கோரிக்கை பதிவு

குடிநீரில் குளோரின் கலக்கும் நிலையம்

கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீரை சுத்திகரித்து வழங்க அவ்வப்போது பிளீச்சிங்பவுடர் தொட்டியில் கலக்கப்படுகிறது. இதை எளிதாகவும் சரியான அளவிலும் செய்வதற்காக குடிநீரில் குளோரின் வாயு கலக்கும் இயந்திரம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. குளோரின் வாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து பொருத்தி, அதில் இருந்து குளோரின் வாயு, குடிநீர் பகிர்மானக் குழாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது.  இந்த இயந்திரம் தற்போது செயலற்று மூடிக்கிடக்கிறது. இதற்கான அறை மூடப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சில நாள்களே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது நகராட்சி ஊழியர்கள் நேரடியாக பிளீச்சிங் பவுடரைக் கலக்கி வருகிறார்கள். இது குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பதில்லை. சில நேரங்களில் அதிக அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து விடுவதால் நகராட்சிக் குடிநீரைக் குடிப்பதற்கு சிரமமாக இருக்கும்.இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் சந்திரமனோகரனிடம் கேட்டதற்கு, குளோரின் வாயு செலுத்தும் இயந்திரம் இயங்கவில்லை. மும்பையைச் சேர்ந்த நிறுவனம்தான் அதைச் சீரமைக்க முடியும். அரசுக்கு எழுதி இருக்கிறோம். சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கையினால்தான் பிளீச்சிங் பவுடரைக் கலக்குகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக