கோரிக்கை பதிவு

கடலூர் மாவட்டம்: புதிது புதிதாக முளைக்கும் குடிசைகள்

கடலூர் மாவட்டத்தில் தற்போது பல இடங்களில் குடிசை வீடுகள், புதிது புதிதாக முளைத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளைக் காரை வீடுகளாக மாற்றுவதற்காக கலைஞரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மார்ச் 29-ம் தேதி குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.95 லட்சம் குடிசைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.உண்மையான குடிசை வீடுகளைக் கண்டறிய ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப் பணியாளர் என மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுக்கள் குடிசைகளை கணக்கடுக்கும் பணியை மார்ச் 29-ம் தொடங்கி நடத்தி வருகிறது. கணக்கெடுக்கும் பணிக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.29-ம் தேதி கடலூர் அருகே கன்னாரப்பேட்டை கிராமத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். குடிசைகள் கணக்கெடுக்கும் பணிகுறித்து பொதுமக்களுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லை, தகவல் முறையாகச் சென்றடையவில்லை என்பதை அப்போது ஆட்சியர் கண்டறிந்தார், எனவே கலைஞர் வீட்டுவசதித் திட்டம் குறித்து நன்றாக விளம்பரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் 681 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக மார்ச் 29-ம் தேதி 399 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும் 379 ஊராட்சிகளில் கணக்கெடுப்பு தொடங்கியது. கணக்கெடுப்பின் போது குடும்ப அட்டை, மின்இணைப்பு அட்டை, வீட்டுவரி விதிப்பு எண், நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட ஆவணம் (பட்டா அல்லது உரிமைப் பத்திரம்) பயனாளிகள் காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் பணியை 15-5-2010க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் புதிது புதிதாகக் குடிசை வீடுகள் முளைக்கத் தொடங்கி உள்ளது. கடலூரை அடுத்த கோண்டூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே திடீரென 20க்கும் மேற்பட்ட குடிசைகள் போட்டப்பட்டு இருந்தன (படம்).இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, அந்த இடத்தில் மருதாடு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 42 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர். கடந்த 18 ஆண்டுளுக்கு முன்பே அவர்களுக்குப் பட்டா வழங்கியும் நிலத்தை அளந்து கல் நட்டுக் கொடுக்கவில்லையாம். நிலத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அண்மையில்தான் சாதமாகத் தீர்ப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகட்ட வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதி உடனடியாக குடிசைகளை அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் தனித்தனியாகவும் குடிசை வீடுகளைப் புதிதாகக் கட்டி வருகிறார்கள். ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் கிராமங்களில், பல குடிசை வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள்.  இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குடிசைகள் எண்ணிக்கை உத்தேச மதிப்பீட்டுக்கும், உண்மை நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுப்பு வேகமாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 28 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். குடிசை வீடுகள் என்பதற்கு 4 ஆவணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் திடீரென உருவாகும் குடிசைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமித்துக் குடிசை அமைத்து இருப்போர் ஆகியோருக்கு இது பொருந்தாது. நெடுஞ்சாலையோரம் உள்ள குடிசைகளுக்கு புதிதாக குறியீடு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் முதல் ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் அதிகம். எனவே கடலூர் மாவட்டத்தில் அதிக வீடுகள் கட்ட வாய்ப்பு இருக்கிறது என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக