் செயல்பட்டு வந்ததையும் இங்கு வணிகம் சிறந்து இருந்ததையும் இந்தச் செப்புக்காசு எடுத்துக் காட்டுகிறது.​ விரைவில் இந்தக் காசு தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சாமிக்கச்சிராயர் தெரிவித்தார்.

15 பேரிடம் லஞ்சம் வாங்கிய கடலூர் பெண் அலுவலர் கைது

தமிழக அரசின் திருமண உதவித்தொகை வழங்க பயனாளிகள் 15 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கனகசபை நகர் நடராஜன் தனது மகள் சுபத்திரா திருமணத்திற்காக தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைக்காக கீரப்பாளையம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பூங்கோதையிடம் மனு கொடுத்தார். இவரைப் போன்று பலர் மனு கொடுத்திருந்தனர். நடராஜன் உள்ளிட்ட மனுதாரர்களை நேற்று நேரில் அழைத்து 1,000 ரூபாய் பணத்துடன் மாலை கடலூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வருமாறு பூங்கோதை கூறினார். கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் நடராஜன் புகார் செய்தார். அவர்கள் கூறியபடி நடராஜன் நேற்று மாலை 6.30 மணிக்கு கடலூர் செம்மண்டலம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அலுவலர் பூங்கோதையிடம், 1,000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பூங்கோதையை(55) கைது செய்தனர். விசாரணையில் நடராஜனுக்கு முன்பாக மேலும் 14 பேரிடம் தலா 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, பூங்கோதையின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற் கொண்டனர்.

கடலூர் இணைப்பு சாலையில் மெகா பள்ளம் : ஒரே பாதையில் வரும் வாகனங்களால் விபத்து

கடலூர் ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் "மெகா சைஸ்' பள்ளங்கள் உள்ளதால் பஸ் நிலையத்திலிருந்து வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல ஒரே பாதையை பயன் டுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

கடலூர் பஸ் நிலையத்திலிருந்து சிதம்பரம் மார்க்கம் செல்லும் பஸ் கள் செல்வதற்காக ரயில்வே மேம்பாலத்தையொட்டி இணைப்பு சாலை அமைக்கப் பட்டுள் ளது. இதனால் சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் மேம்பாலத்தின் வலதுபுற சாலை வழியாகவும், பேருந்து நிலையத்திலிருந்த வரும் வாகனங்கள் இடது புற சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தில் இடதுபுறசாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் வரும்பேருந்துகள், மேம்பாலத்தில் வலதுபுற சாலை வழியாகவே செல்கின்றன. இந்த சாலை குறுகிய பகுதி என்பதால் ஒரே வழியில் வாகனங்கள் வந்து, செல்லும்போது நெரிசல் காரணமாக தொடர்விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மேம்பாலத்திலில் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக பாலத்தின் இறக்கத்தையொட்டிய வலதுபுற சாலையில் திரும்பும் போது திடீரென எதிரில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்த்திட ரயில்வே மேம்பாலத்தையொட்டிய சாலையில் உள்ள மெகா பள்ளத்தை மூடி சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமானப்பணி விரைவில் துவக்கம்

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ரயில்வேகேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை ரயில்வே மேம்பாலத்திற்கு செலவிடப்பட்டதால் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தடைபட்டு வந்தது. தற்போது விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைப்பணி முடிவடைந்து ஒரு சில மாதங்களில் ரயில் விடப்படவுள்ளது. இதனால் முன்பு இருந்ததைவிட அதிக எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை மார்க்கத்தில் வரவுள்ளது. அதனால் ரயில்வே கேட் அடிக்கடி திறந்து மூட வேண்டிய நிலை உள்ளதால் லாரன்ஸ் ரோட்டில் நிரந்தரமாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும். எனவே லாரன்ஸ் ரோட்டில் உடனடியாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு நலச்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கின. தற்போது இந்த சுரங்கப்பாதை பணிக்காக அரசு 5.6 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அதனால் சுரங்கப் பாதை அமைப்பதற்கான டெண்டர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரயில்வேதுறை மூலம் செய்யப்படும் கான்கிரீட் பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ரயில்வே துறையும் பாலம் கட்டுமானப்பணி வரைபடத்தை தென்னக ரயில்வே தலைமை பொறியாளருக்கு (பாலங்கள் மற்றும் வரைபடம்) அனுப்பி வைத்துள்ளது. ரயில்வே பணி முடிந்தவுடன் தொடர்ந்து நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்படவுள்ளது. லாரன்ஸ் ரோட்டில் ராட்சத குடிநீர் குழாய்கள், கேபிள்கள் செல்வதால் அதை அகற்றி மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் முறைகேடு : கடலூர் நகர மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் 'திடுக்'

கடலூர் நகராட்சி நிர் வாகம் சரியாக நடக்கவில்லை காங்., அ.தி. மு.க., கவுன்சிலர்களின் குற்றச்சாட்டிற்கு பா.ம.க., வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நகர மன்றக் கூட் டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

கடலூர் நகர மன்றத் தின் இயல்பு கூட்டம் நேற்று சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கமிஷனர் குமார், பொறியாளர் மனோகர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தை துவங்கி வைத்து சேர்மன் தங்கராசு பேசுகையில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் 72 கி.மீட்டர் சாலை போடப்பட்டுள் ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் புதிதாக பொறுப் பேற்றுள்ள நிர்வாக பொறியாளர் இந்தாண்டிற்கு பாதாள சாக்கடை பணிகள் முடித்து கொடுப்பதாக உறுதியளித்திருப்பதாக கூறினார்.
தொடர்ந்து நடந்த கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:
காங்., சர்தார் பேசுகையில், நகரில் சுகாதார சீர் கேடு காரணமாக அனைத்து வகையான காய்ச்சல் பரவி வருகிறது. நகராட்சி சிறப்பு முகாம் நடத்தியிருந்தால் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். மருத்துவ காப்பீட்டு திட்ட அடை யாள அட்டையில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. முழு முகவரி இல்லாததால் இரண் டாயிரம் அட்டைகள் திருப்பி அனுப்பப்பட்டுள் ளது. முழு விபரங்களுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அ.தி.மு.க., கந்தன் பேசுகையில், நகரில் சுற் றித்திரியும் 600 நாய்களுக்கு அறுவை சிகிக்சை செய் துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. தற்போது 1886 நாய்களுக்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யாமலேயே கணக்கு காட்டி ஊழல் செய்துள்ளனர். நகராட்சியில் எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்ற பதிலே கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் வரி வசூலிக்காமல் உள்ளது. புதிய வரி விதிப்புகள் இல்லை. இப்படி இருந்தால் பணம் எப்படி இருக்கும் என்றார்.

சுகாதார சீர்கேடு காரணமாக நகரில் விஷ காய்ச்சல் பரவிவருகிறது. குப்பைகள் அள்ளுவதில்லை. சாக்கடை கால்வாய்கள் தூர்ந்து கிடக்கிறது என அ.தி.மு.க., குமார் குற்றம் சாட்டினார். அப்போது பா.ம.க., ராதாகிருஷ்ணன், எதற்கெடுத்தாலும் நகராட்சியை குற்றம் சாட்டுகிறீர்களே என்றதால் கவுன்சிலர்களுக்குள் வாக்குவாதம் ஏற் பட்டது. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பா.ம.க., செந்தில், கமலநாதன் பேசியதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தி.மு.க., குணசேகரன், சுயேச்சை முத்து ஆகியோர் லாரன்ஸ் ரோட் டில் ரயில்வே சுரங்கப் பாதை வருமா? வராதா? என்பதை சேர்மன் தெளிவு படுத்த வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த சேர்மன், ரயில்வே சுரங்கப் பாதை கட்டாயம் வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர் என்றார். இறுதியாக துணைத் தலைவர் தாமரைச்செல் வன் பேசுகையில், நகரில் குடிநீர் வழங்க மேலும் இரண்டு லாரிகள் வாங்க வேண்டும். திருட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றார்.

ரேஷன் கார்டு நீக்கத்தில் குளறுபடி : வட்ட வழங்கல் அலுவலர் மாற்றம்

புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது மற்றும் போலி கார்டுகள் நீக்கம் செய்வதில் ஏற்பட்ட குள றுபடியால் கடலூர் வட்ட குடிமை பொருள் தனி தாசில்தார் மாற்றம் செய் யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டு எண் ணிக்கை அதிகளவில் இருந்ததால் ஆய்வு செய்து நீக்க அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு கடந்த வாரம் நீக்கப் பட்ட கார்டுதாரர்கள் குறித்து அந்தந்த ரேஷன் கடைகளில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதில் உண்மையான கார் டுதாரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
முறையான ஆய்வு மேற் கொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆறு மாதத் திற்கு ஒருமுறை கார்டுகள் நீக்குவதும், மீண்டும் புதுப்பிக்க அவகாசம் கொடுப்பதும், அதற்காக தங்களது அலுவல்களை விட்டுவிட்டு உண்மையான கார்டுதாரர்கள் அலைவதுமாக இருந்ததால் ரேஷன் கடைகள் மற் றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜன் ஆகியோர் கடலூர் வட்ட வழங் கல் அலுவலகத்தில் விசாரணை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 5ம் தேதி வட்ட வழங்கல் தனி தாசில் தார் ராஜசேகர் நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்திற்கு மாற்றப் பட்டார். அங்கு பணிபுரிந்த பாண்டியம்மாள் கடலூர் குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு இன்று பொறுப் பேற்கிறார்.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா-விடை கையேடு வழங்கவில்லை! தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என தலைமை ஆசிரியர்கள் கருத்து

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய  வினா - விடை கையேடு பொதுத் தேர்வு நெருங்கி விட்ட நிலையில் இன்னும் வழங்காததால், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் பாதிக்குமோ என்ற அச்சம் தலைமை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பொறுத்தவரை தமிழத்தில் உள்ள 30 வருவாய் கல்வி மாவட் டங்களில் கடலூர் மாவட்டம் 29வது இடத்தில் இருந்து வந்தது. பிற மாவட்டங்களைப் போல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து முன்னேற வேண்டும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். 2008-2009ம் கல்வியாண்டில் அப்போது இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி "டல் ஸ்டூடண்ட்'களை (மெல்ல கற்கும்) கண்டறிந்து அவர் களுக்காக தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்கான வினா - விடை கையேட்டை தயாரித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் கையேடு தயாரித்து கடந்த ஆண்டு நவம் பர் மாதம் 24ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வமும், அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவும் வெளியிட்டனர். அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு  வழங்கி அதனை கற்பித் திட ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப் பட்டது.
இது கடலூர் மாவட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், திருவாரூர் உள் ளிட்ட தேர்ச்சியில் பின் தங்கிய மாவட்ட கல்வி அதிகாரிகளும் பின்பற்றினர்.
இந்த புதிய முயற்சியின் பலனாக 29வது இடத்தில் இருந்த கடலூர் மாவட் டம் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சியில்., 26வது இடமும், பிளஸ் 2வில் 24ம் இடத்திற்கும் முன்னேறியது. கடைசி இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் முறையே 23 மற்றும் 25வது இடத்தை பிடித்தது.
ஆனால் இந்த ஆண்டு "டல் ஸ்டூடண்ட்'டுகளுக் கான குறைந்தபட்ச மதிப் பெண் பெறுவதற்கான கையேடு கடலூர் மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் வழங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இங்கு வழங்காதது ஏன் என தெரியவில்லை.  பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி தேர்வு துவங்க உள்ள நிலையில் இதன் பிறகு  வழங்கினாலும் அந்த கையேட்டை வைத்து மாணவர்கள் படித்து தேர்ச்சி பெற முடியுமா என்பது சந்தேகமே.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மார்ச் 23ம் தேதி தேர்வு துவங்குகிறது. அவர்களுக்கேனும்  "வினா-விடை' கையேட்டை வழங்கிட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபற்றி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கான கையேடு நல்ல பலனை அளித்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அரையாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தி அதற்கான பலன் உடனடியாக தெரிந்த போதிலும் அந்த திட்டத்தை தொடர்ந்து உரிய நேரத் தில் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று புரியவில்லை. இதன் பிறகு கையேடு வழங்கினாலும் பலன் குறைவாகத்தான் இருக்கும்'  என்கின்றனர்.