கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல்

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரா கூறும்போது, மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்படும். நக ராட்சி, ஊராட்சி பகுதியில் இயங்கும் கடைகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் நடத்த உரிமம் பெற்று நடத்த வேண்டும். உரிமம் இன்றி நடத்தப்படும் இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். முறைகேடாக வும், சுகாதாரத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் கடை களுக்கு ஆய்வின் அடிப்படையில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடரும், என்றார்.
குடியிருப்பு பகுதிகளில் தடை
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் கூறும்போது, சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கடைகள் குடியிருப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது காரணமாக உள்ளது. பொது சுகாதார சட்டத்தின் படி இறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதியில் வைக்க தடை உள்ளது.
இதனை முழுமையாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு ஏற்படுத்தும். கடலூர் மாவட்டத்தில் முன்னோடியாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இறைச்சி மற்றும் காய்கறிகளை கொண்ட மினி மார்க்கெட் குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைத்து சுகாதாரம் சீர்கெடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
கடலூர், ஏப். 16:
கடலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில், குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சி கழிவுகள் குடியிருப்பு பகுதிகளின் நடுவில் கொட்டப் படுகின்றன. மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதால், அவை களால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என சுகாதார துறை எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் அதிக அளவில் கோழி இறைச்சி கடைகள் இயங்கி வருவது குறித்தும், கோழி இறைச்சி கடைகள் பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்படும் வகையில் உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் முத்து என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் மீரா தலைமையில், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள், திருப்பாதிரிப்புலியூர் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதிசிவலிங்கம் ஆகியோர் கூத்தப்பாக்கம் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கூத்தப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் நடத்திய சிக்கன் சென்டர் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மீரா, பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவி கோமதி சிவலிங்கம் முன்னிலையில் கோழி இறைச்சி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த எடை கருவி, கோழி சுத்தப்படுத்தும் இயந்திரம், இறைச்சி கோழிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு இறைச்சி கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டதில் அனுமதியின்றியும், சுகாதார முறைகளை கையாளாமலும் இறைச்சி கடைகள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. உரிமம் இன்றி செயல்படும் ஆடு, கோழி இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதார துறை எச்சரித்துள்ளது.
சுகாதாரத்துறை எச்சரிக்கை.

கடலூர்: மீன்பிடி ​ தடைக்காலம் தொடங்கியது

கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது.

ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.​ இந்தத் தடைகாலத்தில் ​ இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது.​ ​

கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப் படகுகள் சுமார் 700 உள்ளன.​ இவைகளுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது சாதாரண படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க முடியும்.​ ஏப்ரல் 15 முதல் மே கடைசி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம்.​ எனவே கடலில் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்பட இவ்வாறு மீன்பிடி தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது.


பொதுவாகவே கடல் வளம் குறைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு,​​ மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைந்து விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.​ கரையில் இருந்து 5 கி.மீ.​ தூரத்துக்குள் பெரும்பாலும் மீன்கள் கிடைப்பது இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இனி இயலாத காரியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

இந்நிலையில் இழுவை வலைகளை பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிப்பது,​​ ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடை விதிப்பதாகவே உள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:

அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் 700 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க இயலாது.​ ஆனால் இந்த இயந்திரப் படகுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கண்ணாடி இழைப் படகுகள் 2 ஆயிரம் உள்ளன.​ மீன்படித் தடைகாலத்தில் இந்த 2 ஆயிரம் படகுகளுக்கும் அவைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.

இந்த ஆண்டு பொதுவாகவே மீன்கள் கிடைப்பது மிகக்குறைவாக இருந்தது.​ புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக பூமியில் மட்டுமன்றி கடலிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.​ சீசன்கள் மாறியிருக்கின்றன.

ஒரு மாதமாகத்தான் மீன்கள் கிடைத்துக் கொண்டு இருந்தன.​ தற்போது அதிகமாக மீன்கள் கிடைக்கும் காலம்.​ இந்த நேரத்தில் தடை விதித்து இருப்பது முறையாகத் தெரியவில்லை.

கடலூர் மாவட்ட எல்லை நெடுகிலும் ஆழ்கடலில் தைவான்,​​ நார்வே,​​ பர்மா,​​ மலேசியா போன்ற வெளிநாடுகளின் மீன்பிடிக் கப்பல்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித்துக் கொண்டு இருக்கின்றன.​ அந்தக் கப்பல்களுக்கும் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்.​ இல்லையேல் தமிழக மீனர்களுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்தத் தடை,​​ பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு சாதகமாக எடுத்த முடிவாகத்தான் அமையும் என்றார்.

தீயணைப்பு மீட்ப்பு பணிகள் துறை

கடலூர் மாவட்டத்தில் ரூ.15 கோடியில் குடிநீர் பணிகள்

கடலூர் ஆட்சியர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மீன்களின் இன விருத்தி காலமான ஏப்ரல் 15 முதல் 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீன் வளத்தை மேம்படுத்தி மீனவர்கள் பயன்பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடைகால உத்தரவை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை யாக ரூ.500 வழங்கப்படும். மீனவர் குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்புக்கான 668 ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. 87 ஆயிரத்து 482 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சப்& காண்ட்ராக்ட் விட்டதால் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னைக்காக மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 648 குடிநீர் பணிகளுக்காக ரூ.9 கோடியே 78 லட்சத்து 3 ஆயிரமும், நகராட்சி பகுதிகளில் 99 குடிநீர் பணிகளுக்காக ரூ.2 கோடியே 6 லட்சமும், பேரூராட்சி பகுதிகளில் 267 பணிகளுக்காக ரூ.3 கோடியே 21 லட்சத்து 14 ஆயிரம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 14 பணிகளுக்காக இதுவரை ரூ.15 கோடியே 5 லட்சத்து 17 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.
விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை சரி செய்யும் விதமாக என்.எல்.சி நிர்வாகத்திடமும் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்று மாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

நந்தன் நுழைந்த சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்கக்கோரி சிதம்பரம் தெற்கு சன்னதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படம்) புதன்கிழமை நடைபெற்றது.ஏழைகள் முன்னேற்றக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் பேரவை, தமிழக சமாஜவாதி கட்சி, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி, அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி., எஸ்டி ஆசிரியர் சங்கம், மக்கள் தேசம் கட்சி, ஆதிதிராவிடர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.ஏழைகள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எம்.ஏ.டி.அர்ச்சுனன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தமிழக சமாஜவாதி கட்சி மாநில செயல் தலைவர் இளங்கோயாதவ், வழக்கறிஞர் ப.கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மக்கள் தேசம் கட்சி தலைவர் மு.ராசிக்ஃபரித் உள்ளிட்டோர் பேசினர்.

முறைப்படுத்துதல் முறையா?

சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகரப் பஞ்சாயத்துகளில் முறையான அனுமதி இல்லாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை, இரட்டிப்பு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு முறைப்படுத்தலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நியாயமாகப் பார்த்தால், இந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளைத் துண்டித்து, இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர் மீது வழக்குத் தொடுத்து அபராதம் விதிப்பதுடன், இதற்குக் காரணமான உள்ளாட்சி அமைப்பின் அதிகாரி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.தற்போது குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் நடவடிக்கைகூட உள்ளாட்சித் தணிக்கையிலும் பொதுத் தணிக்கை அறிக்கையிலும் தொடர்ந்து இத்தவறுகளைச் சுட்டிக்காட்டி வருவதால் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, நகரப் பஞ்சாயத்துகளிலும் குடிநீர்க் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய், குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கு ஏற்படும் மின்கட்டணம் ஆகியவற்றை ஒப்பீடு அடிப்படையில் தணிக்கை செய்யும்போது, உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல் அம்பலப்பட்டுப் போகிறது.உதாரணமாக, ஒரு நகராட்சியின் பதிவேட்டின்படி உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை, அவற்றின் குழாய் அளவு, குடிநீர் விநியோகிக்கப்படும் கால அளவு ஆகியவற்றைக் கொண்டு அந்த நகரின் ஒட்டுமொத்தக் குடிநீர் அளவு எட்டப்படுகிறது. இதில் நீர் கசிவுகளையும் கழித்துவிட்டு, மீதமுள்ள தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு அந்த நிலையத்தின் குதிரைத்திறனுக்கு ஏற்ப எத்தனை மணிநேரம் இயங்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், மின்மோட்டர் இயங்கிய கால அளவுக்கும், வெளியேற்றப்பட்ட குடிநீர் அளவுக்கும், இணைப்புப் பெற்ற வீடுகளுக்குத் தேவையான குடிநீர் அளவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் தணிக்கைத் துறையினர் தொடர்ந்து சுட்டிக்காட்டும் குறைபாடு. தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறைபாட்டை மட்டுமே பேச முடியும். ஊழல் நடைபெறும் விதத்தை விளக்க வழியில்லை. குடிநீர் ஊழல் எப்படி நடக்கிறது என்றால்,  அனுமதியில்லாத இணைப்புகள் இந்தக் குடிநீரை முறைகேடாகப் பயன்படுத்துவது ஒருபுறம். அடுத்ததாக மாநகராட்சி ஊழியர்களும் உள்ளாட்சிப் பதவியில் உள்ள அரசியல்வாதிகளும் முறைகேடாக லாரிகளுக்கு இத்தண்ணீரை வழங்கி, அதை வெளியே விற்று பணம் சம்பாதிப்பதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் தமிழக உள்ளாட்சிகளுக்கு மின்கட்டணம் மூலம் சில  நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இழப்பை மக்கள் வரிப் பணத்திலிருந்து ஈடுகட்டிக் கொண்டிருக்கிறோம்.மின்கட்டணம் மட்டுமே இழப்பு அல்ல. இந்த முறையற்ற இணைப்புப் பெற்ற வீட்டு உரிமையாளர்கள் நியாயத்துக்குப் பயந்த மனிதர்கள் அல்லர். அவர்கள் இந்தக் குடிநீரை தங்கள் உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியெடுத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சொந்த வசதிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருதும்போது, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புரியும்.முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்துவதால் ஊழல் அதிகாரிகள் மற்றும் அடாவடி அரசியல்வாதிகளின் செயல்களை நியாயப்படுத்துகிற ஆபத்து உள்ளது. மேலும் பணம் படைத்திருந்தால் எவர் வேண்டுமானாலும் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டலாம், பிறகு முறைப்படுத்திக்கொள்ளலாம் என்பது நியாயமான வழியில் நேர்மையாக அனுமதியைப் பெறும் பொதுஜனத்தை கேலிக்குள்ளாக்குவதாக ஆகிவிடும்.இதே விதமாகத்தான் முறையான அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளும், ஏன் கல்லூரிகளும்கூட இதில் விதிவிலக்கல்ல, முறையான அனுமதி பெறாமல் மாணவர்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டு, பிறகு மாணவர்களின் கண்ணீர் பேட்டியை நிர்வாகமே அரங்கேற்றி, பொதுவான பரிதாப உணர்வைத் தூண்டிவிட்டு, அந்தப் படிப்பை முறைப்படுத்துவது அல்லது அந்தப் பயிற்சிக் கல்லூரியை முறைப்படுத்துவது என்பதுதான் இதுநாள் வரை நடந்து வந்துகொண்டிருக்கிறது.வெறும் வேளாண் விளைநிலங்களை மனைகளாக்கி விற்றுவிட்டு, குடியிருப்புகள் உருவான பிறகு அதன் மனைகளை முறைப்படுத்துவது ஒரு தொழிலாகவே நடந்துகொண்டிருக்கிறது.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முறையான அனுமதி பெறாமல் மாடிக் கட்டடங்கள் விருப்பம்போல கட்டப்படுகின்றன. உள்ளாட்சி அதிகாரிகளுக்கும், அந்த வார்டில் தொடர்புடைய அரசியல்வாதிக்கும் தெரிந்துதான் இது நடத்தப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதும் முறைகேடான கட்டடங்கள் நிறைந்தவுடன் முறையற்ற கட்டடங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. அல்லது நடவடிக்கை எடுத்து இடிப்பதுபோல பாவனை காட்டினால் அவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, காலத்தை நீட்டிக்கிறார்கள்.இப்படி முறையற்ற செய்கை அனைத்தையும் பணத்தால் முறைப்படுத்த முடியும் என்று அரசே ஊக்கப்படுத்துவது நியாயமானதாக இருக்காது. "தாட்சண்யம் தனநாசம்' என்பார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முறைப்படுத்துவதால் அரசுப் பணம்தான் வீணாகும். மீண்டும் எந்த பயமும் இல்லாமல், எப்படியும் முறைப்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முறைகேடுகளை இவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளவே செய்வார்கள்.

நன்றி தினமணி
 தலையங்கம்

பொலிவிழந்த முதுநகர் காந்தி பூங்கா

கடலூர் முதுநகர் காந்திப் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.கடலூர் முதுநகர் மணிகூண்டு எதிரில் பழமையான காந்திப் பூங்கா உள்ளது. இப்பூங்கா கடந்த 2005ம் ஆண்டு பொது நிதி மூலம் 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பூங்காவிற்கு மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்துச் செல்வார்கள்.
தற்போது இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்திசிலை முற்றிலும் பொலிவிழந்துள்ளது. மின் விளக்குகள் முற்றிலும் எரியாததால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டிணம் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாதனங்களும் முற்றிலும் பழுதடைந்துள்ளன. நீரூற்றும் இயங்காததால் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த புல்தரைகளும் காய்ந்துள்ளது.கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பூங்காவிற்கு மாலை நேரங்களில் பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் பொலிவிழந்து காணப்படும் காந்தி பூங்காவை கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.